...

9 views

மழையோடு உறவாடு
என்ன ஒரு இனிமையான இரவு..... வானத்தின் பால் கோபம் கொண்ட ஆதவன் இருள் என்னும் கானகத்துக்கு வனவாசம் சென்று விட.... சூரியனின் மீது காதல் கொண்ட நிலவோ வேதனையில் தன் முகத்தை மூடி கொண்டது...  காதல் கொண்ட பால்நிலவின் வேதனையை சகிக்க முடியாத மேகங்களோ  அழு தொடங்கி விட்டது... அதன் கண்ணீர் துளிகளை வீணாக்க மனமில்லாத பூமாதேவியோ.... அதை தன் மடி மீது தாங்கிக் கொண்டிருந்தாள்...... மேகத்தின் கண்ணீர் துளிகளெல்லாம் பூமியை நனைத்துக் கொண்டிருந்த நேரம்.....

மழை துளி மண்ணை தொடும் அழகை பால்கணி வழியே ரசித்துக் கொண்டிருந்தாள் ஒரு பூவிழியாள்.... கண்ணோரத்தில் மை.... கண்ணை பறிக்கும் உதட்டுச் சாயம்.... முடியை அள்ளி ஒய்யாரமாய் கொண்டையிட்டு.... தான் உடுத்தியிருந்த சேலை முந்தானையை  இடுப்பில் சொருகியிருந்தாள்... திடிரென வெட்டிய மின்னலால் அவளது பளிங்கு இடை பளிச்சென மின்னியது.... கண் இமைக்காமல்  மழையை ரசித்துக் கொண்டிருந்தாள் அந்த பூவிழியாள்... அவள் பெயர் மாதவி...

சாதிக்க வேண்டிய வயதில் காதலில் சருக்கி விழுந்ததன் விளைவு... தற்போது மாதவி ஒரு செக்ஸ் வொர்க்கர்.... பள்ளிப்படிப்பை கூட தாண்டாமல் மும்பை நகரில் திசைதெரியாமல் நின்றவளை சில கயவர்கள் களவாட முயற்சிக்கும் போது சில திருநங்கைகளால் காப்பாற்றப்பட்டாள்... காலப்போக்கில்  அவர்களை தொழிலையே தன் தொழிலாக்கிக் கொண்டாள் மாதவி.... பெரும்பாலான விலைமாதர்கள் நெறிபிறழ்வானவர்கள் அல்ல ......தடம் புரண்டவர்கள் ...... மாதவியின் வாழ்க்கையும் வழிகாட்ட யாரும் இல்லாமல் தடம் புரண்ட இரயிலைப் போல் ஆனது...... கரை சேர நினைக்கும் மீன்களுக்கு வாழ்வு இல்லை என்பது போல் .....இந்த தொழிலை விட்டு வெளியே வர நினைக்கும் பெண்களுக்கு வாழ வழியும் இல்லை...

உணர்வுகளை கல்லாக்கி, தன் உடம்பை விருப்பமின்றி விருந்தளிக்கும் நரகம் தான் இவர்களது வாழ்க்கை..... தினமும் உழைப்பாளிகள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தான்.... இவர்களது கட்டாய உழைப்பு தொடங்கும்..... இந்த பாலியல் தொழிலில் உடல் தரும் வேதனையை விட... இவர்களது  மனம் அடையும் வேதனையை வார்த்தைகளால் சொல்லி முடியாது... பணத்தை வீசி, அவர்களது உடலுக்கு விலை பேசும் மோகம் கொண்ட ஓநாய் கூட்டத்துக்கு அவர்கள் மனதை பற்றியெல்லாம் யோசிக்க எங்கு நேரம் இருக்கிறது..... அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு..... சில பல ரசனைகள் உண்டு... எண்ணங்களால் விளைந்த ஏக்கங்கள் உண்டு..... குட்டி குட்டி ஆசைகள் உண்டு.... மாதவிக்கும்  ஒரு ஆசை உண்டு... அது இரவில் பெய்யும் மழையில் நனைய வேண்டும்....

சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ய தொடங்கியதுமே.... அழையா விருந்தாளியாக அவளது ஆசை வந்து கண் முன் நின்றது....  வாழ்வே இருளாய் போனதால் தான் என்னவோ.... இரவில் பெய்யும் மழையின் நனையவே அவள் மனம் ஏக்கம் கொண்டது....

ஆனால் இன்று ஒரு சின்ன தயக்கம்.... இன்று இரவு வருவதாக சொன்ன கஸ்டமரை கவனிக்க வேண்டும்.... மழையில் நனைந்தால் மேக்கப் எல்லாம் கலைந்து விடும்..... கட்டிய புடவையும் நனைந்து விடும்....  இந்த நேரம் மழையில் நனைவது சாத்தியமா.... என்று மூளைக்குள் விவாதம் நடக்க..... விவாததுக்குள் ஆசைகள் எல்லாம் வழக்கம் போல் மறைந்து போனது....

சாலையில் இன்னும் வாகனங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டு தான் இருந்தது..... இடைவிடாமல் காரின் முன் பக்க கண்ணாடிகளை மழை துளி முத்தமிட.... அதைக் கண்ட வைப்பர்களுக்கு கொஞ்சம் பொறாமை.... முத்தமிட்ட மழை துளிகளை எல்லாம் வேகமாக துடைத்தெரிந்து கொண்டிருந்தது வைப்பர்கள்.... இந்த காதல் மோதல்களை எல்லாம் மாதவியின் கண்கள் ரசிக்க தவறவில்லை.... மழை துளிகளை பிடிக்க முயன்றும் , முடியாமல் போன மரத்தின் இலைகள் எல்லாம் தலையை தொங்க போட்டுக் கொண்டு நிற்க.... அதற்கு பழிப்பு காட்டியவாறே செல்லும் மழை நீர் சாக்டையில் கலப்பதாக.... தன் கற்பனையில் நினைத்துப் பார்த்த மாதவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை....

சிரித்தாள்.... சிரித்தாள்... வாய் விட்டு சிரித்தாள்.....

அத்தனை நாள் பொய்யாக சிரித்த போது நெஞ்சில் உருவான வலிகளை எல்லாம் மறந்து சிரித்தாள்.....

வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களை கண்டாள்.... மழையில் நனைந்து விடாமல் இருக்க ரெயின் கோட் அணிந்திருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை கண்டவளுக்கு ஒரு ஏக்கப் பெரு மூச்சு தான் விட முடிந்தது.... அவர்களுக்கு வேலை முடிந்து விட்டது... ஆனால் தனக்கு...?

மழையில் நனைய வாய்ப்பிருந்தும் நனைய முடியாமல் தவிக்கும் தன்நிலைமையை கண்டவளுக்கு ... தன் மீதே கழிவிரக்கம் தோன்றியது..... தங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ முடியவில்லையே  என்று விரக்தியாய் சிரித்தாள்  மாதவி....

பால்கனியில் நின்று ரசித்து கொண்டிருந்தவளின் மீது சாரல் அடிக்க... இதமாய் அவளது மேனியை தடவிச் சென்றது அந்த குளுமையான சாரல்.......  சாரல் தந்த குளுமையில், எத்தனையோ ஆண்களின் கை பட்டு வெந்து போன உடம்பிற்கு மயிலிறகால் வருடியது போல் ஆறுதலாக இருந்தது மாதவிக்கு.....

சில மழைத்துளிகளை கவர்ந்து வந்த சாரல்... அதை அவள் மீது தெரிக்க விட்டு செல்ல...  குளுமையான மழை நீர் பட்டு சிலிர்த்தது அவள் உடல்.....

இன்னும் என் உடம்பில் உள்ள உணர்வுகள் எல்லாம் சாகவில்லை ......எனது உடம்பிற்கும் உணர்ச்சிகள் இருக்கிறது.....  என்று அவள் மனம் குதுகலித்தது....

அவள் உடம்பில் இத்தனை நாள்  செத்து கிடந்த உணர்ச்சிகள் எல்லாம் உயிர் பெற்று எழுவது போல் இருந்தது....

மழைச் சாரலில் பட்டும் படாமல் அவள் நனைய.... அந்த மழைச் சாரலுக்கு தன்னை தவிர்க்கும் அந்த பூ மேனியாளின் மீது கொஞ்சம் கோபம் எழுந்ததோ என்னவோ....

கொஞ்சம் வேகமெடுத்து அவளை தீண்டியதில்..... கொஞ்சம் அதிகமாகவே நனைந்து போனாள் மாதவி.....

எத்தனையோ கைகள் அவளை தழுவும் போது கிடைக்காத சந்தோஷத்தை, சில மழை துளிகள் அவள் மேனியை தழுவியதில் பெற்று கொண்டாள் மாதவி.....

மோகம் கொண்டு தன்னை தேடி வரும் ஆடவர்களை கண்டவளுக்கு.... தன் மீது ஆசையாய் வருடும் சாரலின் குளுமையில் உடலெங்கும் புல்லரித்தது.....

தேவை முடிந்ததும் பணத்தை வீசி செல்லும் மனிதர்கள் மத்தியில், இவளின் உணர்வுகளுக்கு  உயிர் கொடுக்க தான் எந்த ஆண்மகனும் இல்லை....

இதையெல்லாம் யோசித்தவளுக்கு ஒரு சந்தேகம்....

ஏய்...மழையே நீ ஆணா பெண்ணா... ஏன்..? என் மேல உனக்கு பாசம்.... என்று தன் உள்ளங்கையில் தாங்கிய சில மழைதுளிகளின் கேட்டாள் மாதவி....

வார்த்தைகளில் பதில் இல்லை....

ஆனால்  மழைத் சாரலின் செயல்கள் கூறியது...

நான் ஆண் தான் என....

முகத்திலிருந்து வழிந்த நீர் துளிகள் எல்லாம்... அவள் சங்கு கழுத்தில் வழிந்து நெஞ்சு குழிக்குள் இறங்க... காரணம் தெரியாமல் அவள் கன்னம் சிவப்பேறியது.... தன் நெஞ்சில் ஒரு கையை வைத்தவளாக அதை தடுக்க முயல..... சாரல் இன்னும் வேகமாக அடித்தது....

கண்கள் மூட.... புருவங்கள் சுருங்க..... கண்ணீர் சொட்டும்  இமைகள்  இரண்டும் மழை நீரை சொட்டிக் கொண்டிருந்தது... சிவப்பேறிய கன்னங்கள் இரண்டிலும் மழை நீர் வருட... அந்த வருடல் தந்த குறுகுறுப்பில் தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள் மாதவி.... அவளது வெட்கம் கண்டு உத்வேகம் பெற்ற மழை துளிகள் எல்லாம் அவளது சங்கு கழுத்தில் சருக்கி... அவள் கையால் செய்திருந்த தடுப்பணையையும் தாண்டி... அவள் நெஞ்சி குழிக்குள் இறங்கி விமோசனம் பெற்றது.... அந்த ஏகாந்த நிலையில் மழைச் சாரலோடு இரண்டற கலந்திருந்த மாதவியை தன்நிலை அடைய செய்தது செல்ஃபோன் ஒலி....

அதைக் கேட்ட மாதவியின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு நடுக்கம்.... வேகமாக சென்று தன் காதில் ஃபோனை வைத்தவளுக்கோ அங்கு சொல்லப்பட்ட செய்தி தேனாய் இனித்தது.....

சென்னையில் அடித்த மழையில் சாலைகள் எங்கும் நீர் தேங்க.... போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.... எனவே இன்று வருவதாக சொன்ன கஸ்டமர் வரவில்லை....

மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள் மாதவி.... நேராக மாடிக்கு ஓடினாள்.... இத்தனை நேரம் தன்னை தொட்டு தழுவிய மழையோடு விளையாட தொடங்கினாள்...

களவி இல்லை.. வலி இல்லை.... வேதனை இல்லை.... உணர்வுகளை கொன்று பிணம் போல் கிடக்கவும் தேவையில்லை...

ஆயிரம் கைகள் தொட்ட உடம்பென பலர் தூற்றும் போதும்.... அவளை வெறுக்காமல், அவள் மேனி தொட்டு தழுவிய மழையோடு உறவாட தொடங்கினாள் மாதவி....

அன்புடன்....

எபின் ரைடர்.....


© Ebinrider