...

24 views

தெய்வம் தந்த சொந்தமா - 3

அத்தியாயம் - 3

அடுத்த நாள் காலை எழுந்தவன் முகத்தில் சோர்வை கண்டு, சுந்தர் பெருமூச்சு விட்டபடி செல்ல, சர்வேஸ்வரன் சக்தியின் இல்லம் நோக்கிச் சென்று இருந்தான். எப்போதும் போல அவளின் லைப்ரரி உள்ளே சென்றவன் புத்தகத்தைத் தேட, அதைக் காணவில்லை. சர்வா ரெஜிஸ்டர் வந்து பார்க்க, வேறொருவர் அதே புத்தகத்தை எடுத்து இருக்க,

“ சக்தி நான் இன்னும் படிச்சு முடிக்காத புத்தகத்தை எப்படி இன்னொருதற்கு கொடுத்த?”

“ நேத்து நீங்க வரல. அவங்க என்கிட்ட திரும்பத் திரும்ப அதையே கேட்டு வந்து நிக்கவும் கொடுத்துட்டேன்.”

“ சரி… கொஞ்ச நேரம் நான் உன் கார்டன் உள்ள உக்காரலாமா?”

“ உக்கார்ந்துக்கோங்க…” சக்தி சொல்லவும்.

அமைதியாகச் சென்று மரத்துக்குக் கீழ் இருந்த இருவர் அமரும் இருக்கையில் வல பக்கம் அமர்ந்து இருந்தான். கண்கள் நகரும் மேகத்தையே பார்த்திருக்க மனம் எதை எதையோ தேடி அலைந்தது. மெல்ல சரிந்து அமர்ந்தவன் கண் மூடிப் படுத்து இருந்தான். அப்படியே சர்வா உறங்கியும் இருந்தான். மதிய உணவை சக்தி உண்டு எழுந்த போதும் சர்வேஸ்வரன் எழுந்து கொள்ளவே இல்லை. மாலை மணி நான்கை தொட, குளிர் அதிகரிக்க, சர்வேஸ்வரன் கை கால்களை குறிக்கிக்கொள்ள, சக்தி அவன் மீது போர்வையை போர்த்தி விட, மீண்டும் ஆழ்ந்து உறங்கி இருந்தான்.

எப்போதும் அவளிடம் நல்ல முறையில் பேச முயற்சி செய்கிறவன், அவள் ஜன்னல் வழியே தெரியும் மலைகளுக்கு ரசிகன், அவளின் நூலகம் வரும் அனைவருக்கும் இன்முகம் காட்டும் நண்பன். பணம் உண்டு. அதன் பகட்டு ஒரு நாளும் அவனிடம் இருந்ததில்லை. எப்போதும் அவனிடம் இருக்கும் நிதானம் அவனை மென்மையான ஒருவனாக தான் அவளுக்கு காட்டி இருக்கிறது.

ஆனால், இன்று உறங்கும் போது கூட சுருங்கி இருக்கும் நெற்றி, அலைபாயும் கருமணிகள் என ஆழ்ந்து கூட உறங்க முடியாது இருக்கிறான். அவன் உடல் ஓய்வில் இருக்கிறது. மனம்? அப்படி என்ன தீராத பிரச்சனை இவனுக்கு? கண்கள் வேறு தூக்கத்திலும் கசிந்து கொண்டிருக்கிறது? உள்மனம் கேள்விகள் கேட்க, சக்தி அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். அதே சமயம் அங்கே ராம் உடன் வந்து இருந்தார் சுந்தர்.

“அக்கா.. அண்ணா இங்க தான் இருக்காரா?” ராம் கேட்கவும் சக்தி ஆம் என்று தலையசைத்து கூற,

சுந்தர் வந்து அவனை எழுப்பி விட, சர்வேஸ்வரன் பதறி எழுந்து அமர்ந்து இருந்தான். அமர்ந்தவன் சுற்றி அனைத்தையும் பார்க்க, அப்போது தான் அவன் இருக்கும் இடம் எதுவென்று புரிந்தது.

“என்னாச்சு தம்பி? வீட்டுக்கு வராம இங்க ஏன் படுத்து இருக்கீங்க? நான் கடைக்கு போய்ட்டு உங்களுக்கு கூப்பிட்டு பார்த்தேன் நீங்க எடுக்கல. சரின்னு மளிகை பொருள் வாங்கிட்டு நானே வீட்டுக்கு வந்துட்டேன். உங்களுக்காக மதியம் காத்திருந்தும் நீங்க வர காணோம். அதான் ஃபோன் போட்டேன். அதையும் நீங்க எடுக்கல. பயத்தில் உங்களை தேடிட்டு வந்துட்டேன்.”

“சாரி சுந்தர். சாரிடா ராம். சாரி சக்தி உங்களையும் தொந்தரவு பண்ணிட்டேன்.” சர்வா கூற சக்தி எதுவும் பேசவில்லை. வீட்டின் உள்ளே சென்றவள் அவனுக்கு சூடாக ஒரு டீ கொண்டு வந்து கொடுக்க,

“இல்ல.. வேண்டாம் சக்தி. எனக்கு பசிக்குது. நான் வீட்டுக்கு போய் சாப்பிடணும். வரேன். தேங்க்ஸ் அண்ட் சாரி ஃபார் எவெரிதிங்.” சர்வா கூறவும், சக்தி சரியென்று தலையசைக்க மூவரும் கிளம்பி சென்று இருந்தனர்.

அன்று இரவு நீண்ட நேரம் சக்தியின் தூக்கத்தை சர்வாவின் முகம் சுருக்கமே களவாடி இருந்தது. காலை சீக்கிரம் எழுந்து, மார்கெட் நோக்கி சென்றவள், சுந்தரை அங்கே கண்டு இருந்தாள். சட்டென சர்வாவின் நினைவு வர, அவரை நெருங்கி சென்றவள்,

“சர்வா எப்டி இருக்கார்? சாப்பிட்டாரா? அவருக்கு என்னாச்சு சுந்தர் அண்ணா? இதுவரைக்கும் அவரை நான் இப்படி பார்த்ததே இல்ல. நேத்து வித்தியாசமா தெரிஞ்சார்.” சக்தி கேட்க, சுந்தர் முகத்தில் அதிர்வும் ஆச்சரியமும்.

பின்னே, சக்தி மூன்று வருடங்களாக அந்த பகுதியில் வசித்து இருக்கிறாள். கேள்வி கேட்டால் ஒரு வார்த்தைக்கு மேல் அவள் பதில் பேசி அவளின் சுற்றம் பார்த்ததே இல்லை. கோபத்தில் மட்டுமே வார்த்தைகள் அருவியாய் வந்து விழும். புரியாத புதிராக சுற்றி திரியும் இவள், சட்டென சுந்தர் முன் வந்து சர்வாவை பற்றி இத்தனை அக்கறையாக கேள்விகளை கேட்கிறாள். அவள் இத்தனை பேசுவாளா என்ற அதிர்வும், அவள் குரலில் சர்வா மீது இருந்த அக்கறையும் அவரை ஆச்சரியம் கொள்ள செய்து இருந்தது.

“அண்ணா உங்களை தான் கேட்கிறேன் பிளீஸ் பதில் சொல்லுங்க.“

“தம்பி சாப்பிட்டார் மா. விமல் தம்பி உங்களுக்கு சொல்லி இருப்பாரே, அதான் சக்தி காரணம்.“

“எது காதல் தோல்வியா? வெறும் ஒன் சைட் லவ் தானே இவருக்கு? அதுக்கு இப்படியா? ஆச்சரியமா இருக்கு சுந்தர் அண்ணா, காதல் தோல்வி ஒருத்தரை இப்படியா மாத்தும்?”

“ஒருத்தர் மேல நாம வைக்கிற கண்மூடித்தனமான அன்புக்கு உலகம் கொடுக்கிற பரிசு வலி தானே? அதை தான் சர்வாவுக்கும் இந்த பிரபஞ்சம் கொடுத்து இருக்கு. அதுவே அவனுக்கு வலிக்கான மருந்தையும் அனுப்பும்னு நம்புவோம். எனக்கு நேரமாச்சு சக்தி, நான் வரேன்.” சுந்தர் கூறிவிட்டு விடைபெற சக்தி இப்போது இன்னும் சிந்தனையில் சிக்கி இருந்தாள்.

சக்தி நடத்தும் அந்த நூலகத்துக்கு முதல் முறையாக சர்வா வந்த போது, சக்தி அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. அவன் அறிந்து வாசலில் நின்று, தான் யார் என சொல்லும் நிலையும், தனக்கான அனுமதிக்கு நண்பனின் மூலம் சிபாரிசு எல்லாம் வாங்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கி கொடுத்தவள் சக்தி தான். சர்வேஸ்வரனின் நண்பன் விமல் இவனை பற்றி எடுத்து கூறிய பின்பு தான், அந்த நூலகத்தின் உள்ளே அனுமதி கிடைத்தது அவனுக்கு, அப்போது சர்வாவுக்கு காதல் தோல்வி என்றும், மன மாற்றம் வேண்டி தன் இல்லதிற்கும் இந்த இடங்களுக்கும் வந்து இருப்பதாக கூறி இருந்தான். ராம் கூறி அது ஒரு தலை காதல் என்பதை கூடுதல் தகவலாக அறிந்து இருந்தாள். ஆனால் நேற்றைய அவனின் நடவடிக்கை அவளை எதோ செய்தது.

அவனின் வாடிய முகம், அந்த முகத்தில் உறக்கத்தில் கூட தெரிந்த வலியும், சோர்வும். அதனுடன் அவன் கண்ணில் கசிந்த கண்ணீரும், குரல் அடைக்க, பேச முடியாது அவன் கேட்ட மன்னிப்பும் என அனைத்தும் அவனை அவளுக்கு நேற்று புதிதாய் காட்டி இருந்தது.

காய்கறி வாங்க மார்கெட் சென்று வந்தவள், அப்படியே அமர்ந்து இருந்தாள். அவளின் உள்ளே இருந்து எதுவோ ஒரு உந்தல் அவனிடம் பேச சொல்லியது. அவனின் முகத்தில் தெளிவையும், நிறைவையும், மகிழ்வையும் காண வேண்டும் என்று நெஞ்சம் வேண்டியது. ஏன்? எதற்கு இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. ஆனால் மனதின் உந்தலும் நின்றபாடில்லை.

கடந்த இருநாட்களும் அவனுக்காக காத்திருந்து, ஏமாந்து போய் இருந்தாள் சக்தி. அன்றும் அவன் வரும் நேரம் என சக்தி வாசலையே பார்த்து அமர்ந்து இருக்க, அன்று அவளை ஏமாற்றாது வந்து நின்றான் சர்வேஸ்வரன். அவனின் கண்ணில் தேங்கி நிற்கும் சோர்வு சொன்னது அவனின் நிலையை..

“ஏன் ரெண்டு நாளா வரல? எதும் பிரச்சனையா?” சக்தி கேட்க,

“பிரச்சனையா? அப்படி எல்லாம் எதும் இல்ல சக்தி.”

“இல்ல எனக்கு உங்களோட பேசனும். எனக்கு சில விஷயங்கள் உங்ககிட்ட கேட்கனும். இன்னிக்கி என்ன வாசிக்க போறீங்க?”

“நான் வாசிக்க வரல சக்தி. உன் தோட்டத்தில் கொஞ்சம் நேரம் உக்கார அனுமதி வேணும்.“ சர்வா கூற, சக்தி அவனை இப்போதும் புரியாது பார்த்து வைத்தாள்.

“சரி உக்காருங்க. ஆனா என்னோட பேசுவீங்க தான?”

“தாராளமா பேசலாம் சக்தி. நான் உங்களை போல முகத்தில் அடிச்ச மாதிரி எல்லாம் பேச மாட்டேன். மேனர்ஸ் இல்லையான்னு எல்லாம் கேட்க மாட்டேன்.”

“சாரி…”

“அட இன்னிக்கி என்னாச்சு சக்தி உங்களுக்கு? மன்னிப்பு எல்லாம் கேட்கிறீங்க? விளையாட எல்லாம் இல்ல சீரியஸா தான் கேட்கறேன்.” சர்வா கண் விரிந்து உண்மையான ஆச்சரியத்தோடு கேட்கவும், சக்தி அமைதியாகி இருந்தாள்.

“சரி, நானும் சாரி. வாங்க பேசலாம்.” சர்வா மன்னிப்பை கேட்டு அழைக்கவும் எழுந்து அவனோடு நடக்க தொடங்கி இருந்தாள்.

அவளின் தோட்டத்தின் உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் கண்களுக்கு பசுமையான காட்சிகள் இதமளிக்க, சக்தியை திரும்பி பார்த்தான். அவளோ அமைதியாக அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“சொல்லுங்க சக்தி என்ன பேசணும்?”

“உங்க லவ்வர் பெயர் என்ன? சக்தி கேட்க,

“அவங்க இப்ப என் லவ்வர் இல்ல. முகிலோட பொண்டாட்டி நிலா.”

“சாரி. அவங்க உங்களை விரும்பல, உங்களுக்கு ஒருதலை காதலுன்னு விமல் அண்ணா சொன்னார். உண்மையா?”

“ம்ம். ஆமா..”

“உங்களை விரும்பாத ஒரு பொண்ணுக்காக இப்படி அம்மா, அப்பா, தொழில், உங்க மனசு, உடம்புன்னு எல்லாத்தையும் எதுக்கு கெடுத்துட்டு இருக்கீங்க?”

“அவளுக்கும் என்னை பிடிக்கும் சக்தி. விதி விளையாடின விளையாட்டில் என் வாழ்க்கையே மாறி போய்டுச்சு.”

“சர்வா பிளீஸ் என்னை தப்பா நினைக்க வேண்டாம். அப்படி என்ன செய்துட்டா அந்த பொண்ணு உங்களுக்கு? அவ மேல இத்தனை காதல் வர என்ன காரணம்?”

“இதுவரை நான் பார்த்த எந்த பொண்ணும் அவ போல இல்ல. நிலா… அழகும், அறிவும், மென்மையும் கலந்த ஒருத்தி. அவ பக்கத்தில் இருந்தாலே எனக்குள்ள ஒரு அமைதியும் நிதானமும் வந்துடும். அவ எனக்கே எனக்காகன்னு பல கனவில் இருந்தேன்.” கூறிய சர்வேஸ்வரன் பெருமூச்சு விட்டபடி எழுந்து நின்று இருந்தான்.

“உங்க நிலா கூட உங்களால் ஏன் சேர முடியல?”

“சக்தி, இப்ப எதுக்கு என்னைப்பத்தி இத்தனை ஆராய்ச்சி?” சர்வா கேட்கவும் சட்டென சக்தி அமைதியாகி இருந்தாள்.

“ சக்தி… உங்களை தான் கேட்டேன்.”

“நான் இதுவரை ஒரு பொண்ணுக்கிட்ட காதல் வயப்பட்ட ஒரு ஆணை, அவன் உணர்வுகளை எல்லாம் உணர்ந்ததே இல்ல. நீங்க நிலா மேல வைச்சு இருக்கிற இந்த பயங்கரமான காதலை பார்க்கும் போது எனக்கு மூச்சுமுட்டுது. உணராத ஒரு உணர்வை உணரும் போது வருமே ஒரு வியப்பு நிலை? அது தான் எனக்கும். என்னை தப்பா நினைக்க வேண்டாம். உங்க சொந்த விஷயத்தை எல்லாம் கேட்டு தொந்தரவு செய்து இருந்தா சாரி.” சக்தி கூறிவிட்டு எழுந்து சென்று இருக்க, அவள் சொல்லி சென்றதை புரிந்துகொள்ள முடியாது சர்வேஸ்வரன். அவள் சொன்னதை மனதில் மீண்டும் ஓட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தான்.

சக்தி திருமணமான பெண் என்று விமல் சொன்னதாக சர்வாவுக்கு ஞாபகம். ஆனால் காதலை உணர்ந்தது இல்லை என்று இவள் கூறுவது ஏன்? இதுவரை பெண் மீது காதல் வயப்பட்ட ஒரு ஆணை அவள் உணர்ந்ததே இல்லை என்றால் இதன் அர்த்தம் தான் என்ன? தெளிவு வேண்டி வந்தவனை குழம்பி விட்டு சென்று இருந்தாள் சக்தி.

அன்று இரவு இல்லம் வந்தவன், சுந்தரை அறைக்குள் அழைத்து அன்று சக்தி பேசிய அனைத்தும் கூறி இருந்தான். சுந்தருக்கும் அவளின் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. அன்று இரவு பல நாள் கழித்து, சர்வேஸ்வரன் நினைவில் இருந்து நிலா ஓய்வு பெற்றிருக்க, சக்தி அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தாள். அதே போல சக்தியின் நினைவிலும் சர்வா வலம் வந்து கொண்டு இருந்தான். நிலா மீது அவன் கொண்டு இருக்கும் காதல் அவளை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

சக்தியின் வாழ்வில் முதல் முறையாக ஒரு ஆண் மகன் அவளின் தூக்கம் கலைத்து இருந்தான். அதுவும் அவன் வேறு ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டதையும், அவன் காதலையும், அது பெற்ற தோல்வியையும், ஏன் இத்தனை காதல் கொண்டவனை நிலா நீங்கி சென்றாள்? என கேள்வியும் சிந்தனையும் அவளை சிறிதும் உறங்கவிடாது செய்து இருந்தது.

© GMKNOVELS