...

7 views

ஜென்மத்தின் தேடல் 4
செம்பியனை தேடிச் சென்ற நாச்சியார் பதறிப் போய் இடி விழுந்தது போல் நின்று கொண்டிருந்தாள்.

"அம்மா... " என்று செம்பியன் அவளுக்கு பின்பு ஓடி வந்து அவளின் சேலையை பிடித்து இழுத்தான்.

அவனின் கையை பிடித்தவாறு நாச்சியார் வண்டியில் ஏறச் சென்றாள்.

"என்ன நாச்சியார், வண்டியில் ஏறியதிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காப்பு கட்டுதல் நன்முறையில் நிறைவேறியதல்லவா?... " என்று கேட்டார் ஜமீன்

"ம்ம்ம்ம்.... ஆமாம்" என்று சற்று அமைதியாக கூறினாள் நாச்சியார்.

" நாச்சியார், நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன். ஏதோ யோசனையில் இருக்கிறாய் போல... "என்று கேட்டார் ஜமீன்.

" இல்லை... திருவிழாவை பற்றி தான் யோசித்து கொண்டு வந்தேன் " என்றாள் நாச்சியார்.

"ம்ம்ம்... இருக்கட்டும்... இருக்கட்டும்... " என்று கோபமாக கூறினார்.

ஜமீன் குடும்பம் அரண்மனையில்..

"நாச்சியார், களங்கண்டான் எங்கே?... "
என்று கேட்டார் ஜமீன்.

"அவன்... இங்கே தான்... " என்று வார்த்தைகள் தடுமாறியது.

"நாச்சியார், உன் வார்த்தை தடுமாறுவதிலேயே நான் புரிந்து கொண்டேன். உன் மகன் களங்கண்டானின் வாழ்க்கை பாதை தடுமாறுவது உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. " என்று கேட்டார் ஜமீன்.

கண்களில் கண்ணீர் மல்க ஜமீனை பார்த்து கதறி அழுகிறாள். பேச்சு வரவில்லை...

நாச்சியார், இப்போது அழுவதால் ஒன்றும் நடக்காது. அழுவதை நிறுத்தி விட்டு உன் மகனிடம் பேசு. நீ சொல்வதை புரிந்து கொள்கிறானா என்று பார்ப்போம். ஆனால், திருவிழா முடியும் வரை சற்று பொறுமையாக இருக்க வேண்டும். திருவிழா முடிந்த பிறகு அவனுக்கு எடுத்து சொல்.."என்று ஆறுதல் கூறினார் ஜமீன்.

" நான் சொன்னால் அவன் கேட்பான் என்று நம்புகிறேன். நம் ஜமீன் பரம்பரை எப்படிப்பட்ட கோட்பாடுகளை கொண்டது என்று அவனுக்கு இன்னும் புரியவில்லை. ஜமீன் வம்சத்தின் அடுத்த வாரிசு இவன் தான். இப்படி இருக்கிறான். அவன் தடம்புரண்டு போகிறான் என்பது உங்களுக்கு எப்படி... " என்று கேட்டாள் நாச்சியார்.

"நானும் கணக்குபிள்ளையும் உனக்கும் முன்பே பார்த்து விட்டோம்... " என்று கூறினார் ஜமீன்.

" இந்த விஷயத்தில் கணக்குபிள்ளை
என்ன சொல்கிறார்... " என்று கேட்டாள் நாச்சியார்.

" அவர் எப்படி பேசுவார். அவருக்கும் வருத்தம் தான். நான் தான் சற்றே பொறுமையாக முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்... ஆனால் உன்னை போல் எனக்கு களங்கண்டான் மேல் சிறிது கூட நம்பிக்கை இல்லை..." என்றார் ஜமீன்.

"அப்படி சொல்லாதீர்கள்... நான் பேசி பார்க்கிறேன்..." என்று கூறினாள் நாச்சியார்.

" திருவிழா முடியும் வரை பொறுமை அவசியம்... " என்று கூறி விட்டு ஜமீன் படுக்கைக்கு சென்றார்.

சற்று நேரத்தில் சாப்பிட வந்த களங்கண்டானிடம் பேச மனமில்லாமல்
கண்கலங்க உணவை பரிமாறினாள்.

" அம்மா, ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?... சாப்பிட வருமுன் சாப்பிட வர சொல்லி பல முறை கூப்பிடுவீர்கள். இன்றைக்கு மட்டும் இவ்வளவு அமைதியாக உள்ளீர்கள்... "
என்று கேட்டான் களங்கண்டான்.

ஜமீன் எதுவும் கேட்க வேண்டாம் என்று கூறினார்... ஆனால், பெற்ற மனதிற்கு
மகனின் தடமாறிய வாழ்க்கை பாதையை பார்க்க இயலுமோ... மனதினுள் தனக்குள்ளே புலுங்கிகொண்டு இருந்தவள்... சற்று நேரத்தில்....

"நீ செய்வது எதுவும் சரியில்லை... நம் ஜமீனின் அடுத்த வாரிசு நீ.... நமக்கென்று ஊரினுள் தனி மரியாதை இருக்கிறது.... " என்று கூறினாள் நாச்சியார்.

" ஓ!! ம்ம்ம்ம்... சரி அப்பா உங்களிடம் சொல்லி விட்டாரா... எனக்கும் எல்லாம் தெரியும். நீங்கள் இருவரும் ஏன் இப்படி என் விருப்பத்திற்கு இடையூறாக இருக்கிறீர்கள். மீண்டும் எனக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம். "
என்று சாப்பிடாமலே எழுந்து விட்டான்.

இவனிடம் முழுதாக எதுவும் சொல்லவில்லை, அதற்குள்ளேயே இவன் இவ்வளவு கோபம் கொள்கிறானே.. இவன் நாம் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறான். நான் என்ன செய்வது என்று புரியவில்லையே.. கவுமாரியம்மா நீ தான் இவனுக்கு புரிய வைக்க வேண்டும்.. இவன் இப்படி சொல்வதை கேட்காமல் இருந்தால் ஜமீனிடம் நான் என்ன சொல்வது... என்று தனக்குள்ளேயே புலம்புகிறாள் நாச்சியார்.

மறுநாள் காலை.,

"நாச்சியார், தண்ணீர் கொண்டு வா" ௭ன்றாா் ஜமீன்.

அவள் கொண்டு வந்த தண்ணீரை அருந்தி விட்டு "நான் திருவிழா வேலை எப்படி நடக்கின்றது என்பதை பார்த்து விட்டு வருகிறேன். கணக்குப் பிள்ளை எங்கே? " என்று கேட்டார் ஜமீன்.

"தம்பி, அரிசி மூட்டைகளை இங்கே அடுக்கி வை. பயிறு வகைகளை இங்கே கொண்டு வா பா." என்று வேலையாட்களிடம் கூறி கொண்டு இருந்தார் கணக்குபிள்ளை.

"ஐயா, ஜமீன்தார் உங்களை அழைக்கின்றார். " என்றான் வேலையால் ஒருவன்.

"இதோ வருகிறேன்... " என்று ஜமீனிடம் சென்றார்.

"என்ன கணக்குப் பிள்ளை திருவிழா வேலை எப்படி நடக்கின்றது... " என்று கேட்டார் ஜமீன்.

"ஐயா, நாட்டரையர் ஜமீன் எடுத்து நடத்தும் ஊா் திருவிழா. சொல்லவா வேண்டும். எல்லா வேலைகளும் சிறப்பாகவே செல்கிறது"என்றாா் கணக்குப் பிள்ளை.

" சரி...என்று புன்சிரிப்புடன் நாளையிலிருந்து மூன்று நாட்கள்  பெரும் பானை சோறு  பொங்க வேண்டும். ஊர் மக்கள் அனைவருக்கும் இரண்டு வேலை நம் ஜமீனில்  தான் சாப்பாடு தெரியுமல்லவா? தமுக்கம் அடித்து சொல்லி விட்டீர்களா?... அதற்கான வேலைகள் எப்படி செல்கிறது..." என்று கேட்டார் ஜமீன்.

"ஐயா, அதற்கும் ஏற்பாடு செய்தாயிற்று." என்று கூறினார் கணக்குபிள்ளை.

"இதோ, அரிசி மூட்டைகள், பயிறு வகை மூட்டைகள் வந்துள்ளது. எண்ணெய், நெய் மற்றும் மளிகை பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது." என்றார் கணக்குபிள்ளை.

  " பூக்கள், பூஜை பொருட்கள்  அனைத்தும் தயாராக உள்ளதா?" என்று கேட்டார் ஜமீன்.

"பூக்கள் நாளை காலை கோவிலுக்கு சென்று விடும். மேலும் முக்கியமான பூஜை பொருட்களை மட்டுமே நம் ஜமீன் பூஜை அறைக்கு அருகில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளது. " என்றார் கணக்குபிள்ளை.

"சரி வாருங்கள் அங்கே சென்று பார்ப்போம்" என்று இருவரும் சென்றனர்.

"அப்பா"  என்று ஓடி வந்து கட்டி அணைத்தான்  செம்பியன்.

அவரும் அவனை தூக்கி கொஞ்சி விட்டு  "என்ன வேண்டும் குட்டி ஜமீன்தார் அவர்களுக்கு" என்றார்.

" நானும் உங்களுடன் வந்து திருவிழா வேலை எப்படி நடக்கின்றது என்று பார்க்க வேண்டும்..." என்று விளையாட்டாக கூறினான் செம்பியன்.

"ஓஹோ! எப்போது மைனர், மேஜர் ஆனீர்கள்?" என்று கூறிக் கொண்டு செம்பியனையும் பூஜை அறைக்குள் அழைத்து சென்று மாடியில் ஏறினாா்கள்.

அப்போது செம்பியன் "அப்பா, மாடி படிகளில் ஒவ்வொரு படிகளுக்கு  இடையே ஏன் இப்படி  இடைவெளி இருக்கிறது. இப்படி இருப்பதால் மாடி படி ஏறும் போது  கால் உள்ளே  சென்று விடுமோ என்று பயமா இருக்கும்." என்றான் செம்பியன். 

"ஹாஹாஹா, பயப்படாமல் பார்த்து கவனமுடன் ஏறுவது வேண்டும். இந்த படிகள்  நமக்கு வாழ்க்கை பாடமும் சொல்லி கொடுக்கிறது. " என்று கூறினார் ஜமீன்.

"என்ன சொல்லி கொடுக்கிறது அப்பா?. " என்று ஆர்வத்துடன் கேட்டான் செம்பியன்.

"நாம் வாழ்க்கையில் ஏறும்  ஒவ்வொரு படிகளும் கவனமாக கீழே விழாமல் பாா்த்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகின்றது" என்றாா் ஜமீன்.

பூஜை அறைக்குள் சென்றதும் செம்பியனை இறக்கிவிட்டு அவர்கள் இருவரும் பக்கத்து அறையினுள் நுழைந்தார்கள்.

ஜமீன் பூஜை அறை பல நவரத்தினங்கள் பொருந்திய செங்கோல், பரம்பரை பொக்கிஷங்கள், விதவிதமான உலோகங்கள்,  விளக்குகளுடன் தெய்வீக அம்சம் பொருந்தியது போன்று காட்சி அளித்தது. பூஜை அறை கதவு கருங்காலி மரத்தால் செய்யப்பட்டது.

இவைகளை பார்ததும் செம்பியன், " ஆஹா, நிறைய அழகான பொருட்கள் இருக்கிறது. இதற்குள் என்ன இருக்கும். பூட்டி இருக்கிறது. சரி அப்பாவிடம் கேட்கலாம். " என்று பக்கத்து அறைக்குள் சென்றான்.

ஜமீனிடம் "அப்பா, இந்த மரப்பேழை  அழகாக இருக்கிறது. இதை திறந்து கொடுங்கள்." என்றான் செம்பியன்.

" இதை ஏன் எடுத்தாய் கண்ணா... நீ பெரிய பையன் ஆகியவுடன் உனக்கு இதை சொல்கிறேன். இப்போது விளையாட செல்" என்றாா் செல்லமாக.

அவன் விளையாடச் சென்றான். ஆனால், அவனின் பார்வை மரப்பேழையிடம் இருந்து அகலவில்லை.

ஜமீன் கணக்குப் பிள்ளையிடம் "செம்பியனாவது ஏதாவது கேட்டு தெரிந்து கொள்கிறான். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறான். ஆனால், இந்த ஜமீனின் மூத்த வாரிசான  என் அருமை மகன் களங்கண்டான் எதிலும் பொறுப்பில்லாமல் சுற்றுகிறான். வயது தான் பெரியதாகியதே தவிர அதற்கு ஏற்றார்போல்  ஜமீன் வம்சம் மீது அக்கறை இல்லை. உங்களுக்கு தெரியாததா..." என்று கண் கலங்கினார்.

"கவலை வேண்டாம் ஐயா எல்லாம் சரியாகி விடும். கொஞ்சம் விட்டு தான் பிடிக்க வேண்டும் ஐயா... " என்றாா் கணக்குப் பிள்ளை.

"ம்ம்ம்ம்.. பார்ப்போம். சரி நாளை  திருவிழாவின் உற்சவத்தில் பார்ப்போம். " என்றார் ஜமீன். திருவிழா வேலைகள் கலை கட்டியது.

மறுநாள் காலை.,

மேலதாலங்கள் முழங்குகிறது. வீதியெங்கும் தோரணம்.  ஆங்காங்கே விதவிதமான கடைகள், சின்னஞ்சிறு குருவிகள் போல் வீதியில் விளையாடும் குழந்தைகள், வண்ணத்துப் பூச்சிகள் போல் பாவாடை தாவணியின்  கேலிக்கைள்,
வீடுகளின் திண்ணைகளில்  வெற்றிலை பெட்டியின் சப்தம். மங்கள வாத்தியத்துடன் திருவிழா துவங்கியது.

ஜமீன் அரண்மனை உறவினர்கள் வருகையால் நிரம்பியது. ஜமீன்  செங்கோல் ஏந்தி கொண்டு கோவிலுக்கு புறப்பட்டார்.
கோவிலுக்குச் சென்றதும் கோவில் நிர்வாகம் அவரை வரவேற்றனர். பிறகு அம்மனுக்கு படையல் வைத்து பூஜை முடிந்தது. ஜமீனுக்கு ஊர் மரியாதை செலுத்தும் பொருட்டு மகுடம் அவருக்கு சூட்டப்பட்டது. அப்போது ஒரு குரல்.

✍ ஜென்மம் தொடரும் ✍


© Ramyakathiravan