...

2 views

வேலி காத்தான்

அத்தியாயம் : 119

நாகன், சந்திரவதனனை தூக்கி,வேகமாக சுழற்றி, காற்றில் தூர வீசி எறிந்ததும், ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம், சந்திரவதனன் இத்தோடு தொலைந்தான் என்றே முடிவு செய்தது. ஆனால், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிய சந்திரவதனன் அப்படியே அந்தரத்தில் குட்டிக்கரணம் அடித்து பனை மரம் போல் பூமியில் கால் பதித்து ஆடாமல் அசையாமல் நின்றான். அவன் முகத்தில் மெல்லிய புன்முறுவல் இழையோடியது. நாகனின் முகமோ கோபக்கனலில் தகித்து சிவந்தது. பார்வையாளர் அரங்கில் இருந்த இளவரசி மீனலோசனி, மெய்மறந்து, தனது இரு கைகளையும் பலமாக தட்டி ஆர்ப்பரித்தாள். அரசன் அசமஞ்சன் ஆச்சரியத்தோடு மீனலோசனியை நோக்கினான். பக்கத்தில் அமர்ந்திருந்த தோழி காஞ்சிகா, மீனலோசனியிடம் குறிப்பால் உணர்த்தினாள். உடனே, இயல்பு நிலைக்குத் திரும்பிய மீனலோசனி ஒன்றுமே நடவாதது போல் தன் முக பாவத்தை உடனே மாற்றிக் கொண்டாள். சந்திரவதனனை நாகன் அந்தரத்தில் தூக்கி எறிந்ததும் அதிர்ச்சிக்குள்ளான நாக நாட்டின் ராஜகுரு அருள் நம்பியும், மந்திரி களங்கண்டானும், தளபதி ஆதிநாதனும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். கோபம் தலைக்கேறிய நாகன், ஆவேசத்தோடு இளவரன் சந்திரவதனனை நெருங்கி மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டான். இருவரும் சிங்கமும் சிங்கமும் பொருதாற் போல ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். காலாலும், கையாலும், தோளாலும், தலையாலும் முட்டி மற்போர் செய்தனர். யுத்தம் நீடித்தது. மற்போரில் நிபுணத்துவம் பெற்ற நாகனின் அத்தனை தாக்குதல்களையும் லாவகமாக எதிர் கொண்ட சந்திரவதனன் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டான். அது வரை தற்காப்பு பாணியை கையாண்ட சந்திரவதனன் அசுரத்தனமாக நாகனை தாக்கத் தொடங்கினான். நாகனால் அதிரடியான சந்திரவதனின் இடி போன்ற தாக்குதலை எதிர் கொள்ள முடியவில்லை. நாகன் சோர்வடைந்தான். அவனால் திருப்பி தாக்க முடியவில்லை. இந்த நேரத்தில் சரமாரியாக தாக்குதலைத் தொடர்ந்த சந்திரவதனன் நாகனை அப்படியே அலேக்காக தூக்கி அந்தரத்தில் கர கரவென்று சுற்றி ஆகாயத்தில் வீசி எறிந்தான். நாகன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்தான். இளவரசி மீனலோசனி பலமாக தனது இரு கைகளையும் தட்டி ஆர்ப்பரித்தாள். பார்வையாளர்கள் அரங்கில் இருந்த அத்தனை பேரும் ஒரு சேர எழுந்து இளவரசன் சந்திரவதனனை நோக்கி கைதட்டி ஆர்ப்பரித்தனர். அலைகடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளம் ஒரு கணம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அவர்களின் கண்களை அவர்களால் நம்ப முடியவில்லை.வீர கேசர நாட்டின் வீழ்த்த முடியாத மல்யுத்த வீரன் அவர்களின் முன் தவிடுபொடியாகி கிடந்தான். சந்திரவதனன் வாழ்க.. சந்திரவதனன் வாழ்க.. என்று கூடியிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. புன்னகையோடு இரு கைகளை ஏந்தி எல்லோருக்கும் தனது பணிவான வணக்கத்தை தெரிவித்த சந்திரவதனன், மெல்ல திரும்பி. நாகனை நோக்கி நடந்தான். பலத்த அடிபட்டு எழுந்திருக்க முடியாமல் கிடந்த நாகனை தனது இரு கைகளால் தூக்கி நிறுத்தி அன்போடு இறுக அணைத்து கொண்டான்.

தொடரும்..

© VIGNU GHOUSIKA

Related Stories