...

1 views

ரத்த தாகம்
ரத்த தாகம் 1
கவுதம் கருணாநிதி

When justice denied to innocent
a criminal will form at that instant

காஞ்சிபுரம்.
ரங்கசாமி குளம்.
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வந்தேன்.
அடுத்து என்ன செய்வது? யோசித்தேன்.

நீங்க வீட்டுக்குப் போனா உங்களுக்காக யார் யார் காத்திட்டிருப்பாங்க? உங்க அப்பா அம்மா வாழ்க்கைத் துணை குழந்தைங்க சொந்தக்காரங்க இல்லையா?

நான் வீட்டுக்கு போனா எனக்காக ஒரு டெடி பேர் காத்திட்டிருக்கும். என் பொண்ணுக்கு அவ ஆறு வயசா இருக்கும்போது நான் கடைகடையாத் தேடி கிஃப்ட் பண்ண டெடி பேர் காத்திட்டிருக்கும். அதோட முகத்தில என்னது சிகப்பான்னு பார்க்கறீங்களா? ஆமாங்க ரத்தக்கறைதான். என் பொண்ணோட ரத்தம்தான். ஆரம்பத்துல அதப் பார்த்து ரண வேதனைப்பட்டேன். ஆனா இப்பல்லாம் பழகிடுச்சு.

என் பொண்ணு என்னோட வாழ்க்கையா இருந்தா.

"வேலா உங்கம்மா திரும்ப வந்து பொறந்துட்டா" என் மாமா சொல்றப்ப எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

எனக்கு சின்ன வயசில இருந்தே பயம் ஜாஸ்தி. ஒரு நாள் ஸ்கூல்ல இருந்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க அப்ப நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். அம்மாக்கு மாலை போட்டு ஹாலில் படுக்க வச்சிருந்தாங்க. சொந்தக்காரங்க எல்லோரும் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதாங்க. எனக்கு அழுகை வரல. அம்மாவையே பார்த்துட்டிருந்தேன். அய்யோ கொசு ஒண்ணு அம்மா முகத்தைக் கடிக்க வருதேன்னு விலக்கினேன்.

காரியம் முடிஞ்சது. வந்த சொந்தம் எல்லாம் போயிடுச்சு. நானும் அப்பாவும்தான்.

அப்பாக்கு என் மேல பாசம் ஜாஸ்தி.

"கண்ணு"

"சொல்லுங்கப்பா"

"நீ நல்லாப் படிக்கணும்"

"அப்பா"

"உன் அம்மாவோட ஆசை"

"சரிப்பா"

நான் சுமாராகத்தான் படித்தேன். இடையில் சொந்த பந்தம் என் அப்பாவின் மனதைத் திசை திருப்ப முயன்றது.

"நாப்பது வயசெல்லாம் ஒரு வயசா? இந்த வயசுக்குத்தான் ஒரு துணை வேணும்"

சொன்னவர்களை அப்பா கடுமையான வார்த்தைகளால் புறம் தள்ளிவிட்டார்.

"எனக்கு என்னோட அலமு எப்ப செத்துப் போனாளோ அப்பவே எல்லாமே முடிஞ்சிடுச்சு. நான் உயிரோடு இருக்கிறதே என்னோட பையன் வேலனுக்காகத் தான்."

எவ்வளவு நேரம் இப்படி யோசிச்சுகிட்டே இருந்தேன்னு எனக்கேத் தெரியல. சொந்த பந்தம் இருக்கிறவங்களை விட சொந்த பந்தம் இல்லாம இருக்கிறவங்களை விட சொந்த பந்தம் இருந்து இல்லாமப் போனா அந்த நினைப்புல இருக்கிறவங்களோட வலி வேதனை அது அனுபவிச்சாத்தான் தெரியும்.

மணி பார்த்தேன். ஆறு மணி.

பைக்ல ஏறி உட்கார்ந்தேன்.

தேரடி தாண்டினேன். அருணா தியேட்டர்ல விஜய் சேதுபதி சிரிச்சிட்டிருந்தார்.

என் பொண்ணுக்கு விஜய் சேதுபதி ரொம்பப் பிடிக்கும். எனக்கும். நான் என் மனைவி ஆஷா மகள் கண்மணி மூணு பேரும் சேர்ந்து விஜய் சேதுபதி படம் பார்த்தது ஒரு காலம். சந்தோசமான காலம் நமக்கு வரும் பொழுது அது சந்தோஷமான காலம்னு நமக்கு அவ்வளவு சீக்கிரம் தெரியாது. அது இல்லாம போகும்போதுதான் அந்த சந்தோஷமான காலத்தோட அருமை நமக்குப் புரியும்.

யோசிச்சிட்டே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டேன். பைக் பார்க் பண்ணிட்டு கட்டைப்பை எடுத்துக்கிட்டேன்.

பீச் ஸ்டேஷன்க்கு ஒரு டிக்கெட் எடுத்தேன். ட்ரெயின் இன்னும் வரலை. வெயிட் பண்ணேன்.

***

"வேலா"

"அப்பா"

"உனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு. ஸ்டேட் பாங்க்ல வேலை ரொம்ப மதிப்பானது" அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தபோது எனக்குள்ளும் மகிழ்ந்தேன்

"உனக்கு ஒரு நல்லது பண்ணிட்டா அலமு போன இடத்துக்கே நானும் போய் சேர்ந்திடுவேன்"

அப்பா அடிக்கடி அப்படி சொன்னதால்தான் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நான் எண்ணுவதில்லை. எனக்கு அப்பா வேண்டும் சிறுவயதிலிருந்து எனக்காக அப்பா மட்டும்தான் இருந்திருக்கிறார் அவரை நான் இழக்கத் தயாராக இல்லை.

அப்பாவிற்கு என் மனம் புரிந்ததோ என்னவோ அவரே எனக்காக பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்.

"வேலா"

"அப்பா"

"நாளைக்கு காலைல பத்து மணிக்கு தயாரா இரு"

"எங்கப்பா?"

"திருவண்ணாமலைக்கு கோயிலுக்கு போறோம்"

அவரை நம்பினேன் ஆனால் திருவண்ணாமலைக்கு வந்ததற்குப் பின்தான் தெரிந்தது. பெண் வீட்டிற்கு என்னை அழைத்து வந்திருக்கிறார் என்று.

என் மறுப்பை காட்டிக்க இயலாத நிலை. ஆஷா வந்து தேனீர் கொடுக்க நிமிர்ந்து பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது.

அப்பா என் முகம் பார்த்து என் சம்மதம் அறிந்துகொண்டார்.

அடுத்து வந்த சில மாதங்களில் எங்கள் திருமணம் இனிதாக நடைபெற்றது.

"வேலா"

"சொல்லுங்கப்பா"

"நான் ஊருக்கு போறேன்"

"எதுக்கு நீங்க அங்க போய் தனியா இருக்கணும்? எங்க கூடவே இருங்க."

"இல்லப்பா உங்களுக்கும் ஒரு தனிமை வேணுமே. புதுசா கல்யாணம் ஆனவங்க. அதான்" அவர் சொல்லும் பொழுது ஆஷா அங்கு வந்தாள்.

"மாமா…நீங்க எங்கேயும் போக வேண்டாம். நீங்க எனக்கு அப்பா மாதிரி. நீங்க கூட இருக்கிறதால எங்க தனிமை கெட்டுப் போகாது. நான் உங்க பொண்ணு. நான் சொன்னா கேப்பிங்க இல்லையா?" ஆஷா கேட்க அவர் எங்க ரெண்டு பேரையும் நிறைஞ்ச பார்வை பார்த்தார்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் நல்லா இருக்கணும்" சொன்னார்.

மறுநாள் எந்திரிக்கவேயில்ல.

***

ட்ரெயின் வர்ற அறிவிப்பு கேட்டு மெல்ல எழுந்தேன்.

ட்ரெயின் வந்து நின்னுச்சு. ஏறிட்டேன்.

கம்பார்ட்மெண்ட் கிட்டத்தட்ட காலி. ஒரே ஒரு பொண்ணு மட்டும் மொபைல்ல பேசிட்டிருந்தா. நான் ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்தேன்.

என்னை மட்டும் கீழே விட்டுட்டு எல்லோரும் மேல போய்ட்டீங்களே. நான் என்ன பாவம் பண்ணேன்?

எனக்கு அழணும்போல இருந்தது. ஆனா அழமாட்டேன். அம்மா செத்ததுக்கு அப்பா செத்ததுக்கு கண்மணி செத்ததுக்கு ஆஷா செத்ததுக்கு எதுக்கும் நான் அழுததில்ல. நான் ஏன் அழணும்? அழுதா என் உணர்வு என்னைவிட்டுப் போயிடும். எந்த உணர்வும் என்னை விட்டுப் போகவேண்டாம். நான் சாகறவரைக்கும் இந்த உணர்வு எனக்கு வேணும்.

"கவலைப்படாதீங்கப்பா உங்க அப்பா நமக்கு குழந்தையா வந்து பிறப்பார்" ஆஷா சொல்ல எனக்கு ஆறுதலாய் இருந்தது.

அவள் சொன்ன நேரம் மிகவும் நல்ல நேரம் போல். ஆஷா கருவுற்றாள். என் ஆஷாவை நான் மிகவும் நேசித்தேன். நானும் என் அப்பாவைப் போல் தான். மனைவியை நேசிப்பதில். அவளை என் அன்பால் தாங்கினேன். ஒரு மழை நாளில் என் கண்மணி இந்த உலகை எட்டிப் பார்த்தாள்.

"வேலா உங்கம்மா திரும்ப வந்து பொறந்துட்டா" என் மாமா சொல்ல முதல் முறையாக என் வாழ்க்கையில் அழுதேன். அவர் திடுக்கிட்டுப் பார்க்க அழுதபடி சிரித்தேன். என்னை கட்டிக் கொண்டார்.

ஆஷாவை ஓடிப்போய் பார்த்தேன். மலர்ந்து புன்னகைத்தாள். அவள் விரல்களைப் பற்றிக்கொண்டேன். எங்கள் நேசத்திற்கான பொருளாய் குட்டி ரோஜாவாய் அசைந்த மகளை இருவரும் பெருமையாய் பார்த்தோம்.

***

இது எந்த ஸ்டேஷன்? பார்ப்பதற்குள் ரயில் கடந்து விட அப்போதுதான் கவனித்தேன். அவன் திருட்டுப் பார்வையுடன் அந்தப் பெண்ணுக்கு பின்புறம் வந்து அமர்ந்தான்.

யார் அவன்? அவன் பார்வை சரி இல்லையே?

நான் அவனை கவனிக்க ஆரம்பித்தேன்.

***

"என்னங்க?"

"சொல்லு ஆஷா"

"குழந்தையை தொட்டில்ல எப்ப போடறதுன்னு வீட்ல கேட்டாங்க"

"இப்பவே தொட்டில்லதானே தூங்குது?" நான் சிரிக்க முறைத்தாள்

"ஜோக்கா?"

"சரி சீரியஸ் சொல்லு"

"பாப்பாவத் தொட்டில்ல போடணும்"

"போட்ருவோம்"

"பேர்? முடிவு பண்ணிட்டீங்களா?"

"பாப்பாவ பார்த்த அன்னைக்கே பேர் முடிவு பண்ணியாச்சு"

"என்ன பேர்?"

"கண்மணி"

"ம்"

"என்னாச்சு? பேர் நல்லா இல்லையா?"

"நல்லாயிருக்கு"

"மூஞ்சில சுரத்தில்லயே "

"இந்த பேர்ல உங்களுக்கு வேற யாரும்.."

"நீ சினிமா பார்த்து ரொம்பவும் கெட்டுப் போயிட்டே"

"நான் கேட்டதுக்கு பதில் வரலயே"

"ஏண்டி லூசு இந்த வேலன் என்னோட ஆஷாக்கு மட்டும்தான்."

"நிஜமா?"

"நிஜமா"

"அப்போ ஓகே"

"என்ன?"

"பேர்"

அவள் சிரிக்க நான் கட்டிக் கொண்டேன்.

***

அவன் மெல்ல எழுந்தான். அவள் முன் போய் நின்றாள். அவனைக் கண்டவள் அதிர்ந்தாள்.

அவர்களின் முகபாவங்களைப் பார்க்கும்போது ஏற்கனவே பழகியவர்கள் போல் எனக்கு தெரிந்தார்கள். ஆனாலும் அந்தப் பெண் அவனைப் பார்த்து பயப்படுவது போல் தெரிந்தது. அவன் ஆத்திரமாய் ஏதோ பேச அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

அவர்கள் பேசுவதை கேட்க நான் இரண்டு சீட்டுகள் முன்பு போய் அமர்ந்தேன்.

"என்னடி நினைச்சிட்டு இருக்க? நான் ரொம்ப பொல்லாதவன்" அவன் சொல்ல

"ஜான் ப்ளீஸ். என் நிலைமையப் புரிஞ்சிக்க நான் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் என்னால சத்தியமா உன்னை ஏத்துக்க முடியாது. " அவள் கெஞ்சினாள்.

"முடியாதா முடியாதா? " அவன் வெறி பிடித்தவன் போல் கத்தினான். "அப்ப சாவுடி" தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான்.

அவள் பதறிப் பின்வாங்கினாள். நான் எழுந்தேன். கட்டைப்பையைக் கையில் எடுத்துக்கொண்டேன்.

"தம்பி " அவனை அழைத்தேன்.

"யாருய்யா?" திரும்பினேன்.

"நீங்க பண்றது தப்பு தம்பி."

"நீ யாருய்யா அதக் கேக்க? "

"அண்ணன்னு வச்சுக்க"

"உன்ன மாதிரி ஒரு அண்ணன் எனக்கு தேவையில்லை உன் வேலையப் பார்த்துட்டு போ " சொன்னவன் அந்தப் பெண் மீது கத்தியுடன் பாய நான் அவன் காலை இடறி விட சீட்டில் மோதிக் கீழே விழுந்தான்.

"ங்கோ…" என்னைத் திட்டினான். நான் அவனையே பார்த்தேன். கத்தியை எனக்குக் குறி பார்த்து வீசினான். விலகிக்கொண்டேன். எழுந்தவன் என் மீது பாய இடது கையால் அவன் வலது கையைப் பிடித்து என் வலது கையால் அவன் அடிவயிற்றில் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாதபடி தாக்கினேன்.
மீண்டும் திட்ட முயன்றவனைத் திட்ட முடியாதபடி வாயை நொறுக்கினேன்.

ரயில் நின்றது. அந்தப் பெண் என்னை பயமாய் பார்த்தாள். போ என்று என் விழிகளால் எச்சரித்தேன். என்னை கையெடுத்து கும்பிட்டுவிட்டு இறங்கினாள்.

என் அதிர்ஷ்டம் யாரும் ஏறவில்லை இப்பொழுது நானும் அவனும் மட்டும் தான். ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜன்னலோரம் அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணிப்பது எனக்கு விருப்பமானவற்றுள் ஒன்று. முதல் முறையாக ஒரு கொலை செய்துவிட்டு ரயில் பயணத்தை அனுபவிக்கப்போகிறேன். கட்டைப்பையில் இருந்த சுத்தியை வெளியில் எடுத்தேன். அவன் நிச்சயமாய் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் விழிகளில் தெரிந்த பயத்தை ரசித்தேன். காலிப்பயல்களுக்கு கடவுளே நேரில் வந்து புத்திமதி சொன்னாலும் திருந்த மாட்டார்கள். காவு வாங்கினால்தான் சரியாக வரும்.

"அண்ணா…" திக்கித்திணறி அழைத்தான்.

"என்னன்னு கூப்பிட்டே?"

"அண்ணான்னு…"

"உன்னை மாதிரி ஒரு தம்பி எனக்கு வேண்டாம். போய்த்தொலை"

அவன் மேற்கொண்டு ஏதோ பேச முயல நான் அவனுக்கு வாய்ப்பு ஒன்றும் தரவில்லை. சுத்தியால் அவன் தலையில் அடிக்கத் துடித்தான்.

"அ…ப்…பா…ஆ…ஆ…" என் கண்மணியின் அலறல் சத்தம். நிறுத்தாமல் அடித்தேன். ரத்தம் அவன் முகத்தை நனைத்திருக்க சர்வ நிச்சயமாக இறந்திருந்தான்.

சுத்தியைக் கட்டைப்பையில் போட்டுக்கொண்டேன். அவன் உடலை கதவருகில் நகர்த்தினேன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரே உதை. இருட்டில் எங்கோ சென்று மறைந்தான். குளிர் காற்று என் முகத்தில் அறைந்தது.

தொடரும்