...

3 views

இன்னொரு நாள்
உச்சி முகர்ந்து, ஓயாது முத்த மழை
பொழிந்த தாய்
மார்பிலும், தலையிலும்
மாறி மாறி அடித்துக் கொண்டு
மாண்டு மாண்டு அழுதாலும்
ஊர்கோலம் நீ போகையிலே
ஓடோடி வரமாட்டாள்..
நெஞ்சமெனும் பஞ்சணையில்
உன்னைக் கொஞ்சி விளையாடிய
தந்தை
உன் இன்னுயிர் தான்
போன பின்னே, இன்னொரு நாள்
இருந்துவிட்டு போ என
ஒரு போதும் சொல்ல மாட்டான்..
தாலி கட்டிய மனைவியோ..
தழுவி சுகம் தந்த கணவனோ..
இன்னொரு நாள் இருக்க
இடம் உனக்கு தர மாட்டார்..
அக்காவோ.. தங்கச்சியோ
அண்ணனோ.. தம்பியோ
அடுத்த நாள் கூட இருக்க
அனுமதி தராது....
உயிராய் பழகிய தோழனும், தோழியும்
போகாதே நட்பே என்று
ஒரு போதும் பகராது..
உற்றாரும் உறவும், சுற்றமும் நட்பும்
இன்னொரு நாள் இருக்கச்சொல்லி
எப்போதும் வேண்டாது..
எப்போது தூக்குவார்கள் என்று
எல்லோரும் நேரம் பார்க்க
வாய்மூடி மௌனமாய் நீ கிடப்பாய்..
இன்னொரு நாள்
இருந்து விட்டுப் போ
என
எவனுமே உன்னை சொல்ல மாட்டான்..
ஒரு நாள் கத்தலில் ஊரே அடங்கி விடும்
ஒரு நாள் அழுது மறுநாள் மறந்து விடும்..
கோடி கோடியாய் செலவழித்து
ஆடம்பரமாய் நீ கட்டிய மாளிகையும்
அடுத்த நாள் உன்னை அனுமதிக்காது!

விக்ணு கௌசிகா

© VIGNU GHOUSIKA