...

4 views

நம்பிக்கையை
விடியலை உரக்க தெரிவித்த ஆலாரத்தை, அதன் முதல் குரலிலேயே அனைத்து எழுந்தாள் கோதை. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தவள் பம்பரமாக சுழன்று ஆறு மணிக்குள் தன் சமையல் வேலைகளை முடித்து, கணவரையும் பிள்ளைகளையும் எழுப்ப முன்னறைக்கு வந்தாள்.

கார்த்திக் மற்றும் சுவாதியை எழுப்பி விட்டு கணவரை எழுப்ப வந்தவள், தன் தலையில் தானே குட்டி கொண்டாள். கணவரை எழுப்பிய பிறகு தான் பிள்ளைகளை எழுப்புவது அவள் வழக்கம்I இன்று ஏதோ அவசரத்தில் முதலில் பிள்ளைகளை எழுப்பிவிட்டாள். அவள் பதற்றத்திற்கு காரணம், திருமணம் ஆன நாள் முதல் பதினெட்டு ஆண்டுகளாய் ஒரு சில நாட்கள் தவிர அவள் தன் கணவன் ஸ்ரீனிவாசன் என்கிற சீனுவை தலை கோதி செல்லம் எழுந்திருங்கள் என்று கண்ணத்தில் முத்தமிட்டு தான் எழுப்புவது வழக்கம். திருமணம் ஆகி சில ஆண்டுகள் இந்த பழக்கம் இன்பமாக இருந்தாலும், பிள்ளைகள் வளர வளர கோதை மிகவும் சங்கோஜப் பட்டாள். ஆனால் அவள் கணவனோ சிறு பிள்ளைப் போல அடம் பிடித்தான். அதனால் முதலில் கணவரை எழுப்பும் பழக்கம் வந்தது. மெல்ல, திரும்பி பிள்ளைகள் அறைக்கு சென்றவள் அங்கு மூத்தவன் கார்த்திக் குளியல் அறைக்குள் செல்வதையும் இளையவள் போர்வையை போர்த்திக்கொண்டு அடுத்த தூக்கத்துக்கு தயாராவதையும் பார்த்தாள். சற்றே நிம்மதி அடைந்து கணவரை எழுப்ப சென்றாள்.

கணவருக்கும், பிள்ளைகளுக்கும் வேண்டியதை  செய்துவிட்டு, பூஜை அறைக்குள் விளக்கேற்ற சென்றவளுக்கு பக்கத்து வீட்டு சத்தத்தால் நிம்மதி போனது. மனதுக்குள், ‘அரம்பம் அகிவிட்டது காவேரி அம்மாவுக்கு அர்ச்சனை’ என நினைத்துக் கொண்டே பூஜை வேலைகளை முடித்து, கணவரை அலுவலகத்திலும், பிள்ளைகளை பள்ளியிலும் இறக்கி விட்டு காரில் தனது அலுவலகம் வந்து சேர்ந்தாள். முக்கிய வேலைகளை முடிப்பதற்கும் மதிய உணவு நேரம் வருவதற்கும் சரியாக இருந்தது.

உணவை முடித்து, கணவருடன் இரண்டு நிமிடம் பேசிவிட்டு அமர்ந்தவள் மனது பக்கத்து வீட்டு காவேரி அம்மாவிடம் சென்றது. காவேரி அம்மா மிகவும் அமைதியானவர், கணவர் இருந்த வரை அவருக்கு எந்த கவலையும் இல்லை. எல்லாமே அவர் தான். ரிடையர்ட் இரயில்வே ஆபீசர் ஆன கணவர், காலையில் காவேரி அம்மாவை வாக்கிங் அழைத்துச் செல்வது கோவிலுக்கு செல்வது, மாதம் ஒரு முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் செல்வது என எல்லாமே அவர் தான். ஒரு வருடம் முன்பு இரவு மனைவியிடம் சற்று பேசிவிட்டு படுத்தவர் காலை விழிக்கவில்லை. அதன் பிறகு காவேரி அம்மாவின் தலைவிதி மாறிவிட்டது. தன் ஒரே மகனுக்கு தன் தம்பியின் மகள் யாமினியை மணம் முடித்து தனி குடித்தனமாக வைத்திருந்தனர். கணவரை இழந்த உடன் மகன் கேட்டு கொண்டதால் காவேரி அம்மா இந்த நரகத்துக்கு வந்து சேர்ந்தாள்.

காவேரி அம்மாவின் கெட்ட நேரமோ என்னவோ அவர் வந்த நேரம் அவர் மகனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டான். அதன் பிறகு தான் யாமினியின் சுயரூபம் வெளிவந்தது.

முதலில் காவேரி அம்மாவின் பென்சன் வரும் ATM card யாமினியின் கைக்குச் சென்றது. காவேரி அம்மாள் கிட்டத் தட்ட வீட்டுச் சிறைக்குள் வைக்க பட்டார். ஒரு சம்பளம் இல்லா  வேலை ஆளாக மாற்றப் பட்டார். முதுமையின் காரணமாக அவர் செய்யும் தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டன. எப்போதாவது காவேரி அம்மாவை காண நேரிடும் போது கோதையின் நெஞ்சு கொதித்துப் போகும்.

காவேரி அம்மாவிற்கு நடந்துகொண்டிருக்கும் விபரீதம் அறியாமல் கோதை தன் அலுவலக பணிகளைத் தொடர சென்றாள். மாலை விட்டின் அருகே ஒரு சிறு கும்பல் நின்று கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்த போது காவேரி அம்மா ஒரு சிறு பெட்டியோடு கண்களில் கண்ணிரோடு தரையில் அமர்ந்து இருந்தார். கோதை அவர் அருகில் சென்று அவரை அரவனித்தவாரு சுற்றி நின்ற கூட்டத்தின் மேல் தன் கண்டன பார்வையை வீசிவிட்டு தன் வீட்டுக்குள் அழைத்து சென்றாள்.

பாவம் முதியவள் மிகவும் மிரண்டு போய் இருந்தாள். ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அமர்ந்திருந்தாள். கோதை அளித்த தேனீர் அவள் அருகே ஏடு படிந்து அப்படியே இருந்தது. மாலை வீட்டு வேலைக்கு வந்த வசந்தியிடம் நடந்த விவரத்தை கோதை கூறினாள்.

யாமினி தன் அண்ணண் குடும்பத்தோடு ஒரு மாத சுற்றுலா செல்ல திட்டமிட்டு அதன்படி தன் மாமியரை தூரத்து உறவினரிடம் சொல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளாள். கிளம்பும் நேரம் வரை அந்த உறவினர் வராததால் காவேரி அம்மாவை வெளியே இருக்க விட்டு, வீட்டு கதவை பூட்டி சென்றுள்ளாள்.

கோதை சற்று நேரம் பேச முடியாமல் கலங்கி நின்றாள். இரவு ஸ்ரீனிவாசன் வந்ததும் எல்லாவற்றையும் கூறினாள். அந்த உறவினரின் முகவரியோ தொலைபேசி எண்ணோ காவேரி அம்மாவிடம் இல்லை. மிகவும் முயற்சி செய்து அவரை இரண்டு இட்லி சாப்பிட வைத்தார்கள். பிள்ளைகள் அறையிலேயே அவருக்கு படுக்கை போட்டு அவர் அருகிலேயே கோதையும் படுத்துகொண்டாள். இரவு வெகு நேரம் அவர் தூங்கவில்லை.

விடிந்ததும் முதல் வேலையாக தன் அலுவலகதிற்கு இரண்டு நாள் விடுமுறை கடிதம் அனுபினாள் கோதை. மிகவும் சிரமப்பட்டு காவேரி அம்மாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள். அந்த இரண்டு நாட்களும் அவரிடம் எந்த பழைய விஷயங்களையும் பேசவில்லை. முடிந்த வரை பிள்ளைகள் மற்றும் தன் குடும்பம் அலுவலக பணிகள் என தன் தாயிடம் பேசுவது போல அவருடன் பேசினாள். அன்று விடுமுறை முடிந்து அலுவலகம் சென்ற போதும் மனம் முழுக்க காவேரி அம்மாவை சுற்றியே இருந்தது. மாலை வீட்டுக்கு சென்ற போது பிள்ளைகள் கலகலப்பாக அவரிடம் பேசிக் கொண்டு இருந்ததையும் அவர் முகம் மலர்ந்த புன்னகையுடன் சிரித்து கொண்டிருந்ததையும் பார்த்த கோதை கண் கலங்கி நின்றாள்.

அந்த ஒரு மாதத்தில் காவேரி அம்மா கோதைக்கு தாயாகவும் குழந்தைகளுக்கு பாட்டியாகவும் மாறி மிகுந்த மகிழ்சியோடு இருந்தாள். யாமினி திரும்பி வரும் நாள் நெருங்கியது. ஸ்ரீனிவசன் கூட கோதையிடம் இது பற்றி நினைவுபடுத்தினான். கோதை மிக தெளிவாக இருந்தாள். ஒரு வேளை காவேரி அம்மா இங்கேயே தங்க விரும்பினால் யாமினியிடம் பேசி முடிவு செய்யலாம் என்று,

யாமினி மிகவும் ஆடம்பரமாக அவள் பிள்ளைகளோடு வீடு வந்து சேர்ந்தாள். சற்று நேரம் பொறுத்து காவேரி அம்மாவை அழைத்து கொண்டு கோதை யாமினி வீட்டுக்குச் சென்றாள். இவர்கள் இருவரையும் கண்ட யாமினிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.. நடந்த விவரத்தை சுருக்கமாக கூறினாள் கோதை. பத்ரகாளியாகவே மறினாள் யாமினி. கோதையே கொஞ்சம் பயந்து போனாள். ஆனால் காவேரி அம்மா சற்றும் கலங்கவில்லை. இரண்டடி முன்வைத்தவர் பளார் என ஒரு அரையை யாமினியின் கண்ணத்தில் இறக்கினார். சற்று நேரம் அங்கே ஒரு அமைதி நிலவியது. தன் பேரனிடம் சென்று உன் தந்தையிடம் நான் பேச வேண்டும் உடனே போன் செய் என்றார். மகனிடம் பேசியவர் மிக சாதாரணமாக நலம் விசாரித்து பேசிகொண்டிருந்தார். அவர் பேசியது சில நிமிடங்கள் தான் ஆனால் யாமினிக்கோ அது ஒரு யுகமாக தோன்றியது. எந்த வினாடி அத்தை தன்னால் பட்ட கஷ்டத்தை தன் மகனிடம் கூறிவிடவாரோ என அஞ்சி நடுங்கினாள். பொதுவாக பேசிவிட்டு பேரனிடம் கைபேசியை கொடுத்துவிட்டு திரும்பிய காவேரி அம்மா யாமினியிடம் அழுத்தமான குரலில் “என்னால் என் மகனுக்கும் உனக்கும் இடையே பிரச்சனை வருவதை நான் விரும்பவில்லை இதுவே கடைசி, இன்னோரு முறை நீ என்னை உதாசீனப் படுத்தினால் இதோ இவள் என் மூத்த மகள் கோதை இவள் உள்ள வரை எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் யாருமற்ற அனாதை இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்” என தெளிவான குரலில் கூறி கோதையிடம் “கொஞ்சம் இரும்மா முதல் முதலாக வீட்டுக்கு வந்து இருக்கிறாய், காப்பி கலந்து வருகிறேன்” எனக் கூறி உள்ளே சென்றாள்.

மனிதர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் தருவது பணமோ பதவியோ இல்லை. தனக்கான ஒரு ஆதரவு இந்த உலகத்தில் உள்ளது என்ற எண்ணம் மட்டுமே என்பதை கோதை மனதுக்குள் எண்ணியவாறு காவேரி அம்மாவிடம் விடை பெற்றாள்.

kumuda Selvamani
கும்ஸ்
#WritcoStoryPrompt61
You grew up in a home with unknown elements, you can't explain but there are numerous signs that your family is not alone in that house. Food would go missing and your stuff seems to move. Is there something wrong with your head or is there something deeper to this?

© Meera