...

24 views

தெய்வம் தந்த சொந்தமா -8
அத்தியாயம் - 8

இல்லம் வந்து முகில் நிலாவை விட்டு வேலைக்குக் கிளம்ப, நிலா அவனை அணைத்து இருந்தாள்.

“என்னாச்சு மூனு? எதுவும் வேணுமா?”

“என்னால உங்களுக்கு நிறைய தொந்தரவு இல்ல?”

“அடிச்சேன் வை… இதெல்லாம் தொந்தரவா? அவன் எதோ புரியாம பேசுறான். கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும். கல்யாணம் பண்ணிட்டு நிலான்னு சொன்னா, அவன் பொண்டாட்டி வெளுத்து விடப் போகுது. கடந்துருவான். நீ கவலைப்படாத மூனு.”

“என்னைக் கொஞ்ச நேரம் மடியில் வைச்சு இருக்கீங்களா?”

“அடியே… நான் பெர்மிஷன் போட்டு இருக்கேன். லேட்டா போனா அவ்ளோ தான். ராத்திரி வந்து மடியில் போட்டுக் கொஞ்சுறேன். இப்ப வேண்டாமே?” முகில் சொல்லவும் நிலா சட்டென அவனை விட்டு விலகி நிற்க, மெல்ல மகனை எட்டிப் பார்த்தான்.

சிறுவனோ நல்ல உறக்கத்தில் இருக்க, அலைபேசி எடுத்து விடுமுறை சொன்னவன், நிலாவை அள்ளி மடியில் போட்டுக் கொண்டான். நிலா எதுவும் பேசாது முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து இருக்க,

“வில்லி… நேத்தே லீவ் போடச் சொன்னான். கேட்டனா நானு? இப்ப லீவ் போட்டேன் சொன்னா சிரிப்பான். ஏன்டி மூனு என்னை இப்படி பொண்டாட்டி தாசனா மாத்தி வைச்சு இருக்க?”

“இங்க யாரும் யாரையும் மாத்தியும் வைக்கல, மயக்கியும் வைக்கல. நான் லீவ் போடச் சொன்ன மாதிரி என்னைக் கேட்டா?”

“ஒய்… அதுக்குள்ள கோவமா? சரி சொல்லு என்ன குழப்பம் உனக்கு?”

“வில்லியம் அண்ணாவையும் வைச்சு தான் பேசனும். வெளிய வாங்க.” நிலா சொல்ல, அவளோடு ஹால் வந்தான். வில்லியம் தொலைக்காட்சி முன் படுத்து இருக்க, கலை காபி ஆத்திக்கொண்டு இருந்தாள்.

“கொடு கலை நான் போடுறேன்.” நிலா கேட்க,

“வேணாம் அண்ணி. நான் போட்டேன். நீங்க அவங்களுக்கு எடுத்துக் கொடுங்க. நான் நமக்குக் கொண்டு வரேன்.” கலை சொல்லவும் நிலா காபி எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்ட வில்லியம்.

“நிலாமா…இங்க வாயேன். நான் சர்வாகிட்ட பேசின முறையில் உனக்கு எதும் வருத்தம் இல்ல தான? நாங்க காண்ட்ராக்ட் எடுக்கலாம் தானே?” வில்லியம் கேட்க,

“நீங்கப் பேசினதில் எந்தத் தப்பும் இல்ல அண்ணா. சர்வா நீங்கக் காண்ட்ராக்ட் எடுக்கத் தான் அங்க கட்டிடமே கட்டுறார். அதனால இனி நீங்க வேண்டாம் எல்லாம் சொல்ல விடமாட்டார்.”

“என்ன நிலா சொல்ற? புரியல.”

“எல்லா மருந்தும் ஒன்னிலிருந்து அஞ்சு வருஷம்வரை கெட்டு போகாது. அதைத் தேக்கி வைக்கவும் சரியா நாள் பார்த்துக் கொடுக்கவும் பெரிய யூனிட் ஃபேக்டரியில இருக்கும். அதுக்கும் மீறி அதிகம் தேவையுள்ள மாத்திரைகளை முன்கூட்டியே வாங்கி வைக்க மருத்துவமனையும், அதோட சேர்ந்த மருந்து கடைகளும் உண்டு. ரொம்ப முக்கியமான மருந்துகளை ஊருக்கு ஊர் இருக்கும் பதப்படுற நிலையத்தில் ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து அதில் மருந்தைச் சேர்த்து வைப்பாங்க.”

“ இப்படி சப்ளை யூனிட் எல்லாம் ஊருக்கு ஊர் இருக்காது. பெரிய நகரத்தில் தான் இருக்கும். தமிழ்நாட்டுக்கு சென்னை, கர்நாடகத்துக்கு பெங்களூர், கேரளாக்கு திருவனந்தபுரம் இப்படி மெயின் சப்ளை யூனிட் இருக்கும். அங்க இருந்து தான் சின்ன சின்ன ஊருக்கு மருந்தை விநியோகம் செய்வோம். இப்படி ஊருக்கு ஊர் சப்ளை யூனிட் வைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்றதை விட, குறைவுன்னு சொல்லலாம்.”

“அதும் போக ஊருக்கு ஊர் கம்பனி ஆஃபீஸ் இருக்கும். ஆர்டர் எடுத்து, அதைச் சென்னையிலிருந்து வாங்கி, அந்த மருந்தை விநியோகம் பண்ண அவங்களே போதும். இப்படியொரு யூனிட் இப்ப சர்வாவுக்கு தேவையே இல்ல. ஆனாலும் அவர் இதைச் செய்யக் காரணம் நீங்கத் தான். பெரிய யூனிட், பெரிய வேலை, அனுபவம், அதுக்கான வாய்ப்பு, உங்க உழைப்பை அடுத்தவங்களுக்கு எடுத்துக் காட்ட ஒரு வகையில் இது உதவும். பொருளா கொடுத்தா தானே வாங்க மாட்டீங்க? இப்படி தொழிலா கொடுத்தா வாங்கி தானே ஆகனும்? ஆக மொத்தம் இந்தக் காண்ட்ராக்ட் மட்டும் இல்ல, சர்வா கட்ட போற இந்தச் சப்ளை யூனிட்டே நட்புக்காகத் தான்.” நிலா விரிவாகச் சொல்லி முடிக்க,

“என்ன நிலா சொல்ற? இந்தச் சர்வா ஏன் இப்படி பண்றான்? இத்தனை தெரிஞ்ச நீ ஏன் அங்கேயே இதைச் சொல்லல?” வில்லியம் கேட்க,

“டேய் வில்லி… இந்தக் காண்ட்ராக்ட் நமக்கு வேண்டாம்.” முகிலன் கூற,

“அத்தனை தூரம் சொல்லியும் மறுபடியும் அதையே தான செய்யுறார்? எல்லாம் காசு இருக்கிற திமிரு. இவரைக் கேட்டமா நம்ம வாய்ப்பு கொடுக்கச் சொல்லி? விலகி நிக்க சொன்னா, அதைக் கேட்காம…” கலை சலிப்புடன் சொல்ல,

“நிலா… பதில் சொல்லு நீ ஏன் அங்க எதுவும் சொல்லல?” வில்லியம் மீண்டும் கேட்க,

“எனக்கு யோசிக்க நேரம் வேணும் தானே அண்ணா? சர்வா கம்பனியில் வேலை செய்யுற யாரும் வரல. அதில் தான் எனக்கு இந்தச் சந்தேகமே…”

“வில்லி… இதை நம்ம செய்யப் போறது இல்ல. நமக்கு இந்தக் காண்ட்ராக்ட் வேண்டாம். அவனுக்கு நிலா மேல உள்ள நேசத்தை காட்ட இதுவா முறை? இந்த மாச சம்பளக்காரன் எப்ப சம்பாதிச்சு முன்னேறி, நிலா எப்ப வசதியா வாழ்வான்னு யோசிச்சு. இந்த வாய்ப்பைப் பிச்சையா போட முன் வந்து இருக்கான். இது நமக்கு அசிங்கம் வில்லி…” முகில் சொல்லவும் நிலா சட்டென எழுந்து அறைக்குள் நுழைந்து கதவை மூடி இருந்தாள்.

“அறிவுக்கெட்ட முண்டம்… என்ன பேசற முகிலு நீ? ஏன் நிலா மேல பாசமும் நேசமும் நீ மட்டும் தான் வைக்கனுமா? அவன் உயரத்துக்கு நீ எல்லாம் அவனுக்கு ஒரு ஆளா? அன்னிக்கே அடிச்சு தூக்கி வீசிட்டு நிலாவை கூப்பிட்டு போகத் தெரியாதா அவனுக்கு? நிலா உன்னோட நல்லா வாழனும் தான் தேவையே இல்லாத சப்ளை யூனிட்டை கோவையில் கட்ட நிக்கிறான். பணமா உதவி செய்தா நீ வாங்க மாட்டேன் தான் உன் உழைப்புக்கு கூலி தரேன் சொல்றான். நிலா நல்லா வாழ்ந்த காலத்தில் அவ கூட இருந்தவர் சர்வேஷ் அவருக்கு ஆதங்கம் அதான் உன்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கார்.”

“இதே நீ நிலா இடத்தில் இருந்து, உன் இடத்தில் நிலா இருந்தா… உன் சொந்தம் பந்தம் என்ன செய்து இருக்கும் சொல்லு? உனக்குத் தகுதி இல்லாத பொண்ணுன்னு சொல்லி உனக்கு வேற ஒரு பொண்ணு பார்க்கறோம் சொல்லி, நிலாவை உன் வாழ்க்கையில் இருந்தே துரத்தி விட்டு இருக்க மாட்டாங்க? நிலா அப்பா அதைச் செய்யல. அவர் சீராட்டி பாராட்டி வளர்த்த மக நல்லா இருக்கனும் நினைக்கிறார். இதுல என்ன தப்பு? நான் உனக்காகச் செய்தா நட்பு, கலை உனக்காகச் செய்தா அன்பு, பாசம். இதே சர்வா செய்தா பழைய நேசமா? இன்னொரு முறை இப்படி நிலாவை காயப்படுத்தி பார்த்த, நானே செந்தில் முருகன் சாரை கூப்பிட்டு நிலாவை அவரோட அனுப்பி விட்டுருவேன்.” வில்லியம் சொல்லிவிட்டு கலையையும் முறைத்து விட்டு எழுந்து சட்டையைப் போட்டவன் வெளியே சென்று இருந்தான்.

கலை எழுந்து அறைக்குள் சென்று இருக்க, முகில் சில நிமிடம் ஹாலில் அமர்ந்து இருந்தவன், மெல்ல எழுந்து அறைக்குள் நுழைந்தான். நிலா அமர்ந்து மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் முதுகுக்கு தலையணை எடுத்து வைத்த முகிலனை நிலா முறைக்க, அப்படியே வந்து அவள் எதிரில் அமர்ந்து இருந்தான்.

“மூனு… நான்…” முகில் பேசத் தொடங்கும் முன்பே நிலா கையைக் காட்டி அவனை நிறுத்தச் சொல்ல, முகில் கேள்வியாக அவளை நோக்க,

“பிள்ளை பால் குடிக்கிற வரை அமைதியா இருங்க. அவன் கவனம் சிதறினா சரியா பசியாற மாட்டான்.” நிலா மெல்லமாய் சொல்ல, முகில் மகனைக் கண்ணில் நிறைத்து விட்டு நிலாவின் கைபிடிக்க வரச் சட்டெனக் கையை விலக்கி இருந்தாள்.

பால் கொடுத்தபின் மகனை அவள் தோளில் போட்டுக்கொள்ள, சட்டென முகில் அவன் கைகளில் வாங்கி கொண்டு அவளுக்குத் தலையணை வைத்து அமரச் சொன்னவன், மகனின் முதுகை வருடிக் கொண்டே நிலாவை பார்த்து இருந்தான்.

“ என்மேல நீ கோபப்பட்டு எதுவும் ஆகப் போறது இல்ல. உங்க அப்பாவையே நான் தள்ளித் தான் வைச்சு இருக்கேன். இதில் இந்தச் சர்வா மட்டும் என்ன பெரிய இவனா? இந்த முகில் கையேந்தி நின்ன காலம் எல்லாம் முடிஞ்சு போய்டுச்சு. எனக்கு யாரும் வாய்ப்பு தர வேண்டியது இல்ல. என் உழைப்பால் எனக்கான வாய்ப்பை என்னால உருவாகிக்க முடியும். அப்புறம் நான் சொன்னதுக்கு உனக்குக் கோவம் வருதே? காவ்யா அவ என்ன சொன்னான்னு மறந்து போயிருச்சா? “ பிச்சைக்காரன் ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு சிம்பத்தி காட்டிட்டு இருக்கியா? உன்னால் சர்வா எனக்கு எதிரியா மாறிட்டார். ஒருத்தன் கூட இருந்துட்டே இன்னொருத்தனையும் உன் கை அசைவில் வைச்சு இருக்கிற திறமை எனக்கு வராதுன்னு” சொன்னா தான? அப்ப மேடம் எதுவும் பேசாம அழுதுட்டு தானே நிக்க முடிஞ்சுது? “

“இப்ப சர்வா உதவின்னு வந்து இதை எல்லாம் செய்தா என்ன சொல்லும் இங்க ஊரு? அவன் உன்மேல வைச்சு இருக்கிற காதலை துறுப்பு சீட்டா நான் பயன்படுத்தின மாதிரி பேசாதா? சர்வாக்கு உன் மேல என்ன உணர்வு இருந்தாலும் எனக்கு அதில் கவலை இல்ல. ஆனா அதை வெச்சுட்டு என் தன்மானத்தை சீண்டி பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன். உங்க அப்பாவே சும்மா இருக்கார். இவனுக்கு என்ன? அப்படி இங்க என்ன வசதி குறைவு நிலா உனக்கு? நான் மாடா உழைக்கிறது நமக்காகத் தான? எதாவது குறை இருந்தா என்கிட்ட சொல்லலாம் தான உன் அப்பாவும் அவனும்? பணக்கார வீட்டு பசங்களுக்கு பணம் இல்லாதவன் கஷ்டம் புரியாது.”

“நான் உனக்குப் பொருத்தம் இல்லாதவனா மூனு? என்னால உன்னைச் சந்தோசமா வைச்சுக்க முடியாதா? நீ என்னோட சந்தோசமா இருக்கேன்னு நம்பிட்டு இருக்கேன் ஒருவேளை அப்படி இல்லையோ? எதும் கஷ்டமா இருந்தா சொல்லிடு. நான் தன்மானத்தை விட்டுக் கொடுத்துறேன். பணம் இல்லாத பிச்சைக்காரன் எனக்கு எதுக்கு தன்மானம்? இல்லன்னா வெற்றியை என்கிட்ட கொடுத்துட்டு உன் அப்பா கூடவே போய்டு. நீயாவது நிம்மதியா சந்தோசமா இரு.” முகில் சொல்லி முடிக்கும் முன் நிலா பாய்ந்து இருந்தாள்.

“ இன்னொரு வார்த்தை பேசின இப்படியே எங்கையாவது போய்டுவேன். இதுக்கு தான் நான் பயந்தேன். உன் தாழ்வு மனப்பான்மையை தூண்டி விட்டாச்சு. இனி அது என்னைத் தள்ளி வைச்சே யோசிக்கும். எப்படி வெற்றி மட்டும் உனக்கு வேணும். நான் என் அப்பன் கூடப் போகனுமா? சரி போறேன் என் அப்பாவைக் கூப்பிட்டு வாப்போறேன். நான் அனாதைன்னு உனக்குத் தெரியும் தானே? எந்த உரிமையில் நான் செந்தில் முருகன் வீட்டுக்குப் போவேன்? இல்ல தெரியாம தான் கேட்கிறேன். அவங்க தான் பாசத்தில், ஆதங்கத்தில், என் மேல வெச்ச பழைய காதலில் எல்லாம் பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காங்க. உனக்கு என்ன வந்துச்சு? நீயும் எதையும் யோசிக்காம பேசிட்டு இருக்க? பாசம் இல்லாத எத்தனையோ பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. எனக்கு மட்டும் தான் இந்தப் பாசமே தொல்லையா இருக்கு.”

“குறை இருக்குன்னு நான் உன்கிட்ட சொன்னேனா? இல்ல அந்தக் காண்ட்ராக்ட்டை எடுத்துச் செய்யுன்னு தான் நான் சொன்னேனா? இதான் விஷயமுன்னு சொல்லிட்டேன். எந்த முடிவா இருந்தாலும் உங்களோடது தான். சர்வாகிட்ட மறுத்துப் பேசும்போது தன்மையா சொல்லுங்க அதான் என்னோட ஒரே கோரிக்கை. மத்தபடி எனக்கு என் புருஷன், பையன், அண்ணா, கலைன்னு எல்லாமே நிறைவு தான். நீங்க எதையும் மனசில் போட்டுக் குழப்ப வேண்டாம்.”

“சாரி மூனு.”

“அதான் என்னைப் போன்னு சொல்லிட்ட தானே? அப்புறம் என்ன மூனு நாலுன்னு…”

“என்னால நீ இல்லாம இருக்க முடியுமா? நானும் வெற்றியும் உனக்குச் சுமையா இருக்க கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன்.”

“ஓடிரு… என்னை டென்ஷன் பண்ணாம… போப்போய் வில்லியம் அண்ணாவை சமாதானம் பண்ணி கூப்பிட்டு வா. நம்மால அவங்களுக்கும் பிரச்சனை வரப் போகுது.” நிலா சொல்லவும் முகில் மகனை அவள் கைகளில் கொடுத்து விட்டுக் கிளம்பி சென்று இருந்தான்.

© GMKNOVELS