...

0 views

மாஆ மாஆ
அவருடைய பெயர் இப்போதும் தெரியாது, அதற்கான அவசியமும் இல்லை, நாங்கள் அவரை மாமா என்றே அழைத்திருக்கிறோம், மாமா ஒரு ஆசிரியர், முதன்முதலில் ஒரு அடர்த்தியான புளியமர நிழலில் வைத்து அவரை நான் பார்த்தேன்.

பாதி வழுக்கை விழுந்த நரைத்த முடி, பொய்கள் ஊறி இருக்காத கண்கள், எப்போதும் சிரிக்கிற கன்னக்குழிகள், ஊதாநிறத்தில் கட்டம் போட்ட கைலியும், சாம்பல் நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார், முழங்கால்களை மடக்கி கைகளால் கட்டியபடி பாண்டியிடம் தீவிரமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

பாண்டி எங்கள் அணியின் துவக்க ஆட்டக்காரன், பாண்டியோடு ஆட்டத்தைத் துவக்கும் இன்னொருவர் அம்புரோஸ் அண்ணன், அவருக்கு ஒரு கை கிடையாது, ஆனால் அவர்தான் அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரர்.

30 ரன்களுக்கு உத்திரவாதமானவர், நம்மால் இரண்டு கைகளாலும் சமாளிக்க முடியாத பேட்டை அசாத்தியமாகக் கையாளுபவர், ஒன்று, இரண்டு, நான்கு எதுவுமே அவருடைய இலக்கில்லை, 6 ரன்கள் ஒன்றே அவருடைய இலக்கு, தன்னிடம் மூன்று கைகள் இருக்கிறதென்ற நம்பிக்கையும், உறுதியும் அவருக்கு உண்டு. அது ஒரு தனிக்கதை.

இப்போது புளியமரத்தின் கீழே அமர்ந்திருக்கும் மாமாவிடம் வந்து விடுவோம், மாமா பாண்டியிடம் "4 ஓவர் நின்னு விளையாடீரு, அடிக்கிறத அம்புரோஸ் பாத்துக்குவான், அப்பறம் பவுலர் கெடையாது, 65 ரன்னெல்லாம் ஒரு பெரிய மேட்டர் கெடயாது, ஜெயிக்கிறோம்". பாண்டி மாமாவின் கனத்த கைகளில் தட்டிவிட்டு இறங்கிப் போனான்.

துரதிர்ஷ்டவசமாக எங்கள் அணி அந்த ஆட்டத்தில் தோற்றுப் போனது, ஒவ்வொரு பந்தையும் எப்படி ஆட வேண்டுமென்று மாமா உரக்கக் கத்தியபடி எல்லைக் கோட்டு வெயிலில் அமர்ந்திருந்தார், அவருடைய கண்கள் வெற்றிக்கான வெளிச்சக் கீற்றுகளை மைதானத்துக்குள் பாய்ச்சியபடியே இருந்தது.

திரும்புகிற வழியில் மாமாவின் சைக்கிளில் முன்பக்கக் கம்பியில் நானும் கேரியரில் சின்னையாவும் அமர்ந்திருந்தோம், மாமா "சரி, விடுங்கடா, அடுத்து கூத்தலூர் டோர்னமென்ட்ல ஜெயிக்கிறோம், ஒழுங்கா பிராக்டிஸ் பன்றோம், கப்படிக்கிறோம்" என்று சமாதானமாகப் பேசியபடி களைத்திருந்த அணியை சரிசெய்து கொண்டிருந்தார்.

எங்களில் பலர் பகல் உணவு சாப்பிட்டிருக்கவில்லை. மாமாவின் சைக்கிள் மானகிரி தேநீர்க்கடையில் நின்று ஸ்டேண்ட் போடப்பட்டது, "பன்னும், வடையும் எடுத்துக்குங்கடா" என்றபடி மாமா தலையை எண்ண ஆரம்பித்தார்.

"13 டீ போடுப்பா" என்று வெள்ளைச்சாமி ஐயா மகனிடம் சொல்லிவிட்டு ஸ்டாலினிடம் "அந்தப் பந்த நீ தேவையில்லாம ஆடுன, அது ஆஃப் சைடுல வொய்டுடா, ஸ்லிப் நிப்பாட்டி இருக்கான்ல, பேட்ட நீட்டுனா டிப்பாகும்" அடுத்த மேட்ச்ல நீ 4த் டவுன் ஆடு".

"இல்ல மாமா, பந்து திடீர்னு டேர்ன் ஆயிருச்சு, கல்லுப் பட்டுருக்கும் போல" என்று ஸ்டாலின் மாமாவுக்குப் பதில் சொல்லியபடி டீயை உறிஞ்சிக் குடித்து முடித்தான்.

நான் ஊரின் கிரிக்கெட் அணிக்குப் புதியவன், கூடவே சின்னவனும் கூட, 10 ஆம் வகுப்பு விடுமுறையில் இருப்பவன், அணியில் இருந்தேன், ஆனால் ஆட வாய்ப்புக் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இரண்டு மூன்று டோர்னமென்ட்களில் நானும் எல்லோரையும் போல மாமாவுக்கு நெருக்கமானேன், மாமா என்னுடைய வேகப்பந்து வீச்சுக்கு ஆலோசனைகள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

9 மணிக்கு மேட்ச் என்றால் மாமா சைக்கிளை 7 மணிக்கெல்லாம் வெளியில் எடுத்து விடுவார், அணியிலிருக்கிற எல்லா வீடுகளுக்கும் போவார்.

ஒருவழியாக எல்லோரையும் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகத் திரட்டி அன்றைய ஆட்டத்துக்கான செயல் திட்டங்களை வழங்குவார், பிறகு நாங்கள் கண்மாய்க் கரை புளியமரங்களையும், நெற்கதிர் வாசத்தையும் எதிர்கொண்டு மைதானங்களை அடைவோம்.

மாமா எங்களைத் தன்னுடைய பிள்ளைகளைப் போல வழிநடத்துவார்,

"இங்கேரு பொன்மணிப் பயலே, ரோட்ல சர்க்கஸெல்லாம் பன்றதா இருந்தா, அறைஞ்சு பல்லப் பேத்துப்புடுவேன்"

என்று மிரட்டுவதாகட்டும், உள்ளூர்க் கடைகளில் சாப்பிடுகிற போது நாங்கள் வயிறாரச் சாப்பிடுவதைப் பார்த்து முடிந்து சலவைத் தாள்களை எண்ணிக் கடைக்காரரிடம் கொடுப்பதாகட்டும், அவருடைய கண்களில் ஏகாந்தமான எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு நிறைந்திருக்கும்.

தேர்வுக் காலங்களில் யாரெல்லாம் அடுத்த நாளில் தேர்வெழுதுகிறவர்களோ அவர்களுக்கு அணியில் இடம் கிடையாது, அவர்கள் தேர்வை முடித்த பிறகு மாமாவிடம் ரிப்போர்ட் செய்த பிறகுதான் அணிக்குள் மீண்டும் போக முடியும்.

மாமா அணிக்குப் புதிய பேட் வாங்குவதற்காகவும், சலுகை விலையில் கூட்டுறவுப் பண்டகசாலையில் ரப்பர் பந்துகளை மொத்தமாக வாங்குவதற்காகவும் விடுமுறை நாட்களிலும் சைக்கிள் மிதித்துக் காரைக்குடிக்குப் போவார்.

அந்த நேரத்தில் யாரை நினைக்கிறாரோ அவர்களை அழைத்துக் கொண்டு போவார், வேலை முடிந்தால் அனைவருக்கும் சன்னா ஹோட்டலில் தோசை வாங்கித் தருவார்.

மாமாவை ஊர்க்காரர்கள் விநோதமாகப் பார்ப்பார்கள், அவரை "பைத்தியக்காரன், சின்னப் பயலுகளோட சேந்து சுத்துற வயசப் பாரு" என்று கேலி பேசுபவர்களை எல்லாம் அவர் கண்டு கொண்டதே இல்லை.

அவருடைய இலக்கு அடுத்த டோர்னமென்டில் எப்படி ஜெயிப்பது, எதிர் அணியின் வியூகங்களை எப்படித் தகர்ப்பது என்பது குறித்தே இருக்கும், அவர் கிரிக்கெட் விளையாட்டுக்கும், அவர் வாழ்கிற வாழ்க்கைக்கும் மிகுந்த உண்மையுள்ளவராக இருந்தார்.

குன்றக்குடி பள்ளி மைதானத்தில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் நாங்கள் முதன்முதலாக கோப்பையை ஜெயித்தோம், கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட 3 பந்துகளில் 8 ரன்களை அடித்து விட்டு 4ஆவது பந்தில் ஸ்டாலின் அவுட்டானான், 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை.

ஸ்டாலினுக்கு அடுத்து என்னை இறக்குவதென்று மாமா முடிவு செய்திருந்தார், 5 ஆவது பந்து எப்படிக் கடந்தது என்றே தெரியாமல் தடவியபடி நின்றிருந்தது சாட்சாத் நானேதான், மாமா எல்லைக் கோட்டில் அங்குமிங்குமாய் பதட்டத்தோடு ஓடியபடி "பந்த மட்டும் பாரு, ஓவர்பிட்ச் விழுகும், விட்றாத" என்று கத்திக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

கடைசிப் பந்து மாமா சொன்னது போலவே ஓவர் பிட்ச், பலம் கொண்ட மட்டும் கிரீசில் இருந்து இரண்டடி இறங்கி பேட்டை சுழற்றினேன், லெக்சைடில் இருந்த பனைமர உச்சிக்குப் பந்து போய்க்கொண்டிருந்தது, திரில்லிங் மேட்ச் சிக்ஸர், மாமா ஓடிவந்து என்னைத் தூக்கிக் கொண்டு சுற்றினார்.

நாங்கள் கோப்பையை வாங்கி மாமாவின் கைகளில் கொடுத்தோம், மாமாவின் கண்களில் உலகத்தையே வென்று விட்ட பெருமிதமிருந்தது, அவர் ஒவ்வொரு பந்தையும் நினைவு கூர்ந்து நிறையப் பேசியபடி சைக்கிள் மிதித்தார்.

மாமாவுக்குக் கிரிக்கெட் விளையாடத் தெரியாது, ஆனால், கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும், ரிவர்ஸ் ஸ்விங்க் எப்படிப் போடுவது என்பதில் துவங்கி ஆன் டிரைவ் விளையாடும் போது உடல் எடையை முன்னங்கால்களில் எப்படித் தாங்குவது என்பது வரைக்கும் சொல்லிக் கொடுப்பார், மாமா பெரிய குடும்பத்தில் பிறந்தவர், அரசுப் பள்ளியில் ஆசிரியர்.

மாமா யாரிடமும் எந்த பாரபட்சமும் காட்டியதில்லை, எங்கள் கண்களில் எப்போதும் வெற்றியின் நிழல் படிந்திருக்க வேண்டுமென்று விரும்பினார், எங்கள் ஒவ்வொருவரோடும் அவர் மிக நெருக்கமாக இருந்தார்.

அவருடைய கண்களில் ஒருபோதும் போலித்தனத்தை நாங்கள் பார்க்கவில்லை, வாழ்க்கைக்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் அவர் உன்னதமான உண்மையைப் பரிசளித்தார்.

எப்போதாவது மாமா, மைதானத்துக்குப் பக்கமாய் இருக்கிற மரத்தடியில் இருக்கும் போது "தம்பிக்கிக் கிரிக்கெட்னா உயிருடா" என்று முணுமுணுப்பார், ஒரு கோடைக் காலத்தின் மைதானத்தில் அரையிருட்டு சூழ்ந்திருக்க நாங்கள் அமர்ந்திருந்த போது மாமா வீட்டுக்குக் கிளம்பி இருந்தார்.

வியர்வையைத் துடைத்தபடி அம்புரோஸ் அண்ணன் மாமா ஏன் கிரிக்கெட்டை நேசிக்கிறார் என்ற கதையை எங்களுக்குச் சொன்னார்.

மாமாவுக்கு இரண்டு பிள்ளைகள், மூத்த பெண் குழந்தைக்குத் திருமணமாகி விட்டது, இரண்டாவதாக மைக்கேல் என்கிற 17 வயதுப் பையன், மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியவன், சிவகங்கையில் நடந்த மாநில அணித் தேர்வுக்கான ஆட்டத்தில் நெஞ்சில் விழுந்த பந்தில் மூர்ச்சையாகி சிகிச்சை பலனின்றி மூன்று நாளில் மரணித்து விட்டான்.

மாமா பத்து நாட்களுக்குப் பிறகு மைதானத்துக்கு வந்து விட்டார், மகனைக் காவு வாங்கிய அந்த விளையாட்டை அவர் வெறுக்கவில்லை, மாறாக ஒவ்வொரு மைதானத்திலும் மகன் சுவாசித்த மூச்சுக் காற்று இருக்கிறதென்று நம்பத் துவங்கிவிட்டார். மகன் நேசித்த விளையாட்டை தளும்பத் தளும்ப நேசித்தார்.

கிரிக்கெட் விளையாடுகிற பிள்ளைகள் எல்லாம் தனதென்று அந்த விளையாட்டோடு அவர் கலந்து விட்டார், இழப்பின் சுவடுகள் ஒருவேளை அவருடைய ஆழ்மனதிற்குள் இருந்திருக்கக் கூடும்.

எங்களிடம் ஒருபோதும் அதை அவர் வெளிக்காட்டியதே இல்லை, மாமாவோடு மைதானங்களில் நாங்கள் சுற்றித் திரிந்த காலங்கள் பிளமிங்கோ பறவைகள் கடந்து போகிற நிலப்பரப்பைப் போல பிரம்மாண்டமாக நினைவுக் குழிகளில் நிலைத்திருக்கிறது.

வாழ்க்கையை கறாராக அணுகுவது எப்படி என்றும், நீண்ட திட்டமிடுதல் கொண்டு இலக்குகளை வைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி ஓடியலைகிற பேதமையையும் உடைத்தெறிந்து வாழ்க்கைக்கு உண்மையைப் பரிசளிப்பது எப்படி என்று உணர்த்திய மனிதர் மாமா.

மாமாவின் பெயர் இப்போதும் எனக்குத் தெரியாது, அது அவ்வளவு முக்கியமானதுமில்லை, ஏனெனில் "மாமா" எந்தப் பெயரையும் எதிரொலிக்கவில்லை, பெயரில்லாத மேய்ப்பனாக அவர் எங்கள் உயிர்களைக் கட்டி நெடுங்காலமாக மைதானங்களில் ஆட வைத்தார்.

வாழ்க்கை மனிதர்களை எப்போதும் அலைக்கழிக்கிறது, துடிக்க விடுகிறது, மாமாவைப் போன்ற சில மனிதர்கள் வாழ்க்கையை பேரழகாக்கியபடி பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

//ப.பி//