...

20 views

இம்முறை அங்கு நீ இல்லை...
வழக்கம் போல் வரும்
பேருந்துதான்...
ஏறியவுடன் அமர
ஜன்னலோர இருக்கையினை
தேடுகிறது விழிகள்...
நினைவுகள் கிளர்த்தெழ
ததும்பும் நீர்த்துளிகளுக்கு
காரணம் சொல்ல
இந்த காற்று வேண்டுமல்லவா....

நினைவுகள் பின்நகர
பேருந்து முன்நகருகிறது...
ஒன்றிற்கு இரண்டு முறை
அழைத்துப் பார்த்து
தோற்றபின் பெருங்குரலெடுத்து
வினவும் நடத்துனரிடம்
சேருமிடம் தெருவித்து
பயணச்சீட்டு வாங்கி
பைகளில் திணித்து வைத்து
மீண்டும் பயணக்கிறேன்
என் நினைவு பயணத்தினை...

ஏனோ முன்பெல்லாம்
அத்தனை காலதாமதம் செய்யும் பேருந்து
இன்றென்னவோ
இத்தனை சீக்கிரமாய்
இறக்கிவிட்டது....

யாவும் மாறி இருக்கிறது
இரண்டு நாள் முன்பு பெய்த மழையோ
நேற்று பெய்த மழையோ
தெரியவில்லை
ஆங்காங்கே நீர்த்தேக்கங்கள்
அத்தனையும் மெல்ல கடந்து
உனக்கான காத்திருப்புகளில்
என்னை தாலாட்டிய
இடத்தினை நினைவுகூர்ந்து
கடந்து போகிறேன்....

தேநீர் பெரும்பாலும்
எனக்கு பிடிப்பதில்லை
உன் நினைவுகளை
நினைவு கூற அன்று எனக்கு
இந்த தேநீர்
அவசியமாகித்தான் போகிறது....

தேநீரின் கடைசித்துளியையும்
ரசித்துவிட்டு
நம்மை அறிமுகப்படுத்திய
நமக்கான இடத்தில்
நீ விட்டுச்சென்ற
மூச்சுக்காற்றினை சுவாசித்தபடி அங்குமிங்கும்
அலைந்து திரிந்து
நம் விதைத்து போன
காதலையெல்லாம்
ஒருமுறை கைகளில்
அள்ளிப்பருகிறேன்....

எல்லாம் என் கரம் சேர்ந்த
அத்தனை பேரின்பத்தையும்
அந்த ஒற்றை நொடி
தந்து போனதை
உன்னையும் என்னையும்
தவிர்த்து வேறெவரும் அறியார்....

இம்முறை அங்கு நீ இல்லை
உன் நினைவுகளை
எனக்களித்து என்னை
வருடிப் போகும்
உன் மூச்சுக்காற்று
என்னை ஆரத்தழுவிக்கொள்கிறது....
நானும் மிச்சம் வைத்தே
வந்துள்ளேன்
உன்னை ஆரத்தழுவிட
என் மூச்சுக்காற்றினை....

என் ப்ரியமான சகியே...♥


© நித்திலன்...🎭