...

34 views

எனக்கென உன்னைத் தந்து - 8
அத்தியாயம் - 8

அகிலேஷ் மணி எட்டாகியும் தூங்கிக் கொண்டு இருக்க, நர்மதா அவனின் கன்னத்தை ஈரம் செய்து வைத்தாள். அகிலேஷ் பாதி கண்ணில் பார்க்க, அவள் மீண்டும் முத்தம் வைக்க, தூக்கத்தை உதறி இருந்தான்.

அவளோ அவனின் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நின்று இருந்தாள். பிரவுன் நிற மடிப்பு பாவாடையும், அதற்கு எடுப்பாக வெள்ளை நிற கையில்லா சட்டையும் அணிந்து, தோள் தொட முயன்ற கூந்தலை சுருட்டிவிட்டு இதழுக்கு மிதமான பிங்க் நிறத்தில் இதழ் சாயம் இட்டு இருந்தாள். அள்ளிக்கொள்ள ஆசை வந்தாலும், வெளியே இவள் இப்படி சென்றாள் நிச்சயமாக அவனின் அம்மா அமைதியாய் இருக்க மாட்டார் என்பதும் புரிந்தது.

இவளை எது செய்யாதேயெனச் சொல்கிறோமோ அதைச் சரியாய் செய்து அவனைத் தர்ம சங்கடமான நிலைக்குள் தள்ளி விடுகிறாள். நர்மதா புன்னகைக்க, அகில் அவளின் முகத்தையும் அதில் தெரிந்த பிரகாசத்தையும் பார்த்து வாய் மூடிக் கொண்டான்.

“நல்லா இருக்கேன் தான?”

“ரொம்ப நல்லா இருக்க, இத்தனை நாளும் இந்தப் பாவாடை எல்லாம் எனக்குப் போட்டுக் காட்டுலையே நீ?”

“என் புருஷன் தான் என்னை ட்ரெஸ் போடவே விடுறது இல்லையே?” நர்மதா சொல்லிவிட்டு கண்ணடிக்க, அகில் முகத்திலும் புன்னகை.

“சரி நான் கிளம்பிட்டேன். நீங்கப் பார்த்துக்கோங்க. அம்மாவும் அப்பாவும் இன்னிக்கி காலையில பத்து மணிக்கு வந்துடுவாங்க. நான் வர எட்டாகும்.” நர்மதா சொல்ல, அகில் சரியென்று சொல்லவும் அவன் இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்து விடைபெற்று இருந்தாள்.

நர்மதா சிரித்து விடைபெற்று வெளியே செல்லும் வரை அனிதா எதையும் பேசவே இல்லை. அவர் அவரின் பைகளை எல்லாம் எடுத்து வைத்துப் பொங்கலும் சாம்பாரும் செய்து முடிக்க, கணேசன் ஈஸ்வரி இருவரும் இல்லம் வந்து இருந்தனர். அகில் அப்போது தான் எழுந்து அறை விட்டு வெளியே வந்தான்.

“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?” கணேசன் கேட்க,

“நல்லா இருக்கேன் மாமா. டூர் எப்படி இருந்தது?”

“நல்லா இருந்துச்சு, நீங்களும் நர்மதாவை கூப்பிட்டு லீவ் கிடைக்கும்போது ஒரு முறை போய்ட்டு வாங்க. கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும்.”

“போய்ட்டு வரேன் மாமா.” அகில் பதில் தந்தான்.

“அப்பா எங்க? அம்மா மட்டும் தான் இருக்காங்க?”

“அப்பா பிரென்ட் வீடுவரை போய் இருக்கார். ரொம்ப நெருங்கின சினேகிதம் அதான் நைட் அங்கேயே தங்கிட்டார்.” அகில் சொல்ல,

“நர்மதா தூங்குறாளா?”

“இல்ல மாமா. டே அவுட் போய் இருக்கா”

“ஓ அப்படியா? சரி அகில் நான் குளிச்சுட்டு வரேன்.”

அனைவரும் உண்ண அமர, மஞ்சு வந்து இருந்தாள். அவள் சூடாக வடை போட்டு எடுக்க, காலை உணவை உண்டு கொண்டு இருந்தனர்.

“சம்பந்தி நான் சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம். உங்க பொண்ணை கொஞ்சம் பொறுப்பா நடக்க சொல்லுங்க. மாமியார் நான் இருக்கும் போதே எனக்குக் கொஞ்சமும் மரியாதை தராம வெளிய கிளம்பி போய்ட்டா. நாங்க வந்த போதும் இல்ல. வழியனுப்பி வைக்கவும் இல்ல. ஒரு தம்ளர் தண்ணி கூடக் கொடுக்க அவளுக்கு நேரம் இல்ல. இது கொஞ்சம் கூடச் சரியில்ல.” அனிதா சொல்லவும் அகில் அன்னையை முறைத்து வைத்தான்.

“நீங்களும் தான் தேவை இல்லாம பேசி இருக்கீங்க. வியாழன் ராத்திரி நீங்கப் பேசின எல்லாமே எங்களுக்கும் தெரியும். பேசினா சங்கடம் விடுங்க.” ஈஸ்வரி சொல்லிவிட்டு அமைதியாய் உண்ண, அனிதா முகத்தில் எரிச்சல்.

“நான் பேசினது தப்பா? உங்க பொண்ணுக்கு புருஷன் இவன் மேல எதாவது அக்கறை இருக்கா? ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பும் அக்கறையுமா இருக்க வேண்டாமா?அவ என்னவோ அவ வேலை, அவ சந்தோசம்னு ஓடுறா, இவன் இங்க தனிகுரங்கு மாதிரி வீட்டில் உக்கார்ந்து இருக்கான். கேட்டா உங்க பொண்ணுக்கு கோவம் வருது, எதிர்த்துப் பேசுறா.” அனிதா கொஞ்சம் குரல் உயர்த்த,

“வயசில பெரியவங்க உங்களை அவ எதிர்த்துப் பேசினது தப்பு தான். ஆனா அவ பேசக் காரணம் நீங்கத் தான? வேலைக்கும் போய்ட்டு வந்து எப்படி அவ வீட்டிலும் வேலை பார்ப்பா சொல்லுங்க? உதவிக்கு இருக்கிற மஞ்சுவை உங்க பையன் கூடச் சேர்த்து பேசினது சரியா? வரைமுறை இல்லாம பேசினது நீங்க, பெரியவங்க நீங்களே இப்படி பேசினா, சின்னப் பொண்ணு அவளும் பேசத் தானே செய்வா? அவகிட்ட குறையே இருந்தாலும் தன்மையா சொன்னா அவளும் கேட்கிற ஆள் தான்.” கணேசன் சொல்ல, அகில் இப்போது அவனின் மாமனாரை சங்கடமாகப் பார்க்க, அவரோ உண்ணாது பாதியில் எழுந்து இருக்க, ஈஸ்வரியும் உடன் எழுந்து இருந்தார்.

“ஏன்மா? நேத்து அத்தனை தூரம் எடுத்துச் சொல்லியும் இப்ப அதே கேள்வியைக் கேக்கறீங்க? தேவை இல்லாத சங்கடத்தை உருவாக்கி வைக்காதீங்க பிளீஸ்.”

“நல்லா இருக்குடா உன் பேச்சு. அப்ப அவ என்ன செய்தாலும் பெரியவ நான் எதும் கேட்கக் கூடாது அப்படி தான? அதென்ன பொட்டப்பிள்ளைக்கு எட்டு மணிவரை தூக்கம்? ஒரு காபி கூடச் சுயமா போட்டுக்க தெரியாத பொண்ணு கோடி கோடியா சம்பாதிச்சு என்ன பயன் சொல்லு? இதுல ஆம்பள மாதிரி முடியை வெட்டிட்டு, முக்காக் கால் பாவாடையும் கையில்லாத சட்டையும் போட்டுப் புருஷன் வீட்டில் இருக்கும் போதே ஊரு மேயப் போயாச்சு. மாமியார் நான் இருக்கேன், புருஷன் நீ இருக்க, நம்மை எல்லாம் விட வெளிய சுத்த போறது தான் முக்கியம் இல்லையா?” அனிதா கேட்க,

“என் பொண்ணை தேவை இல்லாம தப்பா பேச வேண்டாம். யார் ஊர் மேயப் போனது? வார்த்தையை யோசிச்சு பேசுங்க. இல்ல வீண் சங்கடம் தான் வரும். அகில் பிளீஸ் உங்க அம்மாவை அமைதியா இருக்க சொல்லுங்க.” கணேசன் அதிருப்தியை வெளிபடுத்த,

“அவங்க பழைய காலத்து மனுஷி மாமா. பிளீஸ் எதோ ஆதங்கத்தில் பேசுறாங்க அதைப் பெருசா எடுக்க வேண்டாம்.” அகில் சொல்லவும், கணேசன் கிளம்பி வெளியே சென்று இருக்க, ஈஸ்வரி அவரின் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

“அம்மா… ஏன்? எனக்கே எந்தப் பிரச்சனையும் இல்லன்னு சொல்றேன். நீங்கச் சும்மா அதையே சொல்லிட்டு இருக்கீங்க.? உங்களுக்கு விருப்பம் இல்லன்னா யாரும் எதையும் செய்யக் கூடாதா?” அகில் கேட்க,

“நல்லா தான்டா மயக்கி வெச்சு இருக்கா, கல்யாணமானதும் எப்படி தான் இப்படி மாறிப் போறீங்களோ?” அனிதா கேட்க அகிலேஷ் எழுந்து சென்றவன் அருணகிரியை அழைத்து இருந்தான்.

அவர் அழைப்பை ஏற்று பேசவும், உடனே இல்லம் வந்து அம்மாவை அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்ப சொல்லி இருந்தான். வீட்டில் நடந்த வாக்குவாதம்பற்றி அகில் கூறவும் அருணகிரி நண்பன் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தார். அவர் இல்லம் வந்து அனிதாவை முறைக்க, அவரோ தலை குனிந்து கொண்டார்.

பெயருக்கு என அரை மணி நேரம் பொழுதைப் போக்கி, ஈஸ்வரியிடம் கூறிவிட்டு, கணேசனை அழைத்து விவரம் சொல்லி விட்டு விடைபெற்று இருந்தனர். அகிலேஷ் முதல் முறையாக நர்மதா வீட்டில் இருப்பதை அவஸ்தையாக உணர்ந்து இருந்தான். சற்று நேரத்தில் ஈஸ்வரியும் எங்கோ சென்று விட, அகில் மட்டும் வீட்டில் தனியாக இருக்க, மஞ்சு அவன் முன் வந்து தயங்கி நின்றாள்.

“சொல்லுங்க அக்கா.”

“பெரிய மேடமும், சாரும் மதியம் அவங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கு என்ன தம்பி செய்யட்டும்?”

“எனக்கு எதும் வேண்டாம் அக்கா. உங்களுக்கு வேற வேலை இருந்தா பாருங்க.”

“ எல்லா வேலையும் முடிச்சுட்டேன். வேற வேலை இல்ல. தம்பி, நான் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா? பையனுக்குச் சமைச்சுட்டு, சாய்ந்தரம் டீப்போட வந்துடுவேன்.” மஞ்சு கேட்கவும்,

“போய்ட்டு வாங்க அக்கா. வடை பொங்கல் எடுத்துட்டு போங்க.”

“அதெல்லாம் எடுத்தா மேடமுக்கு பிடிக்காது தம்பி.”

“நான் சொல்லித் தானே எடுத்துட்டு போறீங்க? யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. வீணா போய்டும் அக்கா உங்களுக்கு வேண்டாம்னா பிளீஸ் வேற யாருக்கும் கொடுங்க.” அகிலேஷ் சொல்ல, மஞ்சு உணவை எடுத்துச் சென்றாள்.

அகிலேஷ் அப்படியே சோஃபாவில் படுத்துக் கொண்டான். மனம் வெறுமையாய் இருந்தது. புதிதாய் திருமணமான சுவடுகளை இழந்து வாழ்க்கை நிறைய கேள்விகளைக் கேட்டு நின்றது. ஏன் இந்த அலுப்பும் சலிப்பும் என்று அவனுக்கே புரியவில்லை. அவன் தாய் சொன்ன அனைத்து விஷயத்திலும் அவனுக்கு உடன்பாடு இல்லாத போதும். ஒன்றை மட்டும் அவன் ஏற்றுக் கொண்டான்.

‘அது திருமணத்தின் பின்னும் நர்மதா அவளாக மட்டுமே இருப்பது. அவனுக்குக் கிடைப்பது எல்லாம் அறிவிப்புகள் மட்டும் தான். அவனுடன் கலந்து ஆலோசித்து அவள் எதையும் செய்வதில்லை. உணவில், உடையில், ஏன் கலவி என்றாலும் அது அவளின் விருப்பம் தான். இப்போது கூடத் தன்னைப் பற்றி எதையும் யோசிக்காது அவளின் தோழிகள் உடன் நேரத்தைச் செலவு செய்யச் சென்று விட்டாள். இதுவும் என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லாது கிடைத்த அறிவிப்பு மட்டும். ஆக அவளின் வாழ்வில் நான் யார்?’ சிந்தனைகள் அவனை அழுத்த, அகில் சோர்வாகக் கண்ணை மூட, உறங்கி இருந்தான்.

வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டு அவன் எழுந்தபோது நேரம் மாலையாகி இருந்தது. அகில் கதவைத் திறக்க, நர்மதா நின்று இருந்தாள். அவளின் முகத்தில் சோர்வை கண்டவன் வழிவிட்டு நிற்க, உள்ளே வந்தவள் எதையும் கேட்காது குளியல் அறைக்குச் சென்று இருந்தாள். நர்மதா அவளைச் சுத்தம் செய்து வரவும் மஞ்சு வரவும் சரியாக இருந்தது.

“மஞ்சு எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ்.” நர்மதா சொல்ல, மஞ்சு வேலையைத் தொடங்கி இருந்தாள்.

அகில் அமைதியாக நர்மதாவை பார்க்க, அவளோ பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்து விட்டு, அவள் வாங்கி வந்த உடைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். ஜுஸ் வரவும் அதைக் குடித்தவள் கட்டிலில் சாய்ந்து விட, அகில் தண்ணீரை குடித்து விட்டு, பால்கனி சென்று அமர்ந்து விட்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு நிறைந்து போனது. கணேசன், ஈஸ்வரி இருவரும் வந்திருக்க நர்மதாவின் காதில் காலையில் நடந்த வாக்குவாதம் பகிரப்பட்டது. இரவு உணவாகக் கோழிக்கறி குழப்பும், ஆப்பமும் மஞ்சு செய்திருக்க, உண்ண அமர்ந்தான் அகிலேஷ்.

“ அத்த எதுக்காக எங்க அம்மா அப்பாகிட்ட அப்படி பேசினாங்க? அதும் ஊரு மே… இதெல்லாம் தப்பு அகில். எனக்கு இது கஷ்டமா இருக்கு.” நர்மதா சொல்ல, அகில் எதுவும் சொல்லவில்லை.

“உங்களை நாங்க எப்படி மாப்பிள்ளை நடுத்துறோம்.? நீங்க உங்க இஷ்டம் போலத் தான இருக்கீங்க? மஞ்சு இங்க யாரையும் உறவு வெச்சு கூப்பிட்டது இல்ல. உங்களை உறவு வெச்சு கூப்பிட காரணம் நீங்க, உங்களுக்கு எது விருப்பமோ அதுவே இருக்கட்டும்னு நாங்க ஏத்துக்கல? உங்க அம்மா ஏன் என் பொண்ணை அப்படியே ஏத்துக்காம இத்தனை பேசறாங்க?” ஈஸ்வரி கேட்க, அகில் எழுந்து நின்றவன்,

“அவங்க உங்களைப் போலப் பெங்களூர்வாசி இல்ல. அவங்களுக்கு நார்மதாவை புரிஞ்சுக்க முடியல. அதான் அவங்க மனஆதங்கம் எல்லாத்தையும் மனசில் வைக்காம பேசிட்டாங்க. மத்தபடி அவங்களுக்கு நர்மதா மேல எந்த வெறுப்பும் விரோதமும் இல்ல. அவங்க பேசினது அதிகம் தான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” அகிலேஷ் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பை சொல்லி விட்டுப் படுக்கை அறைக்குள் சென்று இருந்தான்.

© GMKNOVELS