...

6 views

ஜென்மத்தின் தேடல் 5
               
"ஜமீன்தார் ஐயா, காட்டுச் சித்தர் கோவில் வாசலில் நிற்கிறார். " என்று  படபடப்புடன்  ஓடி வந்து கூறியது அந்தக் குரல்.

"ஏதாவது பிரச்சினை வரப்போகிறது என்றால் தான் காட்டு சித்தர்  வருவாரே..."  என்று ஊர் மக்களின் பேச்சுக்கள் ஒருபுறம்.

ஜமீன், காட்டுச் சித்தரை பார்த்ததும் அவர் கண்களில் ஈரம் கசிந்தது.  நாச்சியார் இரு கை கூப்பி வணங்கினாள். சித்தர்  அவர்களை பார்த்து புன்சிரிப்பு சிரித்தார்.

"ஜமீனுக்கு  என்னை ஞாபகம் உள்ளதா? " என்றார் சித்தர்.

"உங்களை மறக்க முடியுமா ஐயா. ஜமீன் வாரிசுகளை  காப்பாற்றி கொடுத்ததே
நீங்கள் தானே..." என்று நன்றியுடன் கூறினார் ஜமீன்.

"ஹா ஹா ஹா ஞாபகம் வைத்துள்ளாய்." என்று சிரித்தார் காட்டு சித்தர்.

"நான் கூறுவதை நன்றாகக் கேட்டு கொள். நான் கொடுத்ததை பத்திரமாகப்  பார்த்து கொண்டால் நீ பெற்றது உன்னிடம் பத்திரமாகவே இருக்கும். " என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்  சித்தர்.

சித்தர் கூறியதை கேட்ட நாச்சியார் மற்றும் ஜமீன் இருவரின் மனநிலையில் மிகுந்த படபடப்பு தென்பட்டது. ஒருவருக்கொருவர் கண்களில் பயத்தோடு பார்த்து கொண்டனர்.

"ஐயா, கோவிலினுள் செல்லலாமா?..." என்று கேட்டார் பூசாரி.

" சரி வாருங்கள் " என்று மனக் குழப்பத்துடன் ஜமீன்.

கோவிலில் ஆங்காங்கே அனைவரும் மகிழ்வுடன் பொங்கல் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கின்றார்கள். திருவிழாவில் உற்சவம்  சிறப்பான முறையில் நடைபெற்றது. மறுநாள் வெறியாட்டு விழா. அனைவர் வீட்டிலும் கிடா வெட்டு நடைபெறும். திருவிழாவின் கடைசி நாளில் தான் வெறியாட்டு விழா கொண்டாடுவார்கள்.

"பூசாரி, நாளைய விழாவின் படையலுக்கு அனைத்தும் தயாராகி
உள்ளதா?.. " என்று கேட்டார் ஜமீன்.

"அனைத்தும் தயார் நிலையில் உள்ளது ஐயா. " என்று கூறினார் பூசாரி.

" சரி, கணக்குபிள்ளை நாச்சியார் எங்கே?... நாம் புறப்படலாமே... " என்று கூறினார் ஜமீன்.

"இதோ, நான் சென்று பார்த்து வருகிறேன். " என்றார் கணக்குபிள்ளை.

கணக்குபிள்ளை "அம்மா, ஐயா அழைத்து வர சொன்னார்... "

"கணக்குபிள்ளை, நடப்பதெல்லாம் தெரிந்து கொண்டே நடிக்கிறீர்களே..  " என்றாள் நாச்சியார்.

"அம்மா, நீங்கள் கேட்பது எனக்கு நன்றாகவே புரிகிறது..  ஐயா, திருவிழா முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போது இதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். " என்றார் மனசஞ்சலத்தில் கணக்குபிள்ளை.

"சரி, நாளை திருவிழா நன்முறையில் முடிவு பெற்றதும் நாளை மறுநாள் பார்த்து கொள்ளலாம். " என்று கூறிவிட்டு சென்றார் நாச்சியார்.

இவர்கள் இருவரின் பேச்சை கவனித்த களங்கண்டான், " ஓ! ... நாளை மறுநாள் முடிவு செய்வீர்களா.. நான் நாளையே இதற்கு ஒரு முடிவு செய்கிறேன். என் விஷயத்தில் இடையூறு செய்ய வேண்டாம் என்றால் புரிந்து கொள்ள மாட்டார்கள்... இதை இப்படியே விட்டால் நாம் நினைப்பது நடக்காது... " என்று அங்கிருந்து விரைவாகச் சென்றான்.

"நாச்சியார்  கோவிலுக்கு சென்று வரும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பார்கள். ஆனால், திருவிழா துவங்கியதிலிருந்து கோவிலில் இருந்து அரண்மனை செல்லும் போது என் மனதில் ஏதோ ஒரு குறையோடு தான் செல்கிறேன்.. " என்று மனபாரத்தை நாச்சியாரிடம் பரிமாறினார் ஜமீன்.

"இன்று காட்டு சித்தர் சொன்னதை யோசித்து பார்த்தீர்களா?...  அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டதும் எனக்கு வார்த்தை வரவில்லை. எனக்கு ஒரு நிமிடத்தில் உடம்பே நடுங்கி விட்டது... அவர் கொடுத்த பொக்கிஷம் ஞாபகம் இருக்கிறதா?... " என்று கேட்டார் நாச்சியார்.

"மறக்க முடியுமா?... களங்கண்டான் உயிருக்கு போராடிய தருணத்தில் தெய்வம் போல் வந்து அந்த பொக்கிஷத்தை கொடுத்தார். அவர் அதை கொடுத்த பிறகு தானே நமக்கு களங்கண்டான் உயிர் காப்பாற்றப்பட்டது மற்றும் அதன் பின்னர் ஐந்து வருடம் கழித்து செம்பியன் பிறந்தான்... நம் ஜமீன் ஆண் வாரிசுகளுக்கு இவ்வளவு நாள்
எந்தவொரு பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கு காரணமே அந்த பொக்கிஷம் தானே... " என்று கூறினார் ஜமீன்.

" ஆனால், களங்கண்டான் நடவடிக்கை மற்றும் சித்தர் கூறிய வார்த்தை இரண்டும் என் மனதினுள் மிகப்பெரிய யுத்தமே  நிகழ்த்துகிறது. என்னால் சித்தர் கூறிய வாக்கை அவ்வளவு எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை. ஏனெனில், களங்கண்டான் போகும் பாதையும்
அவ்வளவு சரியாக தோன்றவில்லை. "
என்று மன போராட்டத்தில் கூறிய நாச்சியார்.

" நாச்சியார், நாம் சித்தர் கொடுத்த பொக்கிஷத்தை கவனமாக பார்த்து கொள்கிறோம்... ஆகையால், எதுவும் தவறாகாது என நம்புகிறேன். பார்ப்போம்... " என்று தைரியம் கூறினார் ஜமீன்.

"நீங்கள் சொல்வதும்  சரி தான். நாம் தான் அவர் கொடுத்ததை கவனமாக வைத்து கொள்கிறோம்.... ஆனால்... மனதில் சிறு நெருடல் வந்து வந்து செல்கிறது. " என்று கூறினார் நாச்சியார்.

அரண்மனையில்..,

"நாச்சியார், செம்பியன் எங்கே?.. " என்று கேட்டார் ஜமீன்.

" அவன்  இங்கே தான்  விளையாடிக் கொண்டிருந்தான்... செம்பியா... செம்பியா... " என்று செல்லமாக அழைத்தார் நாச்சியார்.

"அம்மா... சீக்கிரம் சொல்லுங்கள் நான் விளையாட செல்ல வேண்டும்... " என்று கூறினான் செம்பியன்.

" ம்ம்ம்... என்ன விளையாடுகிறீர்கள்?..
மிக  முக்கியமான விளையாட்டோ..
" என்று சிரித்து கொண்டு செம்பியனை  தூக்கினார் ஜமீன்.

"ஆமாம், நான் கோவிலுக்கு செங்கோல் எடுத்து செல்கிறேன்... நீங்கள் இன்று காலை எடுத்து சென்றீர்களே அதை போல் நானும் ஜமீன் தானே அதான் எடுத்து செல்கிறேன். " என்றான் செம்பியன்.

ஜமீன், " ம்ம்... பலே பலே.... எங்கே உன் செங்கோல்?... கோவில் எங்கே உள்ளது
என்னையும்  உன்  விளையாட்டில் சேர்த்துக் கொள்வாயா?... " என்று கேட்டார்.

"நீங்களும் வரலாம் ஆனால் நான் தான் செங்கோல் எடுத்து கொள்வேன். காலையில் எடுத்து கொண்டு சென்றது போலவே இப்போது நான் தரமாட்டேன். அதற்கு சரி என்றால் வாருங்கள்...
" என்று கூறினான் செம்பியன்.

" உத்தரவு ஜமீன்தார் ஐயா.... ஹா ஹா ஹா  ஜமீன் வாரிசு என்பதை நிருபித்து விட்டாய்.." என்று சிரித்து கொண்டு செம்பியனுடன் விளையாடச் சென்றார்.

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு
விட்டு உறங்கச் சென்றனர்...

"நாச்சியார், களங்கண்டான் இன்னும் வரவில்லையே... எங்கே சென்றான்?.. "
என்று கேட்டார் ஜமீன்.

" நம்மிடம் எதை சொல்கிறான்.. அவனை நினைத்தால் எனக்கு பயம் தான் வருகிறது... என்ன செய்வது என்று புரியவில்லை. இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லை... " என்று அழுது கொண்டே கூறினாள் நாச்சியார்.

" சரி, நாம் யாரையாவது சென்று எங்கே இருக்கிறான் என்று பார்த்து வரச் சொல்லலாம்..." என்று கூறிவிட்டு சென்றார்.

" பொன்னா, களங்கண்டான் எங்கு இருந்தாலும் வரச்சொன்னேன் என்று சொல்லி வா.. " என்று கூறினார் ஜமீன்.

பொன்னன் ஊரின் சுற்று முற்றிலும் தேடிச் சென்றான்... அவனை காணவில்லை...

" ஜமீன்தார் ஐயா, அவரை அனைத்து இடங்களிலும் தேடிவிட்டேன். எங்குமே இல்லை. "  என்று பதற்றத்துடன் கூறினான் பொன்னன்.

"  நாச்சியார், அவனை காணவில்லை என்று பொன்னன் சொன்னான். சரி, திருவிழா நடக்கின்றது அதனால் பக்கத்தில் நண்பர்கள் ஊருக்கு எங்கும் சென்றிருப்பான்  நாளை காலை வந்து விடுவான். நீ மனதை குழப்பிக் கொள்ளாமல் தூங்கு... " என்று கூறினார் ஜமீன்.

" எனக்கு பயமாக இருக்கிறது. எதற்கும் கணக்குபிள்ளை வீட்டிற்கு சென்று பார்த்து வரச் சொல்லலாமே... " என்று கூறினார் ஜமீன்.

" நேரமாகியது இப்போது  வேண்டாம். நாளை காலையில் பார்த்து கொள்ளலாம். " என்றார் ஜமீன்.

மறுநாள் காலை.,

" நாச்சியார், களங்கண்டான்  எங்கே வந்து விட்டானா?.. " என்று கேட்டார் ஜமீன்.

" இல்லை, களங்கண்டானும் வரவில்லை, கணக்குபிள்ளையும் வரவில்லை... எனக்கு பயமாக இருக்கிறது... " என்று கண்ணீர் வடித்தால்  நாச்சியார்.

"நாச்சியார், அழுகாதே  களங்கண்டான் வருவான். கணக்குபிள்ளை கோவில் வேலைகள் நடக்கின்றதா  என்று பார்க்கக் கோவிலுக்கு சென்றிருக்கலாம். பதற்றபடாதே... " என்றார் ஜமீன்.

"பொன்னா, கணக்குபிள்ளை கோவிலில் இருப்பார் என்று நினைக்கிறேன்... அவரை அழைத்து வா.. " என்று கூறினார் ஜமீன்.

ஜமீனின்  மனதில் சித்தரின் வாக்கு ஞாபகத்தில் வந்து வந்து செல்கின்றது.
களங்கண்டான் வரவில்லை என்றதும் திருவிழாவிற்கு வந்த  ஜமீன் உறவினர்களின் பேச்சுக்கள் நாச்சியார்
செவி கொடுத்து கேட்க முடியவில்லை.
இதை கவனித்த ஜமீன் எதுவும் பேசாமல் பூஜை அறையினுள் சென்று
கண் கலங்கினார். பிறகு  ஜமீன், சித்தர் கொடுத்த  பொாக்கிஷமான  சக்தி மிகுந்த  மரப்பேழையை கையில் எடுத்து வணங்கினார். அதனுளிருந்த மரகதக் கல்லை பார்த்தவர், என் மகன் களங்கண்டான் உயிரை காப்பாற்றியது நீ தான். இன்று அவனை காணவில்லை... நீ தான் அவன் எங்கு சென்றாலும் அழைத்து வர வேண்டும்... என்று கண்ணீர் வடித்தார்.

சற்று நேரத்தில்....

" அப்பா... அம்மா அழுகிறார்கள். அண்ணன் எங்கே சென்றார். எப்போது வருவார்... அம்மா அதற்கு தான் அழுகிறார்கள். நீங்கள் ஜமீன்தார் தானே உடனே அண்ணனை அழைத்து வர சொல்லுங்கள்... " என்று கூறினான் செம்பியன்.

"ஜமீன், செம்பியனிடம்  அண்ணன் பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக சென்றுள்ளான். வந்து விடுவான்... சரியா... " என்று கூறினார்.

செம்பியன், ஜமீன் கையில் இருந்த மரப்பேழையை பார்த்ததும் "அன்று அப்பா இதையெல்லாம் எடுக்கக் கூடாது என்று சொன்னாரே " என்றது அவனுக்கு  ஞாபகத்தில் வந்தது.... 

" ஐயா, அம்மா மயங்கி விழுந்து விட்டார்கள் " என்று ஓடி வந்து கூறினாள் பணிப்பெண்.

ஜமீன் கையில் இருந்த மரப்பேழையை
பதற்றத்தில்  அப்படியே கீழே வைத்து விட்டு ஓடினார். செம்பியனும் அம்மா...
என்று அழுது கொண்டே சென்றான்.

கீழே சென்றவர்,  நாச்சியார்  மயக்கத்திலிருந்து தெளிந்ததை பார்த்தார். ஜமீனை கண்ட நாச்சியார் கதறினாள்.

" நாச்சியார், அழுகாதே  எதையும் நிதானமாக சொல்... " என்று கூறினார் ஜமீன்.

பக்கத்தில் இருந்த பொன்னன் கூறியதை கேட்ட ஜமீன்  உடலும்  மனமும் செயலற்றது  போல் அப்படியே அமர்ந்து விட்டார்...




     ✍   ஜென்மம் தொடரும்   ✍


© Ramyakathiravan