...

32 views

எனக்கென உன்னைத் தந்து - 15
அத்தியாயம் - 15

“அவ இதுவரை இப்படி எல்லாம் நடந்ததே இல்ல. கோவத்தில் எதோ தெரியாம பண்ணிட்டா, அத பெருசு பண்ண வேண்டாமே…” ஈஸ்வரி சொல்ல,

“கோபத்துல உங்க பொண்ணு எதைச் செய்தாலும் நாங்க பெருசு பண்ண கூடாது இல்ல. ஆறு மாசமா அவன் விட்டுக் கொடுத்து, உங்க பொண்ணு பண்ற அத்தனை பிடிவாததுக்கு எல்லாம் அனுசரிச்சு போனது அவன். அதைக் கூட விடுங்க. உங்க பொண்ணு அவனுக்குத் தெரியாம கர்ப்ப தடை மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க. கேட்டதுக்கு என் விருப்பம்போலத் தான் நீ இருக்கனும், காசு கொடுத்து வாங்கின அடிமை நீன்னு சொல்லி இருக்காங்க, சொன்ன பேச்சைக் கேட்க முடியாதுன்னா வீட்டை விட்டுப் போன்னு சட்டையைப் பிடிச்சு வெளிய தள்ளி இருக்காங்க. இத்தனைக்கும் நடுவில் எங்க பையன் உங்க பொண்ணை திட்டல, அடிக்கல, எந்த வித எதிர் தாக்குதலும் செய்யல. அவனை வீட்டை விட்டுத் துரத்தி, தாலியை தூக்கி அடிச்சு இருக்காங்க.”

“அவனுக்குக் குழந்தை வேணும்னு அவர் யார்கிட்ட கேட்பான்? அவ பொண்டாட்டி அதுக்கு என் இஷ்டம் போல இருந்தா போதும்னு சொன்னா அது அவன் ஆண்மைக்கு அவமானம் இல்லையா? எங்க பையனை உங்க பொண்ணுக்கு அடிமையாவா நாங்க அனுப்பி விட்டோம்? எங்க பையனை உங்க பொண்ணு புருஷனா பார்க்கலன்னு எங்க அத்தை சொன்னபோது உங்களுக்கு அத்தனை கோவம் வந்துச்சு இல்ல? ஆனா உங்க பொண்ணு அகிலை அடிமையா பார்த்து இருக்காங்க, இப்ப நாங்க என்ன செய்யனும்? எங்க பையனை அடிமையா உங்ககிட்ட மறுபடியும் விட்டுப் போகனுமா? அவன் அவமானத்தில் நடுங்கி நின்னான்னு கேட்ட நிமிஷமே முடிவு பண்ணிட்டோம் இனி இந்த உறவு ஒட்டாதுன்னு.” சதீஷ் சொல்ல,

“நாங்க பொண்ணுக்கு புத்தி சொல்றோம் தம்பி. நீங்க அவசரப்பட வேண்டாம்.” கணேசன் சொல்ல,

“ நாங்க வந்து கால் மணி நேரமாகுது. உண்மையா உங்க பொண்ணுக்கு எங்க பையன் மேல கோவம் மட்டும் தான்னா, இந்நேரம் வெளிய வந்து பார்த்து இருக்கனும். இல்ல எங்ககிட்டயாவது அவனைப்பத்தி கேட்டு இருக்கனும். எதையுமே செய்யலையே? அகில் இனி வாழ முடியாதுன்னு சொல்லிட்டான். அவனுக்கு விருப்பம் இல்ல. சோ கையெழுத்து போட்டுத் தரச் சொல்லுங்க.” சதீஷ் சொல்லி முடிக்க, நர்மதா வெளியே வந்தவள் அமைதியாய் அவனிடம் கைநீட்டி நின்றாள்.

சதீஷ் பத்திரத்தைக் கொடுக்க, கையெழுத்து போட்டுக் கொடுத்து இருந்தாள். சதீஷ் செக்கை கொடுக்க அதையும் வாங்கி கொண்டவள் எதையும் பேசாது தலைகுனிந்து நிற்க, சதீஷ் தலை அசைக்கவும் அவர்கள் உடன் வந்த மூவரும் எழுந்து நிற்க, நர்மதா அவர்களின் கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தாள். அதில் அவர்கள் அவளுக்கென்று சீராகக் கொடுத்த நகைகள் இருக்க, அருண் அதை வாங்கி கொண்டான். அருணகிரி இரு கை கூப்பி வணங்க, கணேசனும் வணங்கி இருந்தார்.

சதீஷ் அதற்கு அடுத்த கட்ட வேலைகள் என்னவென்று பார்க்கத் தொடங்கி இருந்தான். அருணகிரி, அனிதா, அருண், ஆர்த்தியென அனைவரையும் கிளம்ப சொல்லி இருந்தான்.

“அருண் ஆர்த்தியை கோவையில் விட்டதும் நம்ம செல்வம் அண்ணன்கிட்ட சொல்லி அவரையே காரை எடுத்துட்டு வரச் சொல்லிப் பிள்ளைகளை ஆர்த்தி கூட அனுப்பி விட்டுறு. பணம் செல்வம் அண்ணன் அக்கவுண்ட்ல போட்டுறேன் சொல்லிரு. ஆர்த்தி ரெண்டு நாளில் நான் வந்துடுவேன். நீ பார்த்துப்பா தான? நான் அம்மாவையும் அப்பாவையும் வரச் சொல்றேன்.” சதீஷ் சொல்லவும், அருணும், ஆர்த்தியும் சரியெனச் சொல்ல, அவர்களை அனுப்பி விட்டு வந்து இருந்தான்.

அகில் அவனின் லேப்டாப் எடுத்து ஜெய் உடன் எதையோ பேசிக்கொண்டு இருக்க, சதீஷ் அவன் அருகில் வந்து அமர்ந்தான். அசோக், சாரதியும் அவன் உடன் வந்து அமர, சதீஷ் விவாகரத்து பத்திரத்தை அவன் முன் வைக்க, அகில் கண்களில் நீர் கோர்த்தது.

“நாங்க போனதிலிருந்து நர்மதா வெளிய வரவே இல்ல. கோவத்தில் செஞ்சுட்டான்னு அவ அப்பா சொல்லிட்டே இருந்தார். ஆனா யாரும் நடந்ததுக்கு வருத்தமோ மன்னிப்போ சொல்லவே இல்ல. எங்களைத் தான் பொறுத்து போகச் சொன்னாங்க. நடந்ததை விளக்கமா சொன்ன அப்புறம் தான் அவர் அமைதியானார். உனக்கு வாழ விருப்பம் இல்லன்னு சொன்னதும் நர்மதா வெளிய வந்தா, கையெழுத்து போட்டா, செக் வாங்கிட்டா, நாம அவளுக்குப் போட்ட நகை எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துட்டா, நாங்க கிளம்பி வந்துட்டோம். ம்ம்… அப்புறம் அந்த வேலைக்கார பொண்ணு மஞ்சு அங்க தான் இருந்தா, நாங்க லிஃப்ட் விட்டு இறங்கி கீழ வந்ததும் அழுகையோட அத்தகிட்ட மன்னிப்பு கேட்டுச்சு. நீயும் கையெழுத்து போட்டா அடுத்த வேலையைப் பார்க்கலாம்.” சதீஷ் சொல்லி நிறுத்த,

“நர்மதா அழுதாளா மாமா? கையெழுத்து போடும்போது?” அகில் கேட்க,

“இல்லையே”

“எனக்கு அவளோட பேசனும்னு தோணுது மாமா. ஒருமுறை பேசிட்டு வந்து கையெழுத்து போடட்டுமா?”

“அவளோட பேச நீ என்கிட்ட அனுமதி கேட்க வேண்டியது இல்லடா. தாலியை கழட்டி போட்டாலும் அவ உன் பொண்டாட்டி தான். போ போய்ப் பேசிட்டு வா.” சதீஷ் சொல்ல, அலைபேசி எடுத்துக்கொண்டு ஹால் தாண்டிச் சிட் அவுட் சென்று நின்றான்.

மனம் படபடக்க, கைகள் நடுங்க, அவளின் எண்ணை எடுத்தான். நம்மு என்னும் பெயருக்கு அருகில் முத்தம் கொடுக்கும் ஈமோஜி இருந்தது அதைப் பார்க்கவும் கண்கள் கலங்கியது. அழைப்பைக் கொடுத்து விட்டுக் காத்திருக்க எதிரில் ரிங் சென்றது. நர்மதா எடுத்து ஹலோ சொல்ல,

“நர்மதா நான் அகில் பேசறேன்.”

“சொல்லுங்க”

“விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து இருக்க ஏன்? மாமா முதல பேசப் போலாம் தான் சொன்னார். நான் தான் பத்திரத்தைக் கொண்டு போகச் சொன்னேன். என்னைக் கோவத்தில் வெளிய அனுப்பி இருந்தாலும் கையெழுத்து போட மாட்டேன்னு நம்பினேன். நான் வேண்டாமா நர்மதா உனக்கு?”

“எனக்கு எல்லாமே என் விருப்பம்போலத் தான் நடக்கனும் அகில். என்னை யாரும் இப்படி தான் நீ இருக்கனும்னு சொன்னதே இல்ல. முதல் முறை என்னை நீங்க மாத்த முயற்சி செய்யவும் எனக்குள்ள அத்தனை கோவம். நீ என் புருஷனாவே இருந்தாலும் என் விருப்பங்களை விட்டுக்கொடுக்க, எனக்கு விருப்பம் இல்ல. உன்கிட்ட என் விருப்பம் தான் முக்கியம்னு பிடிவாதமா நிக்க காரணம். என்னை நீ தடுக்கவோ மாத்தவோ கூடாது தான். கல்யாணம், குடும்பம், புருஷன், பொறுப்பு எல்லாம் புரிஞ்சும் என்னால என்னை மாத்திக்க முடியல. இனியும் முடியாது. அன்னிக்கி நான் மஞ்சுவை திட்டும்போது நீ தடுத்தியே அப்பவே உன்னை அடிக்கிற அளவுக்குக் கோவம் எனக்கு, மாத்திரை சாப்பிட வேண்டாம்னு சொன்னதும் என்னால எரிச்சலை தாங்க முடியல. எனக்கும் உனக்கும் செட்டாகாது அகில். தாலியை தூக்கி போட்ட அப்புறம் தான் நான் நிம்மதியா இருக்கேன். எங்க மறுபடியும் வந்துடுவியோன்னு தான், நான் உனக்குக் கால் கூடப் பண்ணல. உனக்கும் என்னோட வாழ விருப்பம் இல்லன்னு உன் மாமா சொன்ன நிமிஷம் எனக்கு விடுதலை கிடைச்ச மாதிரி இருந்தது. பிளீஸ் நோ மோர் சென்டிமென்ட்ஸ். தாங்க்ஸ் அண்ட் சாரி ஃபார் எவெரிதிங்க்.” நர்மதா சொல்லி முடிக்க,

“புரியுது நர்மதா. எனக்குத் தெரிஞ்சோ, தெரியாமலோ உன்னைக் காயப்படுத்தி இருந்தா சாரி. இனிமேலாவது சந்தோசமா இரு. டேக் கேர், குட் பை.” அகில் சொல்லவும் நர்மதா அழைப்பை முடித்து இருந்தாள்.

அகில் அறைக்குள் வந்தவன், விவாகரத்து பத்திரத்தில் அவனின் கையெழுத்தை போட்டுச் சதீஷ் கையில் கொடுத்து விட்டு அமைதியாய் அவர்கள் முன் அமர்ந்திருந்தான்.

“சீக்கிரம் உன்னைச் சரி பண்ணிக்கோ அகில். எந்த விஷயத்தையும் மனசில் ஏத்திக்காத, கடந்து வந்துடு. அதான் உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லது.” சதீஷ் சொல்ல,

“ இத்தனை சங்கடம்? எல்லாரையும் போலத் தான நானும் வாழ ஆசைப்பட்டேன்? நான் அவளோட வாழமாட்டேன் சொன்னது அவளுக்கு நிம்மதியா இருந்துச்சாம். என்னைத் துரத்தி விட்ட அப்புறமும் எங்க நான் திரும்பி வந்துடுவேனோன்னு பயந்தாளாம். விடுதலை கிடைச்ச மாறி இருக்காம் அவ சொல்றா… கடைசி வர இந்த உறவைக் காப்பாத்திக்க நான் தான் மாமா பைத்தியம் மாதிரி போராடி இருக்கேன். நான் ஒருத்தன் தான் இந்த உறவை இறுக்கி பிடிச்சுட்டு இருந்திருக்கேன். எத்தனை முட்டாள் இல்ல நான்?”

“ கையெழுத்து போட்டுக் கொடுக்கும்போது, அவ கண்ணில் தெரிஞ்ச நிம்மதியை நானும் பார்த்தேன் அகில்.” சதீஷ் சொல்ல, அகில் பெருமூச்சு விட்டு இருந்தான்.

“இதை எல்லாம் மனசுவிட்டு உன்னோட பேசி இருந்தா, யாருக்கும் எந்தக் கஷ்டமும் இருந்திருக்காது இல்ல. இன்னும் மறக்க முடியல மாம்ஸ். நல்ல காலம் எல்லாரும் ஊரில் இருந்தோம். நாங்க இல்லாத நேரம் இப்படி நடந்திருந்தா யோசிக்கவே முடியல என்னால…” சாரதி சொல்ல,

“விடுடா. அதை எதுக்கு பேசிட்டு, மாம்ஸ் ஏன் அமைதியா இருக்கீங்க?” அசோக் கேட்க,

“சரக்கடிப்போமா?” சதீஷ் கேட்டான்.

சதீஷ் கேட்ட கேள்வியில் ஜெய் முகத்தில் ஒளி வர, அகில் மாமனை கடுமையாய் முறைத்தான்.

“மாம்ஸ் நாளைக்கு வேலைக்குப் போகனும். பீர் அடிப்போமா?” சாரதி கேட்க,

“பீரா… அது எதுக்கு குடிச்சுட்டு?” ஜெய் கேட்க,

“இங்க என்ன நடக்குது? மாமா அக்காக்கு தெரிஞ்சா என்னைத் தான் திட்டுவா. டேய் ஜெய், சுவாதி ஊரில் இருக்குன்னு தைரியமா? ஒரு போன் பண்ணா அவ்ளோ தான் பார்த்துக்க…” அகில் கோவமாகச் சொல்ல,

“சரி மாம்ஸ். சாரதி சொன்ன மாதிரி பீர் போதும்.” ஜெய் சொல்ல,

“டேய் நல்லவனே போய் நாலு பீரும், பார்ப்பிக்யூ சிக்கனும் வாங்கிட்டு வா.” சதீஷ் அகிலை பார்த்துச் சொல்ல,

“குடிக்க வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னையே போய் வாங்கிட்டு வரச் சொல்றீங்க…” அகில் அவரிடம் கோவமாகக் கத்த,

“நம்ம இதுக்கு முன்னாடி அடிச்சதே இல்லையா? இல்ல நீ வாங்கிட்டு வந்து தந்ததே இல்லையா? நேத்துல இருந்து எல்லாருக்கும் டென்ஷன் நாங்க கொஞ்சம் பதட்டம் குறைக்க வேண்டாமா? போ டா எழுந்து…” சதீஷ் சொல்ல,

“வெளிய போகவே கஷ்டமா இருக்கு மாமா.” அகில் சொல்ல,

“ஜெய் அவன் கூடப் போ, ரெண்டு பேரும் வாங்கிட்டு வாங்க.” சதீஷ் சொல்ல, அகில் முகம் கழுவி, தலைவாரி விட்டுச் சென்று இருந்தான்.

ஒரு மணி நேரம் கழித்து இருவரும் வர, சதீஷ் பாதியை குடித்து விட்டு அகில் கையில் கொடுக்க, அவனோ மாட்டேன் என்று தலையாட்ட,

“குடிடா ஒரு நாளுக்கு ஒன்னும் ஆகிடாது. நாங்க எல்லாரும் டென்ஷனா இருந்தா மட்டும் தான் குடிக்கிற ஆளுங்க. அதும் வருஷம் ரெண்டு அல்லது மூணு முறை தான். குடிச்சுட்டு படுத்துடு, காலையில் பதட்டம் இருக்காது.” சதீஷ் சொல்ல, வாங்கி குடித்து இருந்தான்.

அன்று இரவு அகில் ஆழ்ந்து உறங்கி இருக்க, சதீஷ் அவனின் தலை வருடிக் கொண்டு அருகில் படுத்து இருந்தான்.

“மாம்ஸ் சரியாகிடுவான் தான?” அசோக் கேட்க,

“சரி பண்ணிடுவேன்.” சதீஷ் பதில் கொடுத்தான்.

© GMKNOVELS