...

12 views

நரிக்கூட்டம்
நள்ளிரவு நேரம்
காட்டின் மத்தியில்
நரிகள் ஒன்று கூடின!
ஆம், கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக நாம்தான் ஆண்டு கொண்டிருக்கிறோம்.

என மெல்லிய குரலில் பேசத்தொடங்கியது தலையில் கேசம் உதிர்ந்த பருத்தநரி,

காட்டின் மத்தியில்
நாம் ஆட்சியில் இருந்தாலும் தென்பகுதியில் நாளுக்கு நாள் நமக்கான எதிர்ப்புகள் வலுத்து கொண்டே வருகிறது.
இது தொடர்ந்தால் அடுத்த தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம் என ஒற்றர் படையை சேர்ந்த நரி கூற,

அனைத்து நரிகளும்கவலை தொய்ந்த முகத்துடன் பருத்த நரியின் அருகில் இருந்த தலைமை நரியை பார்க்க, அனைவரையும் உற்று பார்த்து தன்னிடமிருந்த திட்டத்தை விவரிக்க தொடங்கியது.

எல்லாரும் கவனிக்க,
நாம் இந்த இடத்தை அடைய கிட்டதட்ட இரண்டாயிரம் வருசமா காத்திட்டு இருந்தோம், காலத்துக்கு தகுந்த மாதிரி ஆலோசனை, காட்டிக்கொடுப்பது கூட்டி கொடுப்பதுனு அரும்பாடு பட்டு இங்க வந்திருக்கோம் எக்காரணத்தை கொண்டும் இதை நாம் இழந்திர கூடாது,

இவ்வளவு நாளா நமக்கு எதிர்ல இருந்தவனதான் அடிச்சோம்,

இனி நம்ம கூட இருப்பவன அவனுக்கே தெரியாம அடிச்சி அதுக்கு காரணம் மத்தவங்கனு சொல்லுவோம்,

நாம செய்யும் ஒவ்வொரு செயல்லையும் பிரிவினையை தூண்டி காட்டையும் விலங்குகளையும் துண்டாடனும்,

நேர்மை இல்லாத அதிகாரிகளுக்கு உயர்ந்த பொறுப்புகள கொடுப்போம்.

கொஞ்ச நாள் யாரும் இருப்பிடத்தை விட்டு வெளிய வராம செய்வோம்.

கேள்வி கேட்பது தப்புன்னு சட்டம் போடுவோம்.

நம்மோட பழைய பொய்களை மறைக்க தினம் தினம் புது புது பொய்களா சொல்லிட்டே இருப்போம்.

மூடநம்பிக்கைகள் மற்றும் பழமையை விடாம விதைப்போம்.

எந்த விலங்கா இருந்தாலும் கண்டிப்பா நரி பாஷை தெரிஞ்சிருக்கனும்னு சட்டம் போடுவோம்.

இன்னும் என்னென்ன
வழிகள்ல இந்த விலங்குகளை
யோசிக்க விடாம செய்ய முடியுமோ அத்தனையும் செய்வோம்.

இதையெல்லாம் எப்படி சாத்தியப்படுத்தப் போறோம்னு கவலைப்படாதீங்க ஏன்னா,

இது எதுவுமே நமக்கு புதுசில்ல எல்லாமே இவ்வளவு காலமா மறைமுகமாக தந்திரமா பண்ணோம் இனி பயமில்லாம வெளிப்படையா பண்ணப்போறோம்

நமக்கு கிடைச்ச இந்த காட்டை நாம விட்றவே கூடாது, ஒருவேளை நம்ம கைய்ய விட்டு போனாலும் இதை ஒண்ணுத்துக்கும் உதவாத பொட்டல் காடா ஆக்கணும்னு சொல்லி காடே அதிர ஒன்று சேர ஊளை விட்டுச்சி,...

இரவுல மட்டுமே திரியுர ஆந்தையார் எனக்கே
ஒரு நிமிஷம் நடுங்கிடுச்சி,
என தான் கண்ட காட்சியை
அந்த இளம் வயது குரங்கிடம் விவரித்தது ஆந்தையார்,

குரங்கும் தான் கேட்ட அனைத்தையும் இலைகளில் எழுத தொடங்கியது , சரி நீ சீக்கிரம் முடிச்சி வை நம்ம பச்சைகிளி வாத்தியார்ட ஒரு தடவை காட்டிட்டு காடு முழுக்க புறா சர்வீஸ்ல போட்டு விடுவோம்,

என சொல்லி பறந்த ஆந்தையார் வட்டமடித்து மீண்டும்
குரங்கிடம் வந்து ,
ஆங், இத சொல்ல மறந்துட்டேன் பாரு கூட்டத்துல ஒரு நரி பய சொல்றான்,

"எல்லாத்தையும் யோசிச்சு சரி தப்புன்னு புரிஞ்சிக்க இதுங்க ஒண்ணும் மனுச கூட்டம் இல்ல மிருகங்கதானு"
நீதான் அடிக்கடி நாட்டுகுள்ள போய்ட்டு வருவியே அவங்க அவ்வளோ அறிவாளிகளா என்ன ? எனக்கேட்க...

மனித கூட்டத்தை நினைத்து தனக்குள் சிரித்து 'நரிக்கூட்டம்' எனக் கடித தலைப்பை எழுத தொடங்கியது குரங்கு.

© Kv