...

11 views

நெடிய கழியும் இரா 1
பொறுப்பு துறப்பு: இக்கதை சமகாலத்திய உறவுகளில் பாலியல் உணர்வுகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தான புனைவு. இக்கதையில் வரும் முக்கிய இடங்கள், கதாப்பாத்திரங்கள் மற்றும் அவற்றின் பெயர்கள் முழுக்க எழுதியவரது கற்பனையே அல்லது கதைக்காக புனையப்பட்டவை. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் குறிப்பிடப்படவில்லை.
இதில் எடுத்தாளப்பட்டிருக்கும் பிற நாட்டு அறிஞர்களின் கூற்றுக்கள் தகவலுக்காக மட்டுமே பயன்படுத்த பட்டவை.

"மனிதனின் தனிப்பட்ட குணங்கள் அடிப்படையாக வைத்து தற்கொலையை தூண்டும் விதமாக நான்கு  பிரித்து கூறலாம்.
a)Egoistic suicide- தற்புகழ்ச்சிக்கும் சுயமரியாதைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் செய்துகொள்ளும் தற்கொலையே ஈகோயிஸ்டிக் சூசைட் ஆகும்.
b) Altruistic suicide -ஒரு குழுவிற்காகவோ, சமுதாய நலனுக்காகவோ செய்து கொள்ளும் தற்கொலையே அல்ட்ரூஸ்டிக் சூசைட் ஆகும்.
c) Anomic suicide என்பது சமூகத்தில் ஏற்படும் சீர்குலைவினாலும், பதட்டத்தினாலும் ஏற்படுவது"
d) Fatalistic suicide  என்பது அதிகப்படியான ஒழுங்குமுறைகள் திணிப்பு  மூலம் வாழ்தலுக்கான சாத்தியககூறுகளை கேள்விக்குறியாக்கிடும் அநீதி இழைக்கப்படும் போது  தற்கொலை செய்து கொள்வது.
- பிரான்ஸ் சமூகவியலாளர்
எமிலி துர்க்கெய்ம் (Emile Durkheim)
" தற்கொலை  ஒரு சமூகவியல் ஆய்வு’ (Suicide – A Sociological study) எனும் நூலில் இருந்து


அத்தியாயம் 1

நேரம் மதியம் மூன்றுமணி.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தினுள் சைரனை ‌அலறவிட்டப்படி  நுழைந்தது அவசர ஊர்தி. அதிலிருந்து முக்கால் பாகம் தீக்காயங்களுடன் அதிதீவிர தீ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறாள் அவள்.

அவசர ஊர்தி மருத்துவர் ஒப்படைத்த மருத்துவ பரிந்துரை அடங்கிய தாள்களில் பார்வையை மேயவிட்டபடி,  உதவியாளரிடம் பாதிக்கப்பட்டவரை பரிசோதிக்குமாறு தலைமை மருத்துவர் ‌சைகை செய்யவும், உதவி ‌மருத்துவர்‌ மற்றும் செவிலியரால் உயிர்காக்கும்‌ அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் அவளுக்கு ஆரம்பமாகிறது.

பின்னர் தலைமை மருத்துவர் வந்து  பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்து விட்டு உதவியாளரான மருத்துவரிடம் நோயாளியின்  தற்போதைய நிலையை பற்றி விவரங்கள் கேட்டு கொண்டவர்...

தானும் ஒரு முறை அவளை பரிசோதனை செய்துவிட்டு பின், உதவி மருத்துவரை நோக்கி  உதட்டை பிதுக்கியபடி இடது வலமாக தலையை அசைத்தவர் மெல்லிய குரலில் நோயாளி உடல்நலம் குறித்தான சிக்கல்களை இளைய மருத்துவர்களிடம் கேள்விகள் மூலமாக கேட்டு அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டு அவர்கள் இனி அந்நோயாளிக்கு செய்யவேண்டிய சிகிச்சை பற்றி ஆங்கிலத்தில் கட்டளைகளை இட ஆரம்பித்தார்.

மந்தமான கேட்கும் திறன் அவளை பற்றி எந்த தகவலும் அவளுக்கு கேட்கமுடியாது போனது... மேலும் அவள் உயிர்ப்பறவை அவ்வுடலை விட்டு சுதந்திரம் அடையும் நேரத்துக்கான நிமிடங்களை எதிர்நோக்கி  கடத்திக் கொண்டிருந்தது.

தலைமை மருத்துவர், "பேஷன்ட்டோட டீடெயில்ஸ் எல்லாம் அவங்க ரிலேட்டிவ் இருந்தா எழுதி வாங்கிக்கோங்க. அப்படியே கம்ப்ளெயிண்ட்  ஃபைல் பண்ணியாச்சான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க.."

சரியென்று உதவியாளரான இளைய மருத்துவர்கள் தலையசைக்க,

"இவங்க ஒன்‌ ஹவர் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். பல்ஸ் நார்மலானா மேற்கொண்டு என்ன செய்யலாம்னு யோசிப்போம்."நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்துடறேன்.. நீங்க பார்த்துக்கோங்க" என்று கிளம்பினார்.

உண்மையில் அவள் பிழைக்க 1% சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பே இருப்பதால்,   அந்த ஒரு மணிநேர அப்ஸர்வேஷன்  தாண்டினால், அதை முயன்று பார்க்கலாமே என்ற செய்தி அவரது சமிக்ஞையில் தொக்கி நின்றது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த செவிலியரில் ஒருத்தி வெளியே நின்றிருந்த  அவளின் உறவினர்களிடம் கையில் வைத்திருந்த படிவத்தை பூர்த்தி செய்ய வரிசையாக கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்

"பேஷண்ட்டுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

இது சூசைட் அட்டெம்ட்'ன்றதால போலீஸுல் கம்ப்ளென்ட் செய்துட்டீங்களா?

அவங்ககிட்ட போலீஸ் வாக்குமூலம் வாங்கிட்டாங்களா?

என்றெல்லாம் கேட்டு தான் பெற்ற தகவல்களை அப்படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு "பேஷண்ட்டுக்கு நெருங்கின சொந்தம் யாருங்க? கையெழுத்து போடணும்" என்று வினவ தானாக ஓரடி வைத்து முன்னே வந்தான் பின் முப்பதுகளில் இருந்த இளைஞன் ஒருவன்.

"அவங்க உங்களுக்கு என்ன வேணும்?"

இவன் தான்மா அந்த பொண்ணோட புருஷன் என்று அருகில் இருந்த முதியவர் எடுத்து சொல்லிட

அப்படிவத்தில்  அவ்விளைஞனிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு உள்ளே விரைந்த செவிலியிடம்,
அழைத்து நிறுத்தியவன் கேட்டான்
"சிஸ்டர் அவ பிழைச்சிடுவாளா?" என்று.

அப்படி கேட்டு முடிப்பதற்குள் அவனது குரல் பாதி  உள்ளே போயிருந்தது. அதில் இன்னதென யூகிக்க முடியாத பாவம் இருந்தது.

"உள்ளே ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு சார். இப்ப எதுவும் சொல்ல முடியாது" என்ற வழக்கமான பதிலோடு  செவிலியர் சென்று விட ஒரு பெருமூச்சுடன் அவளுக்காக... அவனுடையவளாய் இதுகாறும் வாழ்ந்த  அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் அவன்.

காலையில் பத்தரை மணிக்கு தொடங்கி இந்த நொடி வரையிலான ஏழு மணி நேரத்திற்கும் மேலான காத்திருப்பில் அவன் ஓய்ந்து போய் காணப்பட்டான். அவளது இந்த வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அவனை வெகுவாக களைப்படையச் செய்திருந்தது.

அவன் ஒட்டுமொத்த சோர்வை நீக்கும் வழியறியாது, அவனது தோளில் அழுத்தம் கொடுத்து அவனுக்கு உற்ற துணையாக நின்றிருந்தார் அவனது சித்தப்பா சக்திவேல்.

எதையும் கண்டு கொள்ளாமல், மூளைக்குள் ஏதோதோ குறியீடுகள் ஓடிக்கொண்டிருக்க... அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே தன்னிலை மறந்து விட்டேற்றியாக நின்றிருந்தான் அவன் கௌதமன்.
__________________

செவிலியர் குறித்த ஒரு மணிநேரம் நொண்டியடித்தபடி மெதுவாக நகர... அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவள் மரணமெய்திய செய்தி அவனுக்கும், அவனது சித்தப்பா சக்திவேல் மூலமாக ஊரிலுள்ள அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தீயினுக்கு அவளது உடலின் பெரும்பகுதி பலியாகியிருக்க, பிரேத பரிசோதனைக்கு அவசியமற்று போனது. அதன் பிறகு மாலையில் மருத்துவமனையின் இதர செயல்முறைகள் எல்லாம் முடித்து அவளது உடலை சுமந்த  அமரர் ஊர்தி அவளது சொந்த ஊரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

அவசர‌ ஊர்தியில் வந்தவள் அமரர் ஊர்தியில் தனது ஊருக்கு திரும்ப பயணித்து கொண்டிருக்கிறாள். அதுவும் உயிரற்ற உடலாக...!

அமரர் ஊர்தியில் அந்த உடலின் அருகே அமர்ந்திருந்த அவனது மனம் காலையில் காஞ்சிபுரம் மருத்துவமனையில் நடந்த விஷயங்களை அசைபோட துவங்கியது.

காலையில் தீ பாதிக்கும் மேலே அவளது உடலை ஆக்கிரமித்திருக்க அவள் எழுப்பிய மரண ஓலத்தில் அவனுமே தீடீரென அவள் இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. அன்றைய நாளில் இரண்டாவது முறையாக அதிர்ந்து போய் நின்று விட்டான்.

அதே நேரத்தில் கூடிய அக்கம் பக்கத்தினர் போட்ட கூச்சலினால் தன்னிலையை மீட்டெடுத்தவன் அவளை உயிர் பிழைக்க செய்யென்ற மூளையின் கட்டளையை ஏற்று செயல்படுத்த ஆரம்பித்திருந்தான்.

அவளின் மீது சாக்கு பையை போட்டு தீயை அணைக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருக்க, பக்கத்து வீட்டினரில் ஒருவன் விரைந்து 108 அவசர சிகிச்சை ஊர்திக்கு அலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்துவிடவும்....

அடுத்து அரைமணி நேரத்தில் வந்த அவசர ஊர்தியில் அவளோடு மருத்துவமனைக்கு விரைந்தான் கௌதம்.

காலையில் அவளை கொன்று புதைக்கும் அளவு கோபமிருந்தாலும்
கருகிய நிலையில் அவளை காணவியலாது கண்களை இறுக மூடிக்கொண்டு தான் அவசர ஊர்தியில் அவளோடு பயணத்தை மேற்கொண்டான்.

வெளியே கேட்ட சரக்கு வாகனங்களின் ஹாரன் ஒலியில்
திடுக்கிட்டு விழித்தவன் கண்கள் ஜடமாக கிடத்தப் பட்டிருந்த அவள் மீது பாய்ந்தன.

பதினான்கு வயதில் முதலாளியின் மகளாக அறிமுகமாகி தன்னோடு சேர்ந்து கைத்தறி வேலை செய்த அப்பேரழகி தான் கண்முன்னே வந்து அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். 

முப்பத்தேழு வயதில் இரு குழந்தைகளின் தாயாக... அவனுடைய மனைவியாக  குறையாத அழகுடன் இருந்தவள் இப்போது அவலட்சணத்தின் முகவரியாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது.

அது உண்மையா? எப்படி இப்படி அவலட்சணமானாள்?தீச்சுவாலைகள் அவளைத் தழுவியதாலா? சாகவேண்டிய வயதா இவளுக்கு? 

அகல்யா.....  அகல்யா....
அகல்யா....
நான் சோர்ந்து போகும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் தேற்றுவாயே?
இன்று உன்னாலே நான் தோற்று நிற்கிறேனே??? என் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமான நீயே இன்று என் வீழ்ச்சிக்கும் காரணமாகிப் போனதேன்??

நான் பிய்த்தெறியும் முன்பே இதயத்தை கொய்து போனவளே  இந்த இரணத்தை தாங்கமாட்டேன் என்று தான் இதயத்தை உன்னோடே எடுத்து சென்றுவிட்டாயோ? என்றவன் காதல் நெஞ்சத்திற்கு நெடிய கழியும் இரா வாகத்தான் அமைந்தது அன்றைய தினம்.
- தொடரும்