...

5 views

சமத்துவமே நல்லறம்
தோற்றத்தால் ஒன்று போல்
ஒத்திருப்பது இயற்பியல் இயல்பு
தேற்றத்தை விளக்க ஒவ்வொன்றிற்கும்
ஓர் அடையாளம் தருதல் மரபு

ஏற்றம் பெற்றே மாற்றம்
காணும் மனிதா
நாற்றம் காணும்
உன் மனமே
வேற்று இனமே என
தீட்டு பார்க்கையில்

சமத்துவமே நல்லறம் என்பதே
சான்றோர் நமக்கு போர்த்திட்ட உரம்

மழலையின் சிரிப்பில்
மதம் பேதம் உண்டோ
விழி தரும் வலி நீரில்
மதம் காண்பது நன்றோ

பிணமாகும் உடல் மனம் நோக
பிளவு காண்பதேனோ
வீதிக்கு வீதி வீணர்கள்
அவர்களால் தானோ

சமத்துவத்தின் சக்தியைச் சாடிவிடின்
சண்டை என்பதோ சாகிவிடும்
சாந்தம் என்பதைத் தேடிவிடும்
சற்குணத்தைச் சாற்றிவிடும்
சமநிலையைப் போற்றிவிடும்

பறந்து கிடக்கும் பாற்கடலை
பங்குபோடும் பாதகர்களே
பரலோகன் படைப்பினத்தின்
அங்கம்தானே நாம் அன்றோ

சமமே சாஸ்திரம் என
சான்றிருப்போரை
புனிதமும் புகழ் பாடும்
மனிதமும் மறை ஓதும்

சட்டத்தின் முன் சமமென்று
சாட்சி சொல்லும் நாம்
சக மனிதர்களாக
அதில் சறுக்குவதேன்

சாவை வென்றவன்
சமத்தும் தின்றவன்
சகலத்திலும் சாகாவரம்
பெற்றவனே

இணைக்கப்படும் நேசக்கரங்களால்
நேர்வழி பெறுகிறோம்
தோள்கள் உரசிக்கொள்வதால்
தொடர்புகள் பெறுகிறோம்

தழுவிக்கொள்ளும் சகோதரத்துவம்
தண்ணீர் ஊற்றிய தாவர செடி போன்றது
பசுமையில் பசியைப் போக்கும்
ருசியான உணவு கனியாகிறது

ஏழையின் பசியை போக்கிப்பார்
எசமானராகலாம்
வறியவரின் வலியை போக்கிப்பார்
வல்லவராகலாம்

சகல வசதி படைத்தோரும்
சாமானியரும் சமம் என்ற
விதை விதைக்கப்படும்
தோட்டத்தில் சமத்துவத்தின்
மலர்கள் பூத்துக் குலுங்குகிறது

மாடி வீடோ சேரி காடோ
மலையோ மடுவோ
மழைவெள்ளம் வந்தபின்
மனிதமே காக்கப்படும்
சமத்துவமே சாதிக்கும்
சாதி மதம் போக்கப்படும்

அரசனும் அரக்கனாகிறான்
சமத்துவம் கலைத்திடும் போது
ஆண்டியும் அரசனாகிறான்
சமத்துவம் காத்திடும் போது


© ஆறாம் விரல் ​✍🏾

#tamil #tamilquotes #tamilpoem #aaram_viral #writersofinstagram #aestheticthoughts