...

33 views

எனக்கென உன்னைத் தந்து - 7
அத்தியாயம் - 7

காலை அகிலேஷ் எழுந்து அமர, அனிதாவின் குரல் சத்தமாகக் கேட்க, நர்மதாவை தான் அடுத்து தேடியது அவனின் கண்கள். அவளோ குளியல் அறைக்குள் இருப்பது தெரிய, அறையை விட்டு வெளியே சென்று இருந்தான்.

“உங்க மருமக சம்பாதிச்சா நீங்கத் தலையில் தூக்கி வெச்சு ஆடுங்க. என்னால முடியாது. வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுற இவளோட என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.” அனிதா சொல்ல,

“ஏய்… நீ பேசினது சரியா அப்ப? அறிவு இல்லாம பேசினது நீ, அதுக்கு சரியா தான் பதில் சொல்லி இருக்கா என் மருமக, சம்பந்தி வந்ததும் பார்த்திட்டு தான் போகப் போறோம். அதுவரை இப்படியே தனியா கத்திகிட்டு இரு.” அருணகிரி சொன்னவர் அவரின் வேலையைப் பார்க்கச் சென்று விட, அனிதா அழுகையோடு அறைக்குள் சென்று அமர்ந்து இருந்தார்.

“அம்மா… நீங்கச் சொல்றதை தன்மையா சொல்லி இருந்தா, இத்தனை சங்கடம் வந்து இருக்காது தான?”

“என்னடா சும்மா? உனக்கு நீயே எல்லாம் செய்துக்க எதுக்கு கல்யாணம்?”

“நர்மதா எனக்கு அடிமை இல்லமா. எனக்குப் பொண்டாட்டி. என் சரிபாதி. அவளை மட்டும் சொல்றியே? நானும் தான் அவளுக்கு எதும் செய்யுறது இல்ல. எனக்கு அவளை ஆபீஸ் கொண்டு போய் விடக் கார் ஓட்டக் கூடத் தெரியாது. ஆனா, நர்மதா அருமையா டிரைவ் பண்ணுவா. எங்களுக்குள்ள இதில் எந்த வருத்தமும் இல்ல. எனக்குத் தெரிஞ்சதை நான் செய்யுறேன். அவளுக்குத் தெரிஞ்சதை அவ செய்யுறா. நாங்க சந்தோசமா தான் இருக்கோம். உங்களுக்கு இந்தக் கால வாழ்க்கை முறை புரியல. அதான் உங்களுக்கு வீண் கவலையும் ஆதங்கமும்.”

“அக்காவும் மாமாவும் இப்படி தான் இருக்காங்க. மாமா சமைச்சு நீங்கப் பார்த்ததே இல்லையா? ஏன் அருணும் அண்ணியும் கூட இதே போலத் தான் வாழ்றாங்க. அக்காக்கு அங்க அவ மாமியார் துணைக்கு இருக்காங்க. இங்க எங்களுக்குத் துணையா மஞ்சு அக்கா இருக்காங்க அவ்ளோ தான். பிளீஸ் மா, இன்னும் புருஷனுக்கு எல்லாமே பொண்டாட்டி தான் செய்யனும் நினைக்கிறதை விடுங்க. நான் ஒரு குடும்பத்தையே தாங்குற வயசுக்கும் தகுதிக்கும் வந்துட்டேன் மா. அதனால தான எனக்கு நீங்கக் கல்யாணம் செய்து வச்சீங்க? இப்ப என்னை ஒரு ஆள் பார்க்க வேணும்னு சொல்றது சரியா?” அகிலேஷ் பொறுமையாய் எடுத்துக் கூற,

“சாரி கண்ணு…” அனிதா சொல்ல,

“சாரி எல்லாம் வேண்டாம். உன் கையால எனக்கு அரிசும்பருப்பு செய்து கொடுமா. ரொம்ப நாளாச்சு.” அகில் கேட்க, கண்ணைத் துடைத்துவிட்டு எழுந்து சென்று இருந்தார்.

மஞ்சு வீட்டிற்குள் நுழையும் போதே கேசரியின் மணம் வரவேற்க, காலை உணவுக்கு மசாலா தோசையும், கேசரியும் செய்தவர். மதிய உணவுக்கு அரிசியும் பருப்பும் செய்து உடன் தயிரும் அப்பளமும் வைத்து மகனுக்கும் மருமகளுக்கும் காட்டி கொடுத்து இருந்தார்.

நர்மதா காலையில் உணவு உண்ண மேஜைக்கு வர, அனிதா தட்டில் கேசரி வைக்கவும். அவரை அவள் ஏறிட்டு பார்க்க,

“புரியாம பேசிட்டேன். சாரி.” அனிதா கூற, நர்மதா கேசரியை உண்டு இருக்க, அகில் பெருமூச்சு விட்டு இருந்தான்.

அகிலேஷும் அவளோடு ஒன்றாக அமர்ந்து உண்ண, இருவருக்கும் புன்னகை முகத்துடன் உணவைப் பரிமாறி இருந்தார். வெளியே சென்று வந்த அருணகிரி கூட அதில் அமைதியாய் கலந்து கொள்ள, மஞ்சு அனிதா சொன்ன வேலையை எல்லாம் செய்து இருந்தாள். இரவுக்கு இடியாப்பம் வேண்டும் என்று அகில் சொல்லவும், அதற்கான வேலையைத் தொடங்கி இருந்தார் அனிதா. இதுவரை ஒரு நாளும் மதிய உணவைக் கட்டிக்கொண்டு நர்மதா வேலைக்குச் சென்றதே இல்லை. அன்று ஏனோ எதையும் எதிர்த்தும் மறுத்தும் பேசாதவள் அதை வாங்கிக்கொண்டு மாமியாரின் கையில் மாலட்டு பெட்டியைக் கொடுத்து இருந்தாள்.

“உனக்காக நேத்து உன் மருமக ஆசையா வாங்கிட்டு வந்தது. என்கிட்ட அத்தைக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்னு கேட்டு வாங்கிட்டு வந்தது.” அகில் சொல்ல, அனிதாவுக்கு தான் சங்கடமாகப் போனது.

நர்மதா காரை லாவகமாக ரோட்டில் செலுத்துவதை ஜன்னல் வழியாகப் பார்த்த அனிதாவிற்கு மகனின் வார்த்தைகள் புரிய தொடங்கி இருந்தது. காலை உணவை முடித்து விட்டு அருணகிரி சென்று படுத்து விட, மஞ்சு வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கி இருந்தார்.

“எத்தனை வருஷமா இங்க வேலை பார்க்கிற மஞ்சு?” அனிதா கேட்க,

“ நாலு வருஷமா மேடம்.”

“மேடமா? என்னை அம்மான்னு கூப்பிடு மா. இந்த மேடம் எல்லாம் எனக்குப் பிடிக்கல.” அனிதா சொல்ல மஞ்சுவின் முகம் சட்டென மலர,

“தப்பா என்ன சொல்லிட்டேன்? எதுக்கு உனக்குச் சிரிப்பு?”

“அகில் தம்பியும் சாருன்னு கூப்பிட்ட உடனே இப்படி தான் சொன்னார். நான் உங்க தம்பி வயசு. தம்பின்னு சொல்லுங்கன்னு. நீங்களும் அப்படியே சொல்லவும், தாயை போலவே பிள்ளைன்னு சொல்வாங்க இல்லையா அது நிஜம் தான்னு வந்த சிரிப்பும்மா.”

“கேக்குறேன் தப்பா நினைக்காதே, இந்த வயசானவங்க ரெண்டு பேரும் வீட்டில் இருக்க மாட்டாங்கன்னு அகில் சொன்னான் உண்மையா?”

“என்னம்மா தம்பி பொய்யா சொல்லப் போகுது? அவங்களுக்கு வீட்டில் இருந்தாலும் என்ன வேலை இருக்குன்னு சொல்லுங்க? கணேசன் அய்யாக்கு சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையிலிருந்து ஓய்வு வாங்கின பின்னாடி, போகாதா ஊருக்கு எல்லாம் போக ஆசை. அதனால் வீட்டில் இருக்கிறதே அதிசயம் தான். புருஷன், பொண்ணு ரெண்டு பேரும் இல்லாம ஈஸ்வரி அம்மா தனியா வீட்டில் இருக்க பிடிக்காம, சுய உதவி குழுவில் சேர்ந்து சேவை செய்யப் போய் அதுவே அவங்களுக்கு பொழுதுபோக்கா மாறிடுச்சு.”

“ நர்மதா மேடம் வேலைக்குப் போய்ட்டு நேரா வீட்டுக்கு வந்துருவாங்க அவங்களுக்கு இந்த ஐடி பசங்க பண்ற பார்ட்டி எல்லாம் பிடிக்காது. சாப்பிட மட்டும் தான் ப்ரெண்ட்ஸ் கூடப் போவாங்க. மத்த நேரம் எல்லாம் வீடே தான் கதின்னு இருக்கிற ஆளு. சத்தம், கூட்டம், தேவை இல்லாத கிசுகிசு எதுவும் பேசப் பிடிக்காது. என்கிட்டயே இதுவரை ரெண்டு நிமிஷம் சேர்ந்து பேசினது கிடையாது. அவங்களுக்கு துணையா, அவங்க கேட்ட எல்லாம் செய்யத் தான் கணேசன் அய்யா என்னை வேலைக்கு வெச்சாரு.” மஞ்சு சொல்ல,

“சரிதான். பொண்ணு என்ன பண்றான்னு கூடத் தெரியாத அம்மா அப்பாவை இப்ப தான் பார்க்கிறேன். என்னவோ போ, காசு இருந்தா வாழ்க்கை தரமே மாறிடும் போல, மாப்பிள்ளை பொண்ணுக்கு ஒரு வாய் சமைச்சு போட்டா என்ன அந்த அம்மாக்கு? இப்படி தினம் அதுகளுக்கு டப்பா கட்டி கொடுத்தா அதுகளும் நல்ல சாப்பாடு சாப்பிடுங்க இல்ல? ஊருக்குச் செய்யுற சேவையைப் பொண்ணுக்கு செய்யலாம். சொன்னா இங்க சண்டை தான் வரும்.” அனிதா குறைப்பட்டு கொள்ள, மஞ்சு அமைதியாக இருந்து கொண்டாள்.

“இங்க பாரு மஞ்சு, தினம் வந்து மதியத்துக்கு சமைச்சு இப்படி டப்பா கட்டிக் கொடுத்துவிடு, தினம் வெளிய சாப்பிட்டா உடம்பு என்னாகும் சொல்லு? இப்பவே என் மருமகளுக்கு இடுப்பு இருக்கான்னு தேட வேண்டியதா இருக்கு. இப்படி வெளிய சாப்பிட்டா சத்து இல்லாம இடுப்பு ஒடிய போகுது. நாளைக்கு ரெண்டு பிள்ளை பெத்துக்க தெம்பு வேண்டாமா? என்ன நான் சொல்றது?” அனிதா கேட்க,

“சரிதான் மா. நான் தினம் சமைச்சு கட்டிக் கொடுக்கிறேன். நீங்க உங்க கவலையை விட்டு, எழுந்து வாங்க சாப்பிட்டு நீங்களும் ரெஸ்ட் எடுங்க.” மஞ்சு சொல்ல, அனிதாவோ மகனுக்கென்று இட்லி பொடி, ஊறுகாய், தின்பண்டம் எனச் செய்யத் தொடங்க, மஞ்சு புன்னகை முகமாக அவருக்கு உதவி இருந்தாள்.

மாலை வீடு வந்த அகில் அனிதா பணியாரம் சுடுவதை பார்த்துப் புன்னகைத்து இருந்தான். அவனைச் சுத்தம் செய்து வந்து, கை நிறைய அள்ளிக் கொண்டவனை கண்டு மஞ்சு சிரிக்க,

“அக்கா என் ஃபேவரைட் இது, ஸ்கூலிலிருந்து வந்ததும் இதான் சாப்பிட கொடுப்பாங்க. பாதி நாள் என் ராத்திரி சாப்பாடே இதான். அவ்ளோ இஷ்டம் எனக்கு, அதும் இனிப்பு பணியாரம் சுட்டா நாங்க மூணு பேரும் சமையல் ரூம் வாசலில் தான் காத்து இருப்போம்.” அகில் சொல்ல, அனிதா பழைய நினைவுகளில் புன்னகைத்து இருந்தார்.

அன்று நர்மதா வர நீண்ட நேரமாக அகிலேஷ் அழைத்தும் அதற்குப் பதில் இல்லை. அகிலேஷ் மூன்று முறைக்கு மேல் அழைத்த பின்பே அழைப்பை ஏற்று இருந்தாள்.

“எங்க நம்மு இருக்க?”

“பார்லர் வந்தேன். டைமாகிடுச்சு. இருபது நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்.”

“மெசேஜ் போட்டு இருக்கலாம் இல்ல?”

“அகில் நான் டிரைவ் பண்ணனும்.” நர்மதா முகத்தில் அடித்தது போல குரல் உயர்த்தி சொல்ல, சட்டென அழைப்பை முடித்து இருந்தான்.

‘எப்போது சிரிப்பாள் எப்போது சீறுவாள் என்று எதுவும் புரியவில்லை. அக்கறையில் ஒரு கேள்வி சேர்த்து கேட்டால் உடனே எங்கிருந்து தான் வருமோ இந்தக் கோவம்.’ அகில் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

வீட்டிற்குள் நுழைந்த மருமகளை கண்ட அனிதா அவளைப் பார்த்து முகம் இறுகி போய் இருந்தார். நர்மதா அவரைப் பார்த்துச் சிரிக்க, அவரோ அமைதியாய் நிற்கவும், அறைக்குள் சென்று இருந்தாள். அகிலேஷ் அவளைக் கண்டு,

“நர்மதா எதுக்கு ஹேர் கட் பண்ண?”

“ஏன் பண்ண கூடாதா?”

“குல தெய்வக் கோவிலுக்குப் போகனும். அதுக்கு முன்னாடி எதுக்கு கட் பண்ண? அதும் பாதிக்கு பாதி…”

“அகில்… நீங்க ஷேவ் பண்ணாம இருக்கீங்களா? இல்ல முடி வெட்டாம இருக்கீங்களா? இதென்ன நான் வெட்டினதுக்கு இத்தனை கேள்வி கேட்டு இருக்கீங்க? எனக்குத் தோளுக்குக் கீழ முடி வளர்ந்தாவே பிடிக்காது. என்னால அதைப் பராமரிக்கவும் முடியாது. கல்யாணத்துகாகத் தான் வளர்த்தினேன். நாளைக்கு டே அவுட் போகனும். அதான் டிரீம் பண்ணேன்.”

“நான் கேள்வி கேட்டாவே உனக்குக் கோவம் வருது. நாளைக்கு கோவிலுக்குச் சொந்தம் எல்லாம் வரும், கேள்வியா கேட்டு, உன்னைக் கிண்டலும் செய்வாங்க. ரெண்டு வார்த்தை கிண்டலாவோ, விளையாடாவோ யாரும் எதுவும் பேசிட்டா உனக்குப் பிடிக்காது. இப்ப சொல்லு, குல தெய்வ கோவிலுக்கு வருவியா மாட்டியா? அகில் கேட்க,

“அதுக்குள்ள வளர்ந்துடும் அகில்… பிளீஸ்… பசிக்குது. குளிக்க விடுங்க சாப்பிட்டு தூங்கனும் எனக்கு…”

“எங்க வீட்டுல பொண்ணுங்க இப்படி எல்லாம் முடி வெட்டிக்க மாட்டாங்க நர்மதா. அம்மாக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அவங்க எதாவது கேட்டா தயவு செஞ்சு காரமா எதையும் சொல்லி வைக்காத… நான் பதில் சொல்லிக்கிறேன். பிளீஸ்.”

“உங்க அம்மாக்கு பிடிக்கலன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”

“நீ ஒன்னும் செய்ய வேண்டாம். போப் போய்க் குளி.” எரிச்சலுடன் அகில் சொல்லிவிட்டு அறை விட்டு வெளியே வர,

அனிதா இரவு உணவைச் சாப்பிட்டு முடித்து இருந்தார். அகில் அவரைக் கேள்வியாகப் பார்க்க,

“நான் இப்ப எதாவது சொன்னா, உடனே அவ வேலைக்குப் போறா, எனக்குப் பிரச்சனை இல்லன்னு எதையாவது சொல்லிடுவ, உன் பொண்டாட்டிகிட்ட எதையும் கேட்கமாட்டேன் போதுமா? நான் சாப்பிட்டேன், போய்ப் படுக்கிறேன். மஞ்சுவை வீட்டுக்கு அனுப்பி விட்டேன். உங்க அப்பா அவர் பிரென்ட் வீட்டுக்குப் போய் இருக்கார் காலையில் தான் வருவார். நீங்கச் சாப்பிட்டு தூங்குங்க.” அனிதா சொல்லிவிட்டு செல்ல, அகில் நெற்றியை விரல் கொண்டு தடவி கொடுத்தான்.

நர்மதா உண்ண வர வீடே அமைதியாய் இருந்தது. பெயருக்கு ஒரு சப்பாத்தி மட்டும் உண்டு விட்டு அகில் எழுந்து விட, அலைபேசியில் மூழ்கி இருந்தவள் அதை உணரவில்லை. அறைக்கு வந்த அகில் காதுக்கு ஹெட்ஃபோன் அணிந்து அடெல்லின் (Adele) பாடல்களை ஒலிக்கவிட்டு கண் மூடிக் கொண்டான்.

© GMKNOVELS