...

22 views

தெய்வம் தந்த சொந்தமா - 9
அத்தியாயம் - 9

முகிலன் கடை வரவும் வில்லியம் கடையில் உள்ள கண்ணன் என்ற புது பையன் உடன் ஒரு டிவியை பழுது பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இன்னும் என்மேல கோவமா வில்லி?”

“உன்கிட்ட பேச முடியாதுன்னு தான் நான் எழுந்து கடைக்கு வந்தேன். இங்கேயும் வந்துடியா?”

“சரி நான் பேசினது தப்பு தான். நிலாகிட்ட மன்னிப்பை கேட்டு, அவ உன்னைக் கூப்பிட்டு வரச் சொல்லி அனுப்பவும் தான் வந்தேன். வா வீட்டுக்குப் போவோம். கலை வேற ரூம் உள்ள போய்டுச்சு.”

“நிலா எப்படியும் உன்னை மன்னிக்கும். பாவம் அந்தப் பொண்ணு. யாரும் வேண்டாம் தானே எல்லாரையும் விட்டு வந்துச்சு? அந்தப் பொண்ணை போய்… நிலா மேல உள்ள அன்பில் தான் முகிலு வராங்க இவங்க எல்லாரும். நமக்கு நம்ம மூணு பேரை விட்டா யார் இருக்கா? நிலாக்காக அன்பையும் பாசத்தையும் காட்ட நாலு பேர் இருக்காங்க. அதை ஏன் தடுக்கனும் சொல்லு? எப்பவும் போல வரட்டும் போகட்டும். இந்தக் காண்ட்ராக்ட் எல்லாம் செய்ய வேண்டாம். நாசுக்கா பேசி வேண்டாம்னு சொல்லிடலாம்.” வில்லியம் சொல்லவும்,

“ சரிடா. நீ சொன்ன மாதிரியே பண்ணிடலாம். இப்ப நீ கிளம்பி வீட்டுக்கு வா. நான் மதிய சாப்பாட்டுக்கு கடையில் சொல்லிட்டு வந்துட்டேன். போகும்போது வாங்கிட்டு போகலாம்.”

“என்ன கொடுத்தா ரெண்டு பெண்ணுகளும் அமைதியாவங்கன்னு நல்லா தெரிஞ்சு வெச்சு இருக்க டா நீ” வில்லியம் சொல்லிச் சிரிக்க,

“பின்ன இப்ப ரெண்டு பேரும் இருக்கிற மூடில் சமைக்க சொன்னா நம்ம கதி அவ்ளோ தான்.” முகில் சொல்லிவிட்டு சேர்ந்து சிரித்து இருந்தான்.

இவர்கள் இருவரும் பல முறை பேசி ஒத்திகை பார்த்து, சர்வாவின் காண்ட்ராக்ட்டை மறுக்கக் காத்து இருக்க, அவனோ வேறொரு திட்டத்தோடு அவர்களுக்காகக் காத்து இருந்தான். அவனின் அலுவலகம் சென்றவர்கள் அவனுக்காகச் சில நிமிடங்கள் காத்து இருந்து பின் அவன் அறைக்குள் நுழைய, சர்வேஸ்வரன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து வரவேற்று இருந்தான்.

“சரியான நேரத்துக்கு வந்து இருக்கீங்க. நல்ல நேரம் முடியும் முன்னே இந்தக் கோப்பில் கையெழுத்து போட்டுக் கொடுங்க. படிச்சு பார்த்துட்டு போட்டா போதும்.” சர்வா சொல்ல,

“அது சர்வா… எங்களுக்கு இதில் முன் அனுபவம் கிடையாது. இத்தனை பெரிய ஆஃபீசுக்கு நாங்க வேலை பார்த்ததும் இல்ல. நீங்க ஏன் வேற நல்ல ஆளுங்களை வேலைக்குத் தேட கூடாது? நாங்களே கூட விசாரிச்சு சொல்லட்டுமா?” முகில் கேட்க,

“என்னாச்சு முகில்? உங்களுக்கு அனுபவம் தானே இல்ல? தொழில் தெரியும் தானே? அப்புறம் ஏன் யோசனை? எனக்கு ஓகே தான்.”

“இல்ல பணம் போட்டுச் செய்யுறீங்க. அதை எங்க வேலை கெடுக்க கூடாது இல்லையா?” வில்லியம் சொல்ல,

“ஏன் இப்படி நம்பிக்கை இல்லாம பேசறீங்க? அதெல்லாம் எந்தத் தப்பும் வராது. நேர்மறையான எண்ணத்தோட கையெழுத்து போடுங்க.” சர்வா சொல்லவும்,

“எங்களுக்கு விருப்பம் இல்ல. உன் வீண் செலவுக்கு என்னால துணை போக முடியாது. நீ இதை எங்களுக்காகத் தான் செய்யுறேன்னு நிலா சொல்லிட்டா, இந்த ஆஃபீஸ் போதாதா மருந்து வைக்க? விநியோகிக்க? எங்களுக்கு உதவ நினைச்சு நீ இதை எல்லாம் செய்யாத சர்வா.” முகில் சொல்ல, சர்வேஸ்வரன் இடியென வாய்விட்டுச் சிரித்து வைத்தான். அதில் நண்பர்கள் இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னைப் பார்த்தா வீண் செலவு பண்ற மாதிரி தெரியுதா? உயிர் காப்பத்துற மருந்தில் தொழில் பண்றவன் நான். ஒரு பைசாவை கூட வீணா செலவு செய்யமாட்டேன் ஏன்னா நான் இங்க தொழில் பண்ணனும். லாபம் பார்க்கனும். எனக்கு உண்மையாவே கோவையில் சப்ளை யூனிட் வேணும். என் தொழிலை விரிவுப்படுத்த எனக்கு இந்த யூனிட் அவசியம். அப்புறம் காண்ட்ராக்ட் படிக்காம எதையும் நீங்கப் பேசி இருக்க கூடாது. இது உங்களுக்கான அனுபவம் கிடைக்க ஒரு வாய்ப்பு அது உண்மை தான். ஆனா இதுக்காக நான் உங்களுக்குக் காசு தரப் போறது இல்ல. உங்க அன்பு இல்லத்துக்குக் கொடுக்கப் போறேன். கோவைக்கு ஒதுக்கி இருக்கிற அஞ்சு கோடியில் ஒரு கோடி அன்பு இல்லத்துக்குக் கொடுக்கப் போறேன். அதுக்கு தான் இந்தக் காண்ட்ராக்ட். உங்களால உங்க அன்பு இல்லமே நல்லா இருக்கும். அது போக அங்க உள்ள 45 பேரோட காலேஜ் படிப்பு செலவையும் ஏத்துக்க போறேன். நீங்கக் காண்ட்ராக்ட்டில் கையெழுத்து போட்டா இதல்லாம் நடக்கும். நீங்க முடியாதுன்னு சொன்னா, எனக்கு உங்களை விட்டா ஆளா இல்ல?” சர்வா பேசி நிறுத்தவும்

வில்லியம் அவன் முன் இருந்த கோப்பை படிக்க, முகிலும் வாசிக்கத் தொடங்கி இருந்தான். இருவரும் வாசித்து நிமிர, சர்வா புன்னகையுடன் பேனாவை அவர்கள் முன் நீட்ட, வில்லியம் ஒரு நொடி தயங்க, முகில் அதை வாங்கி கையெழுத்து போட்டு இருந்தான். பின் வில்லியமும் போட்டுக் கொடுக்க, சர்வா முகத்தில் சாந்தமான புன்னகை.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க முகில் என்னை? நிலாவை இன்னும் நேசிக்கிறேன்னா? இல்ல உங்களையும் உங்க தன்மானத்தையும் சீண்டுறேன்னா? நீங்க என்னை என்னெல்லாம் நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா நான் என்ன நினைக்கிறேன் உங்களுக்குச் சொல்லிடுறேன். நிலா என்கிட்ட தொழில் கத்துக்க வந்தப்ப சின்னப்பொண்ணு, அதிர்ந்து கூடப் பேசத் தெரியாது. இதோ இப்ப காட்டுற கோபமான முகத்தை எல்லாம் நான் பார்த்ததே இல்ல.”

“அவ சாந்தமும், அறிவும் தான் என்னை ஈர்த்தது. நாங்க மூணு வருஷம் ஒரே இடத்தில் வேலை பார்த்து இருக்கோம். நிலாவோட நிழலைக் கூட ஒரு நாளும் நான் தீண்டினது இல்ல. எங்களுக்குள் கண்ணியமான நட்பு இருந்தது. அதான் இன்னிக்கும் இருக்கு, என்னிக்கும் இருக்கும். நிலாவை நான் நேசிக்கிறேன் எங்க வீட்டில் சொல்றதுக்கு முன்னாடியே அவளோட எனக்கு நிச்சயம் பேசிட்டாங்க. எங்க நிச்சயம் முடிஞ்சு தான் என் நேசத்தை நான் நிலாக்கு சொன்னேன். அதுக்கு அடுத்த வாரம் அவ காணாம போய்ட்டா…”

“ நான் வீட்டுக்கு ஒரே பையன் முகில். ஒரே பையனுக்கு எத்தனை சலுகையும் பாசமும் கிடைக்கும்னு உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்ல. நான் இதுவரை எதுக்கும் காத்து இருந்தது இல்ல, நினைச்சது நடக்கும் எல்லாத்திலும் நடந்தும் இருக்கு. நான் நிலா எனக்கு தான்னு பெரிய மன கோட்டையைக் கட்டி வைச்சு இருந்தேன். அவளுக்கு என் காதலை, உனக்கு நான் இருக்கேன்னு ஒரு நம்பிக்கையை, ஆதரவை தராம விட்டேன். அவ விலகி நின்ன அப்போ எல்லாம் கூச்சம் போலன்னு நினைச்சுட்டு இருந்தேன்.”

“ஒரு நாள் சட்டுன்னு நிலாவை சாதாரண புடவையில், கழுத்தில் தாலியோட, பத்துக்கு பத்து ரூமில் உங்க மனைவியா அவளைப் பார்த்த நிமிஷம், இவன் எல்லாம் எனக்கு ஒரு ஆளான்னு தான் நினைச்சேன். நிலா உங்களைப் பத்தி சொல்றதுக்கு முன்னாடி, நீங்க நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டீங்க ஞாபகம் இருக்கா? அப்ப என்னையும் மீறி உங்களை நான் ரசிச்சேன். எத்தனை அழகான காட்சி தெரியுமா? என் அப்பா அம்மாக்கு அப்புறம் நான் ரசிச்ச, இன்னிக்கும் ரசிக்கிற ஜோடி நீங்க… நிலா உங்களைப் பத்தி சொல்லவும் என் மனசில் இருந்த கோவம், வெறுப்பு எல்லாம் காணாம போய்டுச்சு. நீங்க இல்லன்னா நிலா நிலை என்னன்னு யோசிக்கவும் நெஞ்சில் ஒரு நிம்மதி. நிலா மேல எனக்கு இருந்த காதல் உண்மை. என் முதல் காதல் நிலா தான். ஆனா அதெல்லாம் கடந்த காலம். கலை சொன்னது போல அதை நினைச்சுட்டு நிகழ் காலத்தையும் இழக்க முடியுமா? பழசை எல்லாம் இப்ப நினைக்கிறது கூடப் பாவம்.”

“இந்தச் சர்வேஸ்வரன் நினைச்சா எதையும் செய்ய முடியும்னு ஒரு தலைகணம் எனக்குள்ள இருந்தது. என்னைவிட எல்லா வகையிலும் குறைவான ஒருத்தனை நிலா நம்ப காரணம் என்னன்னு யோசிக்கும்போது என்னை யாரோ கனவிலிருந்து எழுப்பி விட்ட உணர்வு. அதுக்கு அப்புறம் நான் உங்களைப் பத்தி விசாரிக்கச் சொல்லி முரளிகிட்ட சொன்னேன். உங்களைப் பத்தி அவர் சொன்ன தகவலில் எனக்கு உங்க மேல அத்தனை மரியாதை முகில். ஒத்த பிள்ளையா வளர்ந்த எனக்கு மனசு விட்டுப் பேசக் கூட ஆள் இல்ல. என்ன தான் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் எல்லாரும் ஒரே ஸ்டேட்டஸ் ஒரே மாதிரியான சிந்தனையில் இருந்தோம். ஏன்னா எல்லாரும் வீட்டுக்கு ஒரே பிள்ளை.”

“நிலா, முரளி ரெண்டு பேரும் சொன்னதை கேட்டு, எனக்கு முகில் கூட நட்பு பாராட்ட ஆசை. நான் வில்லியமா பிறந்து இருக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு எனக்கு உங்களைப் பிடிக்கும் முகில். வில்லியமுக்கும் உங்களுக்கும் நடுவில் இருக்கிற நட்பை அவ்ளோ பிடிக்கும். கலைக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள சகோதர பாசம் பிடிக்கும். எங்கையோ பிறந்த நீங்க நாலு பேரும் ஒன்னா ஒரு குடும்பமா இருக்கிறது பிடிக்கும். நானும் உங்களில் ஒருத்தனா இருக்க ஏங்கினேன், நெருங்கி வந்தேன், உங்க எல்லாருக்கும் எதாவது ஒரு வகையில் உதவ நினைச்சேன். நம்ம நெஞ்சுக்கு விருப்பமான ஒருத்தருக்கு எதையாவது செய்து பார்க்க மனசு துடிக்கும் இல்லையா? அந்த உணர்வு தான் எனக்கும்.”

“பணக்காரன் கூடச் சட்டுன்னு பழக முடிஞ்ச என்னால, உங்க கூடப் பழக முடியல. என்னை எட்டியே நிறுத்தி நீங்க ஒதுக்கும்போது அவ்ளோ சங்கடம் எனக்கு. முகில் நீங்கத் தன்மையான அன்பான மனுஷன். இதோ அன்பு இல்லம் பெயரைச் சொன்னதும் கையெழுத்து போட்டுக் கொடுக்குற அளவுக்கு நல்லவர். நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். சத்தியமா என்னால உங்களுக்கு எந்தத் தீங்கும் வராது என்னை நம்புங்க. உங்க மேல உள்ள நேசத்தில் உங்களுக்கு எதையாவது நேரடியா செய்யனும் தான் இத்தனை நாளும் ஆசைப்பட்டேன். உங்களைச் சந்தோஷப்படுத்த அன்பு இல்லம் நல்லா இருந்தா போதும்னு தெரியவும் தான் இதைச் செய்ய முன் வந்தேன். இதோ இப்ப நீங்களும் சந்தோசமா வேலை செய்வீங்க, உங்களுக்கு அனுபவம். எனக்கு என் எண்ணம் நிறைவேறின நிம்மதி.” சர்வா அனைத்தையும் சொல்லி முடிக்க, வில்லியம் எழுந்து வந்து அவனை அணைத்து இருந்தான். முகிலனின் கண்கள் கலங்கி இருந்தது.

“இன்னும் உங்க கண்ணில் தூசியா உறுத்திட்டு தான் இருக்கேனா முகில்?” சர்வா கேட்க,

“எங்களுக்குப் பணம் உள்ளவங்களை பார்த்தா பயம். பணம் உள்ளவங்கிட்ட எதிர்க்க எங்ககிட்ட என்ன இருக்கு? எங்களுக்கு எங்க நிம்மதி மட்டுமே முக்கியம்னு வாழ்ந்ததால், உங்களை ஒதுக்கி வைச்சோம். நிலா நிறைய அழுதுட்டா சர்வா. அவளுக்கு எல்லாமா இருக்கிறேன் நான் சொன்னாலும், அவளுக்கு அவ அம்மாவையும் அப்பாவையும் தேடுது. உங்க கண்ணியமும், பெருந்தன்மையும், நட்பும் புறிஞ்சாலும், காவ்யா பேசினது போல வேற யாரும் நிலாவை பேசிட்டா என்னால தாங்கவே முடியாது. அன்னிக்கே அது காவ்யாவா இருக்கவும் தான் அமைதியா இருந்தேன். ஊரு வாயை மூட முடியுமா? அதான் ஒதுங்கி இருக்க முடிவு பண்ணோம். யாரும் நெருங்கினா நிலா காயப்படுவாளோன்னு எங்க எல்லாருக்கும் பயம். மத்தபடி நீங்க எனக்கு எதிரி எல்லாம் இல்ல. எனக்குத் தாழ்வு மனப்பான்மை ஜாஸ்தி சர்வா. நிலா உன்னைக் கல்யாணம் செய்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருப்பான்னு தோணும், அதான் உன்னை நெருங்கப் பயம் எனக்கு…”

“முகில்… நிலா என்னோட இருந்தா நல்லா மட்டும் தான் இருந்து இருப்பா… ஏன்னா, அது தொழிலுக்காக நடக்க இருந்த ஒப்பந்தம் கல்யாணம். ஆனா உங்களோட மட்டும் தான் நிலா நிறைவா இருக்கா. உங்க பெயரைச் சொன்னதும் நிலா கண்ணில் வர வெளிச்சமும் முகம் எல்லாம் பூக்கிற சிரிப்பும் தான் முகில் அதுக்கு சாட்சி. நிலா இருக்க வேண்டிய இடம் முகில் தான். அன்பில் கோடி பேருக்கும் சமம் முகில் நீங்க, என்ன இல்லைன்னு உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வருது சொல்லுங்க? இதை யோசிங்க உங்களைப் பார்த்து எனக்குப் பொறாமை வருதே அதை நான் என்ன செய்ய? ”

“சாரி சர்வா… நாம் உங்களை புரிஞ்சுக்காம தப்பாவே நினைச்சுட்டேன்.” முகில் கூறவும் அவன் கைப்பிடித்து சர்வா இரு நிமிடம் அமைதியாய் நிற்க, முகில் அவனை தோளோடு அணைத்து கொண்டான். அங்கே அவர்களுக்கு இடையில் அழகாய் ஒரு புரிதல் பூத்திருந்தது. பின் ஒப்பந்தம்பற்றிப் பேசி, ஒருவருக்கு ஒருவர் சந்தேகங்கள் கேட்டுத் தெளிந்து இருந்தனர்.

சர்வா வந்த வேலை முடிந்து இருக்க, கிளம்பி சென்னை, டெல்லி, பெங்களூர் என அவன் தொழிலை வளர்க்க சுற்றிக்கொண்டு இருந்தான். ஊட்டியில் சக்தி அவனை எதிர்ப்பார்த்துக் காத்து இருந்தாள். ராம் கொடுத்த தகவலில் சர்வேஸ்வரன் அவன் இல்லம் நோக்கிச் சென்றதை அறிந்து இருந்தவள். அவன் தன்னை காண வருவான் என்று காத்து இருந்தாள். ஆனால் அவனோ அவளையே மறந்து இருந்தான்.

© GMKNOVELS