...

23 views

அன்பின் அப்பா - 2
அத்தியாயம் - 2

அன்பின் குறும்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருந்தது. மனோகரன் படிப்பின் காரணமாக வீட்டில் அடங்கி விடுவதும், அன்பு தெருவையே கதி கலங்க விடுவதும் என இருந்தாள். எத்தனை குறும்பு செய்தாலும் அதில் யாரையும் அவள் புண்படுத்தி பார்த்தது இல்லை.

மாதவன் வீட்டுக்கு வருவதை கண்டாள் அவளும் பின் வாசல் வழியே வீட்டின் உள்ளே வந்து இருப்பாள். அன்றும் அதே போல வீட்டின் உள்ளே வந்து இருந்தவள் மனோவின் பென்சில் டப்பாவினை திறந்து அவனின் பென்சிலை எடுத்து அவளின் பேக் உள்ளே வைத்து இருந்தாள். மனோ படிப்பில் கவனமாக இருந்தவன் அதை கவனிக்காது விட, அடுத்த நாள் பள்ளிக்கு சென்றவன் பென்சில் இல்லாததை கண்டு அதிர்ந்து, தேடி அது கிடைக்காது போக ஆசிரியரின் கடுமையான பேச்சுக்கு ஆளாகி இருந்தான்.

இல்லம் வந்தவன் அன்பின் பள்ளிப்பையை எடுத்து அவனின் பென்சிலை தேட அவளின் பையில் இல்லை. மனோ வள்ளியிடம் பென்சில் வேண்டும் என்று கேட்க,

“நேத்து காலையில தான மனோ கொடுத்தேன்? இப்ப திரும்ப வந்து கேக்குற? ஒரே நாளில் பென்சில் எப்படி தீரும்?” வள்ளி அவனை பார்த்து கேட்க,

“பென்சில் காணோம் மா.”

“காணோம் சொன்னா எப்படிடா? அத்தனை கவனமா இருக்க இல்ல?” வள்ளி திட்ட அமைதியாய் கண் கலங்க நின்று இருந்தான்.

அவனின் கண்ணீரை கண்ட பின் வள்ளி மனது இறங்கி வர, அலமாரியில் இருந்து ஒரு பென்சிலை எடுத்து கொடுத்து இருந்தார். அன்று மாலையே அந்த பென்சிலை அன்பு அவளின் பைகளுக்கு மாற்ற, அதை கண்ட மனோகரன் அன்பை முறைக்க, வசமாய் அவனிடம் மாட்டிக் கொண்டாள்.

“நேத்து என் பென்சிலை நீ தான் எடுத்தியா?”

“இல்லையே”

“பொய் சொல்லாத அன்பு.”

“இல்லண்ணா…”

“சரி இரு வரேன்.” என்றவன் அவள் கையில் உள்ள பென்சிலை பிடுங்கிக் கொண்டு சென்று இருந்தான். வள்ளி அவள் முன் வந்து நிற்கவும், அன்பு விழிக்க,

“அண்ணா பென்சிலை நேத்து நீ எடுத்தியா?” வள்ளி கேட்க,

“ஆமா எடுத்தேன்.”

“எடுத்த இல்ல திருடி இருக்க…” மனோ கோவமாக சொல்ல,

“மனோ வாயை மூடு. நான் கேட்டு இருக்கேன் இல்ல?” வள்ளி சொல்லவும் பெரியவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“இன்னிக்கும் எடுத்து இருக்க, ஏன்?”

“என்கிட்ட பென்சில் இல்ல அதான்.” அன்பு சொல்ல, வள்ளி அவளின் பென்சில் டப்பாவை பார்க்க அதில் அன்புக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. வள்ளி இப்போது அவளை முறைக்க, அன்பு கண் கலங்க,

“பொய் பேசறயா நீ? தினம் உனக்கு எதுக்கு பென்சில்? என்ன திருட்டுத்தனம் பண்ணிட்டு இருக்க நீ?” வள்ளி அதட்ட அன்பு அழுது இருந்தாள்.

சரியாய் மாதவன் உள்ளே வரவும், அழுது கொண்டே அவரின் கால்களை அன்பு கட்டிக்கொள்ள, மாதவன் மகளை கைகளில் அள்ளி இருந்தார்.

“ என் தங்கம் ஏன் அழுவுது?”

“என்னங்க… அவளை கொஞ்சாதீங்க. மனோ பையில் இருந்து நேத்தும் பென்சில் எடுத்து இருக்கா, இன்னிக்கும் பென்சில் எடுத்து இருக்கா, ஏன் கேட்டா அவகிட்ட இல்லன்னு சொல்றா, ஆனா அவ டப்பாவில் எல்லாமே இருக்கு. முன்னுக்கு பின் முரணா பதில், இதில் பொய் வேற, அதட்டினா அழுகை வந்துடுது. இன்னிக்கி இவளால மனோ கிளாஸில் திட்டும், தண்டனையும் வாங்கிட்டு வந்து இருக்கான்.” வள்ளி சொல்லி முடிக்கவும், மகளை கைகளில் இருந்து கீழே இறக்கி விட்டவர்,

“அம்மா சொல்றது உண்மையா அன்பு மா?”

“ம்ம்…” அவள் தலை ஆம் என்று ஆட,

“எதுக்கு டா இத்தனை பென்சில் உனக்கு? உனக்கு தேவையான எல்லாமே உன்கிட்ட இருக்கும் போது ஏன் மனோ பென்சிலை எடுத்த?”

“என் பிரென்டுக்காக எடுத்தேன். அவகிட்ட பென்சில் இல்ல அதான் எடுத்து கொடுத்தேன்.” அன்பு பதில் கொடுக்க,

“சரி அப்ப மனோக்கு பென்சில் வேண்டாமா?”

“அண்ணாக்கு பென்சில் வாங்கி தர அம்மா, நீங்க எல்லாம் இருக்கீங்க. அவளுக்கு அம்மா அப்பாவே இல்ல.” அன்பு சொல்லவும் வள்ளியும் மாதவனும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்கிட்ட இருக்கிற பென்சிலை கொடுத்தா, எனக்கு எழுத வேணுமே அதான் அண்ணா பென்சிலை எடுத்து கொடுத்தேன்.” அன்பு சொல்ல,

“இனிமேல் உன் பிரென்டுக்கு பென்சில் வேணும்னா எங்கிட்டயோ, அம்மாகிட்டயோ தான் கேட்கனும். நாங்களே உன் ப்ரெண்ட்டுக்கு பென்சில் கொடுப்போம். இப்படி அண்ணா பென்சிலை எடுத்துட்டு போக கூடாது. அண்ணா பென்சில் இல்லாம இன்னிக்கி அவன் மிஸ்கிட்ட திட்டு வாங்கி இருக்கான். பாவம் இல்ல. உன் அண்ணா தானா?” மாதவன் கேட்க,

“சாரி அண்ணா.” அன்பு மனோவை அணைத்து மன்னிப்பு கேட்க, மனோவும் மன்னித்து இருந்தான்.

“அந்த ப்ரெண்ட் பேர் என்ன?” வள்ளி கேட்க

“கார்த்திகா…” அன்பு முகம் எல்லாம் புன்னகையுடன் சொல்ல, வள்ளி அலமாரியில் இருந்து ஒரு பென்சில் எடுத்து வந்திருந்தார். அதை அன்பின் கையில் கொடுத்து,

“இந்தா இனி எங்களுக்கு தெரியாம எதையும் கொண்டு போய் கொடுக்க கூடாது. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லிட்டு தான் கொடுக்கனும் சரியா?” வள்ளி கேட்க, சரியென அன்பு தலையாட்டி வைத்தாள்.

அடுத்த நாள் பள்ளிக்கு அன்பின் உடனே வந்த மாதவன் கார்த்திகாவை கண்டு விட்டு சென்று இருந்தார். தங்கையின் பள்ளி தோழியை மனோகரனும் வந்து பார்த்து சென்று இருந்தான். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் மாதவன் எதை வாங்கினாலும் அதில் ஒரு பங்கை கார்த்திகாவிற்கும் வாங்கி கொடுத்து இருந்தார். அதில் கார்த்திகாவின் மாமாவும், அத்தையும் வந்து நன்றி கூறி இருந்தனர். இருவரும் கட்டிட வேலை செய்பவர்களாக இருக்க, மொத்த செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறிய நேரத்தில் மாதவன் அவர்களுக்கு உதவி இருந்தார்.

அன்பு இப்போது நான்காம் வகுப்பில் இருக்க, மனோகரன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அன்று அன்பு அப்பாவின் முன் வந்து நின்றவள்,

“அப்பா… என் புது பிரென்ட் தேவிக்கு யூனிஃபார்ம் வேணும். வாங்கி தரீங்களா?” அன்பு கேட்க,

“வாங்கி கொடுக்கலாம் அன்பு. சரி தேவி வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க?” மாதவன் கேட்க,

“என்னங்க… இவ தான் கேக்கறான்னா நீங்களும் விவரம் கேட்டு இருக்கீங்க? அடியே நம்ம ஒன்னும் பின்னாடி தோட்டம் வைக்கல நினைச்ச நேரம் பறிச்சு கொடுக்க…” வள்ளி கணவனிடம் பேச்சை தொடங்கி மகளிடம் அதட்டலாய் முடிக்க,

“இரு வள்ளி… அன்பு சொல்றதை கேட்போம்.”

“அப்பா… அவளுக்கு அப்பா இல்ல… பிளீஸ்ப்பா அவங்க அம்மா பாவம்… அவங்களும் நிறைய எல்லாம் படிக்கல.” அன்பு சொல்ல, மாதவன் சரியென்று கூற, வள்ளி முறைக்க, மாதவன் அவரின் தோளில் சமாதானமாக தட்டிக் கொடுத்து இருந்தார்.

அன்று முதல் தேவி, கார்த்திகா என மாதவனுக்கு மேலும் இரு மகள்கள். எந்த சங்கடங்களும் இல்லாது அவரால் முடிந்த வரை அவர்களுக்கும் உதவி இருந்தார். கடவுளும் அவரின் நல் குணத்துக்கு பரிசாக வியாபாரத்தில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் கொடுத்து இருந்தார்.

மனோகரன் வயது பதின் வயது தொடக்கத்தில் இருக்க, அவன் இதை எல்லாம் கண்டு கொள்ளும் இடத்தில் இல்லை. அதுபோக, அவனுக்கு என்று ஒரு நட்பு கூட்டம் உருவாகி இருக்க அவர்களோடு சேர்ந்து படிப்பதும் விளையாடுவதும் என நேரத்தை போக்கி இருந்தான். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்பிள்ளை அவனின் கவனம் தங்கையை விட்டு வேறு விஷயங்களில் கூவிய தொடங்கி இருந்தது.

பதின்ம வயத்தை மகன் தொட போகிறான் என வள்ளி அதிகம் கவனம் எடுத்து இருவரையும் பார்த்துக் கொள்ள தொடங்கி இருந்தார். அன்பு ஆறாம் வகுப்பு செல்ல இருந்த நேரம் அது, அண்ணன் உடன் தனியார் பள்ளிக்கு செல் என்று மாதவன் சொல்ல, இவளோ தோழிகள் உடன் அரசு பள்ளிக்கு செல்வேன் என்று நின்று இருந்தாள்.

“அன்பு, நீ நல்லா படிக்கிற பொண்ணு டா, அதான் உன்னை மெட்ரிக் ஸ்கூலில் சேர்க்க சொல்றா உங்க அம்மா. நம்ம மனோ அங்க தான போறான்? நீ மட்டும் தனியா போறேன் சொன்னா எப்டி?”

“அங்க ஆம்பள பசங்களும் படிக்கிறாங்கப்பா. நீங்க அண்ணாவை அங்க கொண்டு வந்து சேர்த்துங்க. நான் பார்த்துக்கிறேன்.” அன்பு சொல்ல, மாதவன் வாய் விட்டு சிரித்து இருந்தார்.

“சரியான மக்கு பிள்ளையா பிறந்து இருக்கு. எதையும் தனக்கு வெச்சுக்க தெரியாம, எல்லா நேரமும் உதவி பண்ணிட்டு, அடுத்த ஆளுகளுக்கு துணை நின்னுட்டு கடவுளே இவளுக்கு நல்ல புத்தியை கொடு. அடியே, தனக்கு போக தான் தானமும் தர்மமும். நாங்க எங்க சேர்த்து விடுறோமோ அங்க படி. எதிர்த்து பேசினா அடி விழும்.” செண்பகவள்ளி மிரட்டி விட அன்பு அழ தொடங்கி இருந்தாள்.

பெண்ணரசி அழுதாள் மாதவன் தாங்குவாரா? அவளை சமாதானம் செய்ய வேண்டி மடியில் அமர்த்தி கொண்டார். அவளும் அழுது கரைந்து அப்பனை உருக்கி இருந்தாள். விளைவு, வள்ளியின் முறைப்புக்கும் முகதிருப்பலுக்கும் இடையில் அன்பரசி அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டு இருந்தாள். மூன்று பெண்களையும் மெட்ரிக் சேர்க்க பணவசதி இருந்தாலும் கார்த்திகா வீட்டிலும் சரி, தேவியின் வீட்டிலும் சரி முழுதாய் மறுத்து இருந்தனர். எனவே அன்பு அவர்களோடு இணைந்து கொண்டாள்.

ஆனால் அரசு பள்ளியில் தான் அன்பின் வெகுளித்தனம் மறைந்து போனது. பலதரப்பட்ட செல்வ நிலையில் பயிலும் மாணவர்கள். ஒரு வகுப்புக்கு அறுபது பேர் என அதிகமான எண்ணிக்கையில் பயின்றனர். படிப்பில் போட்டி இருந்தது. செல்வ நிலையை ஒப்பிட்டு பார்த்து நட்பு பாராட்டி இருந்தனர். அதனால் அன்பு மிரண்டு போய் இருந்தாள். தேவி, கார்த்திகா இருவரும் இயல்பாய் பள்ளியில் பொருந்தி போக, அன்புக்கு மட்டும் அவை இயல்பை மீறிய விஷயங்களாக அமைந்து போனது.

முதலில் அன்பின் செல்வ நிலை கண்டு ஒதுங்கிய சக மாணவர்கள் அதன்பின், அவளின் படிப்பை கண்டு நெருங்கி இருந்தனர். கணிதமும் அறிவியலும் அன்பின் கைகளில் துள்ளி விளையாட, வகுப்பின் செல்லப்பிள்ளையாக மாறி இருந்தாள்.

அன்பு, தேவி, கார்த்தி மூவரும் பள்ளிக்கு காலையில் தனி தனியாக வர, மாலை ஒன்றாக இல்லம் வரும் பழக்கத்தை கொண்டு இருந்தனர். மனோகரன் அவனே பள்ளியில் இருந்து வந்துவிடுவான். அன்பை மாதவன் தான் எப்போதும் அழைத்து செல்வார். தொழில் விஷயமாக மாதவன் வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட, மகளை பள்ளிக்கு விடுமுறை எடுத்து வீட்டில் இருக்க சொன்னார். தேவி, கார்த்திகா இருவர் வீட்டிலும் தகவலும் சொல்லி இருந்தார். மாதவன் ஊருக்கு கிளம்பி இருக்க, மனோ கிளம்பி பள்ளிக்கு சென்று இருந்தான். காலையில் எழுந்த அன்போ பள்ளிக்கு விடுமுறை போட மறுத்து இருந்தாள். வள்ளி எத்தனை கூறியும் அவள் அழுது புரள, வள்ளியே அவளை அழைத்து சென்று பள்ளியில் விட்டு வந்து இருந்தார்.

© GMKNOVELS