...

30 views

என்னுயிர் துணையே - 1
துணை - 1

லண்டன், இங்கிலாந்து.

கிளவுட் லைன்ஸ் அலுவலக கட்டிடம், மடிக்கணினி முன் அமர்ந்து இருந்தவன் இடம் வலமாக தலையை பெரியதாய் அசைத்து இது சரியில்லை என மனதில் சொல்லிக்கொண்டான் உடன் ஒரு பெருமூச்சும் வந்தது ஏன் என்றால் வந்திருக்கும் செய்தியும், அந்த செய்தியை அனுப்பியவரையும் அவனால் எளிதாக கடந்து செல்ல இயலாதே மின்னஞ்சலை ஒதுக்கி விட்டு இரு நொடி கண்மூடி அமர, அவன் மனம் முன்னெச்சரிக்கையாக கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடையாக வந்து நின்றாள் அவள். உடனே எழுந்து நடந்தான் அவளை நோக்கி, அவன் அறைவிட்டு வெளியே வந்து நடக்க, அவனை கண்ட அனைவரும் மதிய வணக்கம் சொல்ல, சிரித்த முகத்துடன் தலை அசைத்து வணக்கம் கூறினான் சத்யப்பிராகாஷ்.

அனுமதி கூட கேட்காது அவளின் அறைக்குள் நுழைய அத்தனை உரிமையும் உண்டு இவனுக்கு, அறைக்குள் சென்றவன் அவள் முன்னே புன்னகையுடன் அமர, கணினியை விட்டு அவன் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் அவள் கவனத்தை கணினியில் பதிக்க,

" ஹனி மா.. எனக்கு ஒரு உதவி வேணும். மாட்டேன் சொல்லாம நீ செய்வியாம்.."

" என்ன செய்யனும் என் பேபிக்கு? " கணினியில் முகம் பதித்து கொண்டே கேட்டாள் அனுஹாசினி.

" ரெண்டு மாசம் எனக்கு பொண்டாட்டியா நடிக்கனும் சுவீட்டி அவ்ளோ தான். "

" என்ன சோட்டு..? நான் என்ன நாடக சபாவா நடத்துறேன்? நடிக்க வான்னு கூலா சொல்ற? "

" பிளீஸ் டா அம்மு.. உன்னை விட்டா எனக்கு யார் இருக்காங்க சொல்லு, உனக்கு இதுல எந்த பிரச்சனையும் வராது. உன் வேலையையும் சேர்த்து நானே செய்யுறேன் வாடி சக்கரைக்கட்டி என்னோட.. "

" உன்னோட எங்க வரணும் தங்கம் அதை சொல்லு.. "

" இந்தியா.. எங்க ஊரு பொள்ளாச்சிக்கு.. "

" கிழிச்சுது.. உனக்கு தெரியும் இல்ல பட்டு என் நிலைமை.?? தமிழ்நாடு நமக்கு வேண்டாமே.."

" உனக்கு மட்டும் தெரியாத என்னை? நானே போகனும் சொல்றேன் ஏன்னு யோசிக்க மாட்டியா? அப்பா கூப்பிட்டு இருக்கார். போகனும்.. சொத்து பிரிக்க முடிவு பண்ணி இருக்காங்க.. அதுக்காக.. அங்க போய் என் சோகப்பக்கத்தை எல்லாம் காட்டி சீன் போட்டு எல்லாரையும் அழ வைக்க நான் தயாரா இல்ல லட்டு அதான்.. "

" ஓகே டா குட்டி பையா.. போலாம்.. சரி இலம்பா சொத்து வர போகுதே என்ன செய்ய போற? "

" பிரைட் சிக்கன் தின்னு சொத்து அழிக்க போறேன்.." சத்யா கண் சிமிட்டி சொல்ல, அனு அவன் தோளில் செல்லமாக அடித்து இருந்தாள்.

சத்யப்பிரகாஷ் சுருக்கமாய் சத்யா, அலுவலகத்தில் மட்டும் சக்தி. வயது முப்பது. கட்டிட கலைஞன். லண்டனில் வேலையும், குடி உரிமையும், சொந்த வீடும் இருக்கிறது.

அனுஹாசினி, வயது இருபத்தி ஒன்பது. சக்தி போலவே கட்டிட கலையில் வேலை, சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட், உடன் இங்கிலாந்து குடி உரிமையும் இவளிடம் இருக்கிறது.

சத்யா உடன் வேலையில் இருக்கும் ஒரே தோழி. இந்தியா, தமிழ் என்பதோடு இன்னும் ஒரு ஒற்றுமையும் இருவரையும் இணைத்திருக்க, வேலையில் சேர்ந்த இந்த எட்டு வருடங்களில் நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தனர். அனு பற்றி சத்யா அறியாதது ஒன்றுமே கிடையாது. ஆனால் சத்யா நிறைய பக்கங்களை மறைத்து, கொஞ்சம் குறிப்பு மட்டும் கூறி இருக்கிறான். அவனிடம் எதையும் வற்புறுத்தி வாங்க மனமில்லாத அனு விட்டு விட, அந்த புரிதலே இருவரின் இடையில் நட்பை ஆழமானதாக மாற்றி இருந்தது.

அலுவலகத்தில் ஒரு நாள் உடன் வேலைப்பார்க்கும் ஒருவன் இருவரையும் காதலர்களா என்று கேட்டு விட, இருவரும் வாய்விட்டு சிரித்து இருந்தனர். அன்றில் இருந்து இருவரும் காதலர்கள் போல ஒருவரை ஒருவர் கொஞ்சி பேசி கொள்வது வழக்கமாகி போய் இருந்தது. இருவருக்கும் பிடித்த உணவு பிரைட் சிக்கன். வாரம் ஒரு முறை சிக்கனையும், பாம்பே ஹோட்டல் சென்று இந்திய உணவையும் ருசித்து உண்டு விட்டு வருவார்கள்.

சத்யாவுக்கு எந்த மனகுறை என்றாலும் அவன் தேடி செல்வது அனுவை தான். அவளுக்கு எது வந்தாலும் அவனோடு உடன் இருப்பவன் சத்யா தான். நட்பு ஆம், கண்ணியமான நட்பு, வரம்பு மீறாத நட்பு. அனு கடந்த துன்ப பாதைகளில் நண்பனாக உடன் நின்றவன் சத்யா மட்டுமே, அவளின் மீது தனி பாசம் உண்டு அவனுக்கு, அவள் எது கேட்டாலும் செய்து கொடுத்து விடுவான். இவளும் அவன் கேட்கும் உதவிக்கு மறுத்து தலை அசைத்தது இல்லை.

சத்யா வீட்டிற்கு செல்ல, அவன் கதவு திறந்ததும் வந்து கையை மாலையாக்கி கழுத்தில் போட்டு அவனை அணைத்து கொண்டான் அவனின் மகன் வியாஷ். அவன் தான் சத்யப்பிரகாஷின் உடல், பொருள், ஆவி அனைத்தும். மகனுக்காக எதையும் செய்யும் தந்தை இவன். அவன் இதழ்கள் தகப்பனின் கன்னங்களை ஈரம் செய்ய அவன் முகத்தில் புன்னகை விரிந்தது. வியாஷ் நான்கு வயது சுட்டிக்குட்டி, தகப்பனின் சொல் பேச்சுக்கு கட்டுப்பட்ட மகன். அறிவும் அழகும் ஒரு சேர பெற்றவன். சத்யாவின் வாழ்வுக்கு அர்த்தமாய் உள்ளவன்.

" அப்புக்குட்டி இன்னிக்கி என்ன எல்லாம் செஞ்சீங்க?"

" பாபா.. இதோ பாரு.. " மகன் வரைந்த ஓவியம் பார்த்து மகிழ்ந்து அவனுக்கு முத்தம் வைத்தான்.

இருவரையும் கண் நிறைய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஜார்ஜியா. வியாஷின் கேர் டேக்கர். பிரசவத்தில் இரு முறை குழந்தையை இழந்தவள், இதை காரணம் சொல்லி கணவனும் பிரிந்து விட, தாயாக விரும்பி இந்த வேலையில் விருப்பத்தோடு தன்னை இணைத்து கொண்டாள். அவளை கண்டவன்,

" தாங்க்ஸ் ஜார்ஜியா இனி நான் பார்த்துக்கறேன். எனக்கு எதும் பெருசா வேலை இல்ல இன்னிக்கி, நீ போ.. ஆ.. ஜார்ஜியா நாங்க இந்தியா போக போறோம் கூடிய சீக்கிரம். உனக்கு ரெண்டு மாசம் லீவ் கிடைக்கும். "

" அந்த ரெண்டு மாசமும் என் சம்பளம் சக்தி? "

" அது உனக்கு எப்பவும் போல பேங்கில் வந்துரும். ரெண்டு மாசம் இருக்க மாட்டேன் அதை தான் உனக்கு தெரியப்படுத்தினேன். "

" அப்ப சரி.. நான் கிளம்புறேன் சக்தி. "

தகப்பனும் மகனும் அவளை வழியனுப்பி வைத்து விட்டு, அவர்களின் உலகத்திற்குள் நுழைந்து இருந்தனர். சத்யா குளிக்க செல்ல, மகனும் உடன் வந்து அமர்ந்து கொண்டான். இன்று பள்ளிக்கு சென்றது, ஜார்ஜியா செய்து கொடுத்த கேக், அவன் வரைந்த ஓவியம் என அனைத்திற்கும் கதை சொல்ல, மகனின் கதைகளுக்கு தலையாட்டி, பதில் கூறி, மகனை குளிக்க வைத்து, இவனும் குளித்து, உடை மாற்றி விட்டு, இருவருக்கும் இரவு உணவை தயார் செய்ய ஆரம்பிக்க, மகன் தகப்பனின் முதுகில் வந்து உப்புமூட்டை தொங்க தொடங்கினான். சத்யா கவனத்தை மகனின் மீது வைக்க,

" நம்ம இந்தியா போறோம் சொன்ன தான? அங்க எதுக்கு போறோம் பாபா? " மகனின் கேள்வியில் அப்பனின் முகம் சுருங்கி போய் விட்டது. என்ன பதில் சொல்ல என்று யோசித்தவன், மெல்ல மகனை அவன் கைகளுக்குள் கொண்டு வந்து சிரித்த முகத்துடன்,

" நான் என் பாபாவை பார்க்க போறேன். நீ உன் கிராண்ட் ஃபாதரை பார்க்க போற.. " சத்யா சொன்னதை கேட்ட வாண்டு முகத்தில் சட்டென ஆச்சரியம்.

" உண்மையா? " மகன் கண் விரிந்து புன்னகையுடன் ஆவலாக கேட்க, புன்னகையுடன் ஆம் என்று கூறினான்.

" அங்க உன் தாத்தாக்கு நிறைய சொந்தம் உண்டு. அவங்க எல்லாரையும் பார்க்கலாம் சரியா? " சத்யா சொல்ல,

" அவங்க எல்லாம் நமக்கு சொந்தம் இல்லையா பாபா? "

" இல்ல வியாஷ். உன்னை போல எனக்கும் என் பாபா மட்டும் தான். வேற சொந்தம் நமக்கு இல்ல " சத்யா மகனுக்கு மென்மையாக கூற, சரியென கூறி கன்னத்தில் முத்தம் வைத்தான். மகனின் முத்தம் மனதை அமைதிப்படுத்த இவனும் முத்தத்தை திருப்பி கொடுத்து கார்ட்டூன் போட்டு விட்டு சமைக்க சென்றான்.

வறுத்த கோழி கறி, வேக வைத்த உருளைக்கிழங்கு மசியல், மகனுக்கு என்று முட்டை ஆம்லேட், கொஞ்சம் பட்டாணி மசாலா என சமைத்தவன் உண்ண அனைத்தையும் டேபிளில் அடுக்க, வீட்டின் காலிங் பெல் அடிக்கவும், வியாஷ் துள்ளி குதித்து கதவை திறக்க, வெளியே அனு நின்று இருந்தாள்.

அவனுக்கு பிடித்த கேண்டி பாக்ஸை கைகளில் கொடுக்க, அவளின் கன்னத்தை ஈரமாக்கி இருந்தான். யாஷ் தாய் இல்லா ஏக்கத்தை உணர்ந்ததே இல்லை. தாய் வேண்டும் என்று கேட்டதும் இல்லை. அனு அந்த இடத்தை அவள் உணராமலே நிரப்பி கொண்டு இருந்தாள்.

" யாஷ்குட்டி உன் பாபா இன்னிக்கி என்னடா சமையல் செஞ்சான்? "

" உன் வீட்டுல அடுப்பே பத்த வைக்க மாட்டியா அனு? "

" போடா.. ஒருத்திக்கு என்ன சமைக்கறது சொல்லு? தனியா இருக்கவே வெறுப்பா வருது. "

" ஏன்டா என்னாச்சு..? "

" பழைய ஞாபகம்.. இந்தியான்னு சொன்னதும் பூதம் மாதிரி எல்லாம் கிளம்பி என் மண்டைக்குள்ள எதோ பண்ணுது. இன்னிக்கி இங்க தூங்கட்டுமா? "

" எனக்கு கதை சொல்லு.. கதை சொல்லு.. மீமீ.."

" அப்பு.. சாப்பிட்டு கதை சொல்வா உன் மீமீ.. இப்ப சாப்பிட வாங்க ரெண்டு பேரும்.. "

அமைதியாய் மூவரும் உணவு உண்டு இருக்க, சத்யா சமையல் அறையை சுத்தம் செய்ய, அனு யாஷ் உடன் பல் தேய்த்து, இரவு உடை மாற்றி, கதை சொல்லி உறங்க வைத்து இருந்தாள். சத்யாவை தேடி வரவேற்பு அறை வர, அவன் அன்றைய செய்திகளை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் அருகில் அமரவும்,

" உன்னை இங்க வந்து தங்க சொல்லி எவ்ளோ முறை சொல்லி இருக்கேன். இன்னிக்கி எதுக்கு கூக்கரு அனுமதி கேட்டு நின்ன? "

" சரக்கு அடிப்போமா பேபி? "

" வாங்கிட்டு வந்தியாடி ஸ்வீட்டி பை? ஏய்.. அப்புக்குட்டி தூங்கிட்டான் தானே? "

" தூங்கிட்டான் அதான் வந்தேன்.. "

" சரி, ரெண்டு ரீஃபில் தான் தருவேன். உனக்கு அதுக்கு மேல தாங்காது கன்ட்ரோல் போய்டும். ஓகே வா? "

" ஓகே பேபிமா.. "

" முன்னாடியே சொல்லி இருந்தா குடிச்சுட்டு சாப்பிட்டு இருக்கலாம்.."

" அப்போ தோணல.. இப்போ வேணும் தோணுச்சு. "

" எதையும் யோசிக்காதடி சீனிகட்டி.. கடந்து போன எதையும்.. எதையும் யாராலும் மாத்த முடியாது.. எது வந்தாலும் தலை நிமிர்ந்து தைரியமா நட சரியா..?

இருவரும் ஒன்றாக அமர்ந்து விஸ்கி அருந்தி கொண்டே படம் பார்த்தனர். இல்லம் வரும் முன் அனுவுக்கு இருந்த குழப்பங்கள், கவலைகள் தீர்ந்து போய் இருக்க, நிம்மதியாய் உறங்க சென்று இருந்தாள்.

© GMKNOVELS