...

35 views

எனக்கென உன்னைத் தந்து - 10
அத்தியாயம் - 10

அகில் அமைதியாய் வந்து படுத்து விட, நர்மதாவும் அமைதியாய் உறங்கி இருந்தாள். காலையில் அகில் எழும்போது வீடே அமைதியாய் இருக்க, பக்கத்தில் நர்மதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அகில் குளித்து உடை மாற்றிக் கொண்டு இருக்க, மஞ்சு வந்திருந்தார்.

“தம்பி வந்துட்டீங்களா? காலையில சாப்பிட என்ன செய்யட்டும்? மதியம் உங்களுக்கு என்ன செய்து தரணும் சொல்லுங்க.”

“எனக்கு நீங்க இனி எதுவும் சமைக்க வேண்டாம். உங்க மேடம் சொல்றதை கேட்டுச் அவங்களுக்கும், அவங்க அம்மா அப்பாவுக்கு மட்டும் சமைங்க அக்கா போதும்.”

“தம்பி… ஏன் இப்படியொரு முடிவு?”

“என்னோட மரியாதையை நான் தானே காப்பாத்திக்கனும்? அதான்… அத்தையும் மாமாவும் எங்கன்னு தெரியுமா?”

“நேத்து, ஒரு கல்யாணத்துக்கு கிளம்பி போகனும்னு சொன்னாங்க.”

“சரி அவ எழுந்தா என்ன செய்யனும்னு சொல்வா, கேட்டுக்குங்க.” அகில் சொல்லி விட்டுக் கிளம்பி சென்று இருந்தான்.

நர்மதா எழுந்து குளித்து வர, மஞ்சு அவளைப் பார்த்து என்ன சமைக்க வேண்டும் என்று கேட்கவும்,

“அகில் என்ன சாப்பிட்டார்?”

“தம்பி எதுவும் சாப்பிடல மேடம். இனி அவருக்கும் இங்க எதுவும் சமைக்க வேண்டாம்னு சொல்லிட்டார்.” மஞ்சு சொல்ல, நர்மதா முகத்தில் குழப்பம்.

“சரி நீ போ எனக்கு டீயும் ப்ரெட் டோஸ்ட்டும் கொண்டு வா.” நர்மதா சொல்ல, மஞ்சு அதைச் செய்துக் கொண்டு வந்து கொடுக்க அதை உண்டவள்,

“இன்னிக்கி முழுக்க வீட்டில் தான் இருப்பேன். மதியம் காய்கறி சூப் செய்து, ஜீரா சாதமும் தொட்டுக்க பன்னீர் குழம்பும் செய். கடைக்குப் போய் எனக்கு நாப்கின் வாங்கிட்டு வா மஞ்சு பிளீஸ்.” நர்மதா சொல்ல, மஞ்சு நர்மதாவின் நிலை புரிந்து அனைத்தும் செய்து கொடுத்தாள்.

இரவு அகில் வரும்போது ஹாலில் அமர்ந்து இருந்தனர் கணேசனும் ஈஸ்வரியும்.

“மஞ்சு விவரம் சொன்னா, உங்களை நாங்க எதுவும் சொல்லலையே அகில். ஏன் இந்த முடிவு? தினம் ஹோட்டல் சாப்பாடு நல்லதில்ல அகில்.” கணேசன் எடுத்துச் சொல்ல,

“இல்ல மாமா. சில சங்கடங்கள் தவிர்க்க இதான் நல்லது.”

“உங்க அம்மா பேசினது சரியில்ல தான அகில்? அதுக்கு தானே ஈஸ்வரி உங்களைக் கேள்வி கேட்டா? உங்க பக்கம் தானே தப்பு? இப்ப என்னவோ நாங்க தப்பு செய்தது போல நடந்தா எப்படி?” கணேசன் கேட்க,

“நான் தான் அதைத் தப்புன்னு ஒத்துக்கிட்டு, அந்தத் தப்புக்கு மன்னிப்பும் கேட்டேனே மாமா? இனியும் என்ன செய்யனும்? உங்க காலில் விழவா? யார் காலில் விழுந்தா இந்தப் பிரச்சனை முடியும்னு சொல்லுங்க. நான் விழத் தயாரா இருக்கேன்.” அகில் சொல்ல,

“ஏன் சின்ன விஷயத்தைப் பெருசு பண்றீங்க?” ஈஸ்வரி கேட்க,

“அத்தை எங்க அம்மாக்கு பெரிய உலகம் ஞானம் எல்லாம் கிடையாது. நர்மதா படிப்பு என்ன? வேலை என்ன? சம்பளம் என்ன? எதுவும் அவங்களுக்கு தெரியாது. எடுத்துச் சொன்னாலும் புரியாது. அவங்க பார்த்த வாழ்க்கை முறையே வேற, பொண்ணு வீட்டுக்குப் பையனை அனுப்பி விடறது எல்லாம் அவங்களுக்கு புதுசு. அதான் எதுவும் புரியாம நான் இங்க நல்லா இருக்கனான்னு புரியாம பேசிட்டாங்க. அதைக் கேட்ட நர்மதாவும் எதையும் யோசிக்காம எதிர்த்துப் பேச, அம்மாக்கு கோவம்.”

“இதில் அவ முடி வெட்டிட்டு வந்தது, லீவ் அன்னிக்கி கூட என்னைத் தனியா விட்டுப் போனதுன்னு எதுவும் பிடிக்காம, அதே கோவத்தில் தான் உங்ககிட்ட பேசினாங்க. வெள்ளிக்கிழமை காலையில நான் எடுத்துச் சொன்னப்ப நர்மதாகிட்ட மன்னிப்பு கேட்டாங்க அவங்க. கொஞ்சம் பொறுமையா பேசினா எல்லாமே சரியாகிடும். நீங்களும் கோவத்தில் வார்த்தையை விட்டீங்க தான அத்த? நானும் உங்களோட நர்மதா போலவே வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இல்லாம எதிர்த்துப் பேசி இருந்தா என்னாகி இருக்கும் யோசிங்க? நான் எதையும் பெருசு பண்ணல. யாருக்கும் எந்தச் சங்கடமும் வேண்டாம்னு பார்க்கிறேன். அவ்ளோ தான்.” அகிலேஷ் சொல்ல, கணேசன் அவனின் தோள்களைத் தட்டி கொடுத்துவிட்டு அறைக்குள் சென்றார்.

அகில் படுக்கை அறைக்குள் வர, நர்மதா சோர்வாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். குளித்தவன் மீண்டும் கிளம்பி வெளியில் போக,

“எங்க போறீங்க அகில்?”

“சாப்பிட போறேன்.”

“அப்படி என்ன நடந்தது இப்ப? வீட்டில் சாப்பிட கூடாதா?”

“எனக்கு விருப்பம் இல்ல.” அகில் சொல்ல, நர்மதா அவனையே பார்த்திருக்க, அகில் சென்று இருந்தான்.

இரவு நர்மதா ஒரு இடத்தில் படுக்காது திரும்பித் திரும்பிச் உடல் சுருக்கி படுத்து முனங்க, அகில் எழுந்து அவளைப் பார்த்தான்.

“சாரி… பீரியட்ஸ் டே ஒன். அதான் வலி…. தாங்க முடியல.” நர்மதா சொல்ல,

“ஹாட் வாட்டர் பேக் இருக்கா? அகில் கேட்க,

“இல்லையே…”

“சரி இரு வரேன்.” அகில் சொன்னவன் வெளியே கிளம்பி சென்று இருந்தான்.

மருந்துக் கடைக்குச் சென்று ஹாட் வாட்டர் பேக் வாங்கியவன், வீட்டிற்கு வந்து சூடான நீரை காய்ச்சி பையில் நிறைத்து எடுத்து வந்தான். அவளின் அருகில் அமர்ந்து,

“குப்புற படு நர்மதா.”

“முடியாது அகில் என்னால…”

“கஷ்டமா தான் இருக்கும். நான் சொல்றதை போலச் செய்.” அகில் சொல்ல, நர்மதா படுக்க முயற்சி செய்ய, அகில் அவளின் இடைபிடித்து உதவி இருந்தான்.

சரியாய் அவளின் அடி வயிற்றிக்கு கீழ் அந்தப் பையை வைத்து விட, குப்புற படுத்ததும், அடி வயிற்றில் சரியாய் பொருந்திய பையும் வலியைக் குறைக்க தொடங்கி இருந்தது. அகில் மெதுவாய் அவளின் கால் பிடித்து விட நர்மதா உறங்கத் தொடங்கி இருந்தாள்.

பாதி இரவில் அவளைத் திருப்பிப் படுக்க வைத்து இருந்தவன், அந்தப் பையை ஓரமாக வைத்து விட்டு, அவளின் தலை வருடி இருந்தான். நர்மதா அவன் மார்பில் முகம் சாய்த்து உறங்கவும் இவனும் உறங்கி போனான்.

அடுத்த நாள் அகில் காலையே குளித்துக் கிளம்பி இருக்க, தூங்கி எழுந்த நர்மதா பார்த்தது யாரும் அற்ற வீட்டைத் தான். அவளின் வேலைகளை அவளே செய்திருக்க, மஞ்சு வந்து சமையலை தொடங்கி இருந்தாள்.

அகில் நண்பனின் வீட்டில் அமர்ந்து இருந்தான். மதியம் தான் அவனின் வேலை நேரம். ஷிஃப்ட் மாறி இருக்க, அதை நர்மதாவிடம் சொல்லாமல் விட்டு இருந்தான். வேலை எதுவும் இல்லாது முகநூலை பார்த்துக் கொண்டு இருந்த அகிலுக்கு சதீஷிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்க மாமா…”

“எப்படிடா இருக்க?”

“ம்ம்… இருக்கேன்.”

“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுன்னு சொல்வாங்க. கல்யாணமாகி முப்பது நாள் கூட இன்னும் ஆகல. அதுக்குள்ள ஏன் இத்தனை சலிப்பு?”

“எதுக்குடா கல்யாணம் பண்ணேன்னு என்னை நானே திட்டிட்டு இருக்கேன் நீங்க வேற சும்மா இருங்க…”

“என் மாமியார் பண்ண ஏழரையை எல்லாம் இப்ப தான் ஆர்த்தி சொன்னா. உங்க அம்மாவை நல்லா கடிச்சு விட்டு இப்ப தான் ஃபோன் வெச்சா. அடி பலம் தான் போல…”

“அவங்களுக்கு ஏன் மாமா புரியல. எனக்கு இவளைப் பார்த்ததே அவங்க தான? இப்ப வந்து குறை சொல்லிட்டு இருந்தா சரியா? அதும் தேவை இல்லாத வார்த்தையை எல்லாம் விட்டு இங்க அத்தைக்கும் மாமாக்கும் நிறைய சங்கடம். நான் வீட்டில் சாப்பிடறதை விட்டேன்.“ அகில் சொல்ல,

“என்ன சொல்ற அகில் அவ்ளோ பிரச்சனையா?”

“பிரச்சனைன்னு சொல்ல முடியாது. ஆனா அம்மா பேசினதை என் மாமியார் நர்மதாகிட்ட சொல்லி, அவ அவங்க முன்னாடியே என்னைக் கேள்வி கேட்டு, அதுக்கு என் மாமியாரும் அம்மாவைக் குறையா பேசவும் எனக்கு வருத்தம் தாங்கல. நர்மதா இதைத் தனியா பேசி இருக்கலாம். என்னவோ எதும்
சரியில்ல மாமா. அவ வேலைக்குப் போறா வரா, நானும் வேலைக்குப் போறேன் வரேன். ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கோம். ஆனா, எனக்கு என்ன தேவை, பிடிக்கும், என் விருப்பம் என்ன எதுவும் அவ கருத்தில் இல்ல. அவளுக்கு விரும்பமான எதையும் வெளிப்படையா என்கிட்ட பேசுறதும் இல்ல. நான் மனசு விட்டுப் பேச அவ வாய்ப்பு தரதும் இல்ல. ஜான் ஏறினா முழம் சருக்குது எங்க புரிதல்.” அகில் சலிப்பாகச் சொல்ல,

“சரியாகிடும் அகில். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போ. ஒரே நாளில் புரிதல் வந்துடாது. வெளிய கூப்பிட்டு போ, நம்ம வீட்டுக்கு வரீங்களா? கொஞ்சம் ப்ரீயா இருக்கும்.” சதீஷ் யோசனை சொல்ல,

“கேட்டுப் பார்க்கிறேன் மாமா. அவ ஓகே சொன்னா, வரேன். நர்மதா பேசினது… சாரி மாமா. நிறைய சங்கடம் என்னால உங்களுக்கு…” அகில் சொல்ல,

“உண்மையா ஆர்த்தியால் தான் இதெல்லாம், அவ சும்மா இருக்காம மனசை போட்டுக் குழம்பவும் தான் அத்த, மாமா ரெண்டு பேரையும் அனுப்பி விட்டேன். அத்த சிறப்பா செய்ததில் தான் இத்தனை சங்கடமும், உங்க அக்கா பாசத்தை அளவா பொழியாம எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்டா, நாங்க தான் உனக்குச் சாரி சொல்லனும் மாப்பிள்ளை.”

“பாசத்தில் தானே அக்கா செஞ்சா, அக்காக்கு தெரியுமா பாவம் இப்படி அம்மா பேசுவாங்கன்னு? ஒரே சலிப்பா சோர்வா இருக்கு மாமா. எதாவது எக்ஸிட் இருந்தா கொஞ்சம் நேரம் வெளிய போய் மூச்சு விடனும் போல இருக்கு.” அகிலேஷ் சொல்ல, சதீஷ் நெற்றி சுருக்கி இருந்தான்.

“கல்யாண வாழ்க்கையோடு ஆரம்பம் அப்படி தான் இருக்கும் அகில். கட்டுப்பாட்டில் இல்லாத பைக் மாதிரி தான் இருக்கும். கொஞ்ச நாளில் கட்டுப்பாடு வந்துடும். இதெல்லாம் ஒரு விஷயமா கூட அப்பத் தோணாது.” சதீஷ் சொல்ல அகில் சரியென்று அழைப்பை முடித்து இருந்தான்.

சதீஷ் முகத்தில் அழைப்பு முடிந்த பின்னும் யோசனை. எக்ஸிட் வேண்டும் என்று அகில் சொன்ன வார்த்தை அவனை யோசிக்க வைத்தது. அகில் குணத்திற்கும் நர்மதாவின் குணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். அகில் போல எதிலும் தன்மையும், பக்குவமும் இல்லாத நர்மதாவின் குணம் அகிலை அழுத்துவது சதீஷிற்கு புரிந்தது. விரைவில் இருவரும் புரிதல் பெற்று விட வேண்டும் என மனதார கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டான்.

அன்று இரவு இல்லம் வந்தபோது, நர்மதா இரவு உணவை உண்டு முடித்து இருந்தாள். அகிலும் வெளியே சென்று இரவு உணவை முடித்து வர, நர்மதா படுக்கையில் படுத்திருக்க,

“எங்க அம்மா முன்னாடி பேசினது தான தப்பு? இல்ல என் அம்மா உன்னைப் பேசினது தப்பா? நம்ம எல்லாம் ஒரே குடும்பம் தான? என் அம்மா ரெண்டு வார்த்தை பேசினா என்ன இப்போ? வயசுல பெரியவங்க ரெண்டு வார்த்தை பேசக் கூடாதா? அவங்க உன்னைத் திட்ட உரிமை இல்லையா? இதுக்கு போய் வீட்டுல சாப்பிட மாட்டேன் ஏன் சொல்ற?” நர்மதா கோவமாகக் கேட்க,

“எங்க அம்மாவும் உன்னைவிட வயசுல மூத்தவங்க தான், அவங்களும் நம்ம குடும்பம் தான், அவங்க உன்னைப் பேசினா மட்டும் தப்பா? நீ திருப்பித் திட்டி விட்ட தான? அவங்க புரியாம பேசறாங்கன்னு எத்தனை முறை சொன்னேன் யார் கேட்டா? நான் எடுத்துச் சொல்லி உன்கிட்ட அவங்க மன்னிப்பு கூடக் கேட்டாங்க. அத வசதியா மறந்துட்ட இல்ல? கொஞ்சம் நேரம் கொடுத்து இருந்தா, நானே அவங்களுக்கு புரிய வைச்சு இருப்பேன். அதுக்குள்ள பேசி என்னை ஹார்ட் பண்ணது உன் அம்மாவும் நீயும் தான். உங்களுக்கு நடந்த சங்கடத்துக்கு நான் மன்னிப்பும் கேட்டேன்.”

“வெள்ளிக்கிழமை ராத்திரி ஒரு சப்பாத்தி, சனிக்கிழமை காலையில ரெண்டு வாய் பொங்கல், அவ்ளோ தான் என் சாப்பாடு. நான் சாப்பிட்டேன்னா இல்லையான்னு கூட நீ கேட்கல, மன்னிப்பு கேட்டு வீட்டை விட்டுப் போன நான் ராத்திரி முழுக்க வரல. ஏன்னு கேட்டு ஒரு ஃபோன், மெசேஜ் கூட உன்கிட்ட இருந்து வரல. நான் வீட்டில் சாப்பிட்டு மூணு நாள் ஆகுது. இன்னிக்கி மட்டும் என்ன? ஓ… குற்ற உணர்வா…?”

“என்னால யார் கஷ்டப்பட்டாலும் பார்க்க முடியாது. அதும் என் பொண்டாட்டி நீ வலியில் இருக்கும்போது சும்மா இருக்க முடியுமா? அதுக்காக எல்லாம் உனக்குக் குற்ற உணர்வு வர வேண்டாம். நான் என்னைப் பார்த்துப்பேன். என்னோட இருப்பும் இல்லாமையும் உன்னைப் பாதிக்கவே இல்ல. என் வலியையும் சங்கடத்தையும் நீ உணரவே இல்ல. நீ நீயா இருக்கும்போது, நானும் நானா தான இருக்கனும்? அதான் எனக்கு நல்லதும்.” அகிலேஷ் அவளின் கண் பார்த்துச் சொல்ல, நர்மதா முகத்தில் சலனமே இல்லை.

© GMKNOVELS