...

11 views

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் 2
#வந்தவரெல்லாம்_தங்கிவிட்டால்
#இரண்டாம்_காட்சி

அந்த ஊருக்குள் ராமசாமி பலருக்கு நெருக்கமானவன், அவன் தெருக்கூத்தில் நடிப்பதை தாண்டி கைத் தறி நெய்யும் தொழில் செய்பவன். வீட்டிலேயே ஒரு கைத்தறி வைத்து கொண்டு ஆறுமாதம் ஒரு புடவை நெய்ந்து விற்று மீதி நேரம் தெருக்கூத்து நண்பர்கள் என வாழ்ந்துவந்தான். அவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை அதன் காரணமாக அவன் அம்மா அவன் மனைவியை திட்டி தீர்ப்பார். இதை தவிர்க்க அவன் பக்கத்து தெருவில் ஒரு தனி வீட்டில் குடியேறி ஒரு வருடம் ஆகிறது. அவன் தறி நெய்ய அந்த வீட்டிற்கும் உண்ண உறங்க இந்த வீட்டிற்கும் என இருந்தான். ஆனால் அவன் எதை பற்றியும் வருந்தி யாரும் பார்த்ததேயில்லை. அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலவென்று இருக்கும்.
ஜான் ஊருக்கு தள்ளி இருக்கும் காலனி யில் வசிப்பவன். அவனோடு நெருங்கி பழகும் பலர் இருந்தும் அவனை தங்கள் வீட்டுக்கு அழைத்து போகும் ஒரே ஆள் ராமசாமி மட்டுமே. ராமசாமி ஜானுடன் சேர்ந்து கபடி விளையாடியதால் நண்பர்கள் ஆனவர்கள். ஜான் ஒரு வருடமாக பக்கத்து ஊரில் ரேஷன் கடையில் குடவுன் கணக்கு பார்க்கும் அரசு அதிகாரி யாக இருக்கிறான். அவனுக்கு பெண் பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்துல் ஊரில் உள்ள முஸ்லிம் தெருவில் வசிக்கிறான். அவன் கறி வியாபாரம் செய்கிறவன். ராமசாமி சிறு வயது முதலே அவனோடு படித்தவன் எப்போதும் அவன் கடையில் தான் இருப்பான் மதிய நேரங்களில். பெரும்பாலும் ஜானும் இருப்பான். அப்துலுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு. இவர்கள் மூவரும் பல வருடங்களாக நண்பர்கள். நந்தன், அந்த ஊரின் விநாயகர் கோவில் அர்ச்சகர் மகன். அந்த ஊரில் வாழும் நான்கு பிராமண குடும்பத்தில் அவனது குடும்பமும் ஒன்று.
நந்தன் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அவள் ராமசாமி யின் பக்கத்து வீட்டு பெண். அவள் முதலியார் சாதியை சேர்ந்தவள். அவளை பார்க்க அடிக்கடி நந்தன் அந்த தெருவிற்கு வருவதுண்டு. இதை பார்த்து ராமசாமி சந்தேகம் அடைந்தான் "என்னடா அயர் பையன் நம்ம தெருவுல அடிக்கடி சுத்ரான் சம்மந்தமேயில்லாமா" என்று ஜானிடம் கேட்டான் ஒரு நாள். ஜான் கூறினான் "எல்லாம் உன் பக்கத்து வீட்டு ராணி ய பாக்கதான்" என்று. ராமசாமி "ஓஹா அப்டி போகுதா கத" என்று சொல்லி கொண்டே நந்தனை மடக்கி பிடித்து "என்ன அயிரே இந்த பக்கம் அடிக்கடி பாக்குறன்" என்று கேட்க "ஒன்னுமில்ல சும்மா தான்..அப்டே வந்தன்.."என்று மழுப்பியபடி அங்கிருந்து சென்று விட்டான். பிறகு ராணி வேறொரு ராஜாவின் மனைவியாக நந்தன் தற்கொலை செய்ய குளத்தில் குதித்து விட்டான். அந்த வழியே வந்த ராமசாமி அவனை காப்பாற்றினான். அங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். ராமசாமி நந்தனை பளாரென ஒரு அறை அறைந்து விட்டான். நந்தன் அழுதுகொண்டே அதிர்ச்சி கொண்டான். பிறகு ராமசாமி "டேய் தற்கொலை எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா. அத இப்டி கேவலமான செயலா மாத்திட்டீங்களே டா. தன்னோட உயிர கொடுத்து பத்து பேர வாழ வெக்கிற அளவுக்கு பலமிருக்க தற்கொலைய ஒரு பொண்ணு கிடைக்கலனு அதுவும் அவகூட பேச கூட தைரியம் இல்லாத நீ இத பன்றீயே அசிங்கமா இல்ல" என்று கூறினான். நந்தன் ராமசாமி தந்த விளக்கத்தை கேட்டு ஆச்சரியமடைந்து அசிங்கமும் அடைந்தான். இப்படி ஆரம்பித்த அவர்கள் நட்பு பிறகு வளர்ந்து ஜான் மற்றும் அப்துலோடு இணைந்தது. அந்த தற்கொலை முயற்சி நந்தன் ராமசாமி தவிர யாருக்கும் தெரியாது.
நந்தன் ராமசாமி தற்கொலை செய்து கொண்டான் என்பதை நம்பாதவனாய் ராமசாமி உடலின் முன் உறைந்து போய் நின்று கொண்டிருந்தான்.

தொடரும்....