...

41 views

எனக்கென உன்னைத் தந்து - 2
அத்தியாயம் - 2

நம் கதையின் நாயகன் அகிலேஷ்வரன். பெங்களூரில் ஐடி துறையில் வேலை, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம். அகிலேஷ் வீட்டின் கடைக்குட்டி. அவனின் அப்பா அருணகிரி, அம்மா அனிதா. அகிலேஷின் முன்னே பிறந்தவர்கள் இருவர் உண்டு. மூத்தவள் ஆர்த்தியும், இளையவன் அருண் குமாரும்.

ஆர்த்தியின் கணவன் தான் சதீஷ். தப்பாக இந்த குடும்பத்தில் ஆர்த்தி, அகிலேஷ் போலவே சிக்கிக் கொண்டவன். மாமனார் செய்யும் செயல்களை கண்டிக்க முடிந்த ஒருவன். அவனின் வார்த்தைகளுக்கு மட்டுமே அவரும் சரியென கூறுவார். அருணை விட அகிலேஷ் தான் நெருக்கம். மாமனின் செல்ல மாப்பிள்ளை நம் நாயகன். சதீஷ் - ஆர்த்தி இருவரின் அன்புக்கு சாட்சியாக யுவஶ்ரீ என ஒரு பெண்ணும், ஜீவா என்ற ஆணும் உண்டு.

அருண் குமார் தான் இரண்டாம் மகன் குடும்பத்திலேயே பெரிய சுயநலவாதி. அவனுக்கு எப்போதும் அவனை பற்றியே எண்ணம். அவனுக்கு சரி நிகராக சரண்யா. அவளுக்கும் அதே சுயநலம் இருக்க, இருவரும் சேர்ந்து அவர்களின் நலன் பற்றி மட்டுமே கருத்தில் நிறைத்து குடும்பத்தை விட்டு ஒதுங்கியே இருந்தனர். இதற்கும் அருணுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தது அருணகிரி தான். ஆனாலும் அவரையும் தள்ளி தான் வைத்து இருந்தான் மகன். அனிதாவை மட்டுமே கொஞ்சம் அவர்களின் கூட்டின் உள்ளே தேவைக்கு ஏற்ப அனுமதிப்பதால் அவருக்கு மூத்த மகனிடம் விரோதம் இல்லை.

அருணகிரி மனிதர்களை விட பணத்தை பெரிதாக நினைக்கும் மனிதர். அவருக்கு பணம் தான் எல்லாமே, பணம் உள்ளவனிடம் தான் அவரின் நட்பும் சிரிப்பும். சதீஷ் வேலை பார்ப்பது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தில் பொறியாளனாக அதுவே அவனுக்கு பெரும் தகுதியாக, அருணகிரி மாப்பிள்ளை வீட்டுக்கு எந்த மறுப்பும் சொல்லாது. 50 சவரன் நகை செய்து, பெண்ணுக்கு கொச்சியில் வேலையும் ஏற்பாடு செய்து இருந்தார். ஆர்த்தி அங்கேயே இப்போது சொந்தமாக வீடும் கட்டி இருக்க, அவர்களின் நிரந்தர இடமாக கொச்சி மாறி இருந்தது.

அருண்குமார், சரண்யா, அகிலேஷ், நர்மதா என அனைவரும் வேலை பார்ப்பது ஐடி துறையில், அருண் அவன் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசிப்பது ஐதராபாத்தில், சொந்த வீட்டை கோவையில் கட்டிக் கொண்டவன் அதை வாடகைக்கு விட்டு சம்பாதித்து கொண்டும் இருக்கிறான். ஐதராபாத்தில் வாடகைக்கு ஃபிளாட் ஒன்று எடுத்து தங்கி இருக்கிறான். அவன் வந்து போகும் போது எல்லாம் வசிப்பது அவர்களின் பூர்வீக வீட்டின் அருகில் அகிலேஷ் அவனுக்கு என்று சொந்தமாக கட்டி இருக்கும் வீட்டில் தான். இப்போது அவனுக்கு திருமணம் என்றதும் அருண் அவனின் இருப்பை அவர்களின் பூர்வீக வீட்டுக்கு மாற்றி இருந்தான்.

சரண்யாவை பெண் பார்க்க சென்ற போது அருணகிரிக்கும் அவளை பிடித்து தான் இருந்தது. அவளுக்கு 60 சவரன் நகை போட்டு திருமண செலவில் பாதியை சரண்யா வீட்டில் செய்து விட, மனம் நிறைந்து தான் போனார் மனிதரும். ஆனால், சரண்யா திருமணத்திற்கு பின் மாமனார் மாமியார் இருவருக்கும் அருண் கொடுத்து கொண்டு இருந்த பணத்தை குறைத்தது மட்டும் அல்லாது, அவனின் சொத்தையும் பிரித்து வாங்கி இருந்தாள். மாதம் பத்தாயிரம் மட்டுமே அவர்களால் செய்ய முடியும் என்று கறாராக பேசியும் இருந்தாள். அதனால் மூத்த மருமகள் என்றாலும் அவளின் மீது மாமனார் அவருக்கு பாசம் என்று எதுவும் இல்லை. மகனின் மனைவி என்பதோடு அவரின் அன்பு குறுகிப்போய் இருந்தது.

சரண்யாவும் ஒரு நாளும் இது தன் வீடு என்பது போல நடந்துக் கொண்டதே இல்லை. திருமணம் முடிந்து அவனின் மகனுக்கு பால் காய்ச்ச மட்டுமே புகுந்த வீட்டின் அடுப்படிக்குள் நுழைந்தவள். அப்போதும் அவளுக்கு என்று காஃபி, டீ அனைத்தும் அனிதா தான் போட்டுக் கொடுத்தார். எந்த வேலையிலும் கலந்துக் கொள்ள மாட்டாள். எதை கேட்டாலும் அலுவலக வேலை இருக்கிறது என மடிக்கணினி முன் அமர்ந்து கொள்ளும் ஜந்து. விழா விஷேசம் என்றாலும் விருந்தாளி போல தான் வந்து போவாள். மகன்கள் இருவரையும் மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு, அவளின் வேலைகளை மட்டுமே பார்க்க கூடியவள். தேவைக்கு மட்டுமே பேச்சு என்றாலும் யாருடனும் சண்டை போடும் ரகம் கிடையாது. அனைவரிடமும் இன்முகமாக பேசி வேலையை வாங்கி விடுவதில் வல்லவள்.

அகிலேஷ் அவன் உண்டு அவனின் வேலை உண்டு என்று இருக்கும் வீட்டின் சமத்து கடைக்குட்டி. அவனுக்கு என்று எதையும் சேர்க்க தெரியாதவன். பெங்களூரில் வேலை கிடைத்த நாள் முதல் அவன் செலவுக்கு போக மீதம் அத்தனையும் குடும்பத்துக்கு தான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நகை, ஆடை என்று வாங்கி போட்டவன். பூர்வீக வீட்டை அப்பா இடித்து கட்டவும் உதவி இருந்தான். ஆர்த்திக்கும் செல்ல தம்பி என்றால், அவளின் பிள்ளைகளுக்கும் செல்ல மாமன் இவன். சதீஷ் வேலையில் சிக்கிக் கொள்ளும் நாட்களில் அவனுக்கும் ஆர்த்திக்கும் உதவிக்கரம் கொடுப்பவன். அருண் உடன் பேசினாலும் சரண்யாவின் குணத்தால் அவளோடு பெரிய ஒட்டுதல் இல்லாதவன். சரண்யா கேட்கும் கேள்விக்கு பதில் என்று, அமைதியாய் அவளை கடந்து செல்வதால் அண்ணி - கொழுந்தன் இருவரின் இடையில் சுமூகமான உறவு தான். அண்ணன் மகன்கள் இருவருக்கும் செல்லச் சித்தப்பா என்றாலும் சரண்யா அவர்களை அவனோடு அதிகம் நெருங்க விடுவது இல்லை. வேலை, வீடு, அம்மா, அப்பா, அக்காவின் குடும்பம் என அவனின் உலகம் சிறியது.

அகிலேஷின் திருமண பேச்சு எழுந்த போதே அப்பாவின் விருப்பம் என மகன் ஒதுங்கி நிற்க, அவனுக்கு அருணகிரி பார்த்த பெண் தான் நர்மதா. அவன் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில், அதே ஊரில், தந்தையின் விருப்பம் போலவே அனைத்தும் அமைய, ஜாதகத்தில் இருந்த குறைகளை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பெண் பார்த்து உறுதியும் செய்து இருந்தனர்.

திருமணம் எந்த தேதியில், எந்த இடத்தில் என்பது தொடங்கி அகிலேஷ் என்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்பது வரை நர்மதா தான் முடிவு செய்து இருந்தாள். ஒரே பெண்ணின் விருப்பம் என்று நர்மதாவின் பெற்றோர் ஒதுங்கி விட, அவள் கொடுத்த பணம் அருணகிரியை தலை அசைக்க செய்து இருந்தது.

அகிலேஷ் அவனின் சிறு விருப்பமாக கேட்ட, பாட்டுக்கு பாட்டு விளையாட்டை நர்மதா மறுக்க, அப்போதே சிறு சங்கடம் அவனுக்கு உண்டாகி இருந்தது. ஒரே துறையில் ஒரே நிறுவனத்தில் வேலை என்றாலும் வேலை பார்க்கும் இடம் வேறாக இருக்க, திருமணத்தின் பின் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்பதால் முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அகிலேஷ் முதல் முறையாக அவளிடம் பேச, அவளோ அவளின் வீட்டிற்கு அவனை இடம் மாற சொல்லி இருந்தாள். அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்று கூற, நேராய் அருணகிரிக்கு அழைத்து இவள் விஷயம் இதுவென்று கூற, அவரோ அவனை நர்மதா வீட்டிற்கு செல்ல சொன்னார். அகிலேஷ் முதல் முறையாக அவரோடு பேச்சு வார்த்தை நடத்தி இருந்தான்.

“என்ன அகிலா நீ? அந்த பொண்ணு வீட்டில் இருந்தா இப்ப என்ன? உங்களை பார்த்துக்க அவங்க அம்மா, அப்பா இருப்பாங்க. நீங்களும் வயசான அவங்களை பார்த்துக்க முடியும். வேலைக்கு போற உங்களால் வீட்டை பார்த்துக்க முடியுமா? அதும் இல்லாம சொந்த வீடே இருக்கும் போது, தனிக்குடித்தனம் எதுக்கு? வீண் செலவு வேற?”

“அதெல்லாம் சரித்தான்பா. மாமனார் வீட்டில் இருந்தா எனக்கு மதிப்பு இருக்குமா? வெளிய எல்லாரும் ஒருமாதிரி கிண்டலா பேச மாட்டாங்களா? அதும் இல்லாம அவங்களுக்கு அது பழகின இடம் எனக்கு புதுசா இருக்கும். அதை நினைச்சா சங்கடமா இருக்கு.” அகிலேஷ் சொல்ல,

“வீடு உன் பொண்டாட்டி பெயரில் இருக்கு. உனக்கு என்ன கூச்சம்? பேசுறவன் ஆயிரம் பேசிட்டே தான் இருப்பான். அதை எல்லாம் தலையில் போட்டுட்டு இருக்காத… என்ன சங்கடம் உனக்கு நாளைக்கு நர்மதா கோவைக்கு வந்தா நம்ம வீட்டில் தானே தங்கும்? அதுக்கு சங்கடமா இருக்குன்னு சொன்னா நீ என்ன செய்வ சொல்லு? பொண்ணு தான் அனுசரிக்கனுமா? ஏன் ஆம்பள நீ அனுசரிச்சு போக கூடாதா?” அருணகிரி கேட்க, அகிலேஷ் சரியென்று கூறி இருந்தான்.

அப்போது இருந்தே அகிலேஷ் புரிந்து கொண்டது ஒன்றை தான். நர்மதா அவளின் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவள் என்பதும், அவளின் விருப்பம் போல தான் அடுத்தவரும் அவளை அணுக வேண்டும் என்பதும். தன்னை அவளுக்கு உணர்த்தி விட்டால், அவளின் விருப்பமான எனக்காக அவளை மாற்றி கொள்வாள் என்று நம்பி இருந்தான்.

ஆனால் திருமணமான அடுத்த நிமிடத்தில் இருந்தே அவளின் ஆக்கிரமிப்பு அவனின் மேல் அதிகமாகி இருந்தது. அவளின் கண் அசைவுக்கு எதையும் செய்யும் ஏவலனாக மாற்ற தொடங்கி இருந்தாள். இதை எல்லாம் உணராத அகிலேஷ் அவளோடு அவளின் இல்லம் சென்று அவளை விட்டு பிடித்து மெல்ல அனைத்தையும் சரி செய்துவிட வேண்டும் என்று இருக்கிறான். ஆனால் அவனின் எண்ணத்திற்கு எல்லாம் அப்பாற்பட்ட பெண் நர்மதா என அவன் அறிந்திருக்கவில்லை.

இந்த கதையின் முக்கியமான கதாபாத்திரமாக அனிதா. சிலர் பேசினால் நன்மை, சிலர் பேசாது இருப்பதே நன்மை. ஆனால் அனிதா இதில் புது ரகம் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம் பேசாது, பேச வேண்டிய தேவையே இல்லாத நேரத்தில் பேசி வைத்து பிரச்சனையை வளர விடும் அதிமேதாவி. மருமகனிடம் வரவேற்பை தவிர அவருக்கு வாதங்கள் இல்லை. மூத்த மருமகளிடம் அவள் சொன்ன வேலையை செய்வதோடு சரி வேறு எதை பற்றியும் விவாதங்கள் இல்லை. நர்மதாவிடம் வாதமோ விவாதமோ நடத்த அவள் வாய்ப்பை கொடுக்கவே இல்லை. கண் பார்வையில் மாமியார் அவரையே எட்ட நிறுத்தி இருந்தாள்.

அனிதாவிற்கு ஆறுதல் என்றால் அகிலேஷ் மட்டும் தான். ஆர்த்திக்கு அன்னை மீது அன்பு உண்டு என்றாலும், எதிலும் பொறுப்பற்ற தன்மையை பார்த்து எழுந்த எரிச்சலில் சட்டென அனிதாவிடம் காரமாக பேசி விடுவாள். அதனால் அகிலேஷ் உடன் தான் அந்த அன்னைக்கு ஆறுதலும், நட்பும்.

இவர்களுடன் இவர்களையும் அறிமுக செய்து விடுகிறேன். ஆர்த்தி - சதீஷ் இருவரின் மகள் யுவா என்னும் யுவஶ்ரீ மாமனின் செல்லப்பிள்ளை, அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது ஜீவா. நான்காம் வகுப்பு படிக்கிறான். இருவரும் வீட்டில் எதிரும் புதிருமாக இருந்தாலும் வெளியே ஆர்த்திக்கு தொல்லை தராதவர்கள். அகிலேஷ் என்றால் இருவருக்கும் கொள்ளை பிரியம்.

அருண் - சரண்யா இருவரின் மகன்கள் மூத்தவன் அஸ்வின் மற்றும் இளையவன் அஸ்வந்த். மூத்தவன் இரண்டாம் வகுப்பு படித்தாலும், பிடிவாதத்தில் பிஎச்டி முடித்து இருந்தான். இரண்டாம் மகன் எல்.கே.ஜி படிக்கிறான். ஆனால், எதற்கு எடுத்தாலும் குறை சொல்வதில் டாக்டரேட் முடித்து இருந்தான். அம்மாவை போலவே அப்பாவின் சொந்தங்கள் என்றால் அலர்ஜி. அம்மாவின் சொந்தம் என்றால் மகிழ்ச்சி.

இத்தனை வேடிக்கை மனிதர்களுக்கு இடையில் தான் நடைபெற போகிறது நம் கதை.
© GMKNOVELS