...

3 views

நம்பிக்கையே மனிதனின் பலம்
மனிதனின் பலம் நம்பிக்கைதான்!...


மனிதனாக பிறப்பதற்கு அரிய மாதவம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.

பூர்வ ஜன்மத்தில் புரிந்த நல்ல கர்மவினையால் நாம் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்கின்றன.

இந்த மனிதப்பிறவியை அபூர்வமான பிறவியென்று சொல்லலாம்.

எத்தனையோ பிறவிகள் நாம் எடுத்திருப்போம், அதிலும் மனிதப்பிறவி நமக்கு கிடைத்தது ஒரு பொக்கிஷமாகும்.

இந்த பிறவியில் அறிவாற்றல், மனோசக்தி, திறமை மூன்றும் இணைந்து மனிதனை செயல்படுத்துகிறது.

இவைகளே மனிதனுக்குள்ளிருக்கும் சக்தி என்று சொல்லலாம்.

இந்த சக்தியானது மனிதனுக்கு அவனைப்பற்றி தெரிந்து கொள்ளச் செய்கிறது.

அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. மனிதனுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

தன்னம்பிக்கையுள்ள மனிதன் சாதனையைப் படைக்கிறான், மாபெரும் வரலாற்றை உருவாக்குகிறான்.

மனிதனுடைய சக்தியே மனித குலத்தை வளர்க்கிறது. இந்த சக்தி அழகிய நம்பிக்கையான சமுதாயத்தைப் படைக்கிறது.

நம்பிக்கையானது மனிதனை சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கும்படி செயல்படுத்துகிறது.

ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயங்க வைக்கிறது. இந்த சக்தியைக் கடவுள் என்றும் சொல்லலாம், மனிதனின் நம்பிக்கை என்றும் சொல்லலாம்.

இதிலிருந்து நம்பிக்கை தான் கடவுள், கடவுள் தான் நம்பிக்கை என்ற அடிப்படை பதிலையும் நாம் பெறுகிறோம்.

இந்த சக்தி உலகத்தை ஒரு கட்டுபாட்டுக்குள் இயங்க வைக்கிறது. இதனை மீறி இயங்கினால் உலகம் தன்னுடைய அழிவையும் காண நேரிடுகிறது.

இயற்கை மற்றும் அனைத்து ஜீவன்களும் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டால் உன்னதமான உலகத்தை படைக்கலாம்.

இந்த ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு பக்கபலமாக அமைகிறது. அவனுடைய நம்பிக்கைத் துளிகள் மாபெரும் சாகரத்தை உருவாக்குகிறது.

அதுவே அன்பு, பாசம், பண்பு, நேர்மை, பண்பாடு, அறிவு, ஆற்றல், திறமை ஆகிய இயல்புகளை மனிதனுக்குத் தருகிறது.

மனிதன் மட்டும் தான் ஆறு அறிவோடு பிறக்கிறான். இந்த ஆறாவது அறிவானது மனிதனுக்கு சமீபத்தில் நிகழப் போகும் சம்பவத்தை முன்கூட்டியே உணர வைக்கிறது.

இதனை ஐவேரவைடின் என்று சொல்வார்கள். இந்த அறிவாற்றலானது மனிதனை அபூர்வமான செயலைச் செயல்படுத்தச் செய்கிறது.

நடக்கப் போகும் அசம்பாவிதத்திலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது.

அவன் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளாமல் மனித குலத்தையும் காப்பாற்றுகிறான்.

அவனுடைய அன்பும் பாசமும் சமுதாயத்தை வாழ வைக்கிறது. மற்றவர்களை மதிக்கத் தொடங்குகிறான்.

மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறான்.

இந்த நம்பிக்கையானது அவனுக்கு புதிய தெம்பை கொடுக்கிறது.

மனித நேயத்தை வளர்க்கிறது, வழி வழியாக வரும் சந்ததிகளை வாழ வைக்கிறது.

இந்த நம்பிக்கை மனிதனுக்கு தைரியத்தையும் துணிச்சலையும் கொடுக்கிறது.

எந்தவிதப் பிரச்சனையையும் மனிதன் தைரியத்தோடு எதிர்கொள்கிறான். அதற்கு தீர்வு காண்கிறான்.

பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து விடாமல் துணிச்சலோடு போராடுகிறான். போராட்டமுடைய வாழ்க்கை மனிதனுக்கு மனோதைரியத்தையும், விவேகத்தையும் கொடுக்கிறது.

இந்த விவேகம் மனிதனுடைய கோபத்தை குறைக்கிறது, ஆத்திரத்தை அழிக்கிறது.

மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப் படுத்துகிறது. அவனை சிந்திக்க வைக்கிறது, தெளிவு பிறக்கிறது. இதனால் மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது.

அவனுடைய தன்னம்பிக்கையே மற்றவர்கள் மீது நம்பிக்கையை வைக்கக் கற்றுக் கொடுக்கிறது. இந்த நம்பிக்கை உறவுகளை பலப்படுத்துகிறது.

சுற்றம் சூழத்தாரோடு சேர்ந்து வாழும் மனிதன் சந்தோஷமாக இருக்கிறான். இந்த நம்பிக்கையானது மாபெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இந்த உண்மையை அறிந்த மனிதனை ஞானி என்று சொல்லலாம்.

ஞானம் பெற்ற மனிதன் முழு மனிதனாவான். அவன் மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுகிறான்.

மற்றவர்களின் மனதிலிருக்கும் அழுக்கை அகற்றி, உண்மையான சாரத்தை அறிய வைக்கிறான்.

ஞானி என்பவன் எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டும், சமூகம் வளர வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையை உணர்த்துகிறான்.

நாடு வளம் பெற வேண்டும், வளமான நாடு நல்லதொரு சமுதாயத்தை படைக்கிறது.

நல்ல சமூகம் நற்குணத்துடைய மனிதனை உருவாக்குகிறது. நல்ல எண்ணமுடைய மனிதன் நம்பிக்கையோடு வாழ்கிறான்.

இந்த நம்பிக்கையே அவனுக்கு ஒளி மயமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் பெரிதும் உதவுகிறது.

மனிதனின் பலம் நம்பிக்கையில் தான் என்பதை நாம் முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி வாழ வேண்டும்.
© 💞கருவாச்சியின் காதலன்💞