...

7 views

நெடிய கழியும் இரா 2
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை உணர்வு மனம் (Conscious Mind), உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind), தொலை நோக்கு மனம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்தார்.

மேலும் உந்தப்படும் இயல்பு (Id), முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego) ஆகிய
மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

சூப்பர் ஈகோ - ஒரு மனிதனுக்கு எல்லா குழப்பங்களையும் நிதானமின்மையையும் கோபங்களையும் பயங்களையும் விதைத்துக் கொண்டே இருக்கிறது. சமூகம் வழங்கியத சூப்பர் ஈகோ தான் மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது

ஈகோ - அவருடைய தன் முனைப்பாகவும்

இட் -  வழங்கப்படுகிற கருப்பொருள் அவருடைய உந்துதலாகவும் ஆசையாகவும் இருப்பதாக சிக்மன் பிராய்ட் வரையறுத்து வைத்திருக்கிறார்.
- நன்றி விக்கிப்பீடியா

இனி கதை...

உள்ளம் கவ்விய சோகத்தை அவனது முகம் அப்படியே தத்தெடுத்திருக்க மருந்துக்கும் கூட கண்ணீர் துளிகள் பிறந்ததற்கான தடங்கள் மட்டும் அவரது கன்னங்களில் இல்லை.

தலையை கைகளால் தாங்கியபடி குனிந்தபடி உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த கௌதமனை தோளில் கை வைத்து நிமிர்ந்து பார்க்க வைத்தார் அவனது சித்தப்பா சக்திவேல்.

"ஊருக்கு போற கிளைபாதைகிட்டே வந்துட்டோம். இன்னும் இருபது நிமிஷத்துல ஊர் எல்லைக்கு போயிருவோம்."  என்று நினைவு படுத்தினார்.

அவனிடமிருந்து பதில் ஏதும் வராது இருக்கவே, "அப்புறம் இது ஏற்கனவே முக்கால்வாசி ‌எரிஞ்சிப்போன சவம். இருட்டிடுச்சு. அதனால்..." என்றவர் சிறிது இடைவேளை விட்டு "சவத்தை
வீட்டுக்கு கொண்டு போக கூடாதுப்பா. நேரடியா சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போய் விடலாம்." என்றார்

ஆமென்றோ வேண்டாமென்றோ எந்த பதிலையும் கூறாது அப்போதும் அமைதியாகவே இருந்தான் கௌதமன்.

அவனின் மௌனத்தை புரிந்து கொண்டவர், "பாடையெல்லாம் கட்டி ரெடியா வச்சி இருக்காங்கன்னு  இப்பதான் அண்ணன் போன் பண்ணாரு. ஊருக்கு வெளியே  ஆலமரம் இருக்கு இல்லே. அங்கேயே இறங்கிக்கலாம்" என்று விஷயத்தை
மெதுவாக தெரிவித்தார்.

அதுவரை மௌனத்தை கடைபிடித்த கௌதம்  இப்போது வாய் திறந்தான்
"பசங்க?"

"அது... குழந்தைங்க... வேண்டாம்... பயந்துடுவாங்க. பார்க்க வேண்டியவ மத்தவங்களை ஆலமரத்தாண்ட வர சொல்லியிருக்கேன்.  முக்கியமா அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் ஒரு முறை பாத்துட்டாங்கன்னா சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு போய்விடலாம்" என்றார் சக்திவேல்.

ஆழமூச்செடுத்த கௌதமன்
"கடைசியா ஒரு தடவை கூட அம்மாவ பார்க்கவில்லையே... நீ எவ்வளவு பெரிய அரக்கன்னு பிள்ளைங்க கேட்டா..."

"இல்லடா.."

"ஆமாம் சித்தப்பா.. நாளையிலிருந்து யார் விரும்பினாலும் அவளை பார்க்க முடியாது. அதனால... தம்பிகிட்டே சொல்லி குழந்தைங்கள கூட்டிட்டு வர சொல்லுங்க.."

"கௌதமு நான் சொல்றத கொஞ்சம் கேளுப்பா..."

"சித்தப்பா ஏற்கனவே புத்திகெட்டு ஒரு தடவை உங்க பேச்சை கேட்காமல்  போயிட்டேன். அதுக்காக.... என்று பேச்சை நிறுத்தி
ஆனால் என் பசங்க முன்னாடி நான் கொலைக்காரனா நிற்க எனக்கு விருப்பம் இல்லை."

"என்னப்பா என்னென்னவோ பேசற?"

"நான் பேசலே சித்தப்பா. இந்நேரம் ஊருல இருக்கவங்க பாதிபேரு இப்படித்தான் பேசிட்டு இருப்பாங்க.
ஊரு உலகத்தை யெல்லாம் எதிர்த்து கல்யாணம் பண்ணவணுக்கு பொண்டாட்டியை வச்சு வாழ வக்கில்லேன்னு."

"இப்படியெல்லாம் பேசாதடா... உன்னை மாதிரி நல்லவன் ஊருலேயே இல்லடா.."

"அது உங்களுக்கு... ஆனா ஊருக்கு?"

"பிறந்ததிலிருந்து இத்தனை வருஷமா உன்னை பார்க்கறாங்க. யாரும் உன்னை தப்பா சொல்லமாட்டாங்கடா...
அப்படியே சில முட்டாள் பயலுங்க மீறிச் சொன்னாலும் அதை ஏன் காது கொடுத்து கேட்கணும்"

"பிடிக்கலன்னாலும் கேட்டுத்தானே ஆகணும்.....
அவங்க சொல்றதுல குத்தமில்லே.
எல்லாம் அவளால...
அவ ஒருத்தியால தான்.
செத்தும் என்னை நான் நிம்மதியா  இருக்கக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு போயிட்டா...
உங்க பேச்சை எல்லாம் மீறி அவள கல்யாணம் செஞ்சுக்கிட்டேனே அதுதான் வாழ்க்கையில் நான் செஞ்ச பெரிய தப்பு சித்தப்பா.
நீங்க எல்லாம் என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டீங்க. ஆனாலும் அவ பின்னாடி போனதுக்கு தண்டனையாதான்‌ இப்ப என்னை ஊரெல்லாம் கேலி பேசற மாதிரி அவ வச்சு செய்திட்டா சித்தப்பா" என்றபடி அமரர் ஊர்தியின் சுவரில் தலையை வேகமாக முட்டியவனுக்கு வலிக்க வில்லையோ?

சரிதான் உயிருக்குயிராக உடன் வாழ்ந்தவளின் பிரிவுக்கு முன் இந்த வலியெல்லாம் சித்தெறும்பு கடி போல்தானே.

கண்களை மூடி அவனுக்குள்ளே மீண்டும் மருக ஆரம்பித்து விட்டிருந்தான் கௌதமன்.

அவனைத் தேற்ற வேண்டுமென என்னவோ பேச ஆரம்பித்து பேச்சின் தடம் பாதை மாறி போனதால் கௌதமன்‌  மனம் மேலும் வருந்துவதை அந்த பெரிய மனிதரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

என்னதான் பிரச்சினை இருந்தாலும் இந்த பொண்ணு அகல்யா... இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டாம். ஆத்திரக்காரங்களுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க.
ஏன்தான் இப்படி பண்ணுச்சோ? என்ன சண்டை வந்தாலும்
பகல்ல வந்த சண்டைக்கு ராத்திரி படுக்கையில் தீர்வு கிடைக்கிறது ஊர் உலகத்தில நடக்கிறது தானே?

புருஷனே நினைக்கலனாலும் புள்ளைங்கள நினைச்சு பார்த்திருக்கணும்.

இவனே இப்படி உடைஞ்சு போயிருக்கானே...
பிள்ளைங்க எல்லாம் என்னவாகப் போகுதோ? கன்னியம்மா தாயே நீதான் இந்த குழந்தைகளை காப்பாற்றணும் என்று அவர்களுக்காக வேண்டுதல் மட்டுமே வைக்க முடிந்தது அவரால்.

அமரர் ஊர்தியில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவா "அதோ ஒரு ஆலமரம் இருக்கே. அங்கேயே வண்டிய நிறுத்திடுங்கண்ணா."  என்றான் வாகன ஓட்டுநரிடம்.

"ஏன் தம்பி..ஊருக்குள்ள கொண்டு போகலையா?" என்று அவர் கேட்க...

"இல்லண்ணே. ஏற்கனவே நேரம்  சயந்திரத்தை தாண்டிடுச்சு. ரொம்ப அடிபட்ட உடம்பு வேறயா..
இன்னும் ஒரு நாள் வச்சிருந்தா தாங்காது. அதான்" என்றான் சிவா.

வண்டி வந்து அந்த ஊர் எல்லையில் நிற்கவும், அங்கே காத்திருந்தவர்கள் வேகமாக அமரர் ஊர்தியினை சூழ்ந்து கொண்டனர்.

சூழ்ந்து கொண்ட உறவினர்களால்
நண்பன் மனம் மேலும் நோகக்கூடாது என்று வேகவேகமாக வண்டியிலிருந்து இறங்கி ஊர்தியின் பின்பக்கம் வந்தான் சிவா.

அதேநேரத்தில் அமரர் ஊர்தியின் ஓட்டுநரும் இறங்கிவந்து வண்டியின் பின்பக்க கதவை திறந்தார்.
இருவரது குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கூடவே ஊரைச் சேர்ந்த பலரும் அந்த ஆலமரத்தடியில்தான் காத்திருந்தனர் கௌதமனின் அகல்யாவிற்காக அல்ல... ஆனந்திக்காகவும் அல்ல...
தங்கள் வீட்டு தலைமகனான கௌதமனுக்காக.

கதவு திறந்தவுடன் பரபரப்பு தொற்றிக் கொண்டது அங்கே. சவமாக திரும்பிய ஆனந்தியை பார்ப்பதற்காக ஊரார் திரண்டிருந்த, கௌதமன் குடும்பத்து பெண்கள் அத்தனை பேரும் அவனைச் சூழ்ந்து கொண்டு அழ ஆரம்பித்தனர்.

ஏன்ப்பா கொளுத்திக்கிட்ட கேஸ அறுத்துக் கொடுத்தாங்களா இல்லே அப்படியே கொடுத்துட்டாங்களா?

சாதாரணமா செத்தாலே அறுத்துக் கிட்டு தான் கொடுப்பாங்க... இது போலிஸ் கேஸ் வேற... எப்படி அப்படியே கொடுத்து இருப்பாங்க...

டேய் ஏற்கனவே எரிஞ்சிப் போனதுல இரத்தம் சுண்டி போயிருக்கும். இதை அறுத்து அவங்க என்ன கண்டுபிடிக்க முடியும்?

நான் கூட கேள்விப்பட்டிருக்கேன்... இந்த மாதிரி கொளுத்திக் கிட்டு செத்தா அவ்ளோ ஈசியா பொணத்தை தர மாட்டாங்களாம்‌.

ஆனால் இவங்க எப்படி... இவ்வளோ சீக்கிரமே பொணத்தை கொண்டு வர முடியும்?

இவனை இன்னும் உள்ளே புடிச்சு போடாம விட்டு வச்சிருக்காங்க.
பாவம்டா அந்த பொண்ணு ஆனந்தி...
இவன்தான் வேணும்னு ஒத்தகால்லே நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி அல்பாயுசுல போயிடுச்சே..?

அதுவா கொளுத்திக்கிற ஆளு இல்லேடா... இவன்தான் கொளுத்தியிருப்பான்...

எப்படி தப்பிச்சிட்டான் பாரு... இதுதான் கலிகாலங்கிறது...

அப்புராணி மாதிரி இருந்தானே... இவனுக்கு இவ்வளோ விவரம் பத்தாதேடா..

டேய்.. சக்திவேலு... அதான் அவன் சித்தப்பா ... அந்தாளு தான் கூடவே தேவுடு காத்துக்கிடக்காரே. ஏதாச்சும் காசுகீசு  கொடுத்து போலிஸையும் ஆஸ்பிட்டலேயும் சரிகட்டியிருப்பாங்கடா...

ஊராரில் சிலர் சூழ்நிலைக்கு பொருந்தாது சில அபத்தமான கேள்விகளையும் எழுப்பி அதற்கு அவர்களே பதிலையும் அளித்துக் கொண்டனர்

அவனுடைய எழுபது வயதான பாட்டி
ஒருபடி மேலே போய் அவனைக் கட்டிக் கொண்டு ஒப்பாரி பாட அவர் வயதொத்த மற்றவர்களும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாட ஆரம்பித்துவிட்டனர்

வழமையாக ஒப்பாரி என்பது இறந்தவரது நல்ல குணநலன்களை போற்றிக் கூறி அவருடைய பிரிவுக்கு வருந்துவதாக பாடப்படுவது. இறந்தவரின் ஆன்மா அலைக்கழிப்பு இல்லாமல் தன்னை அனைவரும் போற்றுகின்றனர் என்ற மனநிறைவுடன் வீட்டினரையே சுற்றி சுற்றி வராமல் நேராக சொர்க்கம் போய்விடும் என்ற நம்பிக்கை கிராமத்தில்  இருந்து வருகிறது.

நாடாண்ட  வம்சம் இப்போ
நாதிக் கெட்டு போச்சு தடி
நல்ல வார்த்தை சொன்ன கௌலி
நசுங்கி செத்து போச்சுதடி

மல்லிக்கைப் பூ கொண்டைக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி
மனம் நொந்து போறாளோ?
மக்களை தவிக்கவிட்டு போறாளே..

மாராப்பு சேலைக்காரி மகிழம்பூ பேச்சுக்காரி
மானம் பார்த்து போறாளோ?
வாக்கப்பட்ட மச்சானின் நினைப்பை சுமந்து போறாளோ?

சாமந்திப்பூ வாசக்காரி சந்தன நிறத்துக்காரி
சாவத்தேடி போனாளோ இல்லை
சதிகாரி சந்திச்சிரிக்க குலத்தை சாய்ச்சுப்புட்டு போறாளே...

ஆவாரம்பூ பூத்திருக்க...
அத்திப்பழம் பழுத்திருக்க
போகும் வழியெல்லாம் புண்ணியவதி
புலம்பலை கூட்டிப் போறாளே...

முத்து முத்தாக ரெண்டு புள்ளே
பெத்தெடுத்து என்ன கண்டா
மூத்த புள்ளே அவனைக் கட்டி
மூதேவியா மூச்சடைத்து போறாளே...

மனசொத்து வாழணும்னு மகராசன கட்டிக்கிட்டா
கனவுச் செத்து போச்சுதுன்னா காலன்கிட்டே சேர்ந்துக்கிட்டா

காத்து அடிச்சி அழிஞ்சிடுமோ
பாவி இவ பத்தவச்ச நெருப்பு
காவுவாங்கி போயிடுமோ
காலமெல்லாம் வந்த தவிப்பு

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஆனந்தியை தூற்றியும் போற்றியும் ஒப்பாரி பாடல்களாய் பாடிக்கொண்டே போக..

இவையனைத்தும் அபஸ்வரமாக ஒலித்தது கௌதமனின் காதுகளில்.

தனது விருப்பமின்மையை தெரிவிக்க இயலாத நிலையில் அவனது முகத்தில் சூழ்ந்த வெறுப்பை கண்டுகொண்ட சிவா மெதுவாக கௌதமனின் சித்தப்பாவின் காதைக் கடித்தான்.

கௌதமன் - ஆனந்தி‌ தம்பதிகளின் பிள்ளைகளான நந்திதாவும், நரேந்திரனும் சவத்தின் அருகே வராமல் கௌதமன் தம்பியின் கைகளை பிடித்தபடி ஓரமாய் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேரமாச்சு... சவத்தை எடுக்கணும். அதுக்கான ஏற்பாட்டை பாருங்கப்பா என்று சக்திவேல் குரல்கொடுக்க
கௌதமன் பிள்ளைகளை நோக்கி அருகே  வருமாறு கையசைத்தான்.

இவ்வளவு நேரம் இறந்த தாயின் முகத்தையும் பார்க்காது, தந்தையின் இறுக்கத்திலும் பயந்து நின்றிருந்த பிள்ளைகள் இருவரும் ஓடிவந்து தகப்பனை அணைத்துக் கொண்டன.
அவனது மனைவி அகல்யா என்ற ஆனந்தியை அச்சுவார்த்தாற் போல் இருந்த மகளை கண்எல்லாடு ஓரிரு நொடி முகம் சுணங்கினாலும் தன் இரத்தம் என்று தோன்றவும் தானாக அவனது கைகள்  அவர்களை அணைத்திருந்தது.
- தொடரும்