...

7 views

ஜென்மத்தின் தேடல் 6
ஜமீனின் கண்கள் குளம் போல் காட்சி அளித்தது. ஜமீன் வம்சத்தின் கௌரவம் பரம்பரை பரம்பரையாக ஊரே மெச்சும் படி திகழ்ந்தது. இப்போது அனைத்தும் காற்றில் கரைந்தது போலாயிற்றே...
இப்படி ஒரு செயல் செய்தவனை எப்படி
ஏற்றுக் கொள்வது என்று ஒருபுறம் ஜமீன் பரம்பரை கௌரவம் மறுபுறம் பாசவலை என்ற தவிப்பில் நாட்டரையர் ஜமீன்.

சற்று நேரத்தில் மனதை இரும்பாக்கிக் கொண்டு " அரண்மனையின் நியாய பீடத்திற்கு செல்லலாம் " என்று வேகமாக எழுந்தார் ஜமீன்.

நாச்சியார், " அவன் நம் ஜமீன் வாரிசு அதிலும் பல வருடங்களாக வரம் இருந்து கிடைத்த மூத்த மகன். கொஞ்சம் பொறுமையாக யோசித்து பாருங்கள்... எதிலும் அவசர முடிவு வேண்டாம்.. " என்று கண்ணீர் வடித்தால்.

ஜமீன், " நீ சொல்வதெல்லாம் சரி தான் நாச்சியார். ஆனால், இப்போது எனக்கு
கூறும் அறிவுரை அன்றே உன் மகனுக்கு சொல்லி வளர்த்திருந்தாள் இன்று இப்படி ஓரு அவமானம் நேர்ந்திருக்காது... அனைத்தும் கை மீறியது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்து கொள்கிறேன்.
பொன்னா.. கணக்குபிள்ளை வீட்டிற்கு சென்று உடனே அரண்மனை நியாய பீடத்தின் முன் வர சொன்னதாக சொல்லி வா... " என்று உரக்க கூறினார்.

ஜமீன், நாச்சியார் மற்றும் திருவிழாவிற்கு வந்த உறவினர்கள்,
ஊர் மக்கள் அனைவரும் அரண்மனையின் நியாய பீடத்தின் முன் கூடினர்.

சற்று நேரத்தில் ஜமீனின் மூத்த வாரிசு களங்கண்டான் மற்றும் கணக்குபிள்ளையின் மகள் தேவி இருவரும் கழுத்தில் மாலையுடன் வந்து இறங்கினார்கள். தேவியின் கழுத்தில் ஜமீன் பரம்பரை முத்திரையுடன் கூடிய தாலி.

இதை கண்ட ஜமீன் கண்கள் தீப்பொறி போல் தோன்றின. நாச்சியார், ஜமீன் வம்சத்தின் முத்திரை பதித்த தாலியை பார்த்ததும் மிகுந்த கோபம் கொண்டு தேவியின் தாலியை பிடித்து இழுக்கச் சென்றாள்.

களங்கண்டான், "அம்மா, நிறுத்துங்கள்.
இது ஜமீன் முத்திரை பதித்த தாலி. இந்த ஜமீன் வாரிசான நான் அவளுக்கு கட்டியது. இவளை என் விருப்பத்துடன் தான் திருமணம் செய்தேன். எங்களை பிரிக்கலாம் என்று முயற்சி செய்ய வேண்டாம்... " என்று கூறினான்.

ஜமீன், " நீ உன் விருப்பம் போல் செய்வதற்கு இது விளையாட்டு அல்ல.
நீ செய்த செயல் ஜமீன் வம்சத்தை
பாதிக்க கூடியது. தெளிவான முடிவு தான் எடுத்துள்ளாயா என்று யோசித்து பேசு. இவளுடன் வந்தால் ஜமீன் அரண்மனையில் உனக்கு இடம் கிடையாது." என்று கூறினார்.

அதற்கு களங்கண்டான்,

" இவளுடன் தான் என் வாழ்க்கை. இவளை பிரிந்து என்னால் வாழ முடியாது. அரண்மனையில் இவளுக்கு
இடம் இல்லையென்றால் நானும் அரண்மனைக்குள் வரமாட்டேன்.. " என்றான்.

நாச்சியார், " நீ என்ன சொல்கிறாய் என்று புரிகிறதா?.. நாட்டரையர் ஜமீன்
என்றால் எவ்வளவு பெருமைக்குரியது.
இப்படி எவளோ ஒருவளுக்காக ஜமீன் வம்சத்தை நியாய பீடத்திற்கு அழைத்து வந்து விட்டாயே... " என்று அழுதாள்.

ஜமீன், " களங்கண்டான், உன் முடிவு என்னவென்று சொல். இவளுடன் வந்தால் அரண்மனையில் உனக்கும் இடம் இல்லை ." என்றார்.

"எனக்கு அரண்மனை சொத்துக்கள் மீதெல்லாம் விருப்பம் இல்லை. இவள் தான் வாழ்க்கை துணை என்று முடிவு செய்து விட்டேன்." என்று தீர்க்கமாக கூறினான் களங்கண்டான்.

நாச்சியார், " நம் ஜமீன் வம்சத்தின் பெருமையை மறந்து செயல்படாதே.. நம் ஜமீன் மருமகள் என்றால் அதற்கென்று தனி மரியாதை உண்டு. அதை மறந்து பேசுகிறாய்.." என்றாள் மனதை பாசவலைக்குள் சிக்க வைத்து கொண்டு எதையும் வெளிப்படுத்தாமல் கம்பீரமான குரலில்..

ஜமீன், " நாச்சியார்... அவன் அனைத்தும் எதிர்கொள்ள தயாராகி விட்டான். அவன் முடிவை தீர்மானம் செய்தது போல் நானும் எடுத்து முடிவில் உறுதியாக உள்ளேன்.. " என்று கூறினார்.

உடனே தேவி, " எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் செய்தது தவறு தான். நான் வேண்டுமென்றால் விலகி கொள்கிறேன். அவர் உங்கள் அனைவரையும் எனக்காக இழக்க வேண்டாம்... நான் விலகி விடுகிறேன். "
என்றாள்.

" நீ என்ன பேசுகிறாய் தேவி. நாம் பிரிவதற்காகவா தாலி கட்டினேன். உன் கரம் பிடித்து விட்டேன். இனி எதற்காகவும் பிரிய மாட்டேன்...நான் எடுத்த முடிவு எடுத்தது தான். நாங்கள் எங்கோ சென்று பிழைத்து கொள்கிறோம்... அம்மா என்னை மன்னித்து விடுங்கள். இப்போது அப்பா தேவியை ஏற்று கொண்டால் கூட நான் உங்களுடனேயே இருந்து விடுவேன்.
ஆனால், அவர் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார். என்னால் இவளை விட்டு கொடுக்க முடியாது. நான் வருகிறேன். " என்று அங்கிருந்து புறப்பட்டான் களங்கண்டான்.

சற்று நேரத்தில் அங்கே வந்த பொன்னன், " ஜமீன்தார் ஐயா கணக்குபிள்ளை மகள் செய்த செயலை
எண்ணி அவர்களால் உங்களுக்கு பிரச்சினை என்று விஷம் அருந்தி விட்டார். அவர் மருத்துவச்சி வீட்டில் இருக்கிறார். " என்றான்.

ஜமீன் மற்றும் நாச்சியார் மருத்துவச்சியின் வீட்டில்.

ஜமீனை பார்த்த கணக்குபிள்ளை அவரின் கால்களை பிடித்து மண்டியிட்டு கதறினார்.

" ஐயா, அவள் இப்படி செய்வாள் என்று நினைக்கவில்லை. இன்று காலை முதல் அவளை காணவில்லை. நான் அவளை தேடி அலைந்தேன். தாங்கள் விஷயத்தை கூறி நியாய பீடத்திற்கு வர சொன்னீர்கள் என்று செவி வழி கேட்டதும் உங்கள் முகத்தில் எப்படி விழிப்பேன் ஐயா... என்னை மன்னித்து விடுங்கள்... " என்று வருந்தினார் கணக்குபிள்ளை.

" கணக்குபிள்ளை வருந்தி என்ன செய்வது. எங்கள் வம்சத்தின் வாரிசுகளுக்கு எப்படி தகுதிகள் கொண்ட துணை அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்போம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நான் எப்படி அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியும்." என்று கண் கலங்கினார் ஜமீன்.

"ஐயா, ஜமீன் வம்சத்திற்கு பெரிய அவமானம் நேர்ந்தது. அதுவும் என் மகளே காரணமாக இருப்பது என்னால்
தாங்கி கொள்ள முடியவில்லை. " என்று கூறினார் கணக்குபிள்ளை.

" அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும்
இருவரும் இந்த ஊரை விட்டே சென்றுவிட்டனர். எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லையே... " என்று நாச்சியார் கூறினாள்.

உடனே கணக்குபிள்ளை, " அம்மா, தங்கள் குடும்பத்திற்கு அவள் துரோகம் செய்ததற்காக அவள் என் கண் முன்னே நின்றால் வெட்டி போட்டிருப்பேன். நீங்கள் அவளை உயிருடன் விட்டதே தவறு. உங்கள் மகன் களங்கண்டான் பிரிவை எப்படி தாங்கி கொள்வீர்கள்... " என்று கூறினார்.

"நாச்சியார், நீ அவனை நினைத்து வருந்தாதே. நாம் வேண்டாம் என்று சென்றவனை எண்ணி நம் மேல்
உயிராக இருக்கும் செம்பியனை கவனிக்காமல் இருக்க கூடாது. இவனால் செம்பியன் பாதிக்கபட கூடாது. களங்கண்டான் வாழ்க்கை பாடத்தை புரிந்து கொள்ளாமல் செயல் படுகிறான். அவன் ஜமீனிற்கு கொடுத்தது மிகப்பெரிய அவமானம்.
அதை என்னால் மன்னிக்கவே முடியாது. " என்று கூறினார் ஜமீன்.

நாச்சியார், " அவன் எங்கே இருக்கிறான் என்று பார்த்து வர சொல்லலாமா... அவன் நம் ஜமீன் வாரிசு... என்ன தான் அவன் மன்னிக்க முடியாத தவறுகள் இழைத்தாலும் பெற்ற மனதிற்கு புரியவில்லை. அவன் எங்கே சென்றாலும் நம் பார்வையில் இருந்தால் எனக்கு மனது சற்றே சலனமில்லாமல் இருக்கும்... " என்று தயக்கத்துடன் கேட்டாள்.

" அவனை பற்றிய எந்த நிலையையும் நான் அறிய விரும்பவில்லை. நான் நிம்மதியுடன் இருக்க விரும்பினால் அவனை பற்றி என்னிடம் பேசாதே. உன் மகன் களங்கண்டான் உயிருடன் இருப்பதை மறந்து விடு நாச்சியார். இனி நமக்கு இருப்பது செம்பியன் மட்டுமே. " என்று மனதை கல்லாக்கி கொண்டு கூறினார் ஜமீன்.

நாச்சியார் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

" கணக்குபிள்ளை நாங்கள் வருகிறோம். நீங்கள் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள். எதையும் மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
நம் பிள்ளைகளை சற்றே கண்டிப்புடன் வளர்த்திருக்கலாம். சரி வருகிறேன்.. " என்று அவர் மகள் செய்த தவறை குறையாக சொல்லாமல் சொல்லி விட்டு சென்றார் ஜமீன்.

கணக்குபிள்ளை தன் மனைவியிடம், " தேவி இவ்வளவு துணிச்சலான முடிவு எடுப்பாள் என்று நினைக்கவில்லை. இவள் இப்படி செய்வதற்கு சடலமாக வந்தால் கூட நான் ஏற்று கொள்வேனே... பல முறை கண்டித்தேனே அவள் இப்படி செய்து விட்டாளே... ஜமீன் சொல்வதை கேட்டாயா கண்டிப்பான முறையில் வளர்க்க வேண்டும் என்கிறார்... என் வளர்ப்பில் குறை வந்து விட்டதே... " என்று அழுதார்.

கணக்குபிள்ளையின் மனைவி, " இனி இந்த ஊரில் எப்படி பிழைப்பது. ஊர் பேச்சுக்கள் செவி கொடுத்து கேட்க முடியுமா... நாம் இவ்வூரை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம். தேவி எங்கே சென்றாளோ தெரியவில்லையே... " என்றாள்.

" அவளை பற்றி பேசாதே. உன் மகள் உண்ட வீட்டிற்கு துரோகம் நினைத்த தற்கு கஷ்டப்பட்டு தான் திருந்துவாள்.
நீ சொல்வது போல் நாம் வேறு எங்காவது சென்று விடலாம். நான் ஜமீனிடம் நாளை பேசிவிட்டு வருகிறேன் பிறகு இங்கிருந்து சென்று விடலாம். " என்று கூறினார் கணக்குபிள்ளை.

அரண்மனையில்.,


✍ ஜென்மம் தொடரும் ✍