...

1 views

மறுமை
ஒரு சித்தயோகி கிராமத்தின் எல்லையில் கோயில் அருகே குடிசையில் வாழ்ந்து வந்தார்.
ஊரில் எவருடனும் பேசுவதில்லை.மவுனமாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர். தன் இறுதிக் காலத்தை முன்பே அறிந்து தன்னுடன் பழகியவர்களுக்கு மட்டும் இறைவன் இன்று இரவு நடுநிசியில் தன்னை அழைத்துப் போக வருவதாக சைகையால் விளக்கினார்.
இதை சொல்வதற்கு என்னைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லை என்பதையும் உணர்த்தினார்.
இரவில் உறவும் நட்பும் ஊரும் ஒன்று கூடின.
சித்தயோகி குடிசைக்கு வெளியே ஒரு ஓலை பாயில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
நடுநிசி நெருங்கியது.இறைத் தூதர் மூவர் அருகில் வருவதைப் பார்த்து புன்னகைத்தார்.
கூடி நின்ற அனைவரும் சித்தயோகியை பார்த்தபடியே இருந்தனர்.வந்த மூவரும் சித்தனே நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து அது எங்களுக்கு திருப்தி அளித்தால் மட்டுமே உங்களை எங்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்வோம் என்றனர்.பதிலுக்கு யோகி தலை அசைப்பதை மட்டுமே கூடி இருந்தவர்கள் காண முடிந்தது.

முதல் இறை தூதன்: தர்மம் என்பது என்ன?
யோகி: எதுவும் தன்னுடையது இல்லை என்பதே

2ஆம் இறை தூதன்: அன்பு என்றால் என்ன?
யோகி:எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாமல் அதற்கு உரிய உரிமையை பறிக்காது இருப்பதே

3ஆம் இறை தூதர்:நன்மை,தீமை என்பது என்ன?
யோகி:இயற்கையின் வசம் இருந்து கொடுப்பதை மட்டும் பெறுவது நன்மை.
தனக்கு கொடுக்கப்பட்டதாக இருந்தும்கூட கேட்க தயங்குபவருக்கு கொடுக்காமல் விலகுவதே தீமை.

இறைத்தூதர் மூவரும் இணைந்து இறுதியாக இறைவன் உங்களிடம் கேட்கச் சொன்ன கேள்வி இது.இதற்கு பதில் அளித்துவிட்டால் நீங்கள் எங்களோடு வரலாம் என்றனர்.
யோகி அமைதியாக தலை அசைத்து ஆமோதித்தார்.

இறைத்தூதர்கள்: நீங்கள் முதன்மையாக சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்களா அல்லது நரகம் செல்ல விரும்புகிறீர்களா?

யோகி:நான் சொல்லவதற்கு ஒன்றும் இல்லை.இறைவன் உங்களிடம் எப்படி அழைத்து வரச்சொன்னாரோ அப்படியே செய்யுங்கள்.அவரது ஆணைக்கு கீழ்ப்படிகிறேன் என்றதுதான் தாமதம்.
வானில் இருந்து அசரீரி எங்கும் ஒலித்தது.கூடி இருந்தவர்கள் செவிகளை விசாலமாக்கினார்கள்.

நல்லது யோகியே நீ தகுதி அடைந்துவிட்டாய்.இந்த உருவிலேயே நீ எனை வந்து அடைவாயாக என்று எதிரொலித்து அசரீரி அகன்றது.இறுதியாக பல்லக்கில் அமர்த்தப்பட்ட யோகியை இரு இறை தூதர் தூக்கிக்கொண்டு ஒருவர் காவலாக அருகில் தொடர்ந்து செல்வதை கூடியிருந்தோர் அகல விரித்த கண்களுடன் பார்த்தபடியே மெய் மறந்து நின்றிருந்தனர்.

© MASILAMANI(Mass)(yamee)