...

10 views

என் காதலர் தினம்..!

இன்று உலகக் காதலர்கள் தினம்...!
மகனுக்கு பத்தொன்பது மகளுக்கு பதினாறு வயது மெல்ல நடந்து கொண்டிருக்க...
திருமணமான ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளைக் கொஞ்சம் விசேஷமாக நாங்களும் அநுசரிப்பதுண்டு!
ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தக் காதலர் தினத்தை அதிகம் கண்டு கொள்வதில்லை..!!
வயதாகிவிட்டதான நினப்பிலெல்லாம் இல்லை...!
ஆனாலும் ஏதோ ஒருவித நெறுடல்..!
அந்த பிப்ரவரி 14 ல் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏதும் மாற்றம் தெரிகிறதா? நடை, உடை பாவனைகளில்....?? இதை கவனிப்பதே அன்றைய லேசான படபடப்பு எனக்கு....! பிள்ளைகள் படிக்க வேண்டிய வயதில் காதல் வயப்பட்டிருப்பார்களோ என்ற லேசான பயம்தானது!
பிறகு வேறெங்கிருந்து காதலர்தின லவ் மூடுக்கு நாம் போவது....!!??
சலிப்புடன் எனக்குள் நானே பேசிக் கொண்டே அசைபோட்டது கடந்த ஆண்டின் எங்களது காதலர் தினத்தை!
அன்றைய மாலையில் அழகான ஒரு புடவையோடு மயக்கும் மல்லிகையும் சேர்த்த ஒரு கைப்பையை நீட்டி...*
*இந்தா*.....என்றார் காதலனான என் கணவர்!
என்ன இது...?_ !தெரியாததைப் போலவே நான்.
காலை அவர் வேலைக்காக வெளியேறும் போது அதைப் பற்றின நினைப்பு கொஞ்சமாவது அவருக்கு இருக்குமா என்ற என் தேடலுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைக்க... பெருமூச்சுடன் பார்வையை குவித்து சாந்தமாகிக் கொண்டேன்...!
அந்தத் துணிப்பையைக் கொடுத்து விட்டு திரும்பிய அவரை ஏறிட்டுப் பார்க்கும் அந்த சில நொடிகளுக்குள் தோன்றி மறைந்து போனது இத்தனை நினைவுகளும்..!
நானும் அவரை சந்தோஷப்படுத்த ஒரு வாரத்திற்கு முன்பே ஒரு சட்டை எடுத்து வைத்திருந்தேன்.ஆனால் இனி அதை ஒருமாதம் கழித்து தான் அவரிடம் எதேச்சையாக கொடுக்க வேண்டுமென்று காலையில் எடுத்த எனது முடிவை என் மனதிடம் வாபஸ் பெற்றுக் கொண்டே .....பீரோவிலிருந்து எடுத்து ...
*இந்தாங்க*... என்றேன்..லேசான சிரிப்போடு.
*சரி அங்கயே வை,காலையில் வேலைக்குப் போகும் போது பார்க்கலாம்*_ என்றார் வழக்கம் போல வார்த்தைகளில் சற்றும் சாரம் இல்லாமல்...! ஆனாலும் பார்வையில் நிறைந்த காதல்... கனிந்த புன்னகை இதழ்களிலும்!
பேச்சு சத்தம் அறைக்கு வெளியே கவனித்துக் கொண்டிருந்த பிள்ளைகளின் காதில் விழலாம்...! பார்வைக்குள் ஒழிந்திருந்த காதலர்தினத்தை
என் விழிகளைத் தவிற வேறு யாரறிய முடியும்...!!??
என் புடவை ,பீரோவிலிருந்த அந்த சட்டையோடு அடைபட்டிருந்தது...!ஆடைகளும் கொண்டாடி தீர்த்தன விடியும் வரை.....காதலர் தினத்தை!


Dr .த.ஜான்சிபால்ராஜ்
© All Rights Reserved