...

6 views

ஈழத்தில் நடந்தேறிய யுத்தம்
கதிராடிய வயலோ
கரி மேடானது
குடி வாழ்ந்த மனையோ
சுடு காடானது...

அலை ஓடிய முள்ளிக் கடலோ
மூச்சிரைத்தது
நல்லிணக்க அரசவையோ
நாணியே நின்றது
நயவஞ்சக கூட்டமோ
பலரைக் கொன்றது...

கண்கண்ட காட்சியானாலும்
தணிக்கையெனும்
கையாலாகாத சாட்சி
தேவையானது...

கருமை பூசிய கிரகங்களானது
சுற்றும் பூமி
கடவுளே காப்பாற்று எனக்கதறியும்
கைகொடுக்காத சாமி...

பாலகர் மீதியிலும்
இரத்த கீறல்
பாருலகே பார்த்திடப்
போர்க்குற்ற மீறல்...

புத்தன் கண்ட பூமியே
பூவை பேணிய நீயே
புத்துயிரைக் குற்றுயிராய்
கத்திமுனையில் தைத்தாய்...

அன்பைக் கொண்டு அறம்
போதினான் புத்தன்
வம்பைக் கண்டு வரம்பு
மீறினான் அவன் பக்தன்...

ஈழத்தில் நடந்தேறிய யுத்தம்
பறை சாற்றியது
பகவானின் பாதத்தில் பல
உயிர்களின் இரத்தம்...

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அகதிகள்..

பகுதிகளை விட்டு பயத்தால்
மாறிய நாங்களோ அகதிகள்...
எம்மை வீதிக்கு விரட்டியது
விதியெனும் ஊழியன்...

உறவென்னும் உயிரோட்டங்கள்
அன்றே அறுந்தன...
உணவிற்காக உடல் வதைகள்
தொடர்ந்தன...

வறுமையின் வரம்பில் வானம்பாடி
நாங்கள் ஞானம் தேடினோம்...

சோர்ந்து விட்டது சோற்றுப்
பானையும்...
ஏற்றில் எரிகின்ற உலையாய்
வயிறென்னும் வடிவம்...

அழியாத நீரோடையாய்
விழிகளில் தினம் தினம் நீர்...
தடம் மாறிய பறவைகளானோம்
அகதிகளாய்...

துணைகள் இழந்தோம்...
துணிவு துறந்தோம்...
துயரங்கள் அறிந்தோம்...

இடம் மாறிய நாங்களோ
இன்பமாய் இருப்பிடம்
தேடியே திரும்ப நினைக்கும்
தமிழீழ பறவைகளாக இன்றும்...

© ஆறாம் விரல் ​✍🏾

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil