...

33 views

எனக்கென உன்னைத் தந்து - 3
அத்தியாயம் - 3

எட்டு மணி நேர பயணம் முடிந்து நர்மதாவின் இல்லம் வர மாலை ஐந்து முப்பத்தாகி இருக்க, அவர்களை வரவேற்க என்று அங்கும் யாரும் இல்லை. அகிலேஷ் நர்மாதாவின் சொந்தங்களை எதிர்பார்த்திருக்க, நர்மதாவின் தந்தை கணேசன் பெட்டிகளை தூக்க வரவும், அதை எல்லாம் அகிலேஷ் வாங்கி இருந்தான். இவர்கள் நால்வர் மட்டுமே இருக்கே, அகிலேஷ் ஏமாற்றத்தை விழுங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்து இருந்தான். மூன்று படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மெண்ட் வீடு. அது பெங்களூரில் பணக்கார மக்கள் வாழும் இடத்தில் இருக்க, அதுவும் மனைவியின் பெயரில் இருக்கிறது என்று புரிய அவர்களின் செல்வ நிலையும் புரிந்து போனது.

நர்மதா அவனை அவர்களின் அறைக்கு அழைத்து செல்ல, அகிலேஷ் அமைதியாய் அறைக்குள் வந்து அறையை சுற்றிப் பார்த்தான். மொத்தமாய் அறையே திரைச்சீலை கொண்டு மூடி இருக்க, ஜன்னலையே தேட வேண்டிய நிலை.

“ஜன்னல் எங்க நம்மு கொஞ்ச நேரம் திறந்து வைப்போம்.” அகிலேஷ் கேட்க, நர்மதா பால்கனி கதவை காட்டி அதை திறந்து விட, அகிலேஷ் வெளிக்காற்றை சுவாசித்து இருந்தான்.

“நீங்க பாருங்க நான் குளிச்சுட்டு வரேன்.” நர்மதா சொல்லிவிட்டு சென்று இருந்தாள்.

அவள் குளித்து வரவும் இவனும் குளித்து வர, அறைக்கு காஃபி வந்து இருந்தது. அகிலேஷ் அதை எடுத்துக் கொண்டு அனிதாவை அழைத்து விவரம் சொல்ல,

“வீடு வசதியா இருக்கா அகில்?”

“ம். வசதியா இருக்கு மா. அங்க எல்லாரும் என்ன பண்றீங்க?”

“எல்லாரும் எங்க இருக்காங்க. எல்லா சொந்தமும் வருத்தத்தோட கிளம்பி போயாச்சு. முக்கியமா உங்க அண்ணனும், அண்ணியும் உன் பின்னாடியே கிளம்பிட்டாங்க. யாரோ வீட்டு கல்யாணம் போல நடந்துக்கிறான். நான் ஒரு புத்திக்கெட்டவ அவனை போய் குறை சொல்றேன் பாரு, மாப்பிள்ளை நீயே கிளம்பி நிக்கும் போது அவனுக்கு என்ன உறுத்தல் இருக்க போகுது?”

“நான் அப்புறம் பேசறேன் மா.” அகிலேஷ் சொல்ல, அவன் கையில் இருந்த அலைபேசியை வாங்கி இருந்தாள் அவனின் புது மனைவி.

“எனக்கு கூட்டம் பிடிக்காது. சந்தக்கடை போல ஒரே இரைச்சல். மனுஷன் இருப்பானா அந்த சத்தத்தில்? இதில் கிண்டலுன்னு சொல்லிட்டு அவங்க கேக்குற வக்கிரமான கேள்வி வேற, எனக்கு பிடிக்கல, அதான் நான் என் புருஷன் கூட ஊருக்கு வந்துட்டேன். உங்களுக்கு அதில் எதும் பிரச்சனை இருந்தா, அதை உங்களோட வெச்சுக்கோங்க.” சொன்னவள் அலைபேசி அழைப்பை முடிக்க, அகிலேஷ் கண் மூடி அமர்ந்து இருந்தான்.

நர்மதா அலைபேசியை மெத்தையில் போட்டு விட்டு போக, மீண்டும் அனிதா அழைக்க,

“உங்க மருமக டென்ஷனா இருக்கா, அவ மரியாதை இல்லாம பேசினதுக்கு சாரி மா.”

“அம்மா தப்பா எதும் பேசல தான? உன் பொண்டாட்டி முகத்தில் அடிக்கிற மாதிரி பேசிட்டு போறா? நீ எதுக்கும் பார்த்து இருப்பா. நான் வைக்கிறேன்.”

“சரிம்மா.” அகிலேஷ் அலைபேசியை வைத்து விட்டு அமைதியாய் கட்டிலில் சாய்ந்து இருந்தான்.

இரவு உணவுக்கு அழைக்க வந்த நர்மதா அவனை தொட்டு எழுப்ப, அகிலேஷ் முகமே அவனின் வருத்தத்தை சொன்னது.

“எனக்கு விருப்பம் இல்லாத சூழலில் இருன்னு சொன்னா நான் எப்படி இருக்க முடியும்? அனுசரிக்க சில விஷயம் இருக்கு அகில் எனக்கும், முடியாத போது முடியாதுன்னு தானே சொல்ல முடியும்?”

“எங்க அம்மாகிட்ட இதே போல தன்மையா சொல்லி இருக்கலாம் நர்மதா. அவங்களுக்கு இதெல்லாம் சட்டுன்னு புரியாது தான். ஆனா உனக்காக மனசை சமாதானம் பண்ணி இருப்பாங்க.” அகில் எடுத்து சொல்ல,

“சாரி.”

“இதை அம்மாகிட்டயும் ஒரு வார்த்தை சொல்ல முடியுமா?” அகிலேஷ் கேட்கவும் நர்மதா அவன் அலைபேசியில் இருந்தே அவனின் அன்னைக்கு அழைத்து இருந்தாள்.

“சொல்லுப்பா” அனிதா குரல் கேட்க,

“ஏதோ ஒரு டென்ஷனில் உங்ககிட்ட காரமா பேசிட்டேன். சாரி அத்த. இனி இப்படி நடக்காது. இதுவரை இத்தனை கூட்டமான ஒரு இடத்தில் நான் இருந்ததே இல்ல. அதான் கிளம்பி வந்தா போதும்னு மனசு சொல்லவும், அவரை கூப்பிட்டு வந்துட்டேன். தப்பா நினைக்காதீங்க.” நர்மதா சொல்ல அகிலேஷ் முகம் தெளிந்து இருந்தது.

“இதை ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நானே உனக்கு தேவையான வசதியை செய்து இருப்பேன் மா. சரி விடு. அடுத்து ஊருக்கு வரும் போது, உங்க வீட்டில் தங்க வைக்கிறேன். அங்க ஒரு தொந்தரவும் உனக்கு இருக்காது.” அனிதா சொல்ல, நர்மதாவும் சரியென்று கூறி அலைபேசி வைத்து விட்டு அவனை பார்க்க, அகில் அவளை இழுத்து மடியில் அமர வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து இருந்தான்.

“அம்மா பையனா நீங்க?” நர்மதா கேட்க,

“அப்படி எல்லாம் இல்ல நம்மு, எனக்கு வீட்டில் எல்லாரையும் பிடிக்கும். யாரையும் வீணா மன கஷ்டப்படுத்த மாட்டேன். இப்ப நீயும் நானும் வேற இல்லையே? அதான் உன்னால தான் சங்கடம்னு யாரும் சொல்லிட கூடாதுன்னு நினைக்கிறேன். உன்னை சொன்னா அது என்னையும் தானே?” அகிலேஷ் கேட்கவும் நர்மதா தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து இருந்தாள்.

பின் இருவரும் உணவு உண்டு வர, அகிலேஷ் நர்மதாவை அவனின் கை வளைவில் வைத்துக் கொண்டு உறங்கி இருந்தான். அடுத்த நாள் காலை அகிலேஷ் எழுந்து அமர்ந்த போது வீடே அமைதியாக இருந்தது. அகில் அவனை சுத்தம் செய்துவிட்டு ஹாலுக்கு வர, அங்கே நர்மதா மடிக்கணினியில் எதையோ தேடிக்கொண்டு இருக்க,

“என்ன பயங்கர தேடல் காலையிலேயே?”

“லீவ் இருக்கும் போதே ஹனி மூன் போய்ட்டு வந்துடுவோம். அதுக்கு தான் எங்க போலாம்னு தேடிட்டு இருக்கேன்.”

“பெங்களூர் கிளைமேடுக்கு பெட்ரூம் போனா போதாதா?” அகில் கேட்க,

“ச்சீ அகில்… இது தனியா புது இடத்தில் கழிக்க வேண்டியது. உங்களுக்கு தான் என் பெட் ரூம் புதுசு. எனக்கு பழசு தானே?”

“ரூம் பழசா இருந்தா என்ன? நான் புதுசு தானா?” அகில் நெருங்கி அமர்ந்து சொல்ல,

“விளையாட்டு உங்களுக்கு, உங்களுக்கு எதும் ஐடியா இருக்கா?”

“ஶ்ரீநகர் போவோமா? 4 நாள் பிளான் பண்ணிப்போம். இன்னிக்கி கிளம்பினால் கூட ஓகே தான். ஒரு 40 ஆயிரம் செலவாகும். உனக்கு ஓகே வா?” அகிலேஷ் கேட்க, நர்மதா அவன் கன்னத்தை ஈரம் செய்ய,

“ நம்மு அத்தையும் மாமாவும் எங்க?”

“கோவிலுக்கு போய் இருக்காங்க. இப்ப வர மாட்டாங்க.” நர்மதா சொன்னவள் அவனை இன்னும் நெருங்க,

“நீ காஃபி குடிச்சுட்டியா?”

“இல்ல. எனக்கு சமையல் எதோ ஓரளவு தான் வரும். அம்மா காப்பி போடாம கோவில் போய்ட்டாங்க. அவங்களுக்கு தான் வெயிட்டிங்.”

“இரு நான் போட்டு தரேன்.” சொன்னவன் கையோடு காபியும் போட்டு வந்து கொடுக்க, நர்மதா அவனை மீண்டும் முத்தமிட, காபியை குடித்த கையோடு மனைவியை அள்ளி கொண்டான்.

இருவரும் களவி முடித்த கையோடு தேன்நிலாவுக்கு தேவையானவற்றை செய்து இருந்தனர். நர்மதா அன்றே கிளம்ப முடிவு செய்து அனைத்தும் எடுத்து வைக்கும் வேலையை செய்ய, அகிலேஷ் கிளம்பி திருமணத்திற்கு முன் அவன் நண்பர்களுடன் வசித்த இல்லம் வந்து இருந்தான். அவனை கண்டு நண்பர்கள் கேலி பேச, அவனும் பதில் கொடுத்து விட்டு அவனின் உடமைகளை எடுத்து வந்திருந்தான்.

மதியம் அவன் இல்லம் வந்து கதவின் அழைப்பு மணியை அழுத்த, புதிதாய் ஒரு பெண்மணி வந்து கதவை திறக்கவும் அகில் வீட்டின் என்னை மீண்டும் சரிபார்க்க, நர்மதா ஹாலில் இருந்து குரல் கொடுக்கவும் தான் உள்ளே வந்தான். அந்த பெண்ணும் அமைதியாய் வழிவிட்டு நிற்க,

“யார் நர்மதா இவங்க? கல்யாணத்தில் கூட பார்த்த ஞாபகம் இல்லையே?”

“வேலைக்காரி அகில்.” நர்மதா சொல்ல, அகிலேஷ் சட்டென திரும்பி பார்க்க, அவரோ
சமையல் அறைக்குள் நுழைந்து இருந்தார்.

முகில் உடை மாற்றி வர அந்த பெண் உணவை உணவு மேஜையில் எடுத்து வைத்தாள். நர்மதா உண்ண வரவும் பரிமாற தொடங்கி இருந்தாள்.

“மஞ்சு சிக்கன் செய்ய சொன்னேன் இல்ல? அது எங்க?” நர்மதா கேட்க, சூடாக கொண்டு வந்து பரிமாறி இருந்தாள்.

அகிலேஷ் எதுவும் சொல்லாது அமைதியாக உணவை உண்ண, அவனுக்கு அருகில் நின்று இருந்த மஞ்சு அவன் தட்டை கவனித்து பரிமாற, அகில் உண்டு எழும் போது அவனின் தட்டையும் எடுத்துக்கொண்டு எழுந்தான்.

“தட்டை வையுங்க, அவ பார்த்துப்பா…” நர்மதா சொல்ல,

“எனக்கு நானே எடுத்து பழகிடுச்சு நம்மு, இதில் என்ன இருக்கு?” சொன்னவன் தட்டை எடுத்து சென்று அதில் உள்ள எலும்புகளை குப்பை கூடையில் போட்டு விட்டு தட்டையும் சுத்தமாக கழுவி வைத்து இருந்தான்.

நர்மதா கைகழுவும் இடத்தில் கைகளை கழுவி விட்டு அறைக்கு சென்று இருக்க, அகிலேஷ் மஞ்சுவின் முகம் பார்க்காது நன்றியை கூறிவிட்டு வந்து இருந்தான்.

“அத்தையும் மாமாவும் இன்னுமா வீட்டுக்கு வரல?” அகிலேஷ் கேட்க,

“அவங்க வீட்டுல இருந்து மட்டும் என்ன செய்ய போறாங்க? வயசான காலத்தில் எங்கேயாவது போய்ட்டு வரட்டும். அவங்களுக்கும் எதாவது வேலை வேணும் இல்ல?” நர்மதா கேட்க அகிலேஷ் அதை ஏற்றுக் கொண்டான்.

இருவரும் கிளம்பி நிற்க மஞ்சு அவர்களின் பயண பையை படுக்கை அறையில் இருந்து எடுத்து வைக்க, வெளியே சென்ற பெரியவர்கள் இல்லம் வந்து சேர்ந்திருந்தனர். நர்மதா தகவல் போல அவர்களிடம் விஷயத்தை கூறவும், அவர்களும் சரியென்று கூறி விட்டு வழியனுப்பி வைத்து இருந்தனர்.

தேனிலவு செல்லும் முன் மாமனை அழைத்து அகிலேஷ் விவரம் சொல்ல,

“ டேய்… சரியான ஆள் தான்டா நீ, சத்தமே இல்லாம பொண்டாட்டியை ஊருக்கு கூப்பிட்டு போற மாதிரி போய்ட்டு, ஹனிமூன் கிளம்பிட்டேன் தகவல் சொல்றியா?” சதீஷ் கிண்டல் பேச,

“மாமா… ஏன் இப்படி? இப்ப தான் நானும் என் போண்டா டீயும் புரிஞ்சுக்க தொடங்கி இருக்கோம். அவ விருப்பம் போல தான் எல்லாமே நடக்கனும்னு நினைக்குறா, மத்தபடி நல்ல பிள்ளை தான்.”

“நீ ஒருமாதிரி முகம் சுருங்கி போகவும், உங்களுக்குள்ள எதோ பிரச்சனை போலன்னு நினைச்சேன். தங்கச்சி எங்க கூட ஒட்டவே இல்லையா அதுவும் சேர்ந்து வருத்தமா இருந்துச்சு. விடு எல்லாம் போக போக சரியா போய்டும். பத்திரமா போய்ட்டு வாங்க டா. என்ஜாய்.” சதீஷ் சொல்லவும்,

“அப்படியே அக்காகிட்ட சொல்லி அம்மா, அப்பா காதில் இந்த தகவலை போட சொல்லுங்க மாம்ஸ். எனக்கு கூப்பிட்டு சொல்ல கூச்சமா இருக்கு.” அகிலேஷ் சொல்லவும், சதீஷ் சிரிப்புடன் சரியென்று கூறி இருந்தான்.

காஷ்மீர் அவர்களை குளிருடன் தழுவிக் கொள்ள, நான்கு நாட்களும் புது தம்பதியர்களுக்கு இளமையும் இனிமையும் என சென்று இருந்தது. நர்மதாவின் விருப்பம் போல அனைத்தும் நடந்தாலும் அகிலேஷ் அவளை மகிழ்வித்து மகிழ்ந்து இருந்தான். நான்கு நாட்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை அவர்களை அழைக்க, இருவரின் இடையே உள்ள வேற்றுமைகள் தெரிய தொடங்கி இருந்தது. அதில் நர்மதா மிரட்ட, அகிலேஷ் மிரள தொடங்கி இருந்தான்.

© GMKNOVELS