...

35 views

எனக்கென உன்னைத் தந்து - 13
இது சப்ரைஸ் எபிசோட் 😌😉

அத்தியாயம் - 13

மாடியில் தனியாய் அமர்ந்து இருந்த அகிலேஷ் அருகில் வந்து ஆர்த்தி அமர, சதீஷ் அவன் எதிரில் அமர்ந்தான்.

“எதையும் யோசிக்காத அகில். விதியை கூட மதியால வெல்ல முடியும். வீண் எண்ணங்களை மனசில் வளர விடாதா…” சதீஷ் சொல்ல,

“வாக்கு சொன்னது யாரோ இல்ல, என் குலசாமி. ஆரம்பத்தில் இருந்தே எதோ சரியில்ல மாமா. எனக்கு பயமா இருக்கு.” அகில் சொல்ல, ஆர்த்தி அழுதாள்.

“டேய் பயந்து நீயே எதையாவது கற்பனை பண்ணாத, என்ன நடக்குதோ நடக்கட்டும். நீ தெளிவா இரு. உன்னை மீறி தான எதுவும் நடக்கும்? உன் எண்ணத்தையும் செயலையும் உன் கட்டுப்பாட்டில் வை.” சதீஷ் சொல்ல, சரியென அகில் தலையாட்டி வைத்தான்.

ஆர்த்தி தம்பியின் தோளில் சாய்ந்து அழ, அவனின் கண்களும் கலங்கி போனது. அனிதா கோவிலில் சாமி கொடுத்த பழத்தை எடுத்து வந்திருந்தார்.

“ரெண்டும் நீ தான் சாப்பிடனும். பிரசாதம் இது, மாட்டேன் சொல்லாம சாப்பிடு அகில்.” அனிதா கொடுக்க,

“சாமி கொடுத்த வாக்கு சந்தோசமா இருந்தா சாப்பிட்டு இருப்பேன். இப்ப எப்டி மா?”

“எதையும் மறுக்கிற அதிகாரம் நமக்கு இல்ல கண்ணு. குலசாமி சொன்னா சரின்னு கேட்கனும். ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டா எப்படி அகிலு?” அனிதா கேட்க,

“சாப்பிடு அகில். சாமி வார்த்தையை தட்ட கூடாது.” ஆர்த்தி சொல்ல, ஒன்றை மட்டும் பிரித்து உண்டு இருந்தான்.

“இதையும் சாப்பிடு.” ஆர்த்தி சொல்ல,

“காலையில சாப்பிடுவேன். பூஜை ரூம் முன்னாடி வையுங்க.” அகில் கொடுக்க, ஆர்த்தி சரியென வாங்கி கொண்டாள்.

அங்கே நர்மதா வர, மூவரும் அவனை விட்டு விலகி சென்று இருந்தனர். அகில் நர்மதா முகம் பார்த்து அமர்ந்திருக்க,

“என்ன தான் ஆச்சு அகில்? ஏன் இப்படி இருக்கீங்க? சாமி என்ன சொன்னாங்க? ஆர்த்தி அண்ணி ஏன் அப்படி அழுதாங்க?”

“நமக்கு நேரம் சரியில்லையாம் அதான் சொன்னார். வேற ஒன்னும் இல்ல. நீ எதையும் யோசிக்காத. போய் தூங்கு காலையில் ஊருக்கு கிளம்புவோம்.” அகில் சொல்ல,

“சனி, ஞாயிறு லீவ் தான? இங்க இருந்துட்டு போவோம்.”

“எனக்கு வேலை இருக்கு நம்மு, போலாம். சண்டே வந்துடுவேன் சொல்லி தான் லீவ் வாங்கினேன்.” அகில் கூற, நர்மதா சரியன்று அவனின் கைப்பிடித்து அழைக்க, அகில் அவளை கேள்வியாக பார்க்க,

“எதும் வேண்டாம். என்னோட நீயும் தூங்க வா. என்னை கட்டிக்கோ. நீ ஃபீல் பண்ணாத…” நர்மதா சொல்ல, அவளோடு அறைக்கு சென்றவன் அவள் சொன்னது போலவே அவளை அணைத்துக் கொண்டு உறங்கி இருந்தான்.

அடுத்த நாள் காலை கிளம்பி நின்றவனை கண்டு வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை கேள்வியாக பார்க்க,

“நாளைக்கு நான் வேலைக்கு போகனும். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். அதான்…” அகில் சொல்ல, சதீஷ் சரியென முதல் ஆளாக சம்மதம் சொல்ல, மற்ற அனைவரும் சரியென கூறி இருந்தனர்.

அருண் அகில் தோள்களில் ஆதரவாக தட்டிக் கொடுத்து, கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து விடுவிக்க, அகில் அவனை அணைத்து கொண்டான். நர்மதா அனைவரிடமும் இன்முகமாக விடைபெற, ஏன் என்றே அறியாது அவளுக்கு கண்கள் கலங்கி போனது. இருவரும் ஒன்றாய் விடைபெற்று கொண்டனர்.

அவர்கள் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்கு பின் வந்தார்கள் அவர்கள், ஆர்த்தி அவர்களை இன்முகமாய் வரவேற்று இருந்தாள். காலை உணவுக்கான நேரம் என்பதால் பசியில் இருந்தவள் உணவு மேஜையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து உண்டிருந்தாள். அகில் இரவு உண்ணாது விட்ட அவளின் பங்கு அது. அவளுக்கு சரியாய் போய் சேர்ந்திருந்தது.

பெங்களூர் வந்து அகில் வேலையில் மூழ்கி இருந்தான். அவனின் டீம் லீட் என்னும் பதவி உயர்வு அவனின் நேரத்தை எல்லாம் களவாடிக் கொள்ள, மீதம் இருந்த நேரம் எல்லாம் நர்மதா உடன் செலவு செய்தான். அவள் என்ன கேட்டாலும் செய்து, அவள் எத்தனை கத்தினாலும் பொறுத்து போய், அவள் விருப்பம் போல ஆர்த்தி வீட்டுக்கு செல்லாது கொச்சினை சுற்றிப் பார்த்து, அவளுக்காக வீட்டில் உண்ண தொடங்கி என நிறைய நிறைய விட்டுக்கொடுத்து இருந்தான்.

சட்டென கோவமாக கத்துபவள், அகில் உன் இஷ்டம் போல செய்வோம் என்று கூறி மன்னிப்பு கேட்டால், சட்டென குளிர்ந்து விடுவாள். அவளின் கண் அசைவுக்கு ஏற்றபடி அவனை மாற்றி இருந்தாள் நர்மதா. வேண்டும் என்றால் அவனோடு கட்டிலில் கூடினால், வேண்டாம் என்றால் அவனை முழுதாய் தவிர்த்தாள். பல நேரங்களில் அவனின் பொறுமையை சோதித்து பார்த்தாள். அகிலேஷ் அவனளவில் அவனால் எந்த மன வருத்தமும், சங்கடமும், சண்டையும் பிரிவும் வந்துவிட கூடாது என தெளிவாய் இருந்தான்.

அதே போல கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கு இடையில் எவ்வித சண்டையும் சச்சரவு இல்லை. அனிதா இது தான் நேரம் என்று அவர்களை குழந்தைக்கு முயற்சி செய்ய சொன்னார். இருவரின் வாழ்வையும் குழந்தை என்னும் நூல் கொண்டு இழுத்து பிடித்து விடலாம் என்று நம்பினார்.

அன்று அகிலேஷ் இல்லம் வர, நர்மதாவின் தோழி பிரீத்தி வந்திருந்தாள். மஞ்சு இரவு உணவுக்கு கோழிக்கறி குழப்பும் சப்பாத்தியும் செய்து இருந்தாள். அகில் குளித்து வர, மூவரும் உண்ண அமர்ந்தனர். மஞ்சு பரிமாறும் போது பிரீத்தி கையில் குழம்பு லேசாய் சிந்தி விட, நர்மதா கத்தி விட்டாள்.

“நம்மு… தெரியாம தானே விடு” அகில் சொல்ல,

“என்ன தெரியாம? சூடான குழம்பு கையில் பட்டா வலிக்காது. வீட்டுக்கு வந்தவங்களுக்கு கொடுக்கிற மரியாதையா இது?”

“தெரியாம தான..? விடு.” அகில் சொல்லவும் அங்கே அமைதி.

மீண்டும் மஞ்சு பதட்டமாக பரிமாற, அகில் தட்டில் வைக்க வேண்டிய சாப்பாத்தி பாதி தட்டில் விழுந்து விட, நர்மதா கையை ஓங்கி இருக்க, அகில் அதை தடுத்து இருந்தான்.

“என்ன பண்ற நர்மதா? எதோ கை தவறி நடந்தது, ஏன் இத்தனை கோவம் உனக்கு? அதும் உன்னை விட வயசில் பெரியங்க அவங்க. நீங்க வீட்டுக்கு போங்க அக்கா. நாங்க பார்த்துக்கிறோம்.” அகில் சொல்ல,

“அகில் நீங்க சும்மா இருங்க. ஏய் இனி நீ வேலைக்கு வர வேண்டாம். உன் பாக்கியை காலையில வந்து வாங்கிட்டு போ. அவ்ளோ தான்.”

“நர்மதா… என்ன பேசற? சாதாரண விஷயத்துக்கு எதுக்கு இத்தனை பெரிய முடிவு? கொஞ்சம் அமைதியாகு. மஞ்சு அக்கா நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கு பேசிப்போம்.” அகில் சொல்ல, பிரீத்தி உணவை முடித்து எழுந்திருந்தாள்.

பிரீத்தி அவசரமாய் விடைபெற்று கிளம்ப, நர்மதா கோவமாக சோஃபாவில் சென்று அமர்ந்து விட, அகில் அவளுக்கு உணவை ஊட்டி விட வர தட்டை தட்டி விட்டு இருந்தாள்.

“டேய் நம்மு ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு ஏன் இத்தனை கோவம். சாப்பிடு வா.” அகில் அருகில் வந்து சமாதானம் சொல்ல, அவனின் சட்டையை பிடித்து சோபாவில் இருந்து கீழே தள்ளி விட்டு இருந்தாள். அகில் பெருமூச்சை வெளியேற்றி ஹாலை சுத்தம் செய்து, உணவு மேஜையில் உள்ளதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, அவனை சுத்தம் செய்ய படுக்கை அறைக்குள் நுழைந்து இருந்தான்.

குளித்து வந்து உடை மாற்றி கண்ணாடி முன் நின்று அவனின் தலை முடியை வாரிவிட்டு சீப்பை கீழே வைக்க, அங்கே ஒரு அட்டை முழுக்க புதிதாய் மாத்திரைகள். அட்டையின் மேலே அன்வான்டட் (unwanted) என்று எழுதி இருக்க, அகில் அதை எடுத்து பார்த்தவன் நர்மதா முன் வந்து நின்று இருந்தான்.

“என்ன இது? எப்ப இருந்து சாப்பிட்டு இருக்க இதை? இல்ல இனி தான் தொடங்க போறியா?” அகில் கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்க,

“கல்யாணமான நாளில் இருந்து சாப்பிட்டு இருக்கேன்.”

“யாரை கேட்டு இதை சாப்பிட்டு இருக்க நர்மதா நீ? எனக்கு இதை சொன்னியா?”

“யாரை கேட்கணும் நான்? எனக்கு இப்ப குழந்தை வேண்டாம். பெத்துக்க விருப்பம் இல்ல. அதான் சாப்பிட்டு இருக்கேன்.”

“உனக்கு வேண்டாம் சரி. எனக்கு வேணுமா வேண்டமானான்னு கேட்டியா? என்னை கேட்காம குழந்தை விஷயத்தில் முடிவு எடுப்பியா?”

“எனக்கு விருப்பம் இல்ல. அவ்ளோ தான். உனக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்கவோ, யோசிக்கவோ வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.”

“அதானே நான் உனக்கு அவசியம் இல்லாதவன் தான எப்பவும்…”

“அப்ப இதுல என் விருப்பம் முக்கியம் இல்லையா?”

“எல்லாத்துக்கும் உன் விருப்பம் மட்டும் தான் முக்கியம் இல்ல. எனக்குன்னு ஒரு விருப்பமே இருக்காதா? குழந்தை இப்ப வரும் அப்ப வரும்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன் நர்மதா நான், இல்ல இப்ப வேண்டாம்னு சொல்றதுக்கு என்ன? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? என்னை ஏன் எதிலும் கலந்துக்காம நீயே ஒரு முடிவை எடுக்குற?”

“பெத்துக்க போற நான் தான் இதை முடிவு பண்ணனும். பத்து நிமிஷம் படுத்து எந்திரிக்க போற உனக்கு என்ன பிரச்சனை?”

“வாய் பேசாத, அதும் அசிங்கமா பேசின அவ்ளோ தான் சொல்லிட்டேன். பத்து நிமிஷம் தான் கடவுள் எங்களுக்கு பாக்கியத்தை கொடுத்து இருக்கான். அதையும் ஆத்மார்த்தமா நேசிச்சு தான் செய்தேன். இதெல்லாம் விடு. இனி மாத்திரை சாப்பிடு கூடாது புரியுதா?”

“அப்ப நீ காண்டம் வாங்கிக்கோ.”

“நர்மதா என்ன பேசற? எதுக்கு அதெல்லாம்? எனக்கு அந்த எண்ணமே இல்ல. அதுவும் இல்லாம குழந்தை பெத்துக்க இது சரியான வயசும் கூட, எதுக்கு தள்ளி போட நினைக்கிற…”

“என்ன சொல்றேன் புரியுதா இல்லையா? எனக்கு குழந்தை பெத்துக்க வேண்டாம். எனக்கு எப்ப விருப்பம் இருக்கோ அப்ப தான் பெத்துப்பேன். என்னை போர்ஸ் பண்ணாத அகில்.”

“சரி. உன் விருப்பம் போலவே நடக்கட்டும். மாத்திரை எல்லாம் சாப்பிட வேண்டாம். உடம்புக்கு கெடுதல் அதெல்லாம். நம்ம தள்ளி இருந்துப்போம்.” அகில் சொல்ல,

“ஏன் என்கூட படுக்க வலிக்குதா உனக்கு? நான் சொல்றதை செய் அது போதும். நீயா எதையும் முடிவு பண்ணாத…” நர்மதா சொல்ல, அகில் இப்போது அவளை கோவமாக முறைக்க,

“என்ன முறைக்கிற? என் வீட்டில் இருந்துட்டு, என் சாப்பாட்டை தின்னுட்டு, எனக்கே நீ ஆர்டர் போடுவியா? நான் சொல்றதை தான் நீ செய்யனும். ஹுக்கும் செய்யுற…” நர்மதா சொல்லவும்,

“என்ன பேசறேன் புரிஞ்சு பேசு. நான் உனக்கு புருஷன், அடிமை இல்ல.” அகிலேஷ் அவளின் கண் பார்த்து கோவமாய் சொல்ல,

“அஞ்சு லட்சம் கொடுத்து வாங்கி இருக்கேன் உன்ன, என் விருப்பம் போல தான் நீ நடக்கவும் செய்யனும், படுக்கவும் செய்யனும். என் விருப்பம் போல உன்னால இருக்க முடியாதா? பிரச்சனையே இல்ல என் வீட்டை விட்டு வெளிய போ…” நர்மதா அவன் சட்டை காலரை பிடித்து வாசல் நோக்கி தள்ள, அகிலேஷ் அவளை கூர்ந்து பார்க்க,

“ என்ன லூக்கு உனக்கு? வெளிய போன்னு சொன்னேன்.” நர்மதா அறையே அதிர கத்த, அவனின் லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான்.

அவர்களின் அபார்ட்மெண்ட் இருப்பது நான்காம் மாடியில் அகில் லிஃப்ட் மூலம் கீழ் இறங்கி நடந்து வர, சரியாய் அவர்களின் பால்கனி தாண்டி அடி எடுத்து வைக்க, நர்மதா அவனின் பெட்டியை பால்கனி வழியே தூக்கி எறிந்து இருந்தாள். அவனின் உடமைகளை எல்லாம் எடுத்து வெளியே வீசி இருந்தாள். அகில் அதிர்ந்து போய் அவளை பார்க்க, கழுத்தில் கிடந்த தாலியையும் கழட்டி அவன் முகத்தின் மீதே விட்டு அடித்து இருந்தாள்.

© GMKNOVELS