...

36 views

எனக்கென உன்னைத் தந்து - 14
அத்தியாயம் - 14

அகிலேஷ் அவளையே பார்த்து அதிர்ந்து நிற்க, அவளோ பால்கனியின் கதவை அடைத்து விட்டு சென்று இருந்தாள். பெட்டி விழுந்த சத்தத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்க்க, அகிலேஷ்வரன் அவமானத்தில் கூனி குறுகி போய் இருந்தான். காவலாளி வந்து உதவ, அகில் அவன் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டான்.

சுற்றி இருப்பவர்களின் கலவையான பார்வையில் கை, கால் எல்லாம் அவமானத்தில் நடுங்க, அழுகை வந்தது. உடைந்து விடாமல் இருக்க நிறைய போராடினான். மூச்சு வாங்க அனைத்தையும் எடுத்து வைத்தவன் நண்பனை அழைத்து விவரம் சொல்ல, அசோக்கும் சாரதியும் பதறி அடித்துக் கொண்டு வந்து இருந்தனர். நண்பர்களை கண்டதும் அகிலேஷ் உடைய, சாரதி அவனை கைதாங்கி காருக்குள் அமர வைத்தான். அசோக் அவன் உடமைகளை எல்லாம் எடுத்து காரின் பின்னே வைக்க, அகிலேஷ் உடைந்து அழுது இருந்தான்.

சாரதியும் அசோக் உடன் உதவி அனைத்தும் எடுத்துக் கொள்ள, காரை எடுத்திருந்தான் சாரதி. நண்பனின் இல்லம் வந்து அனைத்தையும் வைத்து விட்டு, அகிலிடம் விவரம் கேட்க, அவனோ அழுகையில் கரைய,

“என்னடா ஆச்சு?” சாரதி கேட்க, அகில் அவன் சட்டை பையில் இருந்து தாலியை எடுத்து காட்டி அழ, அசோக் அதிர்ந்து பார்க்க, அகிலேஷ் தாலியை நெஞ்சோடு சேர்த்து மீண்டும் அழுதிருந்தான்.

அவனை படுக்கையில் படுக்க வைத்து, ஜெய் பிரகாஷிடம் அவனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சாரதியும் அசோக்கும் அறை விட்டு வெளியே வந்து சதீஷை அழைத்து இருந்தனர்.

“என்னாச்சு அசோக்? இந்த நேரத்தில் ஃபோன் பண்ணி இருக்க?” சதீஷ் கேட்க,

“அக்கா பக்கத்தில் இருந்தா தள்ளி வாங்க மாம்ஸ்.” அசோக் சொல்ல, சதீஷ் அவர்களின் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தான்.

“என்னடா? அகில் எப்படி இருக்கான்.”

“அண்ணா அகில் அரை மணி நேரத்துக்கு முன்னாடி கூப்பிட்டு வீட்டுக்கு வாங்கடா அவசரமுன்னு சொன்னான். அங்க போனா, பெட்டி, துணி, ஷூ, ஹாட் வாட்டர் பேக்குன்னு எல்லாத்தையும் கையில் வெச்சுட்டு நடுங்கிட்டு நின்னுட்டு இருந்தான். எங்களை பார்த்ததும் உடைஞ்சு அழ ஆரம்பிச்சுட்டான். நாங்க எல்லாத்தையும் எடுத்துட்டு அவனை வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டோம். என்னாச்சுன்னு கேட்டேன் தாலியை காட்டி அழறான் அண்ணா. எங்களுக்கு பயமா இருக்கு கிளம்பி வாங்களேன்.” அசோக் சொல்ல,

“அகில வீட்டை விட்டு துரத்தி விட்டாளாடா அவ?” சதீஷ் குரல் உடைய கேட்க,

“அப்படி தான் போல மாம்ஸ்… தாலியை கழட்டி கொடுத்து இருக்கே” சாரதி சொல்ல,

“வரேன் அசோக். நாங்க வர வரைக்கும் அவனை பத்திரமா பார்த்துக்கங்க.” சதீஷ் சொல்லிவிட்டு வைத்தவன், மாமனாரை அழைத்து விவரம் சொல்ல, அருணகிரி அதிர்ந்து போய் மீண்டும் கேட்க சதீஷ் கோவத்தில் கத்தி இருந்தான்.

அவன் கோவத்தில் கத்தியதில் ஆர்த்தி பயந்து எழுந்து வர, சதீஷ் பேசியதை கேட்டு தலையில் அடித்து கொண்டு அவள் கதறி அழ,

“அடியே ஒப்பாரி வைக்காம முதல கிளம்பு. அங்க அகில் உடைஞ்சு போய் இருக்கான். என்னால உன்னையும் பார்த்து அவனையும் பார்க்க முடியாது. பிள்ளைகளை எழுப்பி விடு போ.” சதீஷ் கத்த ஆர்த்தி அழுகையோடு எழுந்து செல்ல,

சதீஷ் அருணை அழைத்து விவரம் சொல்லி வீட்டிற்கு வர சொன்னான். சரண்யா முதல் முறையாக வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளைகள் உடன் கிளம்பி இருந்தாள்.

“அண்ணா நீங்க பிள்ளைகளை கோவையில் விட்டு போங்க. நான் வந்து பார்த்துக்கறேன். இவரை பெங்களூர் அனுப்பி விடுறேன். நீங்க அத்த, மாமாவை கூப்பிட்டு வாங்க. ஒரு மணி நேரத்தில் கிளம்பிடுவேன்.” சரண்யா தகவல் சொல்ல, ஆர்த்தி பிள்ளைகளை கிளப்பி இருந்தாள்.

சதீஷ், கோவைக்கு ஆர்த்தியை பிள்ளைகளுடன் காரில் அனுப்பி விட்டவன், நேரடியாக பெங்களூர் கிளம்பி இருந்தான். அதிகாலையில் ஆர்த்தி வர, அவள் இல்லம் வரும் முன் சரண்யா வந்திருந்தாள்.

ஆர்த்தியை கண்டு அனிதா அழ, அருணகிரி தலை குனிந்து அமர்ந்து இருந்தார். தகப்பனை முதல் முறையாக முறைத்து வைத்தாள் ஆர்த்தி. அனிதா அழுகையுடன் அமர்ந்திருக்க,

“அண்ணி டிராவல்ஸ்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன். முகம் கழுவிட்டு வாங்க ஒரு காபி குடிச்சிட்டு கிளம்புங்க.” சரண்யா சொல்ல, பிரச்சனை என்றதும் ஆறுதலாக நின்ற சரண்யாவை, ஆர்த்தி அழுகைக்கு இடையிலும் அணைத்து இருந்தாள்.

அருண் தான் முதலில் அசோக் இல்லம் வந்தது. தம்பியை தேடி வந்தவன் பார்த்தது அழுகையில் முகம் சிவந்து, கண்கள் வீங்கி, சோர்ந்து காய்ச்சல் கண்டு படுத்திருந்த அகிலேஷை தான். அருண் அவன் கை தொட, அகில் கண் விழிக்கவே இல்லை.

“இப்ப தான் அண்ணா பக்கத்து ஹாஸ்பிடல் கூப்பிட்டு போய்ட்டு வந்தோம். பாலும் மாத்திரையும் கொடுத்து தூங்க வெச்சு இருக்கோம். ரொம்ப உடைச்சு போயிட்டான்.” சாரதி சொல்ல, அவன் தலையை வருடிக் கொடுத்து விட்டு ஹாலில் சென்று அமர்ந்திருந்தான்.

அதிகாலையில் தான் சதீஷ் வந்து சேர்ந்தான். சரியாய் அப்போது தான் அகில் எழுந்திருந்தான். மாமனை கண்டதும் அவனை அணைத்துக் கொண்டவன் கதறி அழுதிருந்தான். அவனை அப்படி இதுவரை கண்டிராத சதீஷ் உடைந்து விட, அவனுக்கும் கண்ணீர் பெருகி இருந்தது.

“என்னாச்சு? ஏன் நர்மதா அப்படி செய்தா?” சதீஷ் கேட்கவும்,

அகில் அவனிடம் பாடம் ஒப்பிப்பது போல நடந்த அனைத்தையும் சொல்லி, அவன் சட்டை பையில் இருந்து தாலியை எடுத்துக்காட்ட, சதீஷ் முகத்தில் அத்தனை ஆத்திரம்.

“ரொம்ப அவமானமா போய்டுச்சு மாமா. அத்தனை பேர் முன்னாடி என் பெட்டியை தூக்கி போட்டு, தாலியை மூஞ்சியில் விட்டு அடிச்சுட்டா எனக்கு கை கால் எல்லாம் நடுங்கி போய்டுச்சு. நான் சாகுற வரை மறக்காது மாமா இந்த அவமானம்.”

“எல்லாமே அவ விருப்பம் போல விட்டுக் கொடுத்தேன் மாமா. உங்களுக்கு கூட சொல்லாம கொச்சின் வந்துட்டு போனேன். குலதெய்வ வாக்கு மாமா. அப்படியே நடந்துடுச்சு பாருங்க. இது நடக்க கூடாதுன்னு தானே பயந்தேன். நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கே தெரியல. எல்லாரும் என்னை கேவலமா பார்க்கிற மாதிரி இன்னும் உடம்பு நடுங்குது.” அகில் புலம்பி அழ, சதீஷ் அவனை அமைதியாக்க வழி தெரியாது அவனை பேச விட்டு அமர்ந்திருந்தான். பேசி பேசி சதீஷ் மடியிலேயே படுத்து அழ தொடங்கி இருந்தான்.

“போதும் அகில். நடந்தது நடந்தாச்சு. இனி என்ன செய்ய போற அதை யோசி. அருண் இருக்கான், அத்த, மாமா, ஆர்த்தி எல்லாம் வந்துட்டு இருக்காங்க. உனக்கு நர்மதா வேணுமா? என்ன முடிவு செய்து இருக்க?” சதீஷ் கேட்க, அகில் அதிர்ந்து விழித்தான்.

“என்னால அவளுக்கு அடிமையா வாழ்க்கை முழுக்க வாழ முடியாது மாமா. அத்தனை கேவலமா இருக்கு எனக்கு, அஞ்சு லட்சம் கொடுத்து என்னை வாங்கினேன் சொல்றா மாமா அவ, எல்லாத்தையும் மறந்துட்டு அவளோட என்னால எப்படி வாழ முடியும்? நேத்து போல மறுபடியும் வெளிய போன்னு தள்ள மாட்டாளா? என்னால இனி எதையும் தாங்க முடியாது.” அகில் சொல்லிவிட்டு ஓய்ந்து போய் அமர, சதீஷ் அவன் கைகளை பிடித்துக் கொண்டான்.

ஜெய் பிரகாஷ் அனைவருக்கும் காலை உணவை வாங்கி வந்திருக்க, சதீஷ் தான் அகில் உடன் சண்டை போட்டு உண்ண வைத்து, மருந்துகளையும் கொடுத்து இருந்தான். அகில் உறங்க, சதீஷ் அவனின் நண்பனுக்கு அழைத்து விவாகரத்து பற்றிய விவரங்கள் எல்லாம் பெற்றுக் கொண்டான்.

மாலை ஆர்த்தி பெற்றோர் உடன் வர, அகில் அன்னையின் மடியில் ஒரு முறை அழுது தீர்த்து இருந்தான். அருணகிரி அழும் மகனை பார்த்து அமைதியாய் அமர்ந்திருக்க,

“மாமா நர்மதா வீட்டில் இருந்து எதும் தகவல் வந்துச்சா?” சதீஷ் கேட்க,

“வந்துச்சு மாப்பிள்ள. நர்மதா கோவத்தில் அப்படி செய்துட்டாளாம், அகில் எங்கன்னு கேட்டாங்க.”

“நீங்க என்ன சொன்னீங்க? நானே மகனை கொண்டு வந்து விடுறேன்னு சொன்னீங்களா?” சதீஷ் சூடாக கேட்க, அவர் தலையை தாழ்த்த,

“உங்களால தான் அவனுக்கு இந்த நிலைமை. இந்த காலத்தில் கல்யாணம் பண்ற பொண்ணுகளே கல்யாணம் முடிஞ்ச கையோட தனி குடித்தனம் தான் போவோம்னு சொல்றாங்க. நீங்க உங்க மகனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி இருக்கீங்க. நான் எத்தனை முறை சொன்னேன் இவங்கிட்ட வேண்டாம்னு, நீங்க சொன்னா சரியா இருக்கும். அப்பா நமக்கு நல்லது தான் செய்வாருன்னு அகில் உங்களை முழுசா நம்பினதுக்கு, உங்களால் முடிஞ்ச எல்லாத்தையும் அவனுக்கு செய்துட்டீங்க. போதும்.”

“ இனி, அவன் என் பொறுப்பு. உங்க தயவு அவனுக்கு இனி தேவை இல்ல. நர்மதா வீட்டுக்கு போய் வாங்கின வரதட்சணை எல்லாம் கொடுத்துட்டு, நான் தர விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டு வந்துடுங்க. அவன் அவமானப்பட்டு நிக்கிறான். அவன் அவமானத்தில் நடுங்கினதை நீங்க பார்க்கல. இனி அவளோட வாழவே முடியாதுன்னும் சொல்லிட்டான். சமாதானம் பண்ற எல்லையை மீறி போய்டுச்சு. இனி வெட்டி விடுறது தான் நல்லது.” சதீஷ் சொல்லவும், அனிதா அழ தொடங்க,

“அத்த அவன் முன்னாடி இனி யாரும் அழ கூடாது. நீங்களும் தான். புரியுதா?” சதீஷ் கேட்க அனிதா அழுகையை விழுங்கி இருந்தார்.

அருணகிரி, சதீஷ், அருண், அனிதா என நால்வரும் கிளம்பி இருக்க, ஆர்த்தி அகில் உடன் இருப்பதாக கூறி விட்டாள். அகில் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிய தொடங்கி இருக்க சாரதி மட்டும் அவனோடு இருந்தான். மற்றவர்கள் வேலைக்கு கிளம்பி இருந்தனர்.

நர்மதா வீட்டிற்கு நால்வரும் செல்ல, கணேசன் அவரை வரவேற்று இருந்தார். சில நிமிடங்கள் மௌனமாக செல்ல, மஞ்சு வந்து அனைவருக்கும் டீ கொடுக்க, யாரும் அதை எடுக்காது போக,

“டீ குடிங்க…” கணேசன் சொல்ல,

“உங்க வீட்டில் தண்ணி குடிக்க கூட எங்களுக்கு விருப்பம் இல்ல. சுத்தி வளைச்சு எல்லாம் பேச விரும்பல. உங்க பொண்ணுக்கு நீங்க கொடுத்த 70 சவரன் நகையும் அவங்ககிட்ட தான் இருக்கு, உங்க பொண்ணு கொடுத்த அஞ்சு லட்சம் பணம் இந்த செக்கில் இருக்கு. செக்கை வாங்கிட்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லுங்க. போதும்.” சதீஷ் சொல்ல,

“இதென்னப்பா வெட்டிவிட சொல்றீங்க. என் பொண்ணு செய்தது தப்பு தான். அவ கோபத்தில் எதோ தெரியாம பண்ணிட்டா, நீங்க அதை பெருசு பண்ணாதீங்க. மாப்பிள்ளை எங்க? அவரை கூப்பிட்டு வரலையா?” கணேசன் கேட்க,

“இதே உங்க பொண்ணை என் தம்பி வீட்டை விட்டு துரத்தி, பெட்டியை தூக்கி ராத்திரி நேரத்தில் ஏறிஞ்சு இருந்தா நீங்க சும்மா இருப்பீங்களா? வெட்டி விடனும்னு நாங்க வரல. உங்க பொண்ணு கழுத்தில் இருந்த தாலியை கழட்டி என் தம்பி முகத்தில் வீசி இருக்காங்க. ஆக இந்த முடிவை முதல எடுத்தது உங்க பொண்ணு தான்.” அருண் கோவமாக சொல்ல, சதீஷ் அவனை அமைதியாக பேச சொன்னான்.

© GMKNOVELS