...

36 views

எனக்கென உன்னைத் தந்து - 9
அத்தியாயம் - 9

அகில் அறைக்கு வந்து உடை மாற்றி விட்டு, அவனின் பைக் சாவி எடுத்து வெளியே கிளம்ப, நர்மதா உணவு மேஜையில் அமர்ந்திருக்க, அவளின் பெற்றோர் உடன் இரவுணவை உண்டு கொண்டு இருந்தாள்.

“நான் வேலையா வெளிய போறேன். வந்துடுவேன்…” பொதுவாகச் சொன்னவன் கிளம்பி இருந்தான்.

பைக் வரை வந்து எங்கே செல்வது என்று யோசித்தவனுக்கு, நண்பனின் நினைவு வர அவனுக்கு அழைத்தான்.

“அசோக் நான் அகில் பேசறேன். தனியா இருக்கனும். உன் ரூம் சாவி வேணும்.” அகிலேஷ் கேட்க,

“அகில்… நம்ம சாரதி அவன் ஆளோட தனியா இருக்கனும் சொல்லிச் சாவி வாங்கிட்டான். நான் அவன்கிட்ட கேட்டுச் சொல்லட்டுமா? சாரி மச்சி.”

“கேட்டுச் சொல்லு…” அகில் சொல்லவும், அசோக் அழைப்பை முடித்து இருந்தான்.

சரியாய் அடுத்த ஐந்து நிமிடத்தில் அழைத்து இருந்தான் அசோக்.

“அவன் அங்க தான் இருக்கான். நீ போ. ஜெய்குமார் ஊரில் இல்ல, நீ அவன் ரூமில் இருந்துக்க…” அசோக் சொல்ல, அகிலேஷ் சரியென்று கூறிவிட்டு வைத்து இருந்தான்.

அசோக் இல்லம் வந்து வாசலில் வண்டியை நிறுத்த, சாரதி புன்னகை முகத்துடன் அவனை வரவேற்க,

“தொந்தரவு பண்றேன்னு தெரியுது. ஆனா எனக்கு இப்ப தனியா இருக்க தோணுது அதான் சாரி டா.”

“டேய்… உன்னை எங்களுக்குத் தெரியாதா? ஜெய் ரூமில் இருந்துக்க, எல்லாம் காலையில பேசலாம்.” சாரதி சொல்ல அகிலேஷ் ஜெய் அறைக்குள் நுழைய,

சாரதி அவன் கையில் ஒரு பிஸ்ஸா பெட்டியும், தண்ணீரையும், குளிர்பானத்தையும் கொடுக்க,

“உன் குரலே சரியில்லைன்னு அசோக் சொன்னான். பொண்டாட்டி கூட முதல் சண்டை போலன்னு வேற சொன்னான். அதான் எங்களுக்கு வாங்க போகும்போது உனக்கும் வாங்கிட்டு வந்தேன். உன் முகமே unbசோர்வை சொல்லுது. போ சாப்பிட்டு தூங்கு.” சாரதி சொல்ல அகில் சரியென அதை வாங்கிக்கொண்டு அறைக்குள் வந்தான்.

முதல் வேலையாக அலைபேசியை அணைத்து போட்டவன். அமைதியாய் உணவைக் கையில் எடுத்து இருந்தான். ஒரு வாய் வைத்ததும் சட்டெனக் கண் கலங்கி போனது. நர்மதா அவளின் பெற்றோர் முன் கேள்வி கேட்டதும், அவனின் மாமியார் அவன் தாயை பற்றியே குறை சொன்னதும் என எல்லாமே வலியைத் தான் தந்தது. திருமணமாகி இருபது நாளுக்குள் எத்தனை கலவையான உணர்வுகள்? அதில் எத்தனை உடல் சோர்வும், மன சோர்வும் என யோசிக்க, அகில் பெருமூச்சு விட்டு இருந்தான்.

நண்பன் கொடுத்த உணவை உண்டு, குளிர்பானம் குடித்து, இடத்தைச் சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு, ஏசியை கூட்டி விட்டுப் படுத்து இருந்தான். நர்மதா, அனிதா, ஈஸ்வரி, கணேசன் என அனைவரின் முகங்களும் அவர்களின் விருப்பு வெறுப்பும் என அவனை ஆழ்ந்து உறங்க விடாது நினைவுகள் அலைக்கழிக்க ஆழ்ந்து உறங்கவே நள்ளிரவுக்கு மேலாகி இருந்தது.

இங்கே, அகிலை எண்ணி மஞ்சு தான் கலங்கி நின்று இருந்தாள். மதியம் அவன் சமைத்த சுவடும் இல்லை, வெளியே வாங்கி உண்டதற்கான தடயமும் இல்லை. ஆக அவன் மதியம் உண்ணவில்லை என்பதும், இப்போதும் உண்ணாது எழுந்து சென்று விட்டான் என்பதும் புரிய, மஞ்சுவுக்கு கண்கள் கலங்கி போனது. ஆனால் அந்த வீட்டில் மற்ற மூவரும் அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்திருந்தனர்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் பொறுமையாய் எழுந்து, அவளின் அன்றாட வேலைகளைத் தொடங்கி இருந்தாள் நர்மதா. மஞ்சு இல்லம் வந்தவள் அகிலை கண்களால் தேட அவன் இருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை. நர்மதா சொன்னது போலவே காலை உணவைச் செய்து வைக்க, நர்மதா உண்டு விட்டுப் படம் பார்க்க அமர்ந்திருந்தாள். மதிய உணவுக்கு என்ன செய்ய என்ற கேள்வியுடன் வந்து நின்று இருந்தாள் மஞ்சு,

“ மட்டன் பிரியாணியும், மட்டன் சுக்காவும் செய்.” நர்மதா சொல்ல, மஞ்சு தயங்கி நிற்க,

“என்ன வேணும் மஞ்சு? எதுக்கு நிக்கிற?” ஈஸ்வரி கேட்க,

“அகில் தம்பிக்கு மட்டன் அதிகம் பிடிக்காது அதான்…” மஞ்சு சொல்லிவிட்டு நர்மதா முகத்தைப் பார்க்க, அப்போது தான் மணியைப் பார்த்தாள் நர்மதா.

“அவர் தான் இன்னும் வரலையே? அவர் வந்த அப்புறம் கேட்டுச் செய்து கொடுக்கலாம். இப்ப போய் நான் சொன்னதை செய்.” நர்மதா சொல்லவும் மஞ்சு சரியென்று சென்று இருந்தாள்.

நர்மதா அகிலை அழைக்க, அவனின் அலைபேசி ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அதுவே பதிலாக வரவும், நர்மதா அவனின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவளின் நண்பர்களிடம் கேட்க, அகில் அங்கே இல்லை என்று சொல்ல, மீண்டும் அகிலுக்கு அழைத்துப் பார்க்க அதுவும் அதே பதிலைத் தான் தந்தது. மாலைக்குள் வந்துவிடுவானென மனதை தேற்றிக் கொண்டு நர்மதா இயல்பாக இருக்க, மதிய உணவு வேளையும் கடந்து மாலையும் வந்திருந்தது. இப்போதும் ஸ்விட்ச் ஆப் என்ற பதிலே வரவும் நர்மதா பதட்டமாகத் தொடங்கி இருந்தாள்.

“அப்பா அவர் நம்பர் எடுக்கல. ஆபீஸிலும் அவர் இல்ல. இப்ப வரை வீட்டுக்கும் வரல.” நர்மதா சொல்ல,

“அவர் ப்ரெண்ட்ஸ் யார் வீட்டுக்கும் போய் இருப்பார் கூப்பிட்டு கேளு.”

“அவரோட ப்ரெண்ட்ஸ் யாரையும் எனக்குத் தெரியாது. இன்னும் அறிமுக செய்துக்கல நாங்க…” நர்மதா சொல்ல, கணேசன் அவளை முறைக்க

“அப்பா பிளீஸ்…”

“உன் மாமனார் நம்பர் இருக்கு தான? அவருக்குக் கூப்பிட்டு அகில் ப்ரெண்ட்ஸ் நம்பர் வாங்கு.” கணேசன் சொல்லவும், நர்மதா அவரை அழைத்துக் கேட்க,

அவரோ அவரிடம் அகில் நண்பர்களின் எண்கள் இல்லை என்று கூறி, சதீஷை அழைத்துக் கேட்கச் சொன்னார். விஷயம் அறிந்த அனிதா அங்கே கத்திக் கொண்டு இருக்க, நர்மதாவுக்கு அகிலின் பொறுப்பற்ற நடத்தையில் எரிச்சல் வந்தது. பின் சதீஷை அழைத்து விவரம் சொல்ல,

“உங்களுக்குள்ள எதும் சண்டையா நர்மதா?” சதீஷ் கேட்க,

“ப்ரோ பிளீஸ். அவர் ப்ரெண்ட்ஸ் நம்பர் கொடுங்க. ஏற்கனவே அகில் எதையும் சொல்லாம போனதும் இல்லாம போனை வேற ஸ்விட்ச் ஆப் பண்ணி வெச்சு என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்கார். நீங்கத் தனியா விசாரணை பண்ணி என்னை இன்னும் டென்ஷன் பண்ணாதீங்க.” நர்மதா கோவமாகக் கூற,

“என் தம்பியை நீ என்ன பேசின? ஏன் அவன் ராத்திரி வீட்டை விட்டுப் போனான்? நேத்து ராத்திரி போனவனைப் பத்தி இன்னிக்கி ராத்திரி தேடிட்டு இருக்க? ஒரு ராத்திரி அவன் வீட்டுக்கே வரல அது உனக்குப் பெருசா தெரியல இல்ல என்ன பொண்டாட்டி நீ? எதையும் சொல்லாம நம்பர் கேட்டா எப்படி கொடுக்க?” ஆர்த்தி இடையில் அலைபேசி வாங்கி கேட்க,

“அறிவுக்கெட்டதனமா எதையாவது கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க சரியா? இப்ப உங்களால நம்பர் தர முடியுமா முடியாதா?” நர்மதா கேட்க,

“நர்மதா கொஞ்சம் மரியாதையா பேசுமா. நேத்து அகில் அவன் ப்ரெண்ட் அசோக் வீட்டுக்குப் போய் இருக்கான். இப்ப வீட்டுக்குத் தான் வந்துட்டு இருக்கானாம். அவன் ஃபோன் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு. ஃபோன் சார்ஜர் அவன் ப்ரெண்ட்ஸ் ஊருக்குப் போகும்போது எடுத்துட்டு போனதால் சார்ஜ் போட முடியலயாம்.” சதீஷ் தகவல் சொல்ல,

“சாரி அண்ட் தாங்க்ஸ் ப்ரோ.” நர்மதா சொன்னவள் அழைப்பை முடிக்க, அகில் சரியாய் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி இருந்தான்.

மஞ்சு திறக்க, உள்ளே வந்தவன் நேராய் அறைக்குள் சென்று இருந்தான். நர்மதா அவனைப் பார்த்ததும் அலைபேசியை படுக்கையில் போட்டு விட்டு ஓய்ந்து அமர, அகில் அவனின் அலைபேசியை சார்ஜில் பொறுத்தி விட்டுக் குளிக்கச் சென்று இருந்தான். குளித்து வந்தவன் மீண்டும் கிளம்ப,

“எங்க போற அகில் நீ?”

“சாப்பிட போறேன் நர்மதா. என்னோட வரியா டின்னர் போலாம்.”

“எங்க போறேன்னு சொல்லிட்டு போக மாட்டியா அகில்? உன்னால எனக்கு எவ்ளோ டென்ஷன் தெரியுமா? உங்க அக்கா என்னவோ நான் உன்னைச் சண்டை போட்டு வெளிய துரத்தின மாதிரி அத்தனை கேள்வி கேக்குறாங்க? இப்ப நீ என்னவோ கூலா வந்து டின்னர் போலாம்னு கூப்பிடுற? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்க எல்லாருக்கும்?” நர்மதா கேட்க, அகில் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

வெறும் பதினாறு புள்ளிகள் மட்டுமே சார்ஜ் செய்து இருந்த அலைபேசியை உயிர்ப்பித்து சதீஷை அழைக்க, எடுத்தவுடன் சதீஷ் திட்டத் தொடங்கி இருந்தான்.

“எங்கடா போன? ஏன் எல்லாரையும் டென்ஷன் பண்ற? உங்க அக்கா இங்க ஒப்பாரி வைக்கிறா, உனக்குக் கல்யாணமாகிடுச்சு அகில். எங்க போனாலும் நேரா நேரத்துக்குக் கூப்பிட்டு வீட்டில் தகவல் சொல்லனும். அந்தப் பொண்ணும் பயந்து போய் எதேதோ பேசி, உன் அக்காவும் பேசி வீண் சங்கடம் டா. பார்த்துக்க…”

“இல்ல மாமா… இனி இப்படி நடக்காது மாமா. நான் கவனமா இருக்கேன். சாரி… சாரி… அக்காகிட்ட கொடுங்களேன். நான் பேசறேன்.”

எதிரில் ஆர்த்தி அழ, அவளைச் சமாதானம் செய்து, பிள்ளைகள் இருவரிடமும் பேசி முடித்து அகில் அலைபேசி வைத்தவன் அமைதியாய் அமர்ந்து விட்டான். அவனுக்கு மீண்டும் தலை வலித்தது. அதற்குள் அடுத்ததாக அவனின் அன்னை அழைக்க, அகில் அவருக்கும் பதில் சொல்லி முடித்து அமர,

“எழுந்து வாங்க சாப்பிட…”

“எதாவது சொல்லிட போறேன். என் கண் முன்னாடி நிக்காத போய்டு.” அகில் கத்த,

“எதுக்கு இப்ப கத்திட்டு இருக்கீங்க? நான் உங்களைக் காணோம்னு பதட்டத்தில் கூப்பிட்டா உங்க அக்கா விசாரணை பண்ணிட்டு இருக்காங்க. இருந்த டென்ஷனில் கத்தி விட்டேன்.”

“அதுக்கு மரியாதை இல்லாம பேசுவியா? உன் அப்பா, அம்மாவை நான் பேசினா கேட்டு நீ சும்மா இருப்பியா? தெரியாம தான் கேக்கறேன் உனக்குத் தன்மையா பேசவே வராதா? என் மேல உனக்கு அக்கறை அப்படி தான? நேத்து எங்க போச்சு அந்த அக்கறை? நான் ராத்திரி அந்நேரம் வீட்டை விட்டு வெளிய போனப்பா நீ எதும் கேட்கலையே? அப்புறம் இப்ப மட்டும் என்ன?”

“அகில் வேலை இருக்குன்னு சொல்லிட்டு போனது நீங்க, நீங்க ஏன் எனக்கு எதையும் சொல்லல? நான் கேட்காம விட்டேன் சொல்ற நீங்க மட்டும் சொல்லிட்டா போனீங்க?” நர்மதா கேட்க,

“எனக்கே எங்க போறேன்னு தெரியாது. அப்புறம் எப்டி சொல்வேன்? சனிக்கிழமை ராத்திரியிலிருந்து சரியா சாப்பிடல நான், நேத்து ராத்திரி தான் பசிக்கவும் சாப்பிட உக்காந்தேன். அதுக்குள்ள நீ உங்க அப்பா அம்மா முன்னாடி என்னை விட்டுக் கொடுத்துக் கேட்டியே கேள்வி அதில் அவ்ளோ மனநிம்மதி. அடுத்து உங்க அம்மா… அதான் கொஞ்சம் அமைதி தேடி போனேன். மதியம் வரை உன்கிட்ட இருந்து ஃபோன் வரும்னு எதிர்பார்த்தேன் வரல. வருத்தத்தில் வெளிய போன எனக்கு உன்கிட்ட எதுவும் சொல்லத் தோணல. நீயும் எதுவும் கேட்கல.” அகில் சொல்ல நர்மதாவிடம் அமைதி,

அவன் எழுந்து வெளியே செல்ல, நர்மதா எதையும் பேசவில்லை. அகில் வெளியே சென்று சாப்பிட்டு வந்திருக்க, நர்மதா அமைதியாய் படுத்து இருந்தாள்.

© GMKNOVELS