...

7 views

ஜென்மத்தின் தேடல்
அரண்மனைக்கு வந்தவுடன்,

"நாச்சியார்... நாச்சியார்... தண்ணீர் கொண்டு வா.." என்று அழைத்தார் ஜமீன் செங்கோடன்.

உன் மூத்த மகன், ஜமீனின் மானத்தை காப்பாற்ற காத்திருக்கும் களங்கண்டான் எங்கே... என்றார் கோபமாக ஜமீன் செங்கோடன்.

ஏன் இவ்வளவு கோபமாக கேட்கிறீர்கள்.
என்றாள் நாச்சியார்.

"ம்ம்ம்ம்.... உன் அருமை மகன் வந்த பிறகு பேசலாம்." என்றார் ஜமீன்.

சரி, கோவிலில் அம்மன் உத்தரவு கிடைத்துவிட்டதா?... என்று கேட்டாள் நாச்சியார்.

"உத்தரவு கிடைத்து விட்டது. ஆனால், சகுனம் ஏதும் சரியாக இல்லை... தேங்காய் என்றுமில்லாமல்  இன்று அழுகிவிட்டது... கற்பூரம் அணைந்து விட்டது... அது மட்டும் மனதில் உறுத்தலாக இருக்கிறது... " என்று கூறினார் ஜமீன்.

"கவலை வேண்டாம்... உத்தரவு கிடைத்துவிட்டது. அது போதும்... இனி திருவிழாவிற்கு நல்ல நாள் குறிக்கலாம்.. நடப்பது எல்லாமே நல்லதுக்கு  தான் என்று நினைத்து கொள்ளுங்கள். " என்றாள் நாச்சியார்.

"கணக்குப்பிள்ளை, நம்ம கோவில் பூசாரியிடம்  நாளை காலை  திருவிழாவிற்கு நல்ல நாள் குறிக்க
நம்பூதிரி  அரண்மனைக்கு வருகிறார்கள் என்று கூறி அப்படியே, அவரையும் வர சொன்னதாக கூறி விட்டு வாருங்கள் " என்றார் ஜமீன்.

"சரிங்க ஐயா... " என்று கண்கள் கலங்க கூறினார் கணக்குப்பிள்ளை.

அதற்கு ஜமீன், " நீங்கள் எதற்காக கண் கலங்குகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால், அதில் உங்கள் மேல் என்ன தப்பு இருக்கிறது. விடுங்கள் களங்கண்டான் வந்ததும் பார்த்து கொள்ளலாம். "

"சரி, நான்  பூசாரியை  பார்த்து விட்டு வருகிறேன் ஐயா"  என்று சென்றார் கணக்குப்பிள்ளை.

அன்று இரவு,

"நாச்சியார், களங்கண்டான் சாப்பிட்டு முடித்தவுடன் அவனை நம் அறைக்கு வரச்சொல் ... " என்றார் ஜமீன்.

களங்கண்டான், " அம்மா,  இன்னும் ஓர் மெல்லடை வேண்டும்... "

"நன்றாக சாப்பிடுங்கள். சரி நாளை காலை என்ன உணவு வேண்டும் உங்கள் இருவருக்கும்... " என்று கேட்டாள் நாச்சியார்.

செம்பியன், " அம்மா,  நான் சாப்பிட்டேன். நாளை எனக்கு பால் திரட்டு, குழாய் பிட்டு, கும்மாயம்...இதெல்லாம் சாப்பிட ஆசையாக இருக்கிறது. "  என்று கூறினான்.

சிரித்து கொண்டே, "சரி, செய்து விடலாம்... நீ படுக்கையறைக்கு செல் வந்து விடுகிறேன்" என்றாள் நாச்சியார்.

"களங்கண்டான், அப்பா உன்னை வந்து பார்க்க சொன்னார். அவர் உன் மீது கோபத்தில் இருக்கிறார்... அப்பா என்ன சொன்னாலும் நம் ஜமீன் நல்லதுக்கு தான் சொல்வார். உனக்கு இருபது வயது ஆகியது. அனைத்தும் புரியும் என்று நினைக்கிறேன்." என்று அறிவுரை கூறினாள் நாச்சியார்.

"ஏம்மா, என் மேல் என்ன கோபம்... நான் எதிலும் தலையிடுவதில்லை.... ஜமீன் விஷயம் எதை பற்றியும் எதிர்த்து பேச மாட்டேன்.. பிறகென்ன?... " என்றான் களங்கண்டான்.

அதற்கு நாச்சியார், " அது தான் பிரச்சனை... உன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்... சரி, அவர் உன்னை வர சொன்னார். செல். "
என்றாள்.

ஜமீன் செங்கோடன் அறையில் களங்கண்டான்.

சற்று நேரத்தில் களங்கண்டான் வெளியே வந்தான்.

அவன் கண்களை பார்த்த நாச்சியார்
கோபத்தை உணர்ந்தவள், " உள்ளே என்ன நடந்தது. ஏன் இவ்வளவு கோபமாக செல்கிறாய்" என்று கையை பிடித்தாள்

அவன் நாச்சியாரின் கையை தள்ளி விட்டு சென்றான்.

நாச்சியார் உள்ளே சென்று, " ஏன் என்ன நடந்தது காலையில் இருந்து ஏதோ மறைத்து கொண்டு இருக்கிறீர்கள்... அவன் கோபமாக செல்கிறான்... " என்று கேட்டாள்

அவர் கண்கள் தண்ணீர் குளம் போல் நிரம்பி காட்சி அளித்தது.

"என்ன தான் நடக்கின்றது. இப்போதாவது சொல்லுங்கள்... " என்று கூறினாள் நாச்சியார்.

ஜமீன், " ஒன்றுமில்லை. நீ எதையும் நினைத்து கவலை கொள்ளாதே.. அவனை கோவில் திருவிழா வேலை எதையும் பார்க்க மாட்டாயா?... வயது வந்தும் பொறுப்பில்லை உனக்கு என சத்தம் போட்டேன்... அதற்காக கோபத்தில் செல்கிறான்... " என்றார்.

"இல்லை, நான் நம்பமாட்டேன்... நீங்கள் உண்மையை சொல்லுங்கள். காலையில் வந்தவர் அவ்வளவு கோபத்தில் இருந்தீர்கள் " என்று கூறினாள்

"அவன் செய்யும் செயல் ஏதும் சரியாக தோன்றவில்லை. பொறுப்பில்லாமல் சுற்றி வருகிறான். சேர்க்கை சரியில்லை. தேவையில்லாமல்  பெண்களிடம் பேசுவது.... எதுவும் சரியில்லை. நம் ஜமீனுக்கு அடுத்த வாரிசு இப்படி இருந்தால் என்ன செய்ய?... அதை அவனுக்கு புரிய வைத்தேன்... அதற்கு தான் இவ்வளவு கோபம்... வேறொன்றும் இல்லை..." என்றார் ஜமீன்.

நாச்சியார் அழுது கொண்டே நான் நாளை அவனிடம் பேசுகிறேன் என்றாள்.

"வேண்டாம் நாச்சியார், திருவிழா முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம்.
சரி  காலை சீக்கிரமே நம்பூதிரி வந்து விடுவார்... அவருக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் தயாராக உள்ளதா?.. "
என்றார்.

"ம்ம்ம்... அனைத்தும் தயாராகி உள்ளது.
நான் ஒரு முறை களங்கண்டானிடம் சொல்லி.... " என்று தயங்கி தயங்கி கூறினாள் நாச்சியார்.

"திருவிழா முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம்... " என்று சற்று கோபமாக கூறினார் ஜமீன்.

சூரியன் உதித்தது...

"ஐயா, நம்பூதிரி வந்து விட்டார் " என்றார் கணக்குப்பிள்ளை.

சரி, பூசாரி எங்கே? ... என்று கேட்டார் ஜமீன்

அவரும் வந்து விட்டார்.

நம்பூதிரி, நாட்டரையர் ஊர் திருவிழா பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். கவுமாரியம்மனுக்கு காப்பு கட்டுவது முதல் முளை பரப்புதல், கரகம் ஜோடித்தல், பழச்சூறை, முளை கரைத்தல் என்று அனைத்திற்கும் நாள் குறிக்க வேண்டும் என்றார் ஜமீன்.

சரிங்கய்யா, பிரசன்னம் பார்த்து நாள் குறித்து தருகிறேன் என்றார் நம்பூதிரி.

சோழியை முதல் முறையாக போட்டார்..
சிறிது நேரம் கழித்து மீண்டும் சோழியை போட்டார்... பிறகு ஜமீனிடம் அம்மன் உத்தரவு கொடுத்து விட்டதா...
என்று கேட்டார் நம்பூதிரி.

ஜமீன், அம்மன் உத்தரவு கொடுத்ததால் தான் நல்ல நாள் பார்க்க வர சொன்னோம்... ஏன் என்று கேட்டார்...

மீண்டும் சோழியை போட்டார்... அவர் முகத்தில் பெரிய குழப்பம் ஓடியது. எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.



          ✍ ஜென்மம்தொடரும் ✍


© Ramyakathiravan