...

7 views

நெடிய கழியும் இரா 4
"இறந்து விடவேண்டும் என்ற உந்துதல்  ஒன்று தான் பிறருக்கு பாரமாக இருப்பதாக உள்ள உணர்வு, மற்றொன்று சமுதாயத்திலிருந்து துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு. இரண்டு உளவியல் நிலைகளால் உண்டாக்கப்படுகிறது. இத்துடன் அவர்களிடம் செய்து முடிக்கும் திறன் இருந்தால், அது ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் துயரமான மற்றும் கோபத்தைத்  தூண்டும் அனுபவங்கள் நாளடைவில் அவரை துயரத்தின் வலியையும், இறப்பின் பயத்தையும் தாண்டி செல்ல வைக்கிறது. ஒருவரின் தற்கொலை முயற்சி அனுபவங்கள் அவரை மீண்டும் முயற்சி செய்யக்கூடும் வாய்ப்பை அதிகரிக்கும்.
- அமெரிக்க உளவியலாளர் தாமஸ் ஜாய்னர் "ஏன் தற்கொலை மூலம் இறந்து போகின்றார்கள்” (Why people Die by Suicide) (2006)  என்ற புத்தகத்திலிருந்து.

பலரது துக்கங்களையும் காயங்களையும் கண்ணீர் தடங்கள் மூலம் ஆற்றிய இரவின் இருள் மெள்ள மெள்ள விலகியோட விடியலின் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.

கௌதமின் முந்தைய நீண்டு நெடிதான  இரவானது ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது. காலையில் எழுந்து குளித்து முடித்து வந்தவன் மனைவியின் படத்துக்கு விளக்கேற்றிவிட்டு பால் வைப்பதற்கு மயானத்துக்கு காலையிலேயே கிளம்பி சென்றிருந்தான்

அரைமணி நேரத்திற்கு பிறகு வீட்டுக்கு திரும்பியவன் மனைவியின் அஸ்தியை புகைப்படத்தின் முன் வைத்து விட்டு அன்றைக்கு செய்திருந்த உணவு படையலிட்டு குடும்பம் முழுவதும் சாமி கும்பிட்டனர்.

வழிபாடு முடித்து வெளியே கிளம்பிய மகனை சாப்பிட்டு போகச் சொல்லி அழைத்து  நிறுத்தினார் கௌதமனின் தாயார் பூங்காவனம்.

"ம்மா... கிளம்பும் போதே எங்கே போறேன்னு கேட்டா எப்படி போற வேலை உருப்படும். எனக்கு சாப்பாடு வேணாம். வெளியே பார்த்துக்கிறேன். நீங்க எல்லாம் சாப்பிடுங்க. குழந்தைகளை சாப்பிட வைங்க" என்றுவிட்டு வெளியேற போனவனை மீண்டும் நிறுத்தியது அவரது குரல்.

"அஸ்தியை நம்ம கிணத்து தண்ணீல கரைக்கணும்‌. அப்பதான்பா காடாத்து சடங்கு முழுசா பூர்த்தியாகும்"

கோபத்துடன் திரும்பியவன் தாயின் முகவருத்தத்தை கண்டு ஒரு கணம் தாமதித்து விட்டு அழுத்தமாகவும் அதேநேரம் தீர்மானமாக கூறினான்
"முதல்ல நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்னு கிடக்கு. அதை முடிச்சிட்டு வந்து மத்த சம்பிரதாயம் எல்லாம் பார்த்துக்கலாம்."

குரலையுயர்த்திக் கூட பேசியறியாத மூத்த மகனின்  இன்றைய சிடுசிடுப்பு பேச்சில் கொஞ்சம் மனம் துவண்டு தான் போனார் பூங்காவனம்.

கணவனுடன் ஏற்பட்ட ஏதோ மனஸ்தாபத்தில் அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ஆனந்தியினை பழிக்கமட்டுமே முடிந்தது அந்த தாயால்.

சும்மாவா இறக்கும்போதே இரண்டு பிள்ளைகளை ஆளாக்க வேண்டிய கடமையை தன் பொறுப்பில் விட்டு சென்று விட்டாளே. பேரன் நரேந்திரன் ஆண்பிள்ளை எப்படியாகிலும் வளர்ந்துவிடுவான். ஆனால் இக்குடும்பத்தின் மூத்த வாரிசு பேத்தி நந்திதா ஒரு வருடத்திற்கு முன்பு தான் பூப்படைந்திருந்தாள். அவளை மணமுடித்து வேறுவீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை உள்ள பொறுப்பு இலேசுபட்டதா? கௌதமன் பார்த்துக் கொண்டாலும் வயதுக்கு வந்த பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து, அவளுடைய பழக்க வழக்கங்களுக்கு கடிவாளமிட்டு சரியான முறையில் வளர்த்துவிட எவ்வளவு மெனக்கெடல்கள் வேண்டும்.

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்களே...
ஆனந்தியின் புத்தி பேத்தி நந்திதாவுக்கு வந்துவிட்டால் குடும்பம் என்னாவது? என்று பல வருடங்கள் கழித்து நடக்கப்போவதை எண்ணி அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது.
ஆனால் அந்த முதியவள் மறந்த ஒன்று நந்திதா ஆனந்தியின் மகள் மட்டுமல்ல கௌதமனின் இரத்தமும் கூட என்பது. மேலும் கௌதமனும் ஆனந்தியின் தவறுக்கு துணைபோனவன் என்பதை வசதியாக அப்போது மறந்து போயிருந்தார் அவர்.

நேரம் மதியம் மணி இரண்டை கடந்திருந்தது. அந்த ஊருக்குள் காக்கிஉடை அணிந்த இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினர்.

ஊரின் நடுவே இருந்த ஆலமரத்தடியில்  தாயம் விளையாடிக் கொண்டிருந்த
சில பகுதிநேர வேலையாற்றும் குடிமகன்களும் மதுப்ரியர்களும் காக்கிச்சட்டைகளை கண்டு பதறியடித்து கொண்டு அவர்கள் கலைந்தோட... அதில் ஒருவரை தடுத்து நிறுத்தி ஏதோ... இல்லை யாரைப் பற்றியோ விசாரித்துக் கொண்டிருந்தனர் காக்கிச் சட்டையினர்.

அதற்குள் அவ்வழியே வந்த ஊர் பெருத்தனகாரர்களில் ஒருவர் காக்கிச்சட்டை காரர்களுக்கு தேவையான விவரங்களை தரவும் அவ்விரு காவலரும் அவனது வீட்டினை அடைந்தனர்.

யாரும்மா உள்ளே!? வெளியே வாங்க என்று அந்த சிமெண்ட் ஓடுவேய்ந்த வீட்டின் முன்பு ஒரு காவலர் குரல் கொடுக்க,  உள்ளே காய்ந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த யாரோ ஊர்க்காரர் தானென்று எண்ணினாலும் அவள்  என்னவோ ஏதோவென வெளியே வந்தாள் ‌

வாயிலுக்கு வெளியே நின்றிருந்த காவலரைக் கண்டதும் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், முகத்தில் அதைக் காட்டி கொள்ளாமல் கேட்டாள்
"சொல்லுங்க சார்... என்ன விஷயம்? உங்களுக்கு யார் வேணும்?

"ஏம்மா தேவேந்திரன் வீடு தானே இது. எங்க அவன்? நீங்க யாரு."

"ஆமாம் இது அவர் வீடு சார். அவரு வீட்டிலே இல்லை சார். வெளி வேலையா  போனவரு இன்னும் வீட்டுக்கு வரல. நான் அவரு பொண்டாட்டி"

"உடனே ஃபோனை போட்டு அவனை இங்கே வரசொல்லும்மா" என்றார் காவலர்

"என்ன விஷயம் சார். ஏதாச்சும் பிரச்சனையா?" என்றாள் அப்பாவி சுமங்கலி.

"உன் புருஷன் மேலே காசை வாங்கிட்டு ஏமாத்திட்டதா புகார் வந்திருக்குமா..  விசாரணைக்கு அவனை ஃபோலிஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகத்தான் நாங்க வந்திருக்கோம்" என்றார் மற்றொருவர்

"சார்‌ அவரு ரொம்ப நல்லவரு . அந்த மாதிரி தப்பு தண்டாக்கெல்லாம் போகமாட்டாரு.. யாரோ பொய்யா புகார் கொடுத்திருக்காங்க" என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள் சுமங்கலி.

"இந்த ஊருல இருக்குற கௌதமன் என்ற ஆளுதான் புகார் கொடுத்திருக்கான்." என்ற செய்தியில் அவள் பதறிவிட்டாள்.

"என்னம்மா. விஷயத்தை கேட்டு ஷாக்காகி சிலை போல நின்னுக்கிட்டு இருக்க. உனக்கே இப்படி இருக்கே... பாவம் பொண்டாட்டிய பறிகொடுத்த அந்த பையனுக்கு எப்படி இருக்கும்?சீக்கிரம் ஃபோனை போட்டு உம் புருஷனை இங்க வரச் சொல்லும்மா"

மிரண்டு போனவள் மெல்லிய குரலில் காவலர்களிடம் கூறினாள்
"எங்கிட்டே ஃபோன் இல்லே சார். அஞ்சு நிமிஷம் இருங்க சார்".

உள்ளே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தனது மகனிடம் அவசரமாக யாருக்கோ ஏதோ செய்தி சொல்லியனுப்பினாள்.

ஐந்து நிமிடங்களில் தேவேந்திரனது அண்ணன் மகனை வீட்டுக்கு அழைத்து வந்தான் அவர்களது மகன்.

வந்தவனிடம்  சுருக்கமாக காவலர் வந்ததையும் கணவனை பற்றி விசாரித்ததையும் கூறி உடனே அவளுடைய கணவனுக்கு ஃபோனில் அழைத்து தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினாள் சுமங்கலி.

இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்தவன் அவள் காதுகளில் ஏதோ சொல்லவும், காவலர்களிடம் வந்தவள் சொன்னாள்
"சார் அவரு வேலை விஷயமா தூரமா வெளியூர் போயிருக்காராம். போன வேலை முடிய நேரமெடுக்குதாம். அதை முடிச்சிட்டு வர நைட்டாகுமாம். நாளைக்கு காலைல அவரு நேரா ஃபோலிஸ் ஸ்டேஷன் வர்றேன்னுட்டார்."

ஏம்மா அவன இங்க வரசொல்லுன்னா... நீ என்ன விளக்கம் சொல்லிட்டு இருக்க.  உம் புருஷன் ரெண்டு இலட்ச வாங்கி ஏமாத்தியிருக்கான். பாவம் அந்த பொண்ணு அதனாலதான் தற்கொலை பண்ணி செத்து போச்சுன்னு அதோட புருஷன் காரன் பொண்டாட்டிக்கு பால் ஊத்தின கையோடு வந்து புகார் கொடுத்திருக்கான்.  உன் புருஷனுக்கு ஃபோன் போட்டா எடுக்கவே மாட்டேங்கிறான். நேர்ல வந்தா நீ என்னமோ அவன் பெரிய துரை நாளைக்கு வர்றேன்னான்னு சொல்ற. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும்" என்று காய்ந்தார் காவலர் .

காவலர் கோபத்தில்  அதிர்ந்து போனவளது  முகத்தில் பயம் தாண்டவமாடியது.

அவளும் அறிவாளே... ஆனந்தி என்கிற அகல்யா வின் தற்கொலையை. தவிரவும் ஆனந்தியின் தாய் வீடு இவர்களது வீட்டுக்கு பக்கத்து தெருவில் மூன்றாவது வீடு தான். அவளோடு பல சமயங்களில் பேசியும் இருக்கிறாள். ஆனால் அவளிடமிருந்து தேவேந்திரன் பணம் பெற்று ஏமாற்றியிருக்கிறான் அதுவும் இரண்டு இலட்சம் ரூபாய் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று அவளால் சந்தேகிக்காமல் இருக்க முடியாது.

ஓரிரு நிமிடங்கள் உறைந்து போய் நின்றவளை உலுக்கியது காவலரது குரல்.

"இங்க பாரும்மா.. உம்புருஷன் இன்னும் பத்து நிமிஷத்துல இங்க வரல உன்னையும் இதோ நிக்கறானே அந்த பையனையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிடுவோம். எப்படியும் உங்கள மீட்க அவன் வந்துதானே ஆகணும்" என்று அசராமல் அடுத்த இடியை சுமங்கலியின் தலையில் இறக்கினார் காவலர் ஒருவர்.

பத்து நிமிடம் இருபது நிமிடமாவது. இருபது நாற்பது நிமிடமானது. மீண்டும் தேவேந்திரனுக்கு அலைபேசியில் அழைக்க போக அவனுடைய எண் அணைத்து வைத்திருப்பதாக கம்ப்யூட்டர் ரெக்கார்டிங் குரல் மட்டுமே ஒலித்தது.

முடிவில் காவலர்கள் சொன்னதை செய்தே விட்டனர்
- தொடரும்.