...

5 views

புலிக்குறடு

© ஞானி
               புலிக்குறடு..

         புலிக்குறடு  நான்கு கிலோமீட்டர் என்ற அறிவிப்போடு பாதி எழுத்துக்கள் மறைந்த நிலையில் எந்தநேரமும் கழன்று விழும் நிலையில் இருந்தது அந்தப் பெயர் பலகை.  ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட அந்த சாலையில் அனன்யா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தாள்.

  ஸ்ஸ் ப்பா ஓவர் வெய்யில் இல்ல ஸ்வெட்டிங் அதிகமா இருக்கு இன்னும் எவ்ளோ தூரம் போகனும்? என்னால முடியல,

  திவ்யா குட்டி இன்னும் கொஞ்ச தூரம் தான் போயிடலாம் என்றவாறு சொல்லிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் அனன்யா.

இந்த வில்லேஜ்லயா உங்க தாத்தா இருக்கார், ரோடு சரியில்ல டிரான்ஸ்போர்ட் வசதியில்ல ஷாப்பிங் மால் தியேட்டர் அப்படி இப்படின்னு ஒன்னு  கிடையாது பாவம் இந்த வில்லேஜ்ல மனுசங்க எப்படி தான்  வாழறாங்கனே தெரியல, ஏதோ நீ கூப்பிட்டியேனு வந்தேன் நமக்கு இந்த அட்மாஸ்பியர் சுத்தமா ஒத்துக்காது நம்ம லைப் ஸ்டைல் வேற? என்று அலுத்துக் கொண்டாள் வர்ஷா.

     கூல் பேபி எங்க அம்மாவோட சொந்த ஊர் இது , எக்ஸாக்ட்டா இருபத்து ஏழு வருஷத்துக்கு முன்னால எங்க  மம்மியும் டாடியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க, அது எங்க தாத்தா பாட்டிக்கு சுத்தமா புடிக்கல, அதுலயும் முக்கியமா எங்க மம்மியோட பெரிய பிரதர் கதிரேசன் அங்கிளுக்கு ரொம்ப கோபம். அதனால இந்த வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ எங்க டாடி மதுராந்தகத்தில் இருக்கிற ஒரு கம்பெனியில வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க, எங்க மம்மி ஸ்கூல் டீச்சர் அப்பாவுக்கு புரமோஷன் கிடைத்ததும் சென்னைக்கு வந்துட்டாரு அப்புறம் நான் பொறந்த உடனே அம்மா டிரான்ஸ்பர் கேட்டு இங்க வந்து செட்டில் ஆயிட்டோம். கிட்டத்தட்ட ஆறு வருஷமா எங்க கூட பேசாம பார்க்காம இருந்தாங்க, அப்புறமா என் தம்பி ஆகாஷ் பிறந்ததும் பேரன பாக்கணும்னு சொல்லி என் பாட்டி மட்டும் வந்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு என் தாத்தாவும் வந்து பாத்துட்டு போனாரு அப்ப கூட எங்க அப்பாகிட்ட அவங்க ரெண்டு பேரும் பேசவே இல்ல. என்கிட்டயும் மம்மி கிட்டயும் பேசிட்டு  ஆகாஷ்க்கும் எனக்கும் செயின் எடுத்து போட்டுட்டு பாத்துட்டு போயிட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் கதிரேசன் அங்கிள் எங்ககிட்ட பேசறதே இல்ல தாத்தா பாட்டி மட்டும் வருஷத்துக்கு ரெண்டு மூணு தடவ வந்து எங்கள பாத்துட்டு போவாங்க. அவங்களுக்கு என் மேலயும் ஆகாஷ் மேலயும் கொள்ளைப் பிரியம். இப்ப கொஞ்சம் வருஷமாத்தான் டாடி கிட்ட தாத்தா பாட்டி இரண்டு பேரும் பேசறாங்க அதனால நாங்க எல்லாரும் தீபாவளி பொங்கல் சமயத்துல இந்த ஊருக்கு வந்திட்டு போவோம். இந்த வருஷம் டாடி மீட்டிங்காக டெல்லி போயிட்டாரு, ஆகாஷ்க்கு எக்ஸாம் நடக்குது அதனால மம்மி ஆகாஷ் கூட இருக்காங்க, சோ என்ன மட்டும் போயிட்டு வர சொன்னாங்க அதனாலதான் ஒரு சேஞ்சுக்காக உங்களையும் கூப்பிட்டேன் என்று அனன்யா சொல்லி முடிப்பதற்கும் புலிக்குறடு ஊர் வருவதற்கும் சரியாக இருந்தது.

  புலிக்குறடு நகரத்தின் பரபரப்புக்கு முற்றும் மாறுபட்டு அமைதியாக இருந்தது, நான்கைந்து காரை வீடுகளைத் தவிர முழுக்க மச்சு  வீடுகளும் கூரை வீடுகளுமாக காணப்பட்டது. மூன்று தெருக்களும் அதிகபட்சமாக ஐம்பது வீடுகளும் இருந்தால் அதிகம் எனத் தோன்றியது, எல்லோர் வீட்டின் முன்பும் மரங்களும் வீட்டின் பின்னால் வயல்வெளிகளுமாய் காட்சியளித்தது, 

அனன்யா தெருக்கோடியின்  கடைசியில் இருந்த ஒரு வீட்டின் முன்னால் காரை நிறுத்தி இறங்கினாள். அந்த வீடு நாட்டு ஓடுகளால் வேயப்பட்டதாகவும் வீட்டின் முன்னால் பெரிய வேப்ப மரமும் அந்த மரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் அனன்யா ஓடிச்சென்று தாத்தா என்றவாறு கட்டியணைத்துக் கொண்டாள், அவளைக்கண்டதும் யாரு அனன்யாவா  வாடி குழந்தை இப்பத்தான் இந்த தாத்தாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சுதா அம்மா அப்பா வரலையா ஆகாஷ் குட்டி எங்க என்று கேட்டுக்கொண்டே பொக்கை பல் தெரிய சிரித்தார்.
  
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா, அப்பா வேலை விஷயமா டெல்லி போயிருக்காரு ஆகாஷுக்கு பரீட்சை நடக்கிறதால  அம்மா கூட இருக்கான் அதனாலதான் என்னை மட்டும் போயிட்டு வர சொன்னாங்க, பாட்டி எங்க கானோம்? இவங்க எல்லாரும் என் கூட படிக்கிறவங்க என்று அறிமுகப்படுத்தினாள்.

அப்படியா ரொம்ப சந்தோஷம் கண்ணு இவங்க எல்லாரையும் பார்த்தா பட்டணத்து புள்ளைங்க மாதிரி தெரியுது?  பாட்டி மாட்டுக்கு பில்லு அறுக்க போய் இருக்கா  என்று சொல்லிக்கொண்டே கண்ணுங்களா எல்லாரும் கொஞ்ச நேரம் இருங்க இதோ வந்துடறேன், என்று புறப்பட்டுப் போனதும் சற்று நேரத்தில் ஒருவன் இளநீர் குலைகளுடன் வந்து தாயி நீங்க எல்லாம் பட்டணத்தில் இருந்து வந்து இருக்கீங்கன்னு அய்யா இளநீர் கொடுக்க சொல்லி அனுப்பி வெச்சாரு  நம்ம மண்ணுல வௌஞ்சது தேன் கணக்கா இருக்கும் நல்லா தாகம் தீர குடிங்க என்றவாறு ஆளுக்கொரு இளநீரை சீவி கொடுக்கத் தொடங்கினான்.

      வாவ் டேஸ்ட் செம்மையா இருக்கு, இப்படி ஒரு இளநீரை நான் இதுவரைக்கும் குடிச்சது இல்ல, ரியலி வெரி நைஸ்  இன்னும் ஒன்னு குடுங்க அண்ணா என்று கையை நீட்டி வாங்கி  ஆர்த்தி குடிக்கத் தொடங்கியதும் பின்னர் ஆளுக்கொன்றாக குடிக்கத் தொடங்கினர்.

அண்ணா தாத்தா இந்த வெயில்ல சட்டை போடாம  குடைய கூட எடுத்துட்டு போகாம போறாரு எங்க போறார், அதோ அங்க ஒரு சின்ன பையன் சப்பல் போடாம வெறும் காலோட நடக்கிறான் பாரு எப்படித்தான் இவங்களால முடியுது தெரியல என்னால முடியாதுப்பா என்றாள் வர்ஷா,

தாயி நீங்க எல்லாரும் குளிர் காத்துலையும் வெயிலே தெரியாமல் இருக்க ரூமுக்குள்ள அடைஞ்சுகிட்டு  ஐஸ் தண்ணிய  குடிச்சிட்டு வாழரிங்க! ஆனா எங்க வாழ்க்கை அப்படியா நாங்க வாழறது இந்த கிராமத்துலயும், எங்க பொழப்பு இந்த மண்ண நம்பி வயகாட்டுலையும் ஆடு மாடுகளோடையும்தான் இருக்கு. உங்களுக்கு இது புதுசா தெரிலாம் ஆனால் எங்களுக்கு இது பழகிப் போச்சு.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஊர்மக்களுக்கு விஷயம் பரவி ஒருவர் பின் ஒருவராக வந்து நலம் விசாரிக்கத் தொடங்கினார்கள்
யாரு பூங்குழலி மகளா? அம்மா அப்பா எப்படி இருக்காங்க அவங்க வரலையா ? பூங்குழலிய சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கு அப்படியே உறிஞ்சி வச்சிருக்கா பாரு, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என் ராசாத்தி நல்லா இரும்மா? என்றவாறு நெட்டிமுறித்து சென்றாள் ஒரு கிழவி,

     அக்கா நீங்க வந்து இருக்கீங்கன்னு தாத்தா சொல்லுச்சு அதான் உங்களுக்கு எலந்த பழம் பறிச்சுட்டு  வந்தேன் இந்தாக்கா சாப்புடு ரொம்ப நல்லா இருக்கும் என்று தன்னுடைய டவுசர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்து கொடுத்தான் அந்த சிறுவன்.

ஐ எலந்த பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாரும் எடுத்துக்கோங்க  ரொம்ப சூப்பரா இருக்கும் டேஸ்ட்  பண்ணி பாருங்க கமான் என்றால் அனன்யா.
       
          திவ்யா முதலில் தயங்கினாலும் அனன்யாவின் வற்புறுத்தலின் பேரில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து சுவைக்கத் தொடங்கியதும் ம்ம்ம் செம டேஸ்ட்டா இருக்கு என்று சொல்லிவிட்டு டேய் குட்டி பையா எங்க எல்லாருக்கும் இந்தப் பழத்தை நிறைய பறிச்சிக்கிட்டு வந்து கொடுக்கிறியா? உனக்கு நான் காசு தரேன் என்றதும், காசெல்லாம் ஏதும் வேண்டாக்கா இங்க நிறைய கிடைக்கும் நான் உங்களுக்கு பறிச்சு கொண்டாந்து தறேன் நீங்க நல்லா சாப்பிட்டுட்டு வீட்டுக்கும் எடுத்துட்டு போய் குடுங்க என்று சொல்லி விட்டு ஓடிப் போனான் அந்த சிறுவன்.

    சற்றுநேரத்தில் மரகதம் பாட்டியுடன் தாத்தா ஆறுமுகமும் வந்து சேர்ந்தார். மரகதம் பாட்டி நன்கு சிவந்த நிறத்தில் மஞ்சள் பூசிய முகத்தில் பெரிய பொட்டும் வைத்து காணப்பட்டாள். முந்தானையை சுருட்டி தலைமேல் வைத்து அதன்மேல் பெரிய கூடையில் கத்தரிக்காயும் வெண்டைக்காயும் சில கீரை கட்டுகளுடன் கீழே இறக்கி  வைத்துவிட்டு ஏன் ராசாத்தி வந்துட்டியா! எப்ப வருவேன்னுதான் பார்த்துகிட்டே இருந்தேன். இந்தக் கிழமும் உங்கள கேட்டுக்கிட்டே இருந்தது. கழனியில் நெல்லு போட்டுக்கிறோம் அதை அறுக்கற  நேரம் வேறயா அதனாலதான் எங்கேயும் நகர முடியல, காலையில கழனிக்கு போனா கழனி வேலையும் பார்த்துட்டு மாடுகளை மேய்ச்சு வர்றதுக்குள்ள  பொழுது சாஞ்சுபோது!

    அதெல்லாம் இருக்கட்டும் பாட்டி இவங்க எல்லாரும் என்னோட பிரெண்ட்ஸ். காலேஜ்ல ஒன்னா படிக்கிறவங்க, ரெண்டு நாள் தங்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம் எங்க எல்லாருக்கும் பசி வயிற்றைக் கிள்ளுது  ஏதாவது சாப்பாடு ரெடி பண்றியா என்றதும் இதோ சட்டுனு செஞ்சிடுவேன், தம்பி வேலு இவங்களுக்கு இன்னும் கொஞ்சம் எளனிய வெட்டிக் கொடு, தே கடைக்குப் போயி அரைக்கிலோ  சீனியும், டீ தூளும் பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிக்கினு  வா கிழவனுக்கு கட்டளையிட்டவாறு அடுப்பங்கரைக்கு சென்று சமைக்கத் தொடங்கினாள் மரகதம் பாட்டி. சமையலின் வாசம் அடுப்பங்கரையை தாண்டி வெளியில் வீசியது. அழுக்கேறிய தலையும் குட்டைப் பாவாடையுடன் காணப்பட்ட பக்கத்து வீட்டு சிறுமி கையில் மரப்பாச்சி பொம்மையுடன் வந்து அனன்யாவும் நண்பர்களையும் அதிசயமாய் பார்க்கத் தொடங்கினாள் அவர்கள் அந்த சிறுமியுடன் பேச்சுக் கொடுத்து சிரித்துக் கொண்டிருந்தனர்.


    எல்லாரும் சாப்பிட வாங்க என்ற குரல் கேட்டு அனைவரும் உள்ளே சாப்பிட சென்று அமர்ந்தனர், அதற்குள் கிழவன் தோட்டத்திற்கு சென்று வாழை இலைகளை அறிந்து வைத்திருந்தார், தே மசமசன்னு சும்மா நிக்காத குழந்தைங்க பசியால் துடிக்குதுங்க என்றவாறு வாழை இலைகளை வாங்கி போட்டு விட்டு தண்ணீர் தெளித்து பொன்னி அரிசி சோறும் பொன்னாங்கண்ணி கீரை மசியலும், வெண்டைக்காய் பொரியலும் முருங்கைப் பிஞ்சு கத்தரிக்காய் போட்ட குழம்பும் பரிமாறினாள். இது ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டதும்  நல்ல ஜீரணமாகும், நல்லா  சாப்பிடுங்க என்றால் மரகதம் பாட்டி. கிழவன் அனன்யா பக்கத்தில் அமர்ந்து கொண்டு விசிறியால் வீசிவிட தொடங்கினார். தாத்தா நீங்கள் விசிறிவிட வேண்டாம் என்று மறுத்தாள் வர்ஷா, ம்ம்ம் நீங்கள் வசதியான வீட்டு பிள்ளைங்க இங்கே நீங்கள் சொல்ற ஏசி அதெல்லாம் கிடையாது மரநிழலும் வேர்த்து கொட்டினா விசிறியும்தான் என்று விசிறி விட்டவாறு நல்லா வயிறார   சாப்பிடுங்கள் உங்க பாட்டி சமையல் பிடிச்சிருக்கா அவ்ளோ மோசம் ஒன்னும் இல்லையே என்றவாறு சிரிக்க தொடங்கினார்..

    தாத்தா உண்மைய சொல்லட்டுமா எனக்கு கத்திரிக்கா சாப்பிடவே பிடிக்காது ஆனால் பாட்டி செஞ்சது எவ்ளோ ருசியா இருக்கு தெரியுமா, பாட்டி மட்டும் சென்னைல ஒரு ஹோட்டல் வச்சா இந்த கத்திரிக்கா போட்ட குழம்புக்கே கூட்டம் வரும் அப்படி ஒரு டேஸ்ட் இன்னும் கொஞ்சம் வைங்க பாட்டி என்றாள் ஆர்த்தி ..

கத்தரிக்காய் மட்டும் இல்லை ஒன்னொன்னும் வேற லெவல் டேஸ்ட் சும்மா சொல்லக்கூடாது பாட்டி அசத்துறீங்க போங்க என்று சப்புக்கொட்டி சாப்பிட தொடங்கினாள் வர்ஷா ..

  பாட்டியும் சிரித்தவாறு இன்னும் கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள் என்று பரிமாறிவிட்டு எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் பாட்டி நீங்கள் சாப்பிடலையா என்றாள் அனன்யா

இல்லடி கொழந்த அவர் இன்னும் சாப்பிடல அவர் சாப்பிடாமல் நான் என்னைக்கும் சாப்பிட்டதில்லை. என்றதும் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்து கொண்டனர்..

தாத்தா நீங்கள் சாப்பிடாலயா  எங்களோடவே சேர்ந்து சாப்பிட்டு இருக்கலாமே என்றதும் இதோ மரகதம் போய் சாப்பிட கொண்டா என்றவாறு மரத்தின் அடியில் கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டார், தாத்தா இங்கேயே சாப்பிடுவீங்களா என்றதும் ஆமாம் இங்கதான் இப்ப வரும் பாரு என்று கண்சிமிட்டியவாறு பாட்டி கொண்டு வந்து வைத்த சொம்பிலிருந்த கூழையும் ஆவக்காய் ஊறுகாயையும் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டவர் முடிஞ்சது என்று வாயை துடைத்துக் கொண்டார் .

என்ன தாத்தா எப்பவும் இதைத்தான் சாப்பிடுவீங்களா? என்ற திவ்யாவின் கேள்விக்கு தாத்தா மட்டுமில்ல பாட்டியும் எப்பவும் இதைத்தான் சாப்பிடுவாங்க  நைட்டுல மட்டும்தான் அரிசி சாதம் மத்தபடி மார்னிங் அண்டு   லன்ச் இதான் இவங்க சாப்பாடு என்ற அனன்யாவை மூவரும் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டனர்...


எப்படி தாத்தா இதுமட்டும் போதுமா என்ற திவ்யாவின் கேள்விக்கு பழகி போச்சும்மா நான் மட்டும் இல்லை இந்த ஊருல இருக்கற மொத்த  வீட்லயும் இதான் முக்கிய ஆகாரம் வயகாட்டுல மல்லு கட்டுற எங்களுக்கு இதுதான், வேற என்ன சாப்பிட முடியும்னு நினைக்கிற?  ஓட்டல் சாப்பாடும் பொட்டலம் கட்டி விக்கிற சாப்பாடும் எங்களுக்கு காணாது என்றார் தாத்தா ..

தாத்தா நான் எத்தனை முறை கேட்டிருக்கேன் நீங்கள் ரெண்டு பேரும் எங்க கூட சென்னைக்கு வந்து தங்கிக்கலாமே அப்பாவும் அதைத்தான் சொல்றாரு என்றாள் அனன்யா?


கொழந்த  நான் பொறந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் கழனி காடுன்னு வாழ்ந்து பழக்கப்பட்டவன் உங்க பாட்டியும் அப்படித்தான், எங்களுக்கு உங்க வாழ்க்கை முறை சுத்தமா ஒத்துவராது, காலையில எழுந்ததும் ஏர புடிச்சோமா, கதிர் அறுத்து காயவச்சி தண்ணி பாச்சி ஆடு மாடு மேச்சோமானு வாழ்க்கை ஓடிபோயிடுது, இங்க ராசா கணக்கா நிம்மதியா வாழறோம்  உங்க பட்டணத்து வாழ்க்கைக்கும் எங்க கிராமத்து வாழ்க்கைக்கும் ரொம்பவே வித்தியாசம்,  இங்க இருக்கறவங்களுக்கு உழைக்கறத தவிர வேற ஒன்னும் தெரியாது தேவையும் அதிகம் கிடையாது, அதனால எல்லாரும் மன நிறைவா வாழறோம் அது போதாதா? அதுமட்டும் இல்லாம இது உழைக்கிற கட்ட அங்க வந்தா உட்காந்துகினு பொழுதை போக்க முடியாது, இந்த நிலத்தையும் சாதிசனத்தையும் விட்டு எங்களால எங்கயும் வர முடியாது. எங்களுக்கு  பாக்கணும் தோணுதா வந்து பார்த்துட்டு போகறோம் நீங்களும் வந்துட்டு போங்க இந்த உசுரு  இந்த மண்ணுலயே தான் போகும் என்று நீண்ட விளக்கத்தை சொல்லி முடித்தார் தாத்தா.

மறுநாள் காலையில் தாத்தாவுடன் வயல்வெளிக்கு சென்று அங்கு கம்மாய்களில் குளித்தும் பனைநுங்கு சாப்பிட்டும் ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் ஆடியும் பொழுதை கழித்தார்கள். சிறுவர்களோடு சில்லென்ற குளத்து நீர்நிலைகளிலும்  ஏரிகளிலும் குளியல் போடுவதே பிடித்துப் போனது , அதற்குள் இரண்டு நாள் கடந்துவிட்டிருந்தது,

            அனன்யா தன் நண்பர்களுடன் புறப்பட தயாரானாள், கார் டிக்கி  முழுக்க காய்கறிகளும், அரிசி மூட்டையும் இளநீர் குலைகளும், சோள கருதுகளுமாய் நிரம்பி கிடந்தது,
மறக்காமல் அந்த சிறுவன் கொடுத்த இலந்தை பழம் நிறைந்த பை பின் சீட்டில் இருந்தது.

குழந்தைகளா பார்த்து போயிட்டு வாங்க என்றவாறு தன் முந்தியில் கட்டி வைத்திருந்த 120 ருபாய் மதிப்புள்ள நோட்டுகளை எவ்வளவோ மறுத்தும் அனன்யாவின் கைகளில்,   திணித்தாள்  மரகதம் பாட்டி, தாத்தா பாட்டியை கட்டியணைத்துவிட்டு நாங்க போய்ட்டு வரோம் டாட்டா இன்னொரு நாள் கண்டிப்பா நாங்க வருவோம் தாத்தா எங்களுக்கு உங்க ஊரும் வயல்வெளியும் ரொம்ப புடிச்சுப்போச்சு என்றவாறு சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

இரண்டு நாள் போனதே தெரியல நாம எல்லோரும் ஒரே பில்டிங்ல பக்கத்து பக்கத்து வீட்ல இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பேசிக்கவோ சந்தோஷங்கள பகிர்ந்துக்கவோ நேரம் இல்லாம போச்சு , நாம எல்லாரும் பணத்த தேடி ஓடி நிம்மதியையும் உண்மையான சந்தோசத்தையும் தொலைச்சிட்டோம், உண்மையான சந்தோசமே இந்தமாதிரியான கிராமத்து மண்ணுலதான் இருக்கு, உண்மையா சொல்லனும்னா நான் இந்த ரெண்டு நாள் ஹாப்பியா இருந்த மாதிரி என்னைக்கும் இருந்ததில்லை,  நாம எல்லோரும் வீண் விவாதங்களிலயும் செல்போன்லயும் டிவிசீரியல் பார்த்துட்டும் உறவுகளையும் நிம்மதியையும் இழந்து சுகரு பீபின்னு ஆரோக்கியத்தை தொலைச்சிட்டு நிக்கறோம், நாம அடுத்தவங்க வீட்டுல அது இருக்கு இது இருக்குனு நம்ம வீட்டுல இல்லன்னு  சொல்லியே இல்லாத பொருளுக்கு ஏங்கியே இருக்கறத வச்சி வாழத் தெரியாம இருக்கோம், ஆனா இவங்க இயற்கையோடு இணைஞ்சு கிடைக்கிறத வச்சி சந்தோசமா வாழறாங்க, நாம என்னதான் நாகரிகம் என்ற பேர்ல கோடி கோடியாய் சம்பாதித்தாலும் இவங்க வாழ்க்கைக்கு ஈடாகாது இனிமேல் இங்க அடிக்கடி வரனும் என்ற வர்ஷாவை பார்த்து கண்சிமிட்டினாள்  அனன்யா. அவளது கார் ஸ்டியரிங்கின் முன்னால் விநாயகர் சிலையின் கீழே பாட்டி தந்த 120 ரூபாய் கசங்கிய நிலையில் பார்த்து சிரித்தது. சைடு மிரரில் பார்த்தபோது தாத்தாவும் பாட்டியும் நின்றுகொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தார்கள். கார் மண்சாலையில் புழுதியை கிளப்பியவாறு சென்று கொண்டிருந்தது, எதிரில் அந்த சிறுவன் சைக்கிள் டயரை டப் டப் என்று ஒரு குச்சியால் அடித்து ஓட்டிக்  கொண்டு சென்றான், இவர்களை பார்த்துக் கையசைத்தவன் மீண்டும் ஓட்ட தொடங்கினான். அவனது டவுசர் பாக்கெட்டில் எதையோ திணித்து வைத்ததினால் பருத்து காணப்பட்டது .. அநேகமாய் எலந்த பழமாகத்தான் இருக்க வேண்டும்..


                                    ஞானி...