...

1 views

sketch of the God
மஞ்சள் வானம் இருள் கிழிக்க சிவப்பாக இருந்த சூரியன் மெதுவாக உலகை எட்டிப் பார்க்கும். பூக்கள் நாணத்தில் இதழ் விரிக்க இளம் தென்றல் உரசலுடன் ரகசியம் சொல்லிச் சென்றது வண்டுகளின் வருகை பற்றி லேசாக.

அந்த பில்லியன் கார்டன் பங்களாக்கள் சொகுசாக வாழும் மாந்தர்களின் புஷ்டியான சுவாசக் காற்றில் எடுப்பான தோற்றத்தை அடுக்காக வெளிக்காட்டியவாறு நிமிர்ந்து நின்றன. அவ்வளவு பணக்காரர்களும் வாழும் ரம்மியமான தெரு அது.ஏழைகள் பிச்சைக்காகக் கூட எட்டிப் பார்க்க முடியாத ஒரு ஏரியா.

அங்கு வாழும் மனிதர்கள் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் தமது சூழலைப் பேணி வந்தார்கள்.ஏனெனில் அவர்களின் அழுக்குகளை அகற்றுவதற்கு ஏராளமான வேலையாட்கள் உள்ளனர். அழகும் சொகுசும் நேர்த்தியும் தெரிந்த அவர்களுக்கு அசிங்கம், அழுக்கு என்றாலே அலர்ஜி தான்.இந்த மனப்பாங்கினால்  ஏழைகளைக் கண்டாலே அவர்களுக்கு பிடிக்காது.

சுதி இந்த ஏரியாவைச் சேர்ந்த ஒரு அழகிய பதினாறு வயதுப் பருவப் பெண்.அவளுக்கு அழகுடன் சேர்ந்து திமிறும் ஜாஸ்தி தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.
வயிற்றுப் பசிக்கு காலையில் இருந்து ஏதும் உணவு கிடைக்காமல் ஒரு சிறுவன் தன் இடுப்பில் ஏந்திய தங்கையுடன் அந்த கடலோரத்தில் யாராவது சாப்பிட்டு மிஞ்சும் உணவுப் பொதியை வீசமாட்டார்களா? என்ற நப்பாசையில் காத்திருந்தான்.

அவனது பரட்டைத் தலையும் கிழிந்து தொங்கும் அழுக்குச் சட்டையும் அவனது காய்ந்து போன உதடுகளும் ஒட்டிய வயிறும் அவனது ஏழ்மையை பறைசாற்றும் இலச்சினைகளாக காட்சியளித்தன.

அவனிடம் ஆயிரம் ஏக்கங்கள் இல்லை.இன்று ஒரு வேளை உணவு கிடைக்காதா என்ற ஏக்கம் மாத்திரம் தான் அவனது கண்களில் ஆவலாய் தெரிந்தது.

கடலலைகளை மீறிய அட்டகாசமான சிரிப்பொலியுடன் நகர்ந்து செல்லும் பருவ வயதுப் பாவையர்களின் அரட்டையில் சிறுவனின் கைகளில் துவண்டு போய் தூங்கிக் கொண்டிருந்த சிறு குழந்தை விழித்து பசியில் அழத்தொடங்கிவிட்டது.

அந்த அழுக்கு சட்டைச் சிறுவன் அதனைத் தேற்றுவதற்காக தோளில் இட்டவாறு எழுந்தவன் கால் இடறுண்டு தொய்வுடன் விழ, அலைகளில் கால் நனைத்தவாறு பின்னால் நகர்ந்த சுதி மீது மோத அவளின் தோலில் மாட்டியிருந்த கைப்பை குழந்தையின் கைகளில் சிக்குப் பட்டு விழுந்தது.

வீலென்று அலறிய சுதியின் சத்தத்தில் அவளின் தோழியர்கள் அதிர்ந்து திரும்பினர். ஏழைச்சிறுவனும் குழந்தையும் முகத்தில் மணல் மேக்கப்பில் அதிர்ந்து போயினர்.

சுதிக்கு கோபம் தாங்க முடியவில்லை. அவளுக்கு அந்த ஏழைச் சிறுவர்கள் விழுந்தது பற்றி எந்தக் கவலையும் எழவில்லை.மாறாக தன் கைப்பை மீது அவனது தங்கையின் அழுக்கான கைகள் பட்டுக் கொண்டிருந்ததே எரிச்சலாக இருந்தது.

அவளது தோழி சுபா மெதுவாகச் சென்று குழந்தை கையில் சிக்குண்ட கைப்பையை விலக்கி எடுத்து வந்து சுதியிடம் கொடுத்தது தான் தாமதம் வெஞ்சினத்துடன் ஒரே வீச்சாக கைப்பையை வீசி எறிந்து விட்டு பரபரவென்று காரை நோக்கி சென்று விட்டாள். அவளது தோழியரும் அவள் பின்னே சென்று விட்டனர்.அவர்களுக்குத் தெரியும் அழுக்கானவர்கள் பட்ட எந்தப் பொருளையும் அவள் மீண்டும் எடுக்க மாட்டாள் என்று.

திகைத்து நின்ற சிறுவன் சற்று நேரம் கழித்து கனவு கண்டது போல விழித்துக் கொண்டு சற்று முற்றும் திரும்பிப் பார்த்தான்.

ஒரு கிழவன் சிரித்துக் கொண்டே சொன்னான்,
" தம்பி அந்தப் பை இன்று உனக்கு இறைவன் செய்த சூழ்ச்சியால் கிடைத்த பரிசு.
நீ போய் எடுத்து அதில் உள்ளதை பயன்படுத்தி உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்! போப்பா போய் எடுத்துக் கொள்!
இறைவன் இரக்கமுள்ளவன். உள்ளவனிடம் உள்ள கெட்ட குணங்களைக் கூட நமக்கு சாதகமாக மாற்றும் வல்லமை படைத்தவன் என்று தத்துவம் பேசியவாறு சென்று விட்டார்.

அழுக்குச் சட்டைக்கார சிறுவன் ஓடிப் போய் பையை எடுத்து திறந்து பார்த்தவுடன் அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை.
ஒரு மாதத்திற்கு சாப்பாடு சாப்பிட போதுமான அளவு பணம் அதனுள் இருந்து கண்ணை சிமிட்டியது.
சிறுவன் தன் அழுக்கான கைகளால் குழந்தையையும் பையையும் இறுக்கிப் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தான் தங்கை பசி தீர்க்க பால் கடையை நோக்கி......

~சிரியஸ்~
© siriuspoetry