...

34 views

எனக்கென உன்னைத் தந்து - 11
அத்தியாயம் - 11

கடந்திருந்தது ஒரு மாதம், அந்த வீட்டில் அவனின் இருப்பும் குறைந்து இருந்தது. தூங்க கூட நடுவில் சில நாட்கள் இல்லம் வராதவனை நர்மதா மௌனமாகக் கடந்திருந்தாள். அவனுக்கும் நர்மதாவின் இந்த மௌனம் பழகியிருந்தது. பெரியவர்கள் என இருவர் இருந்தார்கள் தான் ஆனால் அவர்களைச் சேர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

அன்று சனிக்கிழமை அகில் இல்லம் வரும் போதே புன்னகை முகமாகத் தான் வந்து இருந்தான். எப்போதும் போலக் குளித்து உடை மாற்றி உணவு உண்ண கிளம்பியவன் முன் வந்து நின்றாள் நர்மதா.

“காங்கராஸ் அகில்.”

“தாங்க்ஸ்.”

“இன்னிக்கி நானும் உங்களோட சாப்பிட வரட்டுமா?”

“இல்ல நான் என் ப்ரெண்ட்ஸ் கூட… எல்லாரும் பசங்க…” அகில் தயங்க,

“என்னையும் கூப்பிட்டு போங்க, உங்க ப்ரெண்ட்சை எனக்கு அறிமுகம் செய்து வைக்கக் கூடாதா?”

“இன்னிக்கி வேண்டாம். இன்னொரு நாள் அறிமுகம் பண்றேன்.”

“இல்ல… இன்னிக்கி போறோம். அவ்ளோ தான்.”

“இன்னிக்கி என்னோட புரோமோஷன் பார்ட்டி. பசங்க சிலர் குடிக்க போறாங்க. அங்க நான் உன்னைக் கூப்பிட்டு போக முடியாது.”

“நீங்கக் குடிப்பீங்களா?”

“மாட்டேன்.”

“அப்பறம் என்ன? போய் நம்ம பேசிட்டு, சாப்பிட்டு கிளம்பி வருவோம்.”

“ பார்ட்டி தரப் போற நான் எப்படி உன்னோட பாதியில் கிளம்பி வர முடியும்.”

“ஓகே நம்ம காரில் போலாம். நான் சாப்பிட்டு கிளம்பி வந்துறேன். நீங்கப் பொறுமையா பார்ட்டி முடிச்சுட்டு வாங்க.”

“என் பார்ட்டிக்கு நீ பிளான் போடாதா. பார்ட்டி என் பிரென்ட் வீட்டில்… உன்னைக் கூப்பிட்டு போக முடியாது.” அகில் இறுதியாய் சொல்ல,

“நம்ம இன்னிக்கி டின்னர் போறோம். அப்பா, அம்மா, நான், நீங்க எல்லாரும். கிளம்புங்க.”

“நீ போ அத்த, மாமா கூட நான் இன்னிக்கி வரல. இன்னொரு நாள் சேர்ந்து நம்ம போலாம்.”

“நம்ம இன்னிக்கி டின்னர் போறோம். அப்பா, அம்மா, நான், நீங்க எல்லாரும். நான் சொல்றது புரியுதா? கிளம்புங்க.” நர்மதா மீண்டும் சொல்ல,

“நான் வரல.”

“அப்பச் சரி. வாங்க நம்ம உங்க ப்ரெண்ட் வீட்டுக்குப் போலாம். நீங்க என்னோட தான் இன்னிக்கி டின்னர் சாப்பிடனும். அது எங்கன்னு நீங்களே முடிவு செய்யுங்க.”

“ என் பொறுமையை சோதிக்கிற நர்மதா.”

“நான் என்ன கேட்டேன்? டின்னர் தான கூப்பிட்டு போகச் சொல்றேன். அது முடியாதா? ஏன் எங்களுக்கு எல்லாம் பார்ட்டி வைக்கக் கூடாதா?”

“பிளீஸ்… நாளைக்கு கூப்பிட்டு போறேன்.”

“அப்ப என்னைவிட உங்களுக்கு உங்க ப்ரெண்ட்ஸ் தான் முக்கியம் இல்ல?”

“அப்ப உனக்கு மட்டும் நான் முக்கியமா? நீ உன் இஷ்டம் போலத் தான இருக்க? இதென்ன நான் செய்தா மட்டும் எல்லாமே தப்புன்னு சொல்ற?”

“போனது போகட்டும். இன்னிக்கி புதுசா தொடங்குவோம். டின்னர் போலாம் வாங்க.” நர்மதா சொல்ல,

“இரு ஒரு ஃபோன் பேசிட்டு போலாம்.” அகில் கூற நர்மதா சோஃபாவில் அமர்ந்து இருந்தாள்.

அகிலேஷ் நண்பர்களுக்கு அழைத்து மனைவி, மாமனார் மாமியார் உடன் சாப்பிட வெளியில் செல்வதாகக் கூறி அவர்களுக்கு அலைபேசி வழியே அவர்களுக்குத் தேவையான தொகையைக் கொடுத்து இருந்தான். பின் இரவு உடைக்குத் தன்னை மாற்றிக் கொண்டவன் நர்மதா பக்கத்தில் அமர்ந்து இருந்தான்.

“வெளிய போக வேண்டாம். உனக்கு என்ன வேணுமோ சொல்லு ஆர்டர் செய்வோம்.” அகில் சொல்ல,

“நம்ம டின்னர் போலாம் அகில்.”

“ஏன் வாங்கி வீட்டில் சாப்பிட்டா அது என்ன டின்னர் இல்லமா லன்சாவா மாறப் போகுதா? சொல்லு உனக்கு என்ன சாப்பிட வேணும்?”

“எனக்கு ரெஸ்டாரன்ட் போய்ச் சாப்பிடனும்.” நர்மதா குரலில் மீண்டும் பிடிவாதம் பிறக்க,

“ஆர்டர் பண்றேன் சொல்லு நர்மதா…”

“ஆக என்னை டின்னர் கூப்பிட்டு போக மாட்டீங்க அப்படி தான?”

“உனக்கு என் உணர்வைப் பத்தி எந்த டாசும் இல்லாதபோது, உன் உணர்வும் விருப்பமும் எனக்கும் டாஸ் தான். ரெண்டு பேரும் வீட்டில் சாப்பிட்டு புதுசா தொடங்கலாம். இல்லையா பட்னியா தூங்கலாம். நான் அப்படி தான் தூங்க போறேன். குட் நைட்.” அகில் சொல்லிவிட்டு நகர நர்மதா அவன் முன் அழுகையுடன் வந்து நின்று இருந்தாள்.

“நான் என்ன தப்பு பண்ணேன்? உங்களை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா? உங்க புரொமோஷன் கேட்டு எவ்ளோ சந்தோசமா காத்திருக்கேன் தெரியுமா? பிளீஸ் அகில் நான் உங்களுக்கு விருந்து தரத் தான் கேட்கிறேன். போலாம் வாங்க.” நர்மதா அழைக்க,

“இல்ல நர்மதா எனக்கு மூட் அவுட். நாளைக்கு போலாம்.” அகில் சொல்ல, நர்மதா மீண்டும் அழ, பெருமூச்சு விட்டவன் உடை மாற்றி, அவளை அழைத்துக் கொண்டு உணவகம் சென்று இருந்தான்.

அவளின் விருப்பம்போல இவனுக்கு உணவை வர வைத்திருந்தாள். அகில் எதேனும் சொன்னால் மீண்டும் முதலிலிருந்து அவளின் கொஞ்சலும், மிஞ்சலும், கெஞ்சலும் என அனைத்தும் சமாளிக்க வேண்டும் என்று புரிய அரைகுறையாக உணவை சாப்பிட்டு, நர்மதா வேறு ஆர்டர் சொல்லும் முன் அவனுக்குப் பிடித்த பழச்சாறை வாங்கி குடித்து இருந்தான்.

இரவு அறைக்கு வந்ததும் அவனை அணைத்து கொண்டவளை இவன் மெதுவாக விலகி நிறுத்த, நர்மதா முகத்தில் மீண்டும் கடுமை பிறக்க,

“உடனே என்ன அவசரம்? படு வா. கொஞ்ச ரெஸ்ட் எடுப்போம். இன்னிக்கி ராத்திரி முழுக்க நேரம் இருக்கு தான?” அகில் கேட்க, நர்மதா அமைதியாகி இருந்தாள்.

இருவரும் அருகருகே படுத்து டிவி பார்க்க, நர்மதா அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கி அதில் மூழ்கி விட, அகில் மெல்ல கண் மூடி உறங்கி இருந்தான்.

காலையில் அலுவலகம் நுழைந்த அவனை நண்பர்கள் சூழ்ந்து கொள்ள,

“என்ன மச்சி நேத்து சமாதானம் பண்ணிட்ட போல?” சாரதி கேட்க,

“சண்டையே கட்டாம எப்படி சமாதானம் பண்றது? பிரச்சனை இருந்தா அதுக்கு தீர்வு தேடலாம். இங்க பிரச்சனையே என்னன்னு தெரியாம என்ன செய்யுறது நான்?” அகிலேஷ் கேட்க,

“பேசினா தான்டா தெரியும். ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க.” ஜெய்பிரகாஷ் சொல்ல,

“நான் சொல்றது உங்களுக்கு எல்லாம் புரியுதா? நான் பேசினா அதை அவ கேட்டா தான பேசத் தோணும்? அவ பேசினா அது அவளுக்காகத் தான் இருக்கும். எனக்காக, என்னைப்பத்தி, ஏன் எங்களைப் பத்தி கூட அவ பேச்சு இருக்காது. கல்யாணமாகி ரெண்டு மாசமாச்சு இன்னும் எங்களுக்குள்ள புரிதலே வரல. அவளால அவளுக்கான எல்லாமே செய்துக்க முடியும். அவ என்கிட்ட நெருங்க ஒரே காரணம் அது தான். இன்னும் வெளிப்படையா சொன்னா அதுக்கா மட்டும் தான் நான் அவளுக்கோன்னு தோணுது.”

“டேய்… பைத்தியம் மாதிரி பேசாத, எல்லா பொண்ணுக்கும் தன் புருஷன் தன் விருப்பம்போல நடக்கனும் தான் எண்ணம் இருக்கும். அதுக்காகச் சண்டை போடுறது, அழுது டிராமா பண்றதுன்னு செய்யத் தான் செய்வாங்க. உன்னை அவங்க விருப்பம்போல இருக்க சொல்லக் காரணமே உன்னை விரும்பப் போய்த் தான? நீயும் உன் விருப்பத்தைச் சொல்லு, அவங்க கேட்பாங்க.” அசோக் எடுத்துச் சொல்ல, அகில் பெருமூச்சு விட்டவன் அலைபேசி எடுத்து நர்மதாவை அழைக்க,

“சொல்லுங்க…”

“அக்கா வீட்டுக்குப் போலாம்னு இருக்கேன் நர்மதா. நீயும் என்னோட வர முடியுமா? சனி, ஞாயிறு மட்டும் இருந்துட்டு வரலாம். கொச்சினை சுத்தி பார்த்த மாதிரியும் இருக்கும் போலாமா?” அகில் கேட்டவன் அழைப்பை ஒலிபெருக்கியில் மாற்றி விட,

“கொச்சின் போலாம். நான் டிரிப் பிளான் பண்றேன். ஆனா உங்க அக்கா வீட்டுக்கு வேண்டாம். எனக்கும் அவங்களுக்கும் செட்டாகாது. அவங்க வீட்டுக்குப் போறதில் எனக்கு விருப்பம் இல்ல.”

“என்ன நர்மதா அக்கா வீட்டுக்குப் போகத் தான் கொச்சின் போறோம். அவங்க வீட்டுக்குப் போகாம கொச்சின் மட்டும் எப்படி போட்டு வர முடியும்?”

“எனக்கு உங்க அக்கா வீட்டுக்கு வர விருப்பம் இல்ல. அவ்ளோ தான்.”

“பிளீஸ்… எனக்காக வரக் கூடாதா? ரெண்டு நாள் தானே?”

“எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்றேன். ஆனா நீங்க என்னை அட்ஜஸ்ட் பண்ண சொல்றீங்க இல்ல?”

“அட்ஜஸ்ட் பண்ண எல்லாம் சொல்லல, என் விருப்பத்தையும் கொஞ்சம் யோசிக்க சொல்றேன்.”

“உங்க விருப்பத்தை யோசிச்சா, நான் அட்ஜஸ்ட் பண்ணனும். அது என்னால முடியாது. நான் என்ன செய்யட்டும்?”

“அப்ப நான் மட்டும் போய்ட்டு வரட்டுமா? நீ பார்த்துப்ப தான?”

“நான் வர வேண்டாமா உங்களோட?”

“நீ தான் அக்கா வீட்டுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்ட இல்ல. அப்புறம் எப்டி?”

“ஏன் கொச்சின் முழுக்க உங்க அக்கா வீடு தான் இருக்கா? இல்ல கொச்சின் போனா கண்டிப்பா அங்க போய்த் தான் ஆகனும்னு எதும் சட்டம் இருக்கா?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல.”

“அப்ப நம்ம கொச்சின் போலாம். நான் டிரிப் பிளான் பண்றேன். நீங்க என்னோட வந்தா போதும்.” நர்மதா சொல்ல, அகில் பெருமூச்சு விட்டவன்,

“மேனஜர் கால். வீட்டுக்கு வந்து பிளான் பண்ணுவோம். பை.” அகில் சொல்லிவிட்டு அழைப்பை முடிக்க, நண்பர்கள் மூவரும் அமைதியாய் அவன் தோளைப் பிடித்துக் கொண்டனர்.

“அக்கா வீட்டுக்குப் போறது தான் என் விருப்பம். என் விருப்பத்துக்கு எதாவது மதிப்பு இருக்கா அங்க? கெஞ்சினாலும் கிடைக்காது. கடைசியா அவ பிளான் பண்ண இடத்தில் தங்கி, சாப்பிட்டு, ஊர் சுத்தி, அவ விருப்பம்போலத் தான் டிரிப் நடக்கும். இதே தான் எங்க ஹனி மூன் அப்பவும் நடந்தது. அப்பப் புது பொண்டாட்டி ஏன் அவ மனசை காயப்படுத்தனும் நினைச்சேன். ஆனா இப்ப ஒவ்வொரு முறையும் காயப்படுறது நானா மட்டும் தான் இருக்கேன்.” அகிலேஷ் சொல்ல, சாரதி அவனின் கைப்பிடித்து அழுத்தம் கொடுத்து இருந்தான்.

“எழுந்து வா காஃபி சாப்பிட்டு வந்து உன் வேலையைப் பாரு… இப்படியே உக்காராத, முதல சாப்பிடியா நீ?” அசோக் கேட்க,

“இல்ல. வாங்க போலாம்.” அகில் அவனை அவனே சமாதானம் செய்து கொள்ள முயற்சி செய்தான்.

மீண்டும் ஒரு மாதம் கடந்திருக்க, அன்று வேலையில் கவனமாக இருந்தவனின் அலைபேசி இசைக்க, அதை எடுக்கவே சலிப்பாக இருந்தது அவனுக்கு, பெருமூச்சு விட்டு அவன் அழைப்பை எடுக்க,

“எத்தனை நாள் லீவ் சொல்லி இருக்கீங்க?”

“எதுக்கு லீவ்?”

“குலதெய்வ கோவிலுக்குப் போக வேண்டாமா? உங்ககிட்ட அத்த சொல்லலையா?”

“எனக்கு நீ என்ன சொல்றன்னு புரியல.”

“நம்ம கோவிலுக்குப் போகனும் இல்ல? மாமா உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னார். அத்த கூட என்கிட்ட சொன்னாங்க. நம்ம அன்னிக்கே கோவிலுக்குப் போய்ட்டு வந்திருக்கனும். குல தெய்வத்தொட கோவம் தான் நமக்குள்ள எதும் சரியில்ல போல, போய்ட்டு வரலாம் அகில் பிளீஸ்…” நர்மதா கேட்க, அகில் முகத்தில் நீண்ட நாளுக்குப் பின் மென்னகை.

“போலாம். நீ உனக்குத் தேவையானதை எடுத்து வை. நான் டிக்கெட் பார்க்கிறேன்.” அகில் சொல்ல,

“அதெல்லாம் வேண்டாம். நம்ம காரில் போலாம். நான் காரைச் சர்வீஸ் விட்டேன், ஈவினிங் எடுத்துக்கலாம். ஆக்டிங் டிரைவருக்குக் கூடச் சொல்லிட்டேன். வியாழன் காலையே கிளம்பினா சரியா இருக்கும்.” நர்மதா சொல்ல, அவனின் இதழ் பிரியாத மென்னகை புன்னகையானது.

அகில் விடுமுறை வேண்டி நிற்க, அவனின் மேனேஜர் முதலில் முறைத்து, பின் அவனின் விளக்கம் கேட்டுச் சரியென்று சொல்ல, கோவையை நோக்கி மனைவியுடன் கிளம்பி இருந்தான். அவளும் ஆர்வமாய் அவனோடு கிளம்பி வந்ததில் அகிலின் மனம் தன் திருமண வாழ்வு சீராகிவிடும் என முழுதாய் நம்ப தொடங்கி இருந்தது. அந்த நம்பிக்கை கொடுத்த தெம்பில் நீண்ட நாளுக்குப் பிறகு அருகில் அமர்ந்து இருக்கும் அவளை இவன் விரல்கள் சீண்ட, நர்மதா முகத்தில் சட்டெனப் பிறந்தது நாணம். அவனின் தோளில் வந்து சாய்ந்து கொண்டவளை தோளோடு தோள் சேர்த்து கொண்டான்.
© GMKNOVELS