...

19 views

அன்பின் அப்பா - 5
அத்தியாயம் - 5

அன்று அன்பரசிக்கு சடங்கு, மகளை குளிக்க வைத்து இருந்தனர் உறவு பெண்கள். அன்பரசிக்கு மல்லிகாவின் வீட்டில் இருந்து சீர் வந்திருக்க, அத்தை மாமா இருவரின் கால்களில் பணிந்து அன்பு அதை வாங்கிய நேரத்தில் வாசலில் சலசலப்பு. பத்மநாபன் அவரின் குடும்பத்துடன் வீட்டின் உள்ளே வர, மாதவன் கோகிலாவை முறைக்க,

“தாய்மாமன் எனக்கு தகவல் சொல்லாம விட்டா, என்னால கண்டுபிடிக்க முடியாதா? நமக்குள்ள ஆயிரம் சண்டை இருந்துட்டு போகட்டும் வள்ளி. அதுக்காக என்கிட்ட இதை கூடவா சொல்ல கூடாது?” பத்மநாபன் கேட்க,

“சொல்ற நிலையில் நீங்க எங்களை வைக்கலையே.” வள்ளி கூற,

“உள்ள வான்னு கூப்பிட மாட்டீங்களா யாரும்?” சிவசாமி கேட்கவும், அன்பு அவர்களை வாங்க என்று அழைக்கவும், மாதவன் மகளின் அழைப்பை ஏற்று இருந்தார்.

“உங்க அண்ணனை கூப்பிடு.” மாதவன் வள்ளியின் காதில் சொல்லவும், வள்ளியின் கண்கள் ஆச்சரியமாக விரிய,

“என் மூச்சியில என்ன ஆடுது? போ போய் வாங்கன்னு கூப்பிடு.” மாதவன் மெல்லமாய் அதட்ட, வள்ளி அவர்களை வரவேற்று இருந்தார்.

தங்கையும், தங்கையின் மகளும் வரவேற்று இருக்க, பத்மநாபன் வீட்டின் உள்ளே வந்திருந்தார். கோகிலா கடவுளுக்கு நன்றிகள் சொல்ல, விசாலாட்சி மல்லிகா என மாதவன் குடும்பத்து சொந்தங்கள் அனைத்தும் எதையும் பேச முடியாத சூழ்நிலையில் அமைதியாக அவரவர் வேலையை பார்க்க, அன்பின் கையில் பத்மநாபன் சீரை வைக்க, அன்புக்கு தாய் மாமனின் புடவையை கட்டி, அவர் கொடுத்த நகைகளை எல்லாம் அணிவித்து அலங்காரம் செய்து அன்பை அழைத்து வர, அனைவரின் கண்களும் அவளின் அழகில் மயங்கி நின்றது. அவளின் அழகில் இருந்து மீள முடியாமல் தவித்தான் இன்பசெழியன்.

அதற்கு நேர் எதிராக மகளின் வளர்ச்சியை கண்டு வாய் அடைத்து நின்று இருந்தார் மாதவன். இத்தனை நாளும் பாவாடை சட்டையில் சின்னவளாக தெரிந்தவள், இன்று பட்டுபுடவையில் பெரிய மனுஷியாக தோற்றம் அளிக்கவும் அவருக்கு கண்கள் கலங்கி போனது. பின் அவளுக்கான சடங்கு இனிதாய் முடிய, விருந்து தொடங்கி இருந்தது. அப்போது தான் சிறியவர்கள் பேச நேரமும் கிடைத்தது. அன்பு, மனோ, வினோத், வேணி என நால்வரும் ஒன்றாய் அமர்ந்து இயல்பாய் பேச, இன்பா மட்டும் என்ன செய்ய என தெரியாது தனியாய் நின்றான். அதை கண்ட கோகிலா தான் பேரனை அழைத்து சென்று மனோவிடம் விட்டார்.

“பாட்டி இவன் பெயர் என்ன?” வினோத் கேட்க,

“வினோத் என் பேரன் உனக்கும் மூத்தவன். அவன் இவன்னு பேச கூடாது. அண்ணான்னு தான் கூப்பிடனும். அப்புறம் இவன் பேரு இன்பசெழியன்.” கோகிலா சொல்ல,

“என்ன படிக்கறீங்க இன்பா அண்ணா?” வினோத் இப்போது மரியாதையாக கேட்க,

“பதினொன்னு படிக்கிறேன். அறிவியல் முதல் பிரிவில் படிக்கிறேன்.” இன்பா சொல்ல,

“அப்ப எனக்கும் இன்பாவுக்கும் ஒரே வயசு தான் போல…” மனோ கேட்க, இன்பா ஆம் என புன்னகைக்க, அங்கே ஆண் பிள்ளைகள் மூவரும் ஒன்றாக பேசிக்கொண்டு நிற்க, மாதவன் அதை கண்டவர் அமைதியாக அவரின் வேலைகளை கவனிக்க சென்று இருந்தார்.

விசேஷம் முடிய பத்மநாபன் வீட்டிற்கு செல்ல புறப்பட்டவர் மாதவன் முன் வந்து நிற்க, மாதவனும் பேசாது தயங்கி நின்று இருந்தார்.

“நாங்க கிளம்புறோம் மாப்பிள்ளை. நாங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலன்னு புரியுது. பதினஞ்சு வருஷம் முன்னாடி எதோ ஒரு வேகத்துல உங்களை மரியாதை குறைவா பேசிட்டேன். வார்த்தையை விட்டது தப்பு தான், என்னை மன்னிச்சுடுங்க. நீங்களும் வள்ளியும் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வரணும்.” பத்மநாபன் மனம் திறந்து பேச,

“என்னால இன்னும் எதையும் ஏத்துக்க முடியல மச்சான். எனக்கு இன்னுமே கொஞ்சம் நேரம் வேணும்.” மாதவன் சொல்ல, பத்மநாபன் கையெடுத்து கும்பிட்டு விட்டு, குடும்பத்துடன் விடைபெற்று கொண்டார்.

இரவு மாதவன், மல்லிகா, வேணி, அன்பு, விசாலாட்சி, வள்ளி, வினோத், மனோ, ராஜகோபால் என மாதவன் குடும்பம் மட்டுமே இருக்க, அன்பு அந்த கேள்வியை கேட்டு இருந்தாள்.

“அப்பா ஏன் தாய்மாமா கூட நம்ம யாரும் இத்தனை நாள் பேசல? உங்களுக்கு அவருக்கும் என்ன சண்டை?”

“அடியே பெரிய மனுஷி, உனக்கு எதுக்கு இந்த கேள்வி?” மல்லிகா கேட்க,

“தெரிஞ்சுக்க தான் அத்த, சொல்லுங்க.” மனோ கேட்க,

“அது மனோ பிறந்து காதுகுத்து வெச்சு இருந்த நேரம். பங்காளி உள்ள யாரு பெரிய ஆளுன்னு பேச்சு வந்து இருக்கு, உங்க அப்பனை பெருமையா பேசவும் அதை ஏத்துக்க முடியாம உங்க தாய் மாமன், மாதவனை கிண்டலா மட்டம் தட்டி பேச, உங்க அம்மா கோவத்தில் பதிலுக்கு கத்த, மாதவன் அதை தடுக்க போய் சமாதானம் பேச, அடங்காத உங்க தாய்மாமன் விடாம வீம்புக்கு பேசி வைக்க, கடைசியில வாக்குவாதம் முத்திப்போய் உறவு விட்டு போனது தான் மிச்சம்.”

“சின்ன பிரச்சனை தான் அதை பொறுமையா பேசி இருக்கலாம். எங்க? ஆனாலும் உங்க மாமன் என் பையனை வக்கு இல்லாதவன் சொல்லி இருக்க கூடாது. மனோ பிறந்த நேரத்தில் மாதவனுக்கு கடமை நிறைய இருந்துச்சு. அதனால சேமிப்பு இல்ல. இப்ப உங்க அப்பன் தான் ஊராட்சி மொத்ததுக்கும் பால் கொடுக்கிறான்.” விசாலாட்சி சொல்ல,

“எங்க அப்பாவை கிண்டல் பேசுறாரே உங்க அண்ணா, அவர் ரொம்ப பெரிய ஆளோ?” அன்பு வள்ளியை வம்புக்கு இழுக்க,

“எங்க அண்ணன் தான்டி இந்த முன்சிபலிடி சேர்மேன். எங்க அப்பா சொந்தமா மில் வெச்சு இருந்தாரு, மில்லுக்கார வீட்டுப் பொண்ணுன்னு தான் உங்க தாத்தா என்னை உங்க அப்பாக்கு சம்பந்தமே பேசினாங்க. எங்க அண்ணன் பேசினது தப்பு தான். எனக்கும் அதில் பயங்கர கோவம். ஆனா அதை தவிர அவர் மேல தப்பு சொல்ல எதுவுமே இல்ல.” வள்ளி கூறியவர் சட்டென குரல் உடைந்து விட, மற்றவர்கள் பதற, வள்ளி எழுந்து வீட்டின் உள்ளே சென்று இருந்தார்.

“அம்மா…” அன்பு அழைக்க அழைக்கவே அவர் சென்று இருக்க,

“நான் எதும் தப்பா சொல்லல தானே? விளையாட்டுக்கு தான் பேசினேன். அம்மா…” அன்பு கேள்வியாக நிறுத்த,

“ அவளுக்கும் அவ அண்ணன் மேல பாசம் இருக்கும் தான? இத்தனை வருஷமா உன் கோவத்துக்கு பயந்து தான் அவ அவங்க தாய் வீட்டுக்கு போகவே இல்ல. இப்ப அண்ணனே இறங்கி வந்துட்டான். இனியும் உன் கோவத்தை இறுக்கி பிடிக்காத மாதவா…” விசாலாட்சி சொல்ல,

“அம்மா கோவம் எல்லாம் போய்டுச்சு எனக்கு, எனக்கும் புரியுது. வள்ளியை நான் நல்லா பார்ப்பேன் தான் அவங்க வீட்டில் கட்டி வெச்சாங்க. என் நேரம் தொழிலில் நிறைய நஸ்டம். நல்ல அரிசி சோறு கூட இல்லாம வாழ்ற தங்கச்சியை பார்த்து அவருக்கும் வருத்தம் இருந்திருக்கும் தான? அதை வார்த்தையா என்மேல கொட்டி இருக்கார். நானும் விலகி இருக்க நினைக்கல மா. இதோ இன்னிக்கி இந்த பசங்க எல்லாம் ஒன்னா நின்னு பேசறதை பார்த்ததும் பழைய ஞாபகம் எல்லாம் வந்துச்சு.” மாதவன் சொல்ல,

“ஆமா… கல்யாணமான புதுசுல குலதெய்வ கோவில் போகும் போது எல்லாம் பத்மநாபன் அண்ணன் நம்மோட எத்தனை சிரிப்பா, நட்பா பேசுவாரு இல்ல? மூணு பேரும் எத்தனை கதை பேசி இருப்போம்? அதெல்லாம் ஒரு அழகான காலம் மச்சான்.” ராஜ கோபால் இன்முகமாக ரசித்து சொல்ல,

“நானே எதிர்பார்க்கல மாப்பிள்ளை. இப்படி சட்டுன்னு வந்து வாசலில் நிப்பாருன்னு, அன்பு வாங்கன்னு சொல்லவும், அவ சொல்லை மறுக்க முடியல. இப்படி தான் சரியாகனும்னு இருக்கும் போல, மாப்பிள்ளை மன்னிப்பை கேட்ட நிமிஷம் எனக்கு வார்த்தையே வரல. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாகிடும்.” மாதவன் சொல்ல,

“தாங்க்ஸ் பா…” அன்பு சொல்லவும் மகளின் தலை வருடி கொடுத்தார் மாதவன்.

அடுத்த நாள் காலையில், மல்லிகா குடும்பத்தினர் விடைபெற்று கிளம்ப, விசாலாட்சியும் அவர்களோடு புறப்பட்டு இருந்தார். வள்ளி முகத்தில் இன்னும் வாட்டம் இருக்க, மாதவன் நீண்ட நாளுக்கு பின்பு துணைவியை வம்பிழுக்க தயாராகி இருந்தார்.

மதிய உணவை வள்ளி எடுத்து வைக்க, அன்பு எழுந்து சாப்பிட வர, மனோ இலை அறுத்து வந்திருந்தான். மாதவன் வந்து அமர்ந்தவர், பிள்ளைகளுக்கு உணவை வைத்து கொடுக்க,

“நீங்களும் வெச்சு சாப்பிடுங்க. நான் வேலையா இருக்கேன்.” வள்ளி சொல்ல,

“மீன் வறுத்துட்டு இருக்கியா?” மாதவன் கேட்க,

“என்ன? எப்ப வாங்கி கொடுத்தீங்க? இது என்ன புது கதை?”

“ ஏன் கொடுக்கனும்?ஆத்துல பிடிச்சு சுட்டு கொடுக்கிறது?”

“வேண்டாம் என்னை வம்புக்கு இழுக்காதீங்க சொல்லிட்டேன்.” வள்ளி உருளைக்கிழங்கு வறுவலை கொண்டு வந்து வைக்க,

“அப்பா… இங்க எங்க ஆறு இருக்கு மீன் பிடிக்க?” மனோ கேட்க,

“உங்க அம்மா வீட்டுல இருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தா பவானி ஆத்து தண்ணியை பார்க்கலாம். எங்களுக்கு கல்யாணமான புதுசுல உங்க அம்மா ஆத்துல மீன் பிடிச்சுட்டு வந்து எனக்கு சுட்டு கொடுத்து இருக்கா…” மாதவன் சொல்ல,

“என்ன இப்ப உங்களுக்கு? எங்க அண்ணன் நேத்து இறங்கி வந்தும் உங்களுக்கும் உங்க கௌரவம் இறங்கி வர இடம் கொடுக்கல தான? உங்க பொண்ணை ஒருத்தன் கல்யாணம் கட்டிட்டு போய் கண் கலங்க விட்டா, உங்களுக்கு கோவம் வருமா வராதா?” வள்ளி கேட்க,

“அடியே… வார்த்தைக்கு கூட என் பொண்ணை எடுத்துக்காட்டு வெச்சு பேசாத, மனோ பிறந்தப்ப, என் நிலைமை என்னன்னு உனக்கும் தெரியும். நேத்து சட்டுன்னு மச்சான் மன்னிப்பு கேட்டார். என்னால அவரை போல சட்டுன்னு இறங்கி வர முடியல. அதுக்காக உறவே வேண்டாம்னு சொல்லலையே நான்? அவர் என் வாசல் தேடி வந்த அப்புறம் கௌரவம் பிடிச்சு நிக்க நான் முட்டாள் இல்ல. இந்த வார கடைசி பிள்ளைகளை கூப்பிட்டு ஊருக்கு போ, நான் ஞாயிறு வரேன்.” மாதவன் சொல்ல, வள்ளி கண் கலங்கி நிற்க,

“அட எனக்காக தானே இத்தனை நாளும் அங்க போகாம இருந்த? எனக்கு எந்த வருத்தமும் இல்ல. அவரு முறையா, உரிமையா வரும் போது, நாமும் போகனும் இல்ல?” மாதவன் கேட்கவும், வள்ளி சரியென தலையாட்டி சிரிக்க, அன்பும் மனோவும் பெற்றோரின் காதலையும் புரிதலையும் ரசித்து இருந்தனர்.
© GMKNOVELS