...

19 views

ஆலமரம்
பொதுவாக எல்லா ஊரின் எல்லையில் ஒரு கோவில் இருக்கும், அதேபோல் அந்த ஊரிலும் இருந்தது, கூடவே அதன் அருகே அடர்ந்து படர்ந்து வளர்ந்த ஒரு ஆலமரமும் இருக்கின்றது.

அந்த கோவிலுக்கு செல்லும் பாதை அடர்ந்த செடி கொடிகளால் சூழப்பட்டு, பள்ளம் மேடுமாக தான் இருக்கும். ஏனென்றால் அங்கு அடிக்கடி யாரும் செல்வதும் இல்லை, அந்த பாதையை அடிக்கடி பயன்படுத்துவதும் இல்லை, அதனால் அந்த வழி எப்போதும் இப்படி தான் இருக்கும், ஆனாலும் சென்று வர வழி இருக்கும்.

அந்த கோவிலுக்கும் விழா காலம் உண்டு, ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் முழுவதும் விழா நடைபெறும், அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த இடமே புதியதாக தோன்றும், திருவிழா நாட்களில்! மக்களின் மகிழ்ச்சி குரலுடன், பறவைகளின் ஒலிகள் கலந்து கேட்கும், அந்த சத்தங்கள் எல்லாம் ரம்மியமான இசையை போல இருக்கும், கேட்பதற்கு.!

திருவிழா நாட்களில், அந்த ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் பய பக்தியுடன் பூஜை செய்து கொண்டிருந்தால், அங்குள்ள ஆண்கள் அவர்களுக்கே உரித்தான பணியை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், குழந்தைகள் அனைவரும் அவர்களுடைய நண்பர்களுடன் அந்த ஆலமரத்தருகே தான் இருப்பார்கள், விளையாடுவதற்காக, அவ்வளவு பெரியது அந்த ஆலமரம்.

அதில் சிலர் ஒளிந்து பிடித்து விளையாடுவார்கள், மற்றும் சிலர் அந்த ஆலமரத்தின் விழுதுகளை பிடித்துக்கொண்டு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருப்பார்கள், இன்னும் சிலர் நண்பர்கள் ஆடுவதற்கு உதவி கொண்டிருப்பார்கள். அப்படி ஆடுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம்.

ஆனால் அங்குள்ள அந்த ஆலமரம் எப்போதும் ......

அதற்கே உண்டான கம்பீரத்துடன் எப்போதும் நிமிர்ந்து நிற்கும்,
அதன் கிளைகள் பறவைகளுக்கெல்லாம் வீடாக மாறி இருக்கும்,
அதன் பழங்கள் அவைகளுக்கு உணவாகி போகும்,
எத்தனை சீற்றங்கள் வந்தாலும் அதனை எதுவும் செய்திட முடியாது,
ஏனென்றால்,
விண்ணை நோக்கி வளர்ந்த தன் கிளைகளை விழுதாக்கி
மண்ணை நோக்கி அனுப்பும்,
தன் பலவீனத்தால் அல்ல,
அவைகளை வேர்களாக்கி தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள,
தன்னை விரிவு படுத்திக்கொள்ள,
அதன் முதல் தோற்றம் எது என்று ஊகிக்க முடியாத அளவுக்கு,
தன்னை யாரும் தகர்க்க முடியாத அளவிற்கு....

தன்னுள் எத்தனை வீழ்ச்சி வந்தாலும்,
அதையே தனக்கான மூலதனமாக்கி,
தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்,
எவரும் அசைக்க முடியாவண்ணம்,
கம்பீரத்துடன் நிற்கும்.....

இவ்வாறு இந்த ஆலமரம், மனிதர்களுக்கும் சில அறிவுரையை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. அதை நாமும் புரிந்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வோம்....

அனைவரையும் நேசிப்போம்....!
பறவைகளுடன் இணைந்து வாழ்வோம்...!
மரங்களை பாதுகாப்போம்.....!


© Megaththenral