...

13 views

நெடிய கழியும் இரா
வாசகர்களுக்கு இனிய வணக்கம்.
பாலியல் உணர்வுகளை / பாலியல் உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்ட கதைகள் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாக புனிதத்தைப் போர்த்தி ஆண்-பெண் பேதமேதுமின்றி  இயல்பாக சிந்திக்க விடாமல், இணையிடம் கூட பேசவிடாமல், ரகசியமாக செவி வழி விழுந்து, கிளர்ந்து, படர்ந்து நம்மை நமது ஆழ்மன எண்ணங்களை அப்பிக்கொள்பவை அவை.

ஏற்கனவே பல ஜாம்பவான்கள் பாலியல் உணர்வுகள் சார்ந்து நுனி முதல் அடிவரை ஆராய்ந்து பல நூல்களை நமக்கு தந்திருந்தாலும்,
நான்  மதிக்கும் சிறந்த வாசகர்
சிலாகித்து எழுதியிருந்த  எழுத்தாளர்களில் எனது வாசிப்பினை மெள்ள மெள்ள குவியப்படுத்தும் நேரத்தில் எழுத்தாளர்கள் இருவர்  என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். அத்தகைய ஜாம்பவான்கள் திரு. ஜி.நாகராஜன் மற்றும் திரு. சதத் ஹசன் மாண்ட்டோ.

அவர்களது ஆக்கங்கள் என்னை முகம் சுளிக்கவோ,  அருவருக்கவோ இல்லை பதைபதைக்கவோ வைக்காமல் அதேநேரம் அழவைக்கவோ, அனுதாபப்படவோ,  திடீரென மூளை நரம்புகளை முறுக்கேற்றவோ தூண்டாமல் மாறாக எனக்குள் நாளதுவரை இருந்த பிம்பத்தில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியது... அதுவும் மெது மெதுவாக...!

வார்த்தைகளில் அதை வர்ணித்தால் நிச்சயம் பொருளற்றதாகவே அமையும்.வழக்கமான மெல்லுணர்ச்சி கதைகளை தாண்டி இக்கதையை எழுத ஆவல் இருந்தாலும் எனக்கிருந்த தயக்கத்தை உடைத்து அதன் தாக்கம்தான் இந்த கதையை எழுதி பதிவிடும் வலுவான எண்ணத்தை என்னுள் உருவாக்கியது என்பது நூறு சதவீதம் நிச்சயம்.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.
திருமணமான இருவேறு நபர்களின் திருப்தியடையாத பாலியல் உணர்வுகளால் விளையும் அனர்த்தத்தை தினசரி‌ வாழ்க்கையில் பார்த்திருப்போம். சாராசரியென  கடந்தும் கொண்டு இருப்போம்.

மெல்லிய திரைகளிட்டு, அசிங்கமென நாம் கண்டும் காணாமல் கடந்துவிட்டதாய் பாசாங்கு செய்வோம். அதைப்பற்றி பேசுவது மட்டுமல்ல யோசிப்பதும் கூட மாபெரும் பாதகம் என்று  நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்.

அறத்தையும், வீரத்தையும் கொண்டாடும் அதேநேரம் காதலையும் காமத்தையும் சம அளவில் தந்த  சங்க இலக்கியங்கள் முதல் திருக்குறள் வரை படைக்கப்பட்ட மரபு நம்முடையது. 

அந்த மாதிரியான மரபில் ஊறிய ஒரு வர்க்கத்தில் உருவாகும் பாலியல் உறவு மீறல்களுக்கு அடித்தளம் எதுவாக இருக்கும்? காதலுக்கும் பாலியல் உணர்வுகளுக்குமான சரியான புரிதலற்று உறவில் விரிசலை ஏற்படுத்துவது எதுவாக இருக்கும்?  எப்போதாவது யோசித்து இருப்போமா? என்றால் இல்லை. அப்படி ஒரு யோசனையில் தோன்றியது இக்கதையின் வேறொரு கோணம்.

"உண்மையில் காதல் என்றால் என்ன? காதலின் புனிதம் என்பது என்ன? இந்த வரிசை சிந்தனைகளே இக்கதையின் இறுதிவரை மனதத்துவத்தின் பாதையில்  பயணிக்க எனக்கு அடிப்படை காரணமாகவும் அமைந்தது.

முழுக்க முழுக்க யதார்த்தத்தின் பிடியில் இருந்தாலும் ஒரு சிறிய மீறலில் காதலின் மையப்புள்ளியை காட்சிப்படுத்த எண்ணுகிறேன்.

இதற்கென என்னுடைய பிரத்தியேக மெனக்கெடல்கள் எதுவுமில்லை என்றாலும் நியாய தராசின் முள் நிலையில் நின்று  யார் சரி... யார் தவறு , எது புனிதம் எது அபத்தம் என்ற‌ எந்த விவரணையும் விளக்கமும் அளிக்கும்படி நான் எழுத போவதில்லை.

அதே போன்றே வாசிப்பவர்களும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் வரம்புகளையும் கொண்டு இந்த கதையை வாசிக்காதீர்கள். அங்காங்கே உண்மைகளை சிதறவிட்டு எழுதப்பட்ட இந்த கதையை வாசித்து முடித்த பிறகு உங்களுக்கு தோன்றும் அனுமானத்திற்கும் நான் பொறுப்பல்ல. இது வெறும் கதை அவ்வளவே!

காதலென வரிவரியாய் காமத்தினை பிழிந்தெடுத்து எழுதப்பட்ட கதையென  நினைத்து  இதனை வாசிக்க தாங்கள் விழைந்தால் மன்னிக்கவும் இந்த படைப்பு அப்படிப்பட்டதும் அல்ல. தங்களுக்கானதும் அல்ல. தயவு செய்து இதை கடந்து சென்று விடுங்கள். அதுவே நம்மிருவருக்கும் நலம் பயக்கும்! நன்றி🙏

வாருங்கள்  "நெடிய கழியும் இரா" குறுநாவலுடன் உடன்  பயணிப்போம்.

அன்புடன்
மதிஒளி