...

24 views

என்னுயிர் துணையே - 13 & 14
துணை - 13

சத்யாவுக்கும் சூர்யாவுக்கும் இறுதியாண்டு அது, விஜய் இளங்கலை முடித்து முதுகலை முதலாம் ஆண்டில் இருந்தான். மற்ற மூவரும் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தான் வந்தது அந்த தீபாவளி திருநாள்.

தீபாவளி இனிதாய் தொடங்கி இருந்தது அனைவருக்கும் குளித்து, கடவுளுக்கு நன்றி கூறி, பூஜை முடித்து, புத்தாடை அணிந்து, இனிப்பு உண்டு கடைக்குட்டி ஹரியின் கையால் சரவெடி வைக்க, தேவிபட்டினமே விழித்து கொண்டது.

காலை உணவை முடித்திருக்க சூர்யா அவனின் நண்பர்களை காண சென்று விட, ஹரியும் வித்யாவும் அவர்களின் பள்ளி தோழர்கள் இல்லம் செல்வதாக கூறி சென்று விட, சத்யா விஜய் மடியில் படுத்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தான்.

" ஏன் மாப்பிள்ளை படிப்பு எல்லாம் எப்படி போகுது? " சத்யா கேட்க,

" அது நல்லா தான் போகுது. எனக்கு தான் அடிக்கடி உன்னை தேடுது. " விஜய் சோகமாய் பதில் கூற,

‘ அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இதுல நல்ல பொருத்தம்..’ சத்யா மனதில் எண்ணி சிரிக்க,

" டேய்.. மிஸ் பண்றேன் சொல்றேன். சிரிக்கிற.. "

" என்னோட படிக்க வான்னு கூப்பிட்டேன் வந்தியா? உனக்கு ஐடி தான் வேணும், அதே போல எனக்கு ஆர்க்கிடெக்ட் வேணும் வேற என்ன செய்ய சொல்லு? "

" யாப்பா என்னால அஞ்சு வருசம் ஒரே படிப்பை படிக்க முடியாதுடா.. அதும் போக அம்மாக்கு இதான் விருப்பம்.."

" இதுக்கே இப்படி மூஞ்சியை தூக்குற நான் லண்டன் போக போறேன் மேல படிக்க இப்ப சொல்லுங்க சார்.. உங்க ஃபீலிங் என்ன? "

" செருப்புல அடிப்பேன் நாயே.. இங்கேயே நீ புடுங்கு போதும்.. "

" என்னடா இப்படி பேசற? ரெண்டு வருசம் தான். அப்புறம் இந்தியா வந்து புதுசா தொழில் தொடங்கி.. அப்படியே.. "

" அப்படியே வாயில இன்னும் அசிங்கமா வருது பேசவா? "

"விஜய்.. என் கனவுடா இது, ஆர்கிடெக்ட் ஆகனும், சொந்த வீட்டை டிசைன் பண்ணனும். இன்னும் நிறைய.. நீ என்னடா என்னை படிக்க போக வேண்டாம்னு சொல்ற?"

" சரி படிக்க மட்டும் போய்ட்டு வா. அப்புறம் என்னை பிரிஞ்சி எங்கையும் அனுப்ப மாட்டேன். "

" தாங்க்ஸ் மச்சி.. "

“ இதுக்கு ஒன்னும் குறை இல்ல.. நல்லா மடியில படுத்து ஐஸ் வையு நீ.. "

இருவரும் சண்டையில் அன்பும் நட்பும் வளர்த்த, அங்கு வந்த அறிவுமதி சத்யா மகன் மடியில் படுத்து இருப்பதை பார்த்து மகனுக்கு வேலை சொல்ல, சத்யா அன்பை தேடி அவள் அறைக்குள் எட்டிப்பார்க்க, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தவள் சத்யாவுடன் மொட்டை மாடிக்கு சென்று இருந்தாள்.

" தயவு செஞ்சு படிப்பை பத்தி பேசி மொக்கை போடாதா சத்யா.. " அன்பு சொல்ல,

" இந்த புடவை உனக்கு அழகா இருக்கு அன்பு..." சத்யா சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாது அமைதியாக இருக்க,

" என்னாச்சு என் மாமாக்கு? "

" ம்ம்.. லண்டனுக்கு படிக்க போறேன் சொன்னா உங்க அண்ணன் சாமியாடுறான். நீ படிப்பை பத்தி பேசாதன்னு சொல்ற நல்ல ஒற்றுமை உங்களுக்கு.. "

" ஆமா.. பிரிவு வலின்னு உனக்கு புரியல.. நானா பிரியனும் நிக்கிறேன்? படிப்பு முக்கியம் என் கனவு அது.. "

" போதும் போதும்.. போய்ட்டு வாங்க நீங்க வரும் போது எனக்கும் படிப்பு முடிஞ்சுடும். அப்புறம் நம்ம கல்யாணம் தான்.. "

" ஆமா இருபத்தி நாலு வயசில் கல்யாணம் பண்ணிக்கிறேன் சரியா? "

" கொஞ்ச நாள் இந்தியா டவர்ஸ் போய் நம்ம பிசினஸ் பொறுப்புகளை பார்த்துக்கோ, மாமா சொந்த பிசினஸ் ஆரம்பிச்சு, சொந்த காலில் நின்னுட்டு அப்புறம் பண்ணிக்கிறேன். "

" கல்யாணம் பண்ணிட்டு பிசினஸ் பண்ணா ஆகாதா? "

" நம்ம கல்யாணத்துக்கு யார் எதிர்ப்பு சொல்ல போறாங்க? கல்யாணம், காதல் எல்லாமே பொறுப்பு, என் பொண்டாட்டிக்கு இதுவரை நான் பரிசே வாங்கி தரல ஏன் தெரியுமா? அது எல்லாம் என் அப்பா, அம்மா காசு. உனக்கு எல்லாமே என் காசில் செய்யனும். அதுக்கு நான் சொந்த சம்பாத்தியம் செய்யனும் புரியுதா? "

" புரியுது.. "

" பக்கத்துல வா.. " சத்யா கை நீட்டி அவளை பக்கம் அழைக்க, அவன் அருகில் வந்தவளை அமர வைத்து தோள் மீது கைப்போட்டு அவனோடு தோள் சேர்த்துக் கொண்டான்.

" எனக்கு இந்த படிப்பு, பணம், தராத ஒரு பாதுகாப்பு உன்கிட்ட தான் மாமா கிடைக்குது. என் அப்பாக்கு அப்புறம் எனக்கு எல்லாமே நீ தான், என்னால நீ இல்லாம வாழ முடியாது.. "

" அச்சோ.. லண்டன் போகலமா நான்.. நீ எதையும் யோசிச்சு கலங்காத பிளீஸ்.. "

" இல்ல நீ போய்ட்டு வா மாமா.. எனக்கு எந்த பிரச்சனையையும் இல்ல. "

" என் அன்போட அன்புக்காக எதையும் விட்டு தரலாம். நான் போகல.. "

" உன் படிப்பு வீணா போகும் மாமா.."

" போகட்டும்.. இந்தியாவில படிப்போம்.. "

" உன் கனவு மாமா இது விளையாடதே.. "

" உனக்காக எதையும் செய்வேன்டி என் பொண்டாட்டி.." சத்யா புன்னகையுடன் கண் சிமிட்டி கூற,

" லவ் யூ சோ மச் மாமா.. " அன்பு அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க, இன்பமாக கண் விரிந்தவன், இன்னொரு கன்னத்தை காட்ட, அதில் மென்மையாய் கைகளால் வருடி விட்டு சென்று இருந்தாள். சத்யா புன்னகையுடன் அமர்ந்திருக்க, அறிவுமதி அதையும் பார்த்து விட்டு சென்று இருந்தார். சத்யாவை காலம் முழுக்க அழ வைக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்யாமல் விடுவாரா? சிறப்பாக மிக சிறப்பாக செய்ய, பொறுமையாய் காத்திருந்தார். புலி பாயும் முன் பதுங்குமாம் அப்படி இருந்தது அவரின் செயல்.

சத்யா இளங்கலை முடித்த அதே நேரத்தில் தான் சூர்யாவும் முடித்து இருந்தான். இருவருமே பொள்ளாச்சிக்கு ஒரே நாளில் தான் வந்தனர். ஆனால் அவனை தேடி தினம் இளைஞர் கூட்டம் வரும். தோட்டத்தில் அமர்ந்து பேச எழுப்பி இருக்கும் நிழல் குடையில் காத்து இருக்க சொல்லி இருப்பார்கள் வீட்டின் காவலர்கள்.

சத்யா கல்லூரியின் மூடி சூடா மன்னன். கூடைப்பந்து அவனின் விருப்ப விளையாட்டு, மாநில அளவிலான போட்டியில் மூன்று முறை பதக்கம் வென்று வந்தவன். அவன் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணிக்கு தலைவன். கோவையில் அவன் விளையாடாத கூடைப்பந்தாட்ட போட்டிகளே கிடையாது. பல ஆரம்பநிலை கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு பணமும் பொருளும் கொடுத்து உதவி இருக்கிறான். அவனின் கனிவும் கண்ணியமும், அன்பும் அக்கறையும் அனைவரையும் அவனுக்கு ரசிகனாக வைத்து விடும். கல்லூரி காலம் அவன் வாழ்வில் வசந்த காலம்.

அப்பாவிடம் பேசி மாணவர்களுக்கு நிறைய உதவி செய்வான். அது அறிவுக்கு பிடிக்காது. யார் வீட்டு சொத்தை யார் வாரி வழங்குவது? மனதில் இவனுக்கு கர்ணன் என்ற நினைப்பு என பல நாள் கோவப்பட்டு இருக்கிறார். மொத்தமாய் அவனை பழிவாங்க வந்தது அந்த நாள். இந்தியா டவர்ஸ் தொடங்கி இருப்பத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க, அன்று அதை கொண்டாடும் விதமாக மும்பையில் விழா ஏற்பாடாகி இருந்தது. குடும்பத்தில் அனைவரும் மும்பை சென்று இருந்தனர். முன் வரிசையில் அமர போடப்பட்ட நாற்காலிகளில் சுந்தரிக்கும் சத்யாவுக்கும் நாற்காலிகள் இல்லை. மற்ற அனைவருக்கும் நாற்காலி இருந்தது. விழா தொடங்கிய நேரத்தில் சபைக்குள் வந்த தாயும் மகனும் தடுமாற, குடும்பத்தாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, கேமரா கண்களில் விழ கூடாது என அமைதியாய் வேறு இருக்கை தேடி அமர்ந்து கொண்டனர்.

முதல் முறை சத்யாவின் மனதில் சிறு சலனம் தன்னையும் அன்னையையும் ஒதுக்கி வைத்த உணர்வு. அவர்கள் அமர்ந்து இருந்தது நான்காம் வரிசையில் தான். ஆனால் அவன் குடும்பமே முன் வரிசையில் அமர்ந்திருக்க தங்களுக்கு ஏன் இடம் இல்லை என்று கேள்வி. அன்னைக்கு கூடவா முன் வரிசையில் இடமில்லை. சிவா நான்காம் வரிசையில் மகனும் மனைவியும் அமர்ந்திருப்பதை கவனித்து, இருக்கை மாற்றி விட சொல்லி நந்தாவிடம் கூற, சூர்யா கோவமாக அவரை தடுக்க, விழா நேரத்தில் எந்த சச்சரவும் வேண்டாம் என்று அமைதியாய் இருந்து விட்டார். ஆனால் சிவாவின் பார்வை நந்தாவை கேள்வியாக பின்தொடர, விழாவின் பாதியில் இருக்கை மாற்றி முன் வரிசைக்கு வந்தனர் தாயும் மகனும்.

பலர் பாராட்டி பேசி, புதிய திட்டங்களை அறிவித்து, சூர்யாவும் விஜய்யும் தான் அடுத்து நிர்வாகத்தை பார்க்க போகிறவர்கள் என்று சபையில் அறிமுகம் செய்து என இனிதாய் விழா நடைபெற்று முடிய, வந்த விருந்தாளிகள் செல்லும் வரை இன்முகமாக நின்று விட்டு, அனைவரும் இல்லம் வந்து சேர்ந்து இருந்தனர்.

அடுத்த நாள் விழா ஏற்பாடு குழுவை பற்றி நந்தா மாமாவிடம் சத்யா விசாரிக்க, அவர்கள் மீது தவறு இல்லை சூர்யாவின் ஏற்பாடு என்பதை அறிந்த நந்தா பதில் சொல்லாது தயங்க, அந்த நேரத்தில் அங்கு வந்த சூர்யா,

" நான் தான் உங்களுக்கு நாலாவது வரிசையில் இடம் போட சொன்னேன். உங்களுக்கு அதுவே அதிகம் தானே? "

" சூர்யா என்ன பேசறன்னு புரிஞ்சு பேசு.. "

" சரியா தான் பேசறேன். சித்தி அப்பாக்கு ரெண்டாம் தாரம். எங்க அம்மா தான் முதல் தாரம். சட்டப்பூர்வமான மனைவி. நாங்க மூணு பேரும் தான் சட்டப் பூர்வமா அவரோட பிள்ளைங்க. அதனால் தான் இந்த மரியாதை. இதுவே அதிகம் தான். "

" ஹரி, வித்யா ரெண்டு பேருக்கும் பதினெட்டு வயசான அப்பவே, நம்ம எல்லாரையும் கூப்பிட்டு இதுக்கு விளக்கம் அப்பாவே சொல்லிட்டார். எல்லாம் எல்லாருக்கும் தெரியும் நீ முறை இல்லாம பேசாத சூர்யா. தப்பு.. தாயை பழிக்காத பாவம்.. " சத்யா சொல்ல,

" யாரு முறை இல்லாம பேசறது? நானா? எல்லா முறையும் எனக்கு இருக்கு. உனக்கு உன் அம்மாக்கும் தான் எல்லாம் முறை தவறி இருக்கு" சூர்யா வார்த்தையை விட்டு இருந்தான்.

அவ்வளவு தான் கோவத்தில் வெடித்து இருந்தான் சத்யா. சூர்யா வாழ்க்கையில் யாரிடமும் வாங்காத அடி அது. அவன் வாயில் இருந்து இரத்தம் வடிய, வீட்டில் உள்ள இளையவர்கள் கூடத்தில் கூட, அறிவுமதி வந்து நின்று இருந்தார் இருவரின் இடையில், நந்தா அவசரமாக அழைத்து சிவாவிடம் விவரம் சொல்ல, குல தெய்வக் கோவிலுக்கு சென்று இருந்தவர்கள் பூஜையை முடித்து இருக்க கிளம்பி இருந்தனர். அறிவு சத்யாவை அறைந்து இருந்தார்.

" அவன் சொல்றதில் என்ன தப்பு? உன் அம்மா எங்க அண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சு தான் எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிட்டு வந்தா, நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்காம ஜோதி அண்ணி அவங்க தலையில மண்ணு அள்ளி போட்டுகிட்டாங்க. உங்க அம்மா வந்ததும் என் அண்ணனை மயக்கி உன்னை பெத்துட்டா, உடனே அவளை தலையில தூக்கி வெச்சுகிட்டார் எங்க அப்பா. "

" வீட்டு பொறுப்பு மொத்தமும் அவ கையில, இன்னிக்கி வர தான் இளையவ தானே, சாவியை அக்கா கையில் கொடுப்போம்னு ஒரு நாள் கூட உன் அம்மாக்கு எண்ணம் வரல, ஏன்? அவளுக்கு தேவை கோடீஸ்வரன் சிவா பொண்டாட்டின்னு பெருமையா சொல்லனும், வீட்டை தன் கட்டுப்பாட்டில் ஆளனும். நீயும் அள்ளி கொடுக்கற தானே? யார் வீட்டு சொத்து அது? ஏற்கனவே கல்யாணமான ஒருத்தனை பணத்துக்காக புகழுக்காக கல்யாணம் பண்ண உங்க அம்மா என்ன உத்தமியாவா இருப்பா? ஒழுக்கம் கெட்டவாளா தான் இருப்பா.. " அறிவு பேசி முடிக்க, ருத்ரமூர்த்தியாய் மாறி இருந்தான் சத்யா, அவன் கையை உதறி கொண்ட நிமிடம் விஜய் அவனை அடித்து இருந்தான்.

" நாயே என் அம்மாவை என்ன தைரியம் இருந்தா அடிச்சு இருப்ப, உன் அத்தைடா அவங்க.. " விஜய் கத்திக்கொண்டே அடிக்க,

" உங்க அம்மா பேசினது தப்பு விஜய்.. " இவனும் நண்பனை தடுக்க முயன்றான். ஆனால் இருவரும் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வர அடித்து கொண்டனர்.

கண்ணீருடன் நின்று இருந்த அறிவுமதி மயங்கி சரிய, சூர்யா பதறி கத்த, விஜய் சத்யாவை உதறி விட்டு ஓடி வர, ஹரி மருத்துவரை அழைத்து விவரம் சொல்ல, சத்யாவை அவன் அறையில் அடைத்து வைத்தார் நந்தா. சிவா இல்லம் வந்து சேர்ந்து நேரம் அறிவு எழுந்து அமர்ந்து இருந்தார். சிவா தங்கையை பார்க்க வர, சுந்தரி மகனை பார்க்க அவன் அறைக்கு ஓடினார்.

" உன் பையன், உன் குல கொழுந்து, என்னை அடிக்கிற அளவுக்கு பெரியவன் ஆகிட்டான். இது என் வீடு தானே? எனக்கு உரிமை உண்டு தானே? நான் ஒன்னும் ஒண்டி பிழைக்க வரல இல்ல? அப்புறம் ஏன் எனக்கு இந்த அவமானம்? "

" எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது அறிவு. நந்தாகிட்ட விவரம் கேட்டு என் மகன் மேல தப்பு இருந்தா அவனுக்கு சரியான தண்டனையை நானே தரேன் போதுமா? "

" நந்தா கிட்ட கேக்கணுமா? நான் என்ன அப்ப பொய் சொல்றேன்னா? இனி அவன் இருக்கிற வீட்டில் நாங்க இருக்க மாட்டோம். சொத்தை பிரிச்சு கொடு, எங்க பங்கை வாங்கிட்டு வெளிய போறோம்."

" எங்க போக போற? வயசு பையனையும் பொண்ணையும் வெச்சுட்டு? ஒரே வீட்டில் இருக்க மாட்டேன் சொன்னா என்ன அர்த்தம் அறிவு? நான் சத்யாவை எங்க அனுப்பி விடுவேன்? .. "

" என் அவமானம் உனக்கு பெருசு இல்ல அப்படி தானே? இதே விஜய் உன் மேல கை வெச்சு இருந்தா உன் பசங்க அவனை உயிரோட விடுவாங்களா? "

" பொறுமையா இரு நான் அவனை பார்த்திட்டு, நந்தா கூட பேசிட்டு வந்து சொல்றேன். " சிவா கூறிவிட்டு நந்தாவிடம் விவரம் கேட்க, அவர் விவரம் சொல்ல சத்யாவின் மீது தவறு இல்லை என புரிந்து போனது ஆனால் தங்கையை கை நீட்டி அடித்து விட்டானே? ஆதரவு இல்லாத தங்கையை இப்போது தனியாய் அதுவும் பிள்ளைகள் உடன் வெளியே அனுப்பினால் அதை விட பாவம் வேறு என்ன?

துணை - 14


இத்தனை நடந்தும் ஜோதி எதற்கும் பேசவில்லை. அவருக்கு சூர்யா மீது கோபம். அதை விட சத்யாவின் மீது தீராத கோபம். வாழும் எங்களுக்கு இல்லாத கவலை எதற்கு இவர்களுக்கு என்று, ஆனால் அறிவை எதிர்த்து பேச அவரால் முடியவில்லை. எல்லாம் சிவா பார்த்து கொள்வார் என விட்டு விட்டார்.

சுந்தரி அறைக்குள் வரவும் சத்யா அம்மாவின் மடியில் படுத்து கதறி இருந்தான்.

" ஏன்டா இந்த கோவம் உனக்கு? தீ சொன்னா நாக்கு சுடுமா? யார் என்ன பேசினா என்ன உனக்கு உன் அம்மாவை தெரியும் தானே? "

" உன்னை ரொம்ப தப்பா பேசுறாங்க மா.. கேட்கவே முடியல.. கொன்னு இருப்பேன்.. அப்பா முகத்துக்காக விட்டேன். "

" தப்பு சத்யா.. நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு.. உன் அப்பா முன்னாடி பேச சொல்லி இருக்கனும் அதை விட்டு அவங்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்ட, அறிவு அத்தைக்கு உன்னையும் என்னையும் பிடிக்கலன்னு தான் நினைச்சேன். என் ஒழுக்கத்தை அசிங்கம் செய்வாங்கன்னு நினைக்கல. விடு அப்பாகிட்ட நான் பேசறேன். "

சிவா அறைக்குள் வர, தகப்பனை கண்டதும் அமைதியாய் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“ ஏன் செல்வா நீ அழற? அடிச்சுட்டு அவனே கல்லு போல உக்கார்ந்து இருக்கான். அழாத இங்க வா என் பக்கத்தில உக்காரு.. "

" இல்லங்க அவன் வேணும் எதையும் செய்யல.. அறிவு அண்ணிக்கு என்னை பிடிக்காது தான். அதுக்காக இப்படி எல்லாம் பேசி இருக்க வேண்டாமே? எந்த பிள்ளைக்கும் தாயை இப்படி பேசினா கோவம் வர தானே செய்யும்? "

" அதுக்காக அறிவை கை நீட்டி இருக்க கூடாது இல்லையா? அவ வீட்டை விட்டு போறேன் நிக்கிறா, அவ பையனையும் பொண்ணையும் கூப்பிட்டு வெளிய போனா சரி வருமா? ரெண்டும் வயசு பிள்ளைங்க, இவன் கோவம் சரி தான் செல்வா. ஆனா, வயசுக்கு பெரியவளை கை நீட்டினது பெரிய தப்பு. " மனைவியிடம் தன்மையாய் கூறியவர், மகனை முறைக்க, அவனோ அப்பனின் கண்ணை நேராக பார்த்தான்.

" போய் அத்தைகிட்ட அடிச்சதுக்கு மன்னிப்பு கேளு. அவ பேசினது தப்பு தான். சூர்யாவையும், அறிவையும் கண்டிக்க வேண்டியது என் பொறுப்பு. ம்ம்.. போ.."

" முடியாதுப்பா.. கேட்க மாட்டேன். அவங்க பேசினது தப்பு, என் அம்மாவை பேசினா யாரா இருந்தாலும் அடிக்க தான் செய்வேன். பெரியவங்க அவங்க என் அம்மாக்கு தராத மரியாதையை என்னால அவங்களுக்கும் தர முடியாது. " சத்யா உறுதியாய் மறுக்க,

" அவ பேசினது தப்புன்னு நானும் தானே சொல்றேன். அவளை அடிக்க உனக்கு என்ன வயசு இருக்கு சொல்லு? அத்தைன்னு மரியாதை இல்ல அப்படி தானே? "

" இருந்தது. ரெண்டு மணி நேரம் முன்னாடி வர, இப்போ இல்ல. "

" அப்பா சொல்றேன் கேட்பியா மாட்டியா? "

" அப்பா.. பிளீஸ்.. "

" சத்யா.. உங்க அப்பா சொல்றது சரி, போய் உன் அத்தைகிட்ட மன்னிப்பு கேளு. மீதியை பெரியவங்க நாங்க பேசிக்கிறோம்." சுந்தரி சொல்லவும் சரியென எழுந்தவன் தாய் தந்தையுடன் அறிவின் அறைக்குள் வர, விஜய் அவனை தடுத்து இருந்தான்.

" விஜய் நகரு.. பெரியவங்க பேசும் போதும் சின்னப்பையன் உனக்கு என்ன வேலை? " சிவா கொடுத்த சத்தத்தில் ஒதுங்கி நின்று இருந்தான்.

சத்யா கை கூப்பி மன்னிப்பு கேட்க, அறிவு எதுவும் பேசவில்லை. பின் சூர்யா, சத்யா இருவரையும் தனியே அழைத்து பேசி இருந்தார் சிவா. அதன் பின் ஹாலில் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து ஒரு முறை விளக்கம் கொடுத்து சமாதானம் செய்து இருந்தார். மெல்ல வீட்டில் அமைதி திரும்ப ஆரம்பித்திருந்தது. ஏனோ சுந்தரிக்கு பழைய கலகலப்பு இல்லை. சிவாவிடம் இருந்து நிறைய ஒதுங்கி மகனின் அறையில் அடைந்து கொண்டார். சத்யாவுக்கு உணவு ஊட்டி, மடியில் படுக்க வைத்து தலைவருடி கொடுத்தார்.

" என்னாச்சு மா.. ஏன் எதையோ இழந்த மாதிரி இருக்கீங்க? "

" சத்யா நீ லண்டன் போறியா? படிக்க போகனும் சொன்ன தானே?"

" அது இந்தியாவுல படிக்கிறேன் மா. எனக்கு லண்டன் போக விருப்பமில்ல"

" ஏன் சத்யா என்னாச்சு? நீ லண்டன் போ அங்க தான் உனக்கு நிம்மதியும், சந்தோசமும் கிடைக்கும் என் மனசு உறுதியா சொல்லுது.. "

" அம்மா.. ஏன் இப்படி சொல்றீங்க? "

" அறிவு அண்ணி உன்னை ஒதுக்கிட்டே தான் இருப்பாங்க சத்யா. நீ இங்க இருந்தா விஜய் கூட சண்டை வர வாய்ப்பு இருக்கு. வேண்டாம் சத்யா அம்மாக்கு நீ இங்க இருக்க வேண்டாம். "

" சரி மா.. ரெண்டு வருஷத்துல எல்லாம் சரியாகிடும் தானே? அம்மா.. நான் அன்பை ரொம்ப விரும்புறேன். அவளும் என்னை விரும்புறா, அவளுக்கு இப்ப என் மேல கண்டிப்பா கோவம் இருக்கும். கொஞ்ச நாளில் சரியா போய்டும். அவளால என்னை ஒதுக்க முடியாது, எனக்கு தெரியும்."

" சத்யா.. என்ன சொல்ற? அன்பை?.. இல்லப்பா.. இந்த கல்யாணம் நடக்காது அவ வேண்டாம் உனக்கு.. அம்மா சொல்றதை கேளுப்பா "

" ம்மா.. ஏன் இப்படி பேசறீங்க? என்னால அன்பு இல்லாம முடியாது மா.. அவ தான் என் உயிரே.. அப்பா அத்தையை சமாதானம் செய்து கட்டி வைப்பாரு.."

" இல்ல சத்யா புரிஞ்சுக்க.. இது எல்லாம் விதிடா. ஜோதி அக்கா ஒரு வருஷம் முன்னாடியே வாந்தி எடுத்து இருந்தா, நானும் நீயும் இந்த குடும்பத்துக்கு வந்து இருக்கவே மாட்டோம். என்ன பாவம் பண்ணேன் தெரியல, அறிவு அண்ணிக்கு என்னை பிடிக்கவே இல்ல. அது உன்னையும் பாதிக்குது. ஒவ்வொரு முறையும் இந்த ஒதுக்கத்தை நீ உணர கூடாது தான் கவனமா இருந்தேன். இதோ இப்ப விஜய், சூர்யா உன்னை ஒதுக்கி வைக்க புதுசா ரெண்டு பேர் இருக்காங்க. நான் யாருக்கும் எந்த தப்பும் செய்யல அது புரியாம உன்னை விரட்டிட்டு இருக்காங்க அறிவு அண்ணி.. உனக்கு கண்டிப்பா அவங்க பொண்ணை தர மாட்டாங்க.. இப்பவே தெளிஞ்சுக்க அதான் உனக்கு நல்லது. லண்டன் போ படி, உன் கனவை நிறைவேத்து, அமைதியா வாழு, அது போதும். நீ வேலைக்கு சேர்ந்ததும் அம்மாவும் கூட உன்னோட வந்துடுறேன் சரியா? "

" நம்ம ஏன் போகனும்? இது நம்ம வீடு.. அவரு எனக்கும் தானே அப்பா? என்னால என் அப்பாவை விட்டு போக முடியாது. அப்பாவும் கண்டிப்பா நம்மை வெளிய அனுப்ப மாட்டார். இது எல்லாம் சரியாகும். அறிவு அத்தை எப்படியோ.. ஆனா என் அன்பு நான் கூப்பிட்டா வருவா அவளுக்கு நான்னா உயிர். நீங்க கவலை படாதீங்க எல்லாம் சரியாகும்."

ஒரு மாதம் கடந்து சத்யா முதல் நிலையில் தேர்ச்சி பெற்று இருந்தான். அடுத்து மேல் படிப்பு, லண்டன் செல்லும் முன், அன்புடன் பேச வேண்டும் என்று தோன்ற வார இறுதிக்கு காத்து இருந்தான். அவன் அழைத்தால் தவிர்த்தாள், குறுஞ்செய்தி அனுப்ப முடியாது பிளாக் செய்து வைத்து கொண்டாள். பொறுமையை இறுக்கி பிடித்து ஒரு மாதம் கடந்தவனுக்கு அந்த ஒரு வாரம் செல்வதே பெரிய போராட்டமாக போனது. வார இறுதியில் வந்தவள் இவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அன்று இரவு உணவு முடித்து அவளின் அறைக்குள் சென்று இருந்தான்.

" ஏன் அன்பு என்னோட பேச மாட்டியா நீ? எவ்ளோ நாளைக்கு பேச மாட்டேன் சேர்த்து சொல்லிடு உன் கோவம் போற வரை காத்து இருக்கேன். "

" என்னோட பேசாத சத்யா. எனக்கு உன்னை பார்த்தா கோவமா வருது, என் அம்மா சத்யா அவங்க, மரியாதை இல்லாம அடிக்கிற? இதான் உன் படிப்பு உனக்கு சொல்லி கொடுத்துச்சா? "

" உன் அம்மாவும் படிச்சவங்க தான் அவங்க பேசினது மட்டும் சரியா? "

" பெரியவங்க ஆயிரம் பேசுவாங்க உன் அறிவு எங்க போச்சு? ச்ச.. போ வெளிய.. எனக்கு உன்னோட பேச எதுவும் இல்ல.. "

" நான் லண்டன் போறேன். அம்மா போய்ட்டு வர சொல்றாங்க. இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு அதான் சரின்னு தோணுது.. போகவா அன்பு? "

" போ தயவு செஞ்சு போய்டு.. என் கண்ணு முன்னாடியே வராத.." அறையின் கதவு தட்டும் ஓசை கேட்டு சத்யா கதவை திறக்க, சிவா நின்று இருந்தார். சத்யா அன்பின் அறைக்குள் செல்லவும் அறிவு அண்ணனிடம் சென்று சத்யாவின் வளர்ப்பை பற்றி குறை கூற, சிவா மறுத்து பேச, அண்ணனை அங்கே அழைத்து வந்திருந்தார்.

தகப்பனை கண்டு தலை குனிந்து அறை விட்டு வெளியே வர, அறிவு கோபத்துடன் நின்று இருக்க, சுந்தரி கணவனிடம் கெஞ்சும் முகத்துடன் நின்று இருந்தார். மூத்தவன் என அவர் கொடுத்த சலுகைகள் தொலைந்து போய் இருக்க, அதற்கு பரிசாக தகப்பனின் கையால் கன்னத்தில் அரை ஒன்றை வாங்கி கொண்டான்.

" வயசு பொண்ணு இருக்கிற ரூம் உள்ள ராத்திரி நேரம் கதவு பூட்டிட்டு என்ன? என்னடா? எல்லாம் உன் இஷ்டமா இங்க? எல்லாம் உன்னை சொல்லனும்.. பையன் பையன் சொல்லிட்டு தலையில தூக்கிட்டு ஆடு.. இதான் உன் பையனை நீ வளர்த்துன லட்சணம் இல்ல? " மகனிடம் தொடங்கி மனைவியிடம் பாய்ந்து இருந்தார்.

" இல்லப்பா.. அம்மாவை ஏன் தீட்டுறீங்க? நானும் அன்பும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம். நான் லண்டன் போறதை பத்தி சொல்ல தான் வந்தேன். வேற எதும் தப்பா.. இல்ல.."


" கேட்டுக்கோ அண்ணா உன் பொண்ணு வித்யாக்கு தான் என் மகன் விஜய் அதில் மாற்றம் இல்ல. ஆனா, உன் பையன் சத்யாக்கு என் மகளை என்னிக்கும் நான் தர மாட்டேன். என் பொண்ணும் என் பேச்சை ஒரு நாளும் மீற மாட்டா.. " அறிவு முடிவாக கூற,

" பிளீஸ் அத்தை தப்பு அன்னிக்கு உங்க மேல, அதான் மன்னிப்பு கேட்டேன் இல்ல? அன்பு இல்லாம என்னால வாழ முடியாது. அவளும் தான் கேட்டு பாருங்க.. "

" ஏன் அன்பு இவன் சொல்றது உண்மையா? "

" இல்லமா அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நீங்க என்ன சொன்னாலும் சரி, சம்மதம் எனக்கு.. "

" அப்ப அவன்கிட்ட நீயே சொல்லிடு.."

அறிவு அண்ணனின் கைப்பிடித்து அழைத்து செல்ல, சுந்தரி மகனை கண்ணீருடன் பார்த்துக்கொண்டு நிற்க, சத்யாவோ அன்பின் முன் சென்று நின்று இருந்தான்.

" பயந்து போய் பேசுற தானே? அத்தைக்கு கொஞ்ச நாளில் கோவம் போய்டும் அன்புமா.. நீ நான் வேணும் தைரியமா சொல்லு.. எதுவும் ஆகாது.. "

" எனக்கு நீ வேண்டாம் சத்யா.. "

" ஏய் பைத்தியம்.. நீ என் உயிருடி.. நான் எல்லாத்தையும் சரி பண்றேன். உனக்காக பண்ணுவேன் அன்பு. என்னை நம்புடி.. "

"உனக்கு புரியுதா எனக்கு நீ வேண்டாம் சத்யா.. வேண்டாம் எனக்கு.. என் அம்மாவை அடிச்சவன், அவங்களை காயம் பண்ணவன், அவங்களுக்கு பிடிக்காத நீ எனக்கு வேண்டாம் சத்யா.. என்னை விட்டு போ.. "

" அன்பு நான் இல்லாம உன்னால வாழ முடியாது.. வீம்புக்கு பேசாத.. சரி உண்மையாவே நான் உனக்கு வேண்டாமா?"

" வேண்டாம்.. எனக்கு நீ வேண்டாம்.."

" சரி.. நான் உனக்கு வேண்டாம்.. கண்டிப்பா வேண்டாம் இல்ல.? "

" வேண்டாம் சத்யா.. "

" சரி வேண்டாம் போ.. பத்திரமா இரு.. நல்லா படி.. உடம்பை பத்திரமா பார்த்துக்கோ, அழாத கஷ்டமா தான் இருக்கும் திடமா இரு.. நான் போறேன் இனிமேல் உன் வாழ்க்கையில வர மாட்டேன். " சத்யா முடிவாக சொல்லிவிட்டு வெளியே வர, சுந்தரி மகனை பார்த்து பயந்து போய் நின்று இருக்க, அமைதியாய் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான்.

சலனமற்று அமர்ந்திருக்கும் மகனின் தோள்களை தொட, கொஞ்ச கொஞ்சமாய் உடைந்து சிதறி தாயிடம் கதறி இருந்தான். எது இத்தனை நாளும் மகனுக்கு நடக்க கூடாது என்று காத்து வந்தாரோ அதுவே மகனை உடைத்து போட்டு இருக்க, சிதறிய அவனை சேர்த்து எடுக்க தெரியாது தவித்து போனார். சிவா சத்யாவின் மீது உள்ள கோவத்தில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இனி இங்கு இருப்பது சரியில்லை என கோவையில் இருக்கும் அவர்களின் இல்லம் வந்து சேர்ந்து இருந்தனர் தாயும் மகனும்.

முன்பே இங்கு வந்திருக்க வேண்டுமோ? மகன் இப்படி உடைந்து போய் இருக்க மாட்டானோ என தாயுள்ளம் கேள்வி கேட்டது. அவனை முடங்க விடாது நிறைய பேசினார். அவன் உண்ணும் போது உணவருந்தி, அவன் உறங்கும் போது உறங்கி என அவரின் நாட்களையும் நேரத்தையும் செலவழித்தார். அவனின் நண்பர்களை அழைத்து பேச வைத்தார். மேல் படிப்புக்கு லண்டன் செல்ல அவரை தயார் செய்து, அதற்கான ஏற்பாடுகளை நந்தாவின் உதவியோடு மகனுக்கு செய்து கொடுத்தார். சத்யா அம்மாவின் அன்பில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தெளிந்து வந்தான். அவனின் துறுதுறுப்பும், சிரிப்பும் மறைந்து அமைதியாய் மாறி இருந்தான்.

லண்டன் செல்லும் முன் இருக்கும் நேரங்களை தாயோடு கழிக்க தொடங்கினான். நிறைய சொல்லி கொடுத்தார் அன்னையாய், அவர் கூறிய அனைத்தும் மகனுக்கு வாழ்வின் வேதங்களாக மாறி இருந்தது. மனம் அமைதியாகி இருந்தது. அறிவு, சூர்யா, விஜய் என அனைவரின் நியாயங்களை அன்னை எடுத்து கூற அவர்களின் மீது இருந்த கோபமும் வெறுப்பும் கூட மறைந்து போனது.

© GMKNOVELS