...

9 views

நீயும் அவள் தானோ..!?
செடியே செடியே…
துளிர்விடும் செடியே…
நீயும்
அவள் தானோ..!?
புவியின்
நிழல் தானோ..!?

கன்றாய் நின்றாய்…
காரணம் நன்றாய்…
நான்
கவியில் சொல்வேனே..!
செவி
கருத்தினில் கொள்வேனே..!

பசுமையே..!
பாவையே..!
நீயும்
படர்ந்திடப்
பதிவேனே..!

வளர்ந்தால் மரமே…
வறண்டால் உரமே…
தின்றால் உணவன்றோ…
வாழ்நாள் வரமே…
வாழ்க்கையின் நிறமே…
வென்றால் பெண்ணென்றோ…

செடிகளே…
செடியிலும் கொடிகளே…
கொடிகளின் மலர்களே…
மலர்களின்
மனம் இவளே…

மண் தாது
இதில் தோற்றம்…
அதில் போதும்
என மாற்றம்…
நெல் நெல்
நெல்லென்ற
விதையிலே…

காயும் தரும்…
கனியும் தரும்…
அதில் போதும்
என நொதியும் வரும்…
கொள் கொள்
கொள்ளென்ற
முதலிலே…

மங்கையில்
பொறுமை தாயே…
தங்கையில்
பெருமை நீயே…
சங்கையில்
வளர்வாள் சேயே…
உறவினிலே…

வெப்பம் வந்தால்
மறையும்…
செப்பம் வந்தால்
நிறையும்…
செடியும்
அவள் மடியும் நன்றே…
உடலிலே…

தொட்டால் இலைகள்
சுருங்கிடும் தேகம்…
தொட்டால் இடைகள்
நெருங்கிடும் மோகம்…

பச்சை பசுஞ்செடியே…
பஞ்சவர்ண கொடியே…
நுண்ணிழைகள்
உணர்வு…
கண்ணின் நுண்ணிழைகள்
உணர்வு…

காற்றினிலே அசைதல்…
காதலிலே இசைதல்…
செடி கிளைகளின்
நிலையே…
சிலைப் பெண்களின்
நிலையே…

விதைகளிலே வேராகி…
மழைகளிலே தேராகி…
மண்களிலே சீராகும் செடியே…

சதைகளிலே உருவாகி…
சரித்திரத்தில் மெருகாகி…
சற்குணத்தில் நேராகும் சகியே…

மலர் கொடியே…
மலர்கொடியே…
மங்கையின்
மனவலிமை கூடும்…

மண் நினைத்தால்…
பெண் நினைத்தால்…
சிறு செடிகூட
மரம் வலிமை தேடும்…

© ஆறாம் விரல் ​✍🏾

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil