...

14 views

பெண்
பெண் என்பவள் யார்? பெண்ணுக்கு பெண் எதிரியா? எல்லாப்பெண்களும் ஒரே குணம் கொண்டவர்களா? இப்படி எத்தனையோ கேள்விகளை எழுப்பிக்கொண்டு இப்படைப்பை என்னால் தொடரமுடியும். ஆனால் வேண்டாம் பெண்ணியம் பற்றி நான் பேசினாலும் கூனி, கைகேயி போன்றவர்களும் பெண்கள் தானே.

நவீனத்துவம் கடந்து இன்று நாம் பின் நவீனத்துவத்தை எட்டிவிட்டோம். என்னதான் செய்வது கொரேனா வைரசினை போல ஐரோப்பிய கலாசாரமும் நம்முடன் இணைந்துவிட்டது. நோய் தொற்றியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை செய்வது போல இவர்களை தனிமைப்படுத்த இயலாது. சுதந்திரம், சமத்துவம், பெண்ணியம் என நானும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் பெண்களுக்காக ஆனால் பெண்களே நம்மை ஆண்கள் அடக்கி ஆள்வதற்கு அன்றும் இன்றும் வழி வெட்டிக்கொடுத்தவர்கள் நாமே. "ஆள் பாதி ஆடை பாதி" இப்பழமொழி எங்கிருந்து வந்தது. வழக்கில் காணப்டுகிறது அதனால்தான்.

மாற்றம் என்பது எத்தனையோ விடயங்களில் உண்டு ஆனால் ஒருசில பெண்கள் வெறுமனே தேடுவது ஆடையில் மட்டுமே. ஆங்கிலேயர்கள் மூலம் நாம் பெற்ற நன்மைகள் அனேகமானவை அவற்றை விடுத்து நம்மை நாமே காட்சி பொருளாக்குவதற்கான வழியினை மேற்கொள்வதனால்தான் ஆண்கள் உண்மையாக இருக்கும் பெண்களையும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என மிக எளிமையாக விதவிதமான பொய்களை சொல்லி போலி வேஷம் போட்டு ஏமாற்றி செல்கிறார்கள். பாதுகாப்பு கொடுங்கள் தனக்கு தானே. ஓடிவரும் நதியும் நம் பாதம் கண்டு திசைமாறிச்செல்லும்.

நாம் ஒவ்வொருவரும் உடலால் பெண் என உணரப்பட்டாலும் பல வலிகளையும் தூரோகங்களையும் சுமப்பதனால்தான் என்னவோ ஆணுக்கு சமனான உடல் பலம் இல்லையென்றாலும் மனவலிமை நம்மிடம் கொட்டிக்கிடக்கிறது.

பெண் என்பவள் தன்னை தனது இருப்பை ஆளுமையை உணராதவள் என்ற நிலை முன்பு காணப்பட்டாலும் இன்று நாம் பின்நவீனத்துவ காலத்தில் உள்ளோம். அதனால் பெண்களின் நிலை சற்று மாறிதான் உள்ளது. ஒரு பெண் தனது ஆளுமையை தானே உணரமுடியாத நிலையிலும் அப்படியே உணர்ந்தாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் சமூகம் அவளை ஒடுக்கிவிட்டது. தன்னுடைய திறமைக்கும் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப ஒரு முடிவினை எடுக்கமுடியாதுள்ளது. அதனையும் மீறி ஒரு முடிவினை எடுக்கும் போது யமன் உருவில் ஒரு ஆண் பின்தொடர்ந்து வாழ்க்கையையே சீரழித்து விடுகிறான். ஆனால் இந்த நிலைமை இன்று மாறி வருகிறது. ஏமாற்றி செல்லும் ஆண்களை எண்ணி மனமுடையாது பெண்கள் தன்னுடைய உண்மையை நிலைநாட்டி தன் பெற்றோர்களுக்காகவோ, பெற்ற பிள்ளைகளுக்காகவோ முடிந்து போன வாழ்க்கைக்காக தீப ஔி ஏற்றுகின்றனர்.

இத்தகைய சூழலில் ஒரு பெண் தன்னை உணர்கிறாள். தனது இருப்பினை உறுதி செய்கிறாள். இந்நிலையை ஆண்களுக்கு தெரியப்படுத்துகிறாள். அவனே வெட்கித்து தலைகுனியாமல் என்னால் இன்னும் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் பச்சை சிரிப்பு சிரித்து அப்பாவி போல முகத்தை வைத்து நடித்து ஏமாற்றலாம் என கங்கணம் கட்டி அலைகின்றனர். மேடு பள்ளம் என ஊர் சுற்றி வந்தாலும் உண்மை என்ற ஒன்றை என்றுமே எதிர்ப்பார்க்க இயலாது. கற்பு என்றால் என்ன? ஒழுக்கம் அதனை பெண்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டது இந்த சழூகம்.

கோவிலுக்கு இறைவனை வணங்க சென்றால் அங்கு ஆண்களுக்கு முதலிடம் பெண்கள் சிலையை தொடக்கூடாது. அம்மனை கல்லால் செதுக்கி இறைவனாக வழிபடுகின்றனர். அவளும் பெண் தானே ஆனால் பெண்ணாக பிறந்து ஆண் விசப்பாம்புகளால் தீண்டப்பட்டு தீர்வு ஒன்று கிடைக்குமென கோயிலுக்கு சென்றால் அங்கு ஆண்களை மையப்படுத்தி எழுகின்ற இந்த சழூக அமைப்பில் பெண்களுக்கு இடமுண்டா? இல்லையே.

ஆண்களோடு பாலியல் உறவினையும், கண்கண்ட தெய்வக்கணவனையும், அவன் கொடுத்த கருவினையும், பிள்ளையின் வளர்ச்சிக்காக மட்டுமே பெண் என படைத்து இப்பூமிக்கு அனுப்பியது போல இன்னும் பெண்களை அடக்கியாளுகின்ற ஆண்களை நான் கண்டுள்ளேன். இதற்கு காரணம் என்ன தெரியுமா? மரபுகள், சமய புராண பாரம்பரியங்கள், சம்பிரதாயங்கள் இங்கே பெண்களை மிகக் கோரமாக அமுக்கி வைத்திருக்கின்றன. இதற்கு உதாரணமாக பெயர்க்கொண்டு கூறினால் கண்ணகி, மாதவி,மணிமேகலை, சீதை என அடுக்கிக்கொண்டு செல்லலாம்.

ஆண்களிடம் அடிமைப்பட்டு கிடப்பதனை தானே அறியாது. அவர்களுக்கு சேவை புரியும் பெண்களும் எத்தனையோ பேர் இவ்வுலகிலே இல்லாமல் இல்லை அதற்காக அவர்களை அலட்சியமாக எண்ண வேண்டாம். அவர்கள் அறியாமை என்ற பிடியில் இருந்து விலகும் போது, பல கண்ணகிகள் கண் முன்னே தென்படலாம்.

ஒரு ஆணின் படைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்ப காற்று நுழையலாம். ஆனால் என்னை போன்ற பெண்ணின் படைப்பு அவ்வாறு இல்லை வலி, வேதனை, துக்கம், தூரோகம் அனைத்தின் வெளிப்படையாகவே அவை பிரதிபலிக்கப்படுகிறது.