...

6 views

👇 ( பேணாமையால் பேய்க்கனவு ) 👹

இரத்தம் உறையும்
இரவொன்று
அன்றோ அவள்
என்னருகில்
எனக்கு மிகவும்
அருகில்
இருள் கலந்த
கருமையில்
மிரட்டிடும் உருவமாய்
நின்றாள்

நொடிக்கு நொடி
சவ்வாது கலந்த
ரோஜாவின் நெடியும்
சந்தனம் கலந்த
சவ ஊர்வலத்தின்
ஊதுவத்தி வாசமும்
அறையெங்கும்
அடங்காமல் வீசியது

சிமிட்டாத கண்களோ
கத்தி முனைபோல்
பயமுறுத்தி பதறவைத்தது

மூன்று மணி
நள்ளிரவு
அவள் ஆவேசமாய்
ஓடுகிறாள்
எதை எதையோ
தேடுகிறாள்
தரையில் தேடியது
போதாதென்று
மதில் சுவரில்
ஏறித் தாவுகிறாள்

இருள்தரும் கலவரமோ
இதுவென எண்ணுகையில்
இடிவிழுந்ததுபோல்
இன்னுமோர் சத்தம்

சட்டென்று எட்டி
பார்க்க
முகம் பார்க்கும்
கண்ணாடி
நொறுங்கி விழுந்தது
கீழ் மட்டம்

மொத்த நெஞ்சம்
பத பதைக்க
கை கட்டுண்டதாய்
நான் தவிக்க
முற்றிலுமாய் வியர்வை
சொட்ட
மெல்லச் சொடுக்கினேன்
மின்விளக்கை

கண்ணைக் கசக்கி
காணுகையில்
உடைந்த கண்ணாடி
துண்டுகளும் இல்லை
ஆக்ரோஷம் கொண்ட
அவளும் இல்லை

சமாதிக்குள்
சபை யமைத்து
சட்டம் பேசுகிறாள்
சாவு கண்ட சாத்தானாக...

சதை கிழிய
இரத்தம் தெளித்து
சாகாவரம் கேட்டு
சபதம் எடுத்திடுமோ...!?

சாதி சாபத்தால்
சபிக்கப்பட்ட அது
பாவத்தால் பழி
தீர்க்கத் துடிக்கிறது...

சகுனத்தால்
சாத்தப்பட்ட கதவுகள்
சம்மதம் அளிக்கவே
சாத்தானும் சாதியில்
சாமானியமாயின...

சமாதிக் கதவுகள்
திறந்தது மண்தோன்ற
சதையில்லா பிணங்கள்
சம்பிரதாயங்கள் பேசியது...

மதத்தால்
மதி இழந்த
மனிதர்களின்
சடங்கை மறுத்து
நின்று ஏசியது...

பிணந்தின்னி
கழுகுகளாகத் திரியும்
பெண் பித்தர்களின்
குடலுருவி
இரத்தம் சுவைத்தது...

நியாயக்
கணக்குகளுக் கிடையில்
திடுக்கென முளைத்த
அரசியல்வாதிகளை
அறந்தீர்க்க அழித்தது...

கண்டது
கனவென்று எண்ணிய
கருகிய சமாதியோ
கண் விழித்துப் பார்த்தது...

சமாதி மீது
சமாதான கூறி
மண் அள்ளி தூவியது
மன்னர் மட்டுமல்ல...

மதத்தால் மாண்டிட்டு
மண்ணறை செல்லும்
மதி கெட்ட
மக்களும் தான்...!!!

முடிகள் சிலிர்த்து
முடிவுக்கு வந்தேன்
இது கனவே அன்றி
நினைவில்லை என்று

பளிங்கு தரையில்
பனி படர்ந்திருக்க
பாதம் பதிய
பவ்வியமாய் நடந்து
சென்றேன்
கதவின் அருகே
பயத்தோடு

பூட்டாத கதவின் சாவி
புன்னகைத்தது அங்கே
புருவம் சுருங்க கொஞ்சம்
பொய்யான திமிரோடு
கதவை பூட்டினேன்
அவ்வாறே என்மன
தைரியத்தை கூட்டினேன்


© ஆறாம் விரல் ​✍🏾

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil