...

26 views

என்னுயிர் துணையே - 17 & 18
துணை - 17

அடுத்த நாள் காலை எழுந்து இரவு சுற்றுலா செல்ல வேண்டி உடைகளை மடிக்க, அப்பு அதை அவனின் உயரத்துக்கு இரண்டு மடங்காக இருந்த முதுகு பைக்குள் அள்ளிப்போட்டான். அனு அவனை முறைக்க, அவனோ சிரித்து அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க,

" எல்லாரையும் முத்தம் கொடுத்து கரெக்ட் பண்ணற டா நீ, வருங்காலத்தில் பெரிய பிளே பாயா வருவியோ? " அனு தமிழில் பேசிய எதையும் புரியாது பிளே பாய் என்ற வார்த்தையை கேட்டு தன்னை விளையாட சொல்கிறாள் என்று எண்ணி விளையாட சென்று இருந்தான். வீட்டில் வேலைக்கு இருந்த இருவரையும் மதியத்திற்கு மேல் வர சொல்லி சத்யா நேற்று இரவே அனுப்பி இருந்ததால் காலை உணவு வாங்கி வருகிறேன் என வெளியே சென்று இருந்தான்.

அனு அவளின் வேலையை தொடர, சத்யா கையில் சில பையோடு வீட்டின் உள்ளே வந்தான். அப்பனை கண்டு மகன் தாவிக்கொள்ள, இவர்களின் சத்தத்தில் அறையை விட்டு வெளியே வந்தாள் அனு.

" ஸ்வீட்டி பை.. இந்தா போய் ட்ரெஸ் மாத்திட்டு வா.. "

" செல்லம்.. இப்போ புது ட்ரெஸ் எதுக்கு? "

" கல்யாணம் பண்ணிக்க.. "

" என்ன.. இன்னிக்கா? "

" ஆமா.. இன்னிக்கி தான். வேண்டாமா? முடிவை மாத்திட்டியா.. டேய் சத்யா கிரேட் எஸ்கேப் டா.. தாங்க்ஸ் குட்டிமா.. " சத்யா கிண்டலாக சிரித்த படியே சொல்ல, அவனை முறைத்தவள், அறைக்குள் சென்று இருந்தாள்.

எளிமையான ஒரு டாப் பண்ட், அழகான வேலைப்பாடு செய்த ஒரு ஜோடி தங்க வளையல், மல்லிகை பூ என இருந்தது. அனு தயாராகி வெளியே வர, அப்பு கைப்பிடித்து பூஜை அறைக்கு அழைத்து செல்ல, சத்யா அவளின் ஆடை நிறத்திலேயே சட்டை பேன்ட் அணிந்து இருந்தான். மகனுக்கும் அதே நிறத்தில் குட்டி டவுசர், டீஷர்ட் உடுத்தி விட்டு இருந்தான். பூஜை அறையில் அம்மாவின் புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து இருந்தான்.

" இங்க தான் நம்ம கல்யாணம் அம்மு, இவனுக்கு இருக்கிற காசுக்கு பிரம்மாண்டமா இல்லைனாலும் கோவில் கூப்பிட்டு போய் கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு நீ நினைக்கலாம். அதில் தப்பும் இல்ல. ஆனா அப்பு மனசில் எதுவும் பதிய கூடாது. வர நாட்கள்ல அவனுக்கு சின்ன சந்தேகம் வந்தாலும் என்னால அதை தாங்க முடியாது. அதான் இப்படி சிம்பிளா, லண்டன் போய் நம்ம கல்யாணத்தை முறையா பதிவு செய்திடுவோம் சரியா? சம்மதம் தானே? இல்ல உனக்கு எதும் வருத்தமா தங்கம்? "

" பிரெண்ட் லவ்வர் ஆகுறது வரம், அதே ப்ரெண்ட் லவ்வரா, புருஷனா கிடைக்கிறது அதை விட பெரிய வரம். ஆனா எனக்கு எல்லாமே நீ தான் சத்யா.. உன் விருப்பம் தான் என் விருப்பமும். உன்னால என்னை வருத்தப்பட வைக்க முடியாது. நான் நேத்து சொன்னது தான் இப்பவும் எப்பவும் உன்னையும் அப்புவையும் பாதிக்கிற எதும் எனக்கு வேண்டாம். புரியுதா? "

" ம்ம்.. சரி அப்ப கல்யாணம் பண்ணிப்போமா? இங்க வா சாமிக்கு பூ போடு, உன் கையால விளக்கை ஏத்து.. " சத்யா கூறவும் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு இறை வழிபாடு செய்தனர். அப்புவும் தகப்பனை போல கண்மூடி நிற்க,

" அப்பு.. பாபா மொபைல் எடுத்துட்டு வா.. " சத்யா சொல்லவும் வியாஷ் நகர, சத்யா நகை பெட்டியில் இருந்த தாலியை எடுத்து அவளின் கழுத்தில் அணிவித்து இருந்தான். அனு கண் கலங்கி நிற்க, யாஷ் அலைபேசி எடுத்து வர, மகனை தூக்கி கொண்டவன், அனுவை பக்கம் அழைக்க அங்கேயே நின்று மூவரும் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

" அழாத.. அனு எனக்கும் அழுகை வருது.. அப்பு இருக்கான்.. பிளீஸ்.." சத்யா கண்ணீர் தேங்கிய விழியோடு கூற, அனு கண்ணை துடைத்துக்கொண்டு புன்னகைக்க முயற்சி செய்தாள். அதற்குள் சத்யா இனிப்பு எடுத்து வந்தவன், அவளுக்கு இனிப்பை கொடுத்து அவளை வாழ்த்த, அப்புவும் வாழ்த்தி இருந்தான்.

கோடி கோடியாய் பணம் இருந்து என்ன? மனம் வேண்டுமே எதற்கும்? வீட்டின் தலைமகனுக்கு திருமணம் தாயை மட்டுமே சாட்சியாக கொண்டு, நாளை நிச்சயம் இல்லாத வாழ்க்கையில் தான் எத்தனை கோபம், வெறுப்பு, விரோதம்? மறுபடியும் நாம் ஒன்றாக பிறக்க போகிறோமா என்ன? ஒருவரை ஒருவர் அடுத்த ஜெனமத்தில் சந்தித்து கொள்வோமா என்ன? பின் ஏன் இத்தனை கசப்பு? தன்னை கண்டு பிறர் அஞ்சி நடுங்க செய்யும் தலைக்கணம்?

" பசிக்குது சாப்பிடுவோமா? " சத்யா கேட்கவும், அனுவும் உண்ண எடுத்து வைத்தாள். மகனுக்கு ஊட்டி விட்டவன் அனுவுக்கும் கொடுக்க, அவளும் வாங்கிக்கொண்டு அவனுக்கும் ஊட்டி விட்டாள். அப்பு வாய் திறந்து கேட்கவும் அவனுக்கும் ஊட்டி கொடுத்தாள்.

உணவை முடித்து மனைவி மகனோடு கடை வீதிக்கு சென்றவன், சுற்றுலா செல்ல அனைவருக்கும் சில உடைகளை வாங்கி கொண்டான். அப்பு கேட்கவும், திரை அரங்கம் சென்று டூ லிட்டில் படம் பார்த்தனர். அப்பு மிருங்கங்களை கண்டு மகிழ இருவரும் அவனின் சிரிப்பில் உற்சாகமாக பொழுதை கழித்து மதிய உணவாக பொறித்த கோழியை உண்டு இருந்தனர்.

"புஜ்ஜிம்மா, வீட்டுக்கு போலாமா? இல்ல இன்னும் சுத்துவோமா? "

" இன்னுமா? வீட்டுக்கு போலாம் டாலு, என்னால முடியாது. எனக்கு தூங்கனும். "

" வாங்க மகாராணி வீட்டுக்கு போலாம்.. "

மூவரும் இல்லம் வந்து சேரவும், வேலைக்கு இருக்கும் ஆட்களும் வந்திருந்தனர். அனு ஒரு அறைக்குள்ளும், மகனுடன் சத்யா ஒரு அறைக்குள்ளும் செல்வதை பார்த்த சமையல்காரர் நந்தாவிடம் விவரத்தை கூற, நந்தா சரியென கூறி இருந்தார். மாலை எழுந்து சிற்றுண்டி உண்டு, தேநீர் அருந்தி விட்டு கிளம்பி இருந்தனர் மூவரும் சுற்றுலா செல்ல, முதலில் மதுரை வந்து சேர்ந்தவர்கள் இரவு ஒரு ஹோட்டலில் தங்கி, விடிந்ததும் மீனாட்சி அம்மனை தரிசித்து இருந்தனர். பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்து அப்புக்கு விளக்கம் சொல்லி, அவர்களும் சிலைகளை ரசித்தனர். முப்பத்தி மூன்றாயிரம் சிற்பங்களை பார்த்திட கண்கள் இரண்டு போதுமா? தரிசனம் முடித்த பின் காலை உணவு உண்டனர்.

" அடுத்து கொடைக்கானல் போறோம் பேபிமா.. "

" ஏன் லவ்லி, மதுரையை சுத்தி காட்டாம கொடைக்கானல் கூப்பிட்டு போற? "

" அப்புக்கு இப்ப மதுரையை சுத்தி காட்டினா எதாவது புரியுமா டார்லி? மதுரை சாதாரண ஊர் இல்ல. ஐயாயிரம் வருஷ பழமையான ஊரு, இதை சுத்தி பார்த்தா மட்டும் போதாது உணரனும். என் யாஷ் குட்டி பெருசானதும் வந்து இதெல்லாம் காட்டி, அவனுக்கு நிறைய கதை சொல்லனும் எனக்கு ஆசை. குழந்தை அவனுக்கு நினைவுகள் தான் வேணும் இப்போ, அதுவும் அழகான நினைவுகள் அதுக்கு தான் கொடைக்கானல் போறோம். "

" அச்சோ என் தங்ககுட்டி பிளான் எல்லாம் பயங்கரமா தான் இருக்கு.. போ.."

" ஆமா.. கல்யாணம் பண்ணிட்டு படத்துக்கு கூப்பிட்டு போய் இருக்கேன், இன்னிக்கி கோவில் குளம் பார்த்தாச்சு, அடுத்து பாரு இப்ப ஹனி மூன் போறோம். ச்ச.. சத்யா நீ வேற லெவல் டா.. " சத்யா சிரிப்புடன் அவனை அவனே பாராட்டி கொள்ள, அனுவின் முகமோ நாணத்தில் சிவந்து போனது.

விளையாட்டாய் விட்டுவிட்ட வார்த்தையின் வீரியம் புரிய, அமைதியாக கை கழுவ சென்று இருந்தான். சற்று நேரத்தில் சூழ்நிலை இயல்பாக மூவரும் காருக்கு வர, பயணம் தொடங்கி இருந்தது.

மதியம் கொடைக்கானல் வந்து சேர்ந்தவர்கள். வாஞ்சி முன்பதிவு செய்து இருந்த அறையில் தங்கி கொண்டனர். சத்யா குளியலறை சென்றவன் குளித்து உடை மாற்றி வந்திருக்க, அனுவும் குளித்து வர, அப்புவுக்கு சத்யா உடல் துடைத்து விட்டு உடை மாற்றி விட்டு இருந்தான். அனு குளித்து வந்து அமைதியாக அமர்ந்து கொள்ள,

" என்னாச்சு என் சக்கரக்கட்டிக்கு? "

" நாம ஏன் சத்யா கொடைக்கானல் வந்தோம்? "

" இதென்ன கேள்வி ஹனிபை, நம்ம ஹனி மூனுக்கு தான்.. "

" ஹரிஷ் உனக்கு ஃபோன் பண்ணான் சத்யா இனியும் பொய் சொல்லாத.. "

" அட.. இந்த அரை வேக்காடு ஹரிஷ் கொஞ்சம் அவசரப்படாம இருந்து இருக்கலாம். அக்காவை பார்க்கிற ஆர்வத்துல அத்தானை மாட்டி விட்டான். சரி தான் வேகாத இட்லி உன்னோட தம்பி வேற எப்படி இருப்பான்? அரை வேக்காடா தானே இருப்பான்."

" வேண்டாம் சத்யா.. என்னையும் என் தம்பியையும் கிண்டல் பண்ணாத.. "

" நீ மட்டும் எங்க குடும்பத்தையே விசித்திர ஜந்துக்கள் சொன்ன, நான் உன் தம்பியை மட்டும் தானே கிண்டல் பண்ணேன்? ஓஹோ.. அப்படி.. "

" எப்படி..? " அனு முறைப்புடன் கேட்க,

" பொண்டாட்டியானதும் ராஜ்ஜியம் தொடங்கிடுச்சு அப்படி தானே? என் பேச்சு உரிமையை பறிக்க பார்க்கிற இல்ல? "

" பேச்சை மாத்தாத ஜிலேபி.. சொல்லுடா ஹரிஷ் இங்க வரானா?"

" நான் தான் வர சொன்னேன். சட்டுன்னு போய் அவங்க முன்னாடி நிக்க எனக்கே யோசனையா இருக்கும்போது, உனக்கும் தயக்கம் இருக்குமில்ல? அதான் அவனை கிளம்பி வர சொன்னேன். அவனும் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் எடுக்க அவன் ஃபியன்ஸ்சே கூட வந்து இருக்கான். "

" அப்புறம், அவன்கிட்ட நம்ம கல்யாணம், அப்பு நம்ம பையன் இப்படி எதுவும் நான் சொல்லல. நீயே உன் தம்பிக்கு சொல்லிடு, ஊருக்கு வந்துட்டான் போல அதான் கால் பண்ணி இருக்கான். நான் பேசிட்டு வரேன். நீ கிளம்பு அவங்க கூட லஞ்ச் போய்ட்டு வரலாம். " சத்யா விளக்கம் கொடுக்கவும், தயாராக ஆரம்பித்து இருந்தாள்.

சத்யா பேசிவிட்டு வந்து விவரத்தை கூற, அவனை தயாராக சொன்னாள்.

" எதுக்கு ரெடியாகனும். இங்க கீழ இருக்கிற ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட போறோம். இந்த ஷார்ட்ஸ் டிஷர்ட் போதாதா? "

" சத்யா நீ இந்தியா டவர்ஸ் வீட்டு வாரிசு டா.. கோடீஸ்வரன் மாதிரியா இருக்க? "

" அட மொசக்குட்டி.. நான் வெறும் சத்யபிரகாஷ். கிளவுட் லைன்சில் வேலை பார்க்கிற ஒரு வேலைக்காரன். நீ இந்த வேலைக்காரனோட பொண்டாட்டி அவ்ளோ தான் நம்ம லெவல்.. எனக்கு இந்தியா டவர்ஸ் அடையாளம் வேண்டாம். "

" நீ மறுத்தாலும் அதான் சத்யா உண்மை. உன்னை பத்தி நான் அப்பாகிட்ட சொல்லனும். அப்போ உன் குடும்பத்தை பத்தியும் சொல்லனும். நம்ம இறந்த காலமும், பிறந்த ஜாதகமும் நமக்கு தான் முக்கியம் இல்ல. அவங்களுக்கு வேணும் எதையும் மறைக்க முடியாது. தாத்தன், அப்பன் பெயரை எல்லாம் மாத்த முடியுமா? முடியாது. சத்யபிரகாஷ் தான் நீ, உன் பெயருக்கு பின்னாடி இருக்கிற பிரகாஷ் தான் உன் அடையாளம். நீ செத்தாலும் அது உன்னோட தான் வரும்."

" வரும் தான்.. ஆனா அந்த அடையாளம் கொடுத்த வலி கொஞ்சம் இல்லையே அனு.. அந்த பெயரை கொண்டாடி இன்னும் எதையும் இழுத்துக்க எனக்கு விருப்பமில்லை.."

" ஏன் சத்யா உன் அப்பா சொன்னாரா நீ என் பிள்ளை இல்லன்னு? உன் அப்பாவை தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும் அவருக்கு ரெண்டு தாரம்னு, மூத்தவன் நீ தானும் தெரியும். அதை உன் அப்பாவும் மறுக்கல. உன் அத்தை கோவத்தில் சொன்னா ஆச்சா? புருஷன் இல்லாம வீட்டுக்கு வந்த தங்கச்சியை புண்படுத்த வேண்டாம் தான் உன் அப்பா பேசாம இருக்கார். என்ன இருந்தாலும் அவருக்கு உங்க அத்தை மேல உன்னை விட அதிகம் பாசமிருக்கும் தானே? அதுக்காக நீ அந்த வீட்டுப்பிள்ளை இல்லன்னு ஆகிடுமா? "

" சரி அனு எனக்கு புரியுது. நீ உங்க அப்பாகிட்ட சொல்லு, அதே நேரம் இப்ப இருக்கிற என்னோட சூழ்நிலை, மனநிலை ரெண்டையும் சொல்லிடு பிளீஸ்.. பின்னால இதனால எந்த மனகஷ்டமும் வேண்டாம். "

" நான் எதும் தேவை இல்லாம பேசிட்டேனா? "

" இல்ல கல்யாணம் பெரிய பொறுப்பு அதை சரியா செய்யனும்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டேன். நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன் போலாம். "

வியாஷை தூக்கிக்கொண்டு சத்யா நடக்க அவன் பின்னே பதட்டத்துடன் நடந்து வந்தாள் அனு ஹாசினி. தம்பியை அவளின் கண்கள் தேட அங்கிருந்த ஆறு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்தனர் மூவரும். அனு அமர்ந்து சுற்றியும் பார்க்க, பட்டென ஒரு கரம் அவளின் கண்களை மூடவும்,

" எருமை.. விடு டா.. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும் தானே உனக்கு? " அனு கத்த, வியாஷ் அதிர்ந்து போய் பார்த்தவன், ஹரிஷ் கையில் அடிக்க, ஹரிஷின் கவனம் சிறுவனின் மேல் விழவும், பொம்மை போல இருந்தவனை அள்ளிக் கொண்டான்.

கல்யாண வயதை தொட்டு நிற்கும் தம்பியை பார்த்து அனுவின் விழியில் நீர் நிறைய, ஹரிஷ் அக்காவின் மகன் மேல் கண் பதித்து வியந்து கொண்டு இருந்தான்.

" ஹரிஷ் உன் ஃபியன்ஸ்சே எங்க?"

" இதோ மாமா கூப்பிட்டு வரேன். "

அரை நிமிடத்தில் அவளோடு வந்து நின்று இருந்தான் அவர்களின் எதிரில் பரஸ்பர அறிமுகம் முடித்து, அமர, ஹரிஷ் அக்காவையும், அவளின் அருகில் அமர்ந்து இருக்கும் சத்யாவையும் பார்த்து ஆச்சரியப்பட்டு கொண்டான்.

துணை - 18

" என்ன ஹரிஷ் இப்படியே பார்த்துட்டே உக்கார்ந்து இருக்க போறியா? " சத்யா கேட்கவும்,

" உண்மையா என்னால இன்னும் நம்ப முடியல.. எனக்கு நீங்க மாமா.. அக்காவோட ப்ரெண்ட்டுன்னு தான் இவ்வளவு நாளும் நினைச்சேன்... எனக்கு என்ன சொல்றதுன்னு உண்மையா தெரியல.. "

" எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலை, யாருக்கு யார்மேல, எப்போ, எப்படி காதல் வரும்னு யாருக்கும் தெரியாதே? அப்படி தான் இதுவும். " சத்யா கூற,

" அப்பா கண்டிப்பா சந்தோஷப்பட வாய்ப்பு இருக்கு மாமா. அதும் அப்புவை பார்த்தா கண்டிப்பா மனசு மாறிடும். பொம்மை மாதிரி அழகா இருக்கான். "

" டேய் குட்டிமா.. உன் தம்பிகிட்ட பேச என்ன யோசனை உனக்கு?"

" பேசு அக்கா.. என்மேல எதும் கோவமா? நான் எவ்ளோ மெயில் பண்ணேன் எதுக்கும் பதில் அனுப்பாம இருந்தது நீ தானே? அதான் மாமாக்கு அனுப்பி விட்டேன். அவர் தான் என் மாமான்னு தெரிஞ்சு இருந்தா எப்பவோ உன்னை தேடி வந்து நின்னு இருப்பேன். உனக்கு நிறைவான வாழ்க்கை இல்லாம எனக்கு மட்டும் கல்யாணம்னு நிறைய கவலையில் இருந்தேன். இப்ப எனக்கு பெரிய நிம்மதியும் நிறைவும் கிடைச்சு இருக்கு."

" அம்மா, அப்பா ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? "

" ரொம்ப நல்லா இருக்காங்க அக்கா.. அம்மாக்கு நீ இல்லன்னு கவலை, அப்பாக்கும் இருக்கு ஆனா வெளிய காட்டாம இருக்கார். நீ வா கல்யாணம் முடிஞ்சு லண்டன் போனா போதும். எங்க நீ இல்லாம என் கல்யாணம் நடந்ததுருமோன்னு இருந்தேன். எல்லா சரியாகிடும் பாரு.. " ஹரிஷ் சொல்லவும் சத்யாவின் மனதில் வலி.

" அனுக்கா தேவிகா என்னோட ஸ்கூல் மேட். ஒரே இடத்தில் வேலை, எங்களுக்கு காதல் கல்யாணம். உனக்கு ஒரு நல்லது நடந்த அப்புறம் தான் எங்க கல்யாணம்னு தேவிக்கு சொல்லி தான் இருந்தேன். ஆனா அவ வீட்டில் பிரஸர் அதான் கல்யாணம் வரை…" ஹரிஷ் அவன் நிலையை விளக்க,

" பார்டா.. இது வேறயா? அதான் மாப்பிள்ளையை நம்பி பொண்ணை தனியா அனுப்பி இருக்காங்க. " சத்யா சிரித்து கிண்டல் பேசிக் கொண்டே உணவை ஆர்டர் செய்து இருந்தான்.

அப்புவுக்கு சத்யா உணவை ஊட்டிவிட, அவனுக்கு அனு பரிமாற, சத்யா அவளுக்கு பிடித்ததை கேட்டு ஆர்டர் கொடுக்க என நிறைவாக இருக்கும் அக்காவின் குடும்பத்தை கண்டு தம்பி மகிழ்ந்து இருந்தான். அவர்களை அறைக்கு அழைத்து சென்று நீண்ட நேரம் கதை பேசிவிட்டு ஹரிஷ் விடைபெற வெளியே வர,

" டேய் ஹரிஷ் தனியா வந்தீங்க சரி. ஒரே ரூமில் தங்கி இருக்கீங்களா? "

" அக்கா.. அது.. "

" நீ கிளம்பு ஹரிஷ்.. மணியாச்சு.. " சத்யா சொல்லவும் ஹரிஷ் தலையாட்டி கிளம்ப, சத்யா அனுவை அறைக்குள் அழைத்து வந்து இருந்தான்.

" அட கூறு கெட்ட குக்கரு.. தம்பிகிட்ட கேக்குறா பாரு கேள்வி "

" அப்பாக்கு இதெல்லாம் பிடிக்காது சத்யா அதான் கேட்டேன்.. "

" ஓஹோ.. அப்போ ரெண்டு நாள் முன்ன வர நீங்க செஞ்சது என்ன அனு மேடம்..? "

" சத்யா நம்ம பிரெண்ட்ஸ்.. கண்ணியமா இருந்தோம். ஆனா இது.. "

" புருஷன் பொண்டாட்டியா நடிச்சோம். அதுக்காக ஒரே ரூமில் இருந்தோம். உன் கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாது. நம்ம கண்ணியமா இருந்த மாதிரி அவங்கங்களும் இருக்கலாம் தானே? இல்லாட்டியும் இப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல.. அந்த பொண்ணு அவனுக்கு பாதி பொண்டாட்டி. அவங்க அந்தரங்கம் அது.. உன் அப்பாக்கு பிடிக்காதுன்னு அவன் இடுப்புக்கு ஈர துணியா போட்டு படுக்க முடியும்? நமக்கு தான் வாய்க்கல, அவனாவது வயசுக்கு தகுந்த மாதிரி சந்தோசமா இருக்கட்டும் விடு. "

" எனக்கு இது புரியல ஜிலேபி, அப்பாக்கு பிடிக்காதே இவன் எப்படி இந்த மாதிரி சுத்துறான்? அப்பாவை எதிர்த்து நிக்கிறானோ தான் கேட்டேன். "

" சரி வா தூங்கலாம். ஜூனியர் தூங்கிட்டார். நாமும் தூங்குவோம். நீ அப்பு கூடவா? இல்ல தனியா சிங்கிள் பெட் எடுக்குறியா? " சத்யா கேட்டு கொண்டே அப்புவை சரியாக படுக்க வைக்க,

" நான் அப்பு கூட படுக்கிறேன். என்னால தனியா தூங்க முடியாது இன்னிக்கி.. "

" ஏன் லட்டு என்னாச்சு? "

" பழசு எல்லாம் கண்ணுக்குள்ள வருது அம்மு.. "

" ஒன்னும் இல்ல செல்லம், அதெல்லாம் வெறும் கனவு. இதோ நீ, உன்னோட நான், நம்ம பையன் இதான் உண்மை. உனக்கு எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு உன்னோட நான் எப்பவும் இருப்பேன் அதை மறக்காத.. வா தூங்கு.. "

நான்கு நாட்களும் அழகாய் சென்று இருந்தது. குடும்பமாக ஊர் சுற்றி, ஹரிஷை கிண்டல் செய்து, தேவியுடன் நட்பாகி, அப்பு தாய் மாமன் அவனை அவனை கொஞ்சி உறவாடி, ஹரிஷ் அக்காவின் பொம்மை குட்டியை அவனின் மகனாய் தாங்கிக் கொள்ள, சத்யா அனுவின் மகிழ்வில் இனிமை கண்டு இருந்தான். மனம் சில நேரம் ஏங்கி போனது, கண் கலங்கிய நொடிகளில் கழிவறை சென்று அவனை சமன் செய்து கொண்டு வந்தான்.

அன்று சென்னை செல்ல, பயணம் தொடங்க, அனு பதட்டமாக இருந்தாள். சென்னையில் கால் வைத்த நேரம், பதட்டம் நடுக்கமாக மாறி இருந்தது. வீட்டின் முன் கார் நிற்க, ஹரிஷின் தகவலில் தாய் அவள் வாசலில் காத்திருந்தார். அனு ஹரிஷ் கை பிடித்து நிற்க, ஹரிஷ் அவளை மெல்ல வீட்டின் உள்ளே அழைத்து சென்றான். சத்யா மகனோடு பின்னே நடந்தான்.

வாசலில் நின்று இருந்த தாயை கண்டதும் சிறுபிள்ளை போல அனு அழ, அவரோ மகளை அணைத்து கொள்ள, மூவரும் கண்ணீரில் நின்ற நிமிடம், குளித்து வந்த ஜெயமோகன் வாசல் வரவும் மகளை பார்த்து அதிர்ந்து நின்று விட்டார். கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம் எல்லாம் செய்தி சொல்ல, அவளின் பின்னே பார்க்க, சத்யா நின்று இருந்தான். அவரை கண்டதும் எதோ குற்ற உணர்வில் தலை குனிந்து கொண்டான். ஆனால் அப்பு முகம் மலர்ந்து சிரித்து இருந்தான்.

" அப்பா.. அக்காவை உள்ள கூப்பிடுங்க பா... அக்கா கல்யாணம் பண்ணலன்னு தானே கோவம் உங்களுக்கு? இது அக்காவோட பையன் பாருங்க.. " ஹரிஷ் அப்புவை தூக்கி கொண்டு தந்தை முன் நிற்க, அனு முகத்தை மூடி அழ, சத்யா அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.

" இவனை விரும்புறேன் சொல்லி இருந்தா நானே பண்ணி வெச்சு இருப்பேனே அனு.. இதுக்கா என்னை விட்டு போன? " ஜெயமோகன் கேட்ட கேள்வியில் அனு இன்னும் அழ,

" இல்ல சார்.. அவ மனசு உடைஞ்சு போய் இருந்தா, உங்க பயம் அவளுக்கு புரியல. அவளோட மன அழுத்தம் உங்களுக்கு புரியல. அனு ஊருக்கு வந்த கொஞ்ச நாளில் எங்களுக்குள்ள காதல். என்னால அனுவை யாருக்கோ கட்டி வெச்சுட்டு எப்படி இருக்கான்னு கஷ்டப்பட விருப்பமில்லை. அவளுக்கும் என்னை பிடிச்சு இருக்கவும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க நாங்க செஞ்சது தப்பு தான். "

" இவன் உன் மகனா அனு? "

" ஆமா பா.. என் பையன்.. உங்க பேரன்.. " அனு சொல்லவும் மோகன் அப்புவை வாங்கவும் வைத்தான் கன்னத்தில் அவனின் முத்திரையை, கண் கலங்கி போய் நின்றவர்,

" போ.. போய் ஆரத்தி எடுத்துட்டு வா, மூணு பேரும் ஒன்னா நில்லுங்க.. " ஜெயமோகன் மகிழ்வுடன் கூற, அனு அவளின் அப்பாவை அணைத்து மன்னிப்பு கேட்டு அழ, அவளின் கண் துடைத்து விட்டார்.

மூவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்து செல்ல, அப்புவை கொஞ்சிக்கொண்டு இருந்தனர் தாத்தாவும் பாட்டியும். ஹரிஷ் அனுவின் அறையில் சத்யாவை ஓய்வு எடுக்க சொன்னான். அனு அறைக்குள் வந்தவள் அறையை சுற்றி பார்க்க,

" அப்பா வாரம் ஒரு முறை எல்லாத்தையும் துடைக்கிறேன் பெயர் சொல்லிட்டு, இங்க வந்து உன்னோட நினைவில் உக்கார்ந்து இருப்பார். என்ன இருந்தாலும் பொண்ணு மேல அப்பாகளுக்கு பாசம் அதிகம் தான்." ஹரிஷ் அவளை சீண்ட, தம்பியை முறைத்தவள்,

" என்ன தம்பி அடி வேணுமா? எங்க அப்பா என்னை கொஞ்சுனா உங்களுக்கு ஏன் எரியுது? "

" கொஞ்ச நேரம் முன்னாடி அழுதுட்டு நின்ன சப்ப மூக்கியை யாரும் பார்த்தீங்களா? "

" வேண்டாம் உன் பொண்டாட்டிக்கு உன் பட்டப்பெயரை சொல்லிடுவேன். அப்புறம் அசிங்கமா போய்டும். " அனு மிரட்ட, ஹரிஷ் அடிபணிய, இருவரின் செல்ல விளையாட்டை ரசித்து கொண்டு அமர்ந்து இருந்தான் சத்யா. சட்டென வித்யா கண் முன் வர, நெஞ்சை அழுத்தி தேய்த்துக் கொண்டான்.

மதிய உணவை அம்மாவின் கையால் உண்ட அனு, அப்புவுக்கும் ஊட்டி விட, சமத்தாக அவளிடம் உணவு வாங்கி கொண்டவனை பார்த்து அனுவின் அம்மாவுக்கு ஆச்சரியம்.

" சமத்து பையன் போல அப்புக்குட்டி? சொன்னதை கேட்டு அதை சரியா செய்யுறான்.. " அவர் மனம் திறந்து பாராட்ட,

" எல்லாம் சத்யா ட்ரைனிங் மா "

" அனு.. இப்படி மாப்பிள்ளை பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்காதா, இது லண்டன் இல்ல.” அன்னை திட்டவும் அனு உதடு கடிக்க, சத்யா வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.

அனு சாப்பிட்டு வரவும் மகளை தனியாய் அழைத்து சென்ற மோகன். சத்யா பற்றிய விவரங்களை கேட்க, அனு அனைத்தையும் கூறி இருந்தாள். ஹரிஷ் வியப்பின் உச்சிக்கே சென்று இருந்தான். தங்கள் வீட்டில் ஒரு கோடீஸ்வரன் இருக்கிறான். அதுவும் இயல்பாக, எங்களுடன் ஒருவனாக, சத்யாவின் மீது மிகுந்த மரியாதை வந்திருந்தது.

" அவங்க வீட்டுக்கு தெரியுமா அனு உங்க கல்யாணம்? "

" தெரியும் பா "

" மாப்பிள்ளைக்கு மரியாதை இல்லாத இடத்தில் அவர் இருக்க வேண்டாம். ஆனா அவரை பெத்தவருக்கு மரியாதை தர வேண்டியது எங்க கடமை. ஹரிஷ் கல்யாணத்துக்கு அழைப்பு தரலாமா? கேட்டு சொல்றியா அனு? அவங்க வர முடியாம போனாலும் தப்பில்ல."

" கேட்டு சொல்றேன் பா.. "

" அக்கா.. மாமாக்கு எதும் வசதி குறையா இருந்தா சொல்ல சொல்லு.. பிறந்ததில் இருந்தே கோடீஸ்வர வீட்டு பிள்ளை. நம்ம வசதி அவருக்கு போதுமா? " ஹரிஷ் கேட்கவும்,

" எதாவது தேவையா இருந்தா சத்யாவே சொல்வார். நீயா எதையும் வாங்க வேண்டாம். " அனு கூற சரியென கூறி இருந்தாள்.

கொஞ்சம் உறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறைக்குள் வந்தவள் கண்ட காட்சி அவளை புன்னகை சிந்த செய்தது. அப்பு கட்டிலில் உறங்கி இருக்க, அவ விழாது இருக்க தலையணை தடுப்பாக வைத்து இருந்தவன் வெறும் தரையில் இரு கையையும் தலையனையாக வைத்து நெஞ்சை நிமிர்த்தி உறங்கிக்கொண்டு இருந்தான்.

அவன் அருகில் வந்து அமர்ந்து, தூங்கும் அவனின் முகம் பார்த்தாள். அப்புவின் இன்னொரு உருவாக தெரிந்தான். அப்புவை போல அனைத்தையும் விரும்பி, எதை கொடுத்தாலும் மகிழ்ந்து, எப்போதும் பிறரை புன்னகைக்க செய்து, குழந்தை போல இருக்கும் இவனுக்குள் எத்தனை வலிகள்? அவனின் மூடிய விழியில் கசியும் ஈரம் கண்டு அனு சத்யாவை நெருங்க, அவனோ அவளின் அருகாமையில் கண் விழித்து புன்னகைக்க, அனு அவனின் கண்ணை துடைத்து விட்டாள்.

" அப்பா என்ன சொன்னார் அனுமா? "

" ஹான்.. உங்க வீட்டுக்கு பத்திரிக்கை தரலாமா கேட்டார் உன்கிட்ட கேட்டு சொல்றேன் சொல்லி இருக்கேன். எதாவது வசதி குறைவா இருக்கான்னு ஹரிஷ் கேட்டான். "

" உங்க வீடு சொர்கம்டி சீனுக்கட்டி எனக்கு எந்த குறையும் இல்ல. "

" பிடிச்சு இருக்கா சத்யா என் வீடு உனக்கு? "

" பிடிச்சுருக்கு.. உன்னை பார்த்ததும் உங்க அப்பா கோவத்தை எல்லாம் தூக்கிப்போட்டு ஆரத்தி எடுக்க சொன்னார் பாரு நின்னுடாரு நெஞ்சுல. உங்க அம்மா பார்த்து பார்த்து பரிமாறின அப்ப எங்க அம்மாவை அவங்க உருவத்தில் பார்த்தேன். ஹரிஷ்.. ஹரிஷ் மாதிரி எனக்கு ஒரு தம்பி ஏன் இல்ல ஏக்கமா இருக்கு, உன் மேல எவ்ளோ பாசம் இல்ல எல்லாருக்கும்? நீயும் அப்புவும் சிரிக்கும் போது இது போதும்னு என் நெஞ்சு நிறைஞ்சு போகுது. வேற என்ன வேணும் எனக்கு? நான் சார்ந்து நிக்கிற நீங்க சிரிக்கும் போது எப்படி எனக்கு இந்த வீடு பிடிக்காம போகும்? " உணர்ச்சிகரமாக பேசிய சத்யாவின் முகம் பார்த்து,

" சத்யா.. " என்ற அழைப்புடன் அனு அவன் கைப்பிடிக்க,

" தப்பா நினைக்கலன்னா நான் உன் மடியில் கொஞ்ச நேரம் படுக்கலாமா? " சத்யா கேட்கவும், அனு பக்கம் நகர்ந்து அமர, சத்யா அவளின் மடியில் படுத்த நொடி அவனின் முதுகு குலுங்க,

" சத்யா.. அழாத.. அழாத டா.. ஒன்னும் இல்ல.. என்னை பாரேன். "

" அழ விடு அம்மு.. நெஞ்சு பாரமா இருக்கு பிளீஸ்.. "

அவனை அழ விட்டவள், காத்திருக்க, அரை மணி நேரம் அழுதவன், மெல்ல விசும்ப அவனின் கண்ணீர் அடங்கிய நேரம் உறங்கி இருந்தான். அவனின் உறக்கம் கலையாது தலையை தலையணைக்கு மாற்றியவள் அப்புவுடன் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

© GMKNOVELS