...

0 views

பழமொழிகளில் ஆசை...

உலகில் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசையுண்டு. ஆசையில்லாத மனிதர்களைக் காண இயலாது. ஆசையில்லாதவன் மனிதனே அல்ல. அவன் மனிதனிலும் மேம்பட்டவன். இவ்வாசையினை, அவா, ஆவல், வேட்கை,விருப்பம், பற்று என்று கூறுவர். உலகில் பல ஆசைகள் உண்டு. மண், பொன், பொருள் உள்ளிட்ட என்னென்ன இருக்கிறதோ அத்தனையின்மீதும் மனிதன் ஆசைப்படுகின்றான்.

உலகில் உள்ள அத்தனைக்கும் ஆசைப்படு என்று சிலரும், ஆசைப்படாதே! அது துன்பத்தைத் தரும் என்று சிலரும் கூறுகின்றனர். ஆசைப்பட்டதால் தான் மனிதன் பண்பட்டு நாகரிகத்தில் சிறந்தவனாக, அறிவில் மேம்பட்டவனாகத் திகழ்கின்றான். ஆசையின்றி இருந்தால் இன்றுள்ளவை அனைத்தும் மனித சமுதாயத்திற்குக் கிட்டியிருக்காது என்று ஆசைப்படு என்று கூறுவோர் எடுத்துரைக்கின்றனர். பல்வேறுவிதமான துன்பங்களுக்கும் ஆசைதான் மூலகாரணம். அதனால் துன்பத்திற்கு வழிகாட்டும் ஆசையினை ஒழித்துவிட்டு மனிதர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் என்று கூறுவோர் கூறுகின்றனர். நமக்கும் இது சற்றே குழப்பத்தைத் தருகின்றது. இருப்பினும் இவ்வாசையைப் பற்றி நமது முன்னோர்கள் பழமொழிகளில் பல்வேறு கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளனர். அவை பழைமைக்கும் பழைமையாய், புதுமைக்கும் புதுமையாய் நின்று நமக்கு வழிகாட்டுகின்றன எனலாம்.

இலக்கியங்களில் ஆசை

சங்க இலக்கியங்களில் இருந்து இக்கால இலக்கிங்கள் வரை ஆசையைக் கைவிடுங்கள் என்றே கூறுகின்றன. “நில்லா உலகம்“ என்று கூறி உலகின் மீது ஆசைவைக்காதே என்றும், “கூத்தாட்டு அவைக்களத்தற்றே“ செல்வம் அதனால் அதன்மீது ஆசை வைக்காதீர்கள் என்றும்,

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு“

அதனால் வாழ்க்கையின் மீது ஆசை வைக்காதீர்கள் என்றும், “குழம்பைத் தனித்தொழிய புள் பறந்தற்றே“ அதனால் உயிர் மீது, உடல் மீது ஆசை வைக்காதீர்கள்,

“யாக்கையும் நில்லா, இளமையும் நில்லா“ என்று பலப்பல கூறி நம்மை ஆசைப்படாதீர்கள் என்று இடித்துரைத்து, “ஈசனோடாவது ஆசையை அறுமின்கள்“(திருமந்திரம்) என்று இறைவன்மீது கூட ஆசை வைக்காதீர்கள் என இலக்கியங்கள் காலங்காமாக்க் காலத்திற்கேற்ற உவமைகளைக் கூறி ஆசையைக் கைவிடுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால் பமொழி இவ்வாசையினைப் பல்வேறு நிலைகளில் தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.

ஆசையும் – வெட்கமும்

வெஃகாமை, பற்று என்று ஆசையினை வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவனுக்கு ஒன்றைப் பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டால் அவன் எத்தகைய துன்பத்தையும் பாராது தான் ஆசைப்பட்டதை அடைய முயற்சி செய்வான். ஆசை வந்துவிட்டால் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கூடத் தங்களது நிலையில்இருந்து இறங்கி வந்துவிடுகின்றனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் இத்தகைய பண்பினைக் காணலம்.

உலகத்தைப் படைத்தவர் பிரம்மா. அவர் ஒரு அழகு நிரம்பிய பெண்ணைப் படைக்கின்றார். அப்பெண்ணும் பிரம்மனால் உருவாக்கப்பட்டுத் தோன்றுகின்றாள். பெண் தோன்றி தன்னைப் படைத்த பிரம்மாவிற்கு வணக்கம் செலுத்துகிறாள். பிரம்மா பார்க்கின்றார். பார்த்தவுடன் தான் படைத்த படைப்பின் மீது அவருக்கு ஆசை தோன்றுகிறது. அவரால் ஆசையை அடக்க இயலவில்லை. அவளோ அவருக்கு மகள் முறை. இருப்பினும் பிரம்மாவின் ஆசை வெட்கமறியவில்லை. தான் படைத்தவளையே மனைவியாக்கிக் கொள்கின்றார். இவ்வாறு ஆசைக்கும் வெட்கத்திற்கும் உள்ள தொடர்பினை ஒரு புராணக்கதை விளக்குகின்றது.

இந்திரன் மகன் அர்ச்சுனன். சூரியன் மகன் கர்ணன். கவச குண்டலங்களுடன் பிறந்தவன். அவனிடம் கவச குண்டலங்கள் இலுக்கினறவரை அவனை எதுவும் செய்யஇயலாது. கர்ண்ணன் மகாபாரதப் போரில் அர்ச்சுன்னைக் கொல்வேன் என்று சபதம் மேற்கொள்கிறான். இதனை இந்திரன் அறிகின்றான். இந்திரனுக்குத் தன் மகன் அர்ச்சுன்னை மீது பாசம் என்ற ஆசை. தன் மகனைக் காக்க வேண்டுமெனக் கருதுகின்றான்.

கண்ணனின் ஆலோசனையின் பெயரில் வயது முதிர்ந்த அந்தணன் வடிவில் சென்று கர்ணனிடம் யாசிக்கின்றான். தேவர்களின் தலைவன் தன்னைவிடக் கீழிடத்தில் உள்ளவனிடம் யாசிக்கலாமா? வெட்கமன்றோ? பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையினால் வெட்கத்தைத் துறந்து யாசித்துக் கவச குண்டலங்களைப் பெறுகின்றான்.

இதுபோன்று போரில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையால் தருமன் துரோணரைக் கொல்லத் தனது நேர்மையைக் கைவிட்டுப் பழிக்கு அஞ்சாது, வெட்கமின்றிப் பொய்கூறி துரோணர் சாவுக்குக் காரணமாகின்றான்.

இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் இலக்கியங்களிலும், புராணங்களிலும் காணக்கிடைக்கின்றன. ஒருவன் உண்டு முடித்திருந்தாலும் தனக்குப் பிடித்தமான உணவினை ஒருவர் வைத்திருந்தால் தனது ஆசையால் தனது நிலையையும் மறந்து உணவு வைத்திருப்பவரிடம் கைநீட்டிப் பெற்று உண்கின்றான். உலகம் பழிக்குமே என்று யாரும் வெட்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் உணர்ந்துதான் நம்முன்னோர்கள்,

“ஆசை வெட்கமறியாது“

என்று கூறியுள்ளனர்.

ஆசை –மோகம்

ஆசை, மோகம் என்று இருசொற்கள் இன்று வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் ஒரே பொருள் குறித்தவையாயினும் இரண்டிற்கும் சிறிது வேறுபாடு உள்ளது. ஆசையை விருப்பம் என்றும், மோகம் என்பதை அதி ஆசை அல்லது அதிகமான விருப்பம் என்றும் கூறலாம். ஆசையும், அதி ஆசையும் மனிதனுக்கு ஏற்படக் கூடாது.

ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது இருவகையில் அடங்கும். ஒன்று உடல் அழகில் மயங்கி அப்பெண்ணை அடைய வேண்டும் என்று கருதுவது மற்றொன்று அவளது உடலழகைப் பாராது பண்பு, ஒழுக்கம், பேச்சு இவற்றைப் பார்த்து விரும்புவது. முன்னது விரைவில் மாயும். பின்னது நாளுக்கு நாள் வளரும். இராவணன் சீதையின் மேற் கொண்ட காதல் முன்னது. பின்னது நளன் தமயந்தியின் மேல் கொண்ட காதல்.

உடலிச்சை தீர்ந்தவுடன் முன்னது கசக்கும். பின்னது உடலிச்சை தீர்ந்தாலும் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். மனிதனது வாழ்க்கையில் காதல் என்பது முன்னதைப் போன்று இருக்க்க் கூடாது என்ற பண்பாட்டு விளக்கத்தை,

“ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள்“

என்ற பழமொழி விளக்குகின்றது. உண்மையான காதலுடன் மனிதன் வாழ்க்கையை வாழ வேண்டம் என்ற ஒப்பற்ற கருத்தினை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆசையும், அதி ஆசையும் மனிதனுக்கு ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் மனித வாழ்க்கை இழிந்த்தாகவும் அவமானத்தைத் தருவதாகவும் அமையும் என இப்பழமொழி உணர்த்துகின்றது.

மதில்மேல் பூனை

சிலரது மனம் ஊசல் குண்டு போன்றது அலை பாய்ந்து கொணடே இருக்கும். இவாகள் உடனடியாக எதிலும் ஒரு முடிவினை எடுக்கமாட்டார்கள். அவர்களையே மதில் மேல் பூனை மனம் கொண்டவர்கள் என்பர். உப்பும், சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள் உடல்நலத்திற்குக் கேடு என்று அந்நோயுள்ள ஒருவரிடம் மருத்துவர் கூறினால் அவர் கேட்டு விடுவாரா? அவரால் விருப்பமான உணவைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க இயலுமா? முடியாது.

உப்பு அதிகமுள்ள உணவையும், இனிப்பு உள்ள உணவையும் உண்டால் உயிர்க்கு ஊறு விளையும் என்று தெரிந்தும் சிலர் ஆசையை அடக்க முடியாமல் தவிர்ப்பர். அவருக்கு உணவின் மீதும் ஆசை. உயிரின் மீதும் ஆசை. முடிவில் உணவின் மீதுள்ள ஆசை வென்றுவிட அதனை உண்டு துன்பத்திற்கு உள்ளாவர். இங்ஙனம் மனிதன் அலைபாயும் உள்ளத்துடன் இருத்தல் கூடாது என்பதனை,

“கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை“

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. கூழைக் குடித்தால் மீசையில் ஒட்டும். மீசையில் ஒட்டக் கூடாது என்றால் கூழ் குடிக்க இயலாது. கூழ் குடிக்காமலும் இருக்க முடியாது. அவ்வாறு இரண்டின் மீதும் ஆசை உள்ளவர்கள் மனிதர்கள். இவ்வாறு மனிதன் இருவிதமான மனநிலையுடன் இருத்தல் கூடாது. அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதனையே இப்பழமொழி விளக்குகின்றது.

ஆசை – பேராசை

மனிதனுக்குள்ள நியாயமான ஆசைகள் மறுக்க முடியாதவை எனலாம். அதாவது பிறருக்குத் தீங்கு விளைவிக்காத ஏற்படுத்தாத எவ்விதமான ஆசையும் நியாயமான ஆசை எனலாம். ஆனால் மாற்றார் வாழ்வில் தீயனவற்றையும், துன்பத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆசையே பேராசை எனப்படும். இது அனைவருக்கும் மிகுந்த துன்பத்தைத் தரும். ஒருவன் தன்னிடம் இருப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். தனக்குக் கிடைக்காத ஒன்றின் மீது ஆசை வைத்து துன்பத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. இதனை,

“இருக்கறதை விட்டுவிட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படலாமா?“

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. ஒருவன் நியாயமாகத் தன்னால் எவை எவை இயலுமோ அவற்றிற்குத்தான் அவன் ஆசைப்பட வேண்டும். அதைவிடுத்துத் தன்னால் இயலாது என்று அறிந்தும் அதற்கு ஒருவன் ஆசைப்பட்டுத் துன்பத்திற்கு ஆளாகக் கூடாது என்பதை,

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல“

“எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்டது மாதிரி“

என்ற பழமொழிகள் தெளிவாக எடுத்து விளக்குகின்றன. இருப்பதை வைத்துக் கொண்டு மனத்திருப்தியுடன் மனிதன் வாழ வேண்டும். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கை. அது என்றும் அமைதியைத் தரும். இப்பழமொழிகள் ஒருவன் செய்ய் இயலாத செயலைச் செய்வதற்கு முயலக் கூடாது. அது துன்பத்தைத் தரும் என்ற வாழ்க்கை நெறியினை எடுத்தியம்புகின்றது.

மேலும் மேலும் ஒருவன் ஆசைப்படுவது பேராசையாகும். அப்பேராசை பெரிய துன்பத்தையே நல்கும். மனிதன் இதனை உணர்ந்து வாழ வேண்டும் என்பதனை,

“பேராசை பெருநஷ்டம்“

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. தனது வலிமையை அறிந்து ஒருவன் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். மற்றவர்க்குத் துன்பம் நல்கும் வண்ணம் அதிக ஆசைப்படுதல் கூடாது என்ற பண்பாட்டு விளக்கத்தை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

ஆசை – விளாம்பழம்

ஆசை என்பது அளவுடன் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அஃது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் விரும்பினால்தான் இறைவனைக்கூட அனைவரும் வணங்குவர். இல்லையெனில் வணங்க மாட்டார்கள். மனிதர்கள் விரும்பினால் தான் பிறருடன் நட்புறவு கொள்வர். இல்லையெனில் அங்கு ஒன்றும்இராது. இதனை,

“ஆசையில்லாத கோயிலில் பூசை எதுக்கு?“

என்ற பழமொழி எடுத்தியம்புகின்றது.

ஒருவருடன் நட்புறவு கொள்ள வேண்டுமெனில் அவர்மீது நமக்கு விருப்பம், ஆசை இருத்தல் வேண்டும். அவ்வாறு விருப்பம் இருந்தால் மட்டுமே நாம் பிறருடன் நட்பினைத் தொடர்வோம். இல்லையெனில் அஃதுமுறிந்துவிடும். ஒருவருடன் நட்புறவு கொள்கின்றபோது உள்ளார்ந்த விருப்பமுடன் அது இருத்தல் வேண்டும் என்பதனையே மேற்குறித்த பழமொழி நமக்கு விளக்குகின்றது.

ஆசை வாழ்நாள் முழுவது ஒருவருக்கு இருத்தல் கூடாது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் எதன்மீதும் மனிதன் ஆசை(பற்று) வைத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அது வாழ்வில் அமைதியின்மையையே உண்டாக்கும். ஆசையை எங்ஙனம் முற்றாக ஒழித்து உலகில் வாழ்வது? இதனை விளாம்பழத்துடன் நமது முன்னோர்கள் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். விளாங் காயாக இருக்கம்போது ஓடு காயுடன் ஒட்டியிருக்கும். பழம் பழுக்கப்பழுக்க ஒடும் பழமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது தனித்தனியே இருக்கும். இதனைப் போன்றே மனிதன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பழம் ஓட்டிற்குள் உள்ளது. அது ஓட்டுடன் ஒட்டுவதில்லை. அதுபோன்றே மனிதன் உலகத்திற்குள் இருந்தாலும் உலக ஆசைகளுக்கு ஆட்பட்டுவிடாது வாழ வேண்டும். அதுவே நிறைவான நிம்மதியான, அமைதியான வாழ்க்கையாகும்.இத்தகைய வாழ்வியல் உண்மையை,

“விட்டதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோட“

என்ற பழமொழி விளக்குகின்றது.

மனிதனைப் பண்படுத்தும் பண்பாட்டுக் களமாக இப்பழமொழிகள் அமைந்து சமுதாய வாழ்வைச் செம்மையுறச் செய்கின்றன. ஆசையுடன் வாழ்ந்து ஆசையினைப் படிப்படியாகத் துறந்து விளாம்பழம் போல் நிறைவான வாழ்க்கையினை அனைவரும் அமைத்துக் கொள்ள இப்பழமொழிகள் நமக்கு உறுதுணையாக இருக்கின்றன.

முனைவர் சி.சேதுராமன்,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.