...

30 views

என்னுயிர் துணையே - 8 to 10
துணை - 8

சத்யா உடல் நடுங்க, கண் கலங்கி மருத்துவமனையில் அமர்ந்து இருந்தான். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளே அவனின் உயிர் தோழி மயங்கி கிடந்தாள். மருத்துவர்கள் அவளின் நிலை மோசம், சீராக வாய்ப்புகள் குறைவு என்று கூறிவிட, வார்த்தையில் சொல்ல முடியாத வேதனை அவனுக்குள்.

மூன்று நாளும் நரக வேதனை கண்டு இருக்கிறாள். எப்படி தாங்கினாலோ இத்தனை வலியை, நான் வருவேன் என நம்பி இருப்பாளோ? அவளின் மின்னஞ்சலை அன்றே கண்டிருந்தாள் ஓடி வந்து இருப்பேனோ? சத்யாவின் அழுகை பெரிதாக, இருக்கும் இடத்தை மனதில் வைத்து வாய் மூடி அழுது இருந்தான்.

அவளை தேடி அவன் அறைக்குள் சென்ற போது உடலில் உள்ள ஆடைகளில் இரத்த கறையோடு, கை கால் எல்லாம் கன்றிபோய், வீங்கி, சுயநினைவின்றி, கட்டிலில் கிடந்த அனுவை கண்டு உயிரை வரை துடித்து போனான் சத்யா. அவனின் அலறலை கேட்டு அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் ஆம்புலன்சில் அவளை ஏற்றி அனுப்ப, சத்யாவும் அவளோடு மருத்துவமனை வந்து இருந்தான்.

ஒரு நாள் முடிந்து போய் இருந்தது, இன்னும் கண் திறக்காத அவளை நினைத்து வாடிப்போய் பசி, தூக்கம் மறந்து தீவிர சிகிச்சை பிரிவின் முன்னே தவமிருந்தான். அவளின் அப்பாவும் அம்மாவும் வந்து சேர, சத்யா அவர்களுக்கு விவரத்தை சொல்ல, அனுவின் தாயோ மயங்கி சரிந்தார். அவரை அங்கேயே சேர்த்துவிட்டு மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வந்து அமர்ந்தார்கள்.

" இப்படி ஒருத்தனை எங்க இருந்து சார் பிடிச்சீங்க? அவனுக்கு மனநல கோளாறு. அனுவை அடிச்சு கொல்ல முயற்சி பண்ணி இருக்கான். மூணு நாளும் அவ எவ்ளோ துடிச்சான்னு தெரியல…

“நான் ரெண்டு நாள் முன்னாடி பேசின அப்போ அனு பேசினா, காய்ச்சல் காலேஜ் போகலன்னு சொன்னா, அவினாஷ் பார்த்துக்கிறான்னு சொன்னா, அவன் மன நோயாளின்னு எனக்கு எப்படி தெரியும்? அவன் அம்மா அப்பாக்கே தெரியலையே.. " ஜெயமோகன் கூறி அழ,

அவரை சமாதானம் செய்து, மயக்கம் தெளிந்து எழுந்த அவளின் அம்மாவையும் அவருக்கு துணையாக அவளின் அப்பாவை அவனின் ஸ்டுடியோ இல்லம் அழைத்து சென்று, கொஞ்சம் ஓய்வு எடுக்க சொல்லி, இந்திய உணவையும் வாங்கி கொடுத்து உண்ண சொல்லி விட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தான். அன்றும் கண் விழிக்காது அவள் ஏமாற்ற, சத்யா அன்றும் அங்கேயே அமர்ந்து கொண்டான்.

அடுத்த நாள் காலையில் மருத்துவர் அனுவை பார்த்து பேச சொல்ல, அனுவின் அருகே வந்து அமார்ந்தவன், பிடிங்கி எறிந்த கொடிப்போல கட்டிலில் கசங்கி படுத்து இருக்கும் அவளை கண்டு கண்ணீர் வடித்தான்.

" அனு.. அனுமா.. உனக்கு ஒன்னும் இல்ல. அவன் இனி உன்னை அடிக்க மாட்டான். நீ பத்திரமா இருக்க.. உன்னோட நான், உன் அப்பா, அம்மா எல்லாரும் இருக்கோம். பயப்படாம இரு.. கண்ணு திறந்து பாரு அனுமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அழுகையா வருது. பிளீஸ்.. " சத்யா கெஞ்சி, ஆறுதல் சொல்லி, தைரியம் கொடுத்து பேசிவிட்டு வர,

அவளின் அம்மாவும் அப்பாவும் வர, அவர்களும் அவளை கண்டு வந்தனர். பின் அவினாஷின் அப்பாவும் அம்மாவும் வர, அனுவை கண்டு அதிர்ந்துப்போய் இருந்தனர்.

" உங்க மகன் வெளிய வர வாய்ப்பு குறைவு, கொலை பண்ண முயற்சி செய்து இருக்கான். சின்ன பொண்ணை மயக்கி பாலியல் உறவில் இருந்து இருக்கான். அவன் ஒரு மனநோயாளி. அப்படியே அவன் சரியாகி வந்தாலும் அனுவை அவனோட வாழ அனுப்ப மாட்டேன். அவ அப்பாவே அனுப்பினாலும் நான் அனுப்ப மாட்டேன். " சத்யா கூறவும், பெரியவர்கள் அனைவரும் ஒருவரின் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆறு நாட்களாக சத்யாவையும் அவளின் பெற்றோரையும் அழ வைத்து சோர்ந்து போக செய்தவள் மெல்ல கண் திறந்தாள் ஏழாம் நாள். தாயும் தந்தையும் அருகில் இருந்தும் அவள் கண்கள் சத்யாவை கண்டதும் கலங்கி போக, அவனோ அழாதே என தலையசைத்து ஆறுதல் கூறினான். அடுத்த வந்த நாட்களில் அவளின் உடல் நிலை சீராக, சத்யா கல்லூரியில் அவளின் நிலையையும், அவனின் விடுமுறையும் பற்றி பேசி அனுமதி வாங்கி இருந்தான்.

இந்தியன் ஒருவரை இங்கிலாந்து சட்டப்படி தண்டிக்க முடியாது. எனவே முறையான தகவலை இந்திய தூதரகத்தில் அறிவித்து, அதன்படி இந்தியாவில் இருந்து வந்த காவல் துறையினர் வழக்கை விசாரித்து, அனுவை கேள்வியில் துளைத்து, அவினாஷ் பெற்றோர்களும், அனுவின் பெற்றோர்களும் கூட பதில் கூறி, சத்யாவை தனியே விசாரித்து என பலகட்ட விசாரணைக்கு பின், அவினாஷ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவன் ஒரு மனநல நோயாளி என்பதால் நான்கு வருடம் அவனை மருத்துவ சிகிச்சையுடன் காவலில் வைத்திருக்க கூறி தீர்ப்பு கொடுத்து அவினாஷை இந்தியா அனுப்பி இருந்தனர். இதற்கெல்லாம் சத்யா தான் ஜெயமோகனுக்கு உதவி செய்தான்.

நாட்கள் இதிலேயே கழிய இருவரின் கல்வியும் கேள்வியாக, அந்த வருட படிப்பு இருவருக்கும் கைகூடாது போய் இருந்தது. இதற்கு இடையில் அனு அடிக்கடி தூக்கத்தில் பயந்து எழுந்தாள். சில தூக்கமின்றி இரவை கழித்து, எதற்கு அழுகிறோம் என்றே அறியாது அழுது, பைத்தியம் போல சுவரை வெறித்து பார்த்து என மன அழுத்தம் கொண்டாள். அனுவின் பெற்றோர் அவளை பார்த்து கவலையில் பயந்த நேரம் பார்த்து அவர்களின் விசாவும் முடிய, அனுவை அவர்களோடு வர சொல்லி அழைக்க அனு மாட்டேன் என மறுத்து இருந்தாள். எத்தனையோ முறை அவர் கெஞ்சியும் மாட்டேன் என மறுத்தவள், படிப்பை முடித்து இந்தியா வருகிறேன் என கூறி இருந்தாள். அவர்களுக்கு ஒரே பிடிப்பு சத்யா தான். அவனின் கண்ணியமான நட்பு அவர்களுக்கு புரிந்தது. சத்யாவின் பொறுப்பில் விட்டு அவர்கள் விடைப்பெற, சத்யா தான் அவளை சரி செய்ய முயற்சி செய்தான்.

மனநல மருத்துவரை பார்த்து அவளுக்கு என சிகிச்சை கொடுத்து, சுற்றுலா அழைத்து சென்று, மாற்றம் வேண்டி ரோம் நகர வீதிகளில் சுற்றி, அதன் அழகில் சில மயங்கி, சோர்ந்த மனதை மாற்ற உதவினான். பின் லண்டன் வந்தவர்கள் ஒரு தம்பதியர் நடத்தும் பேக்கரி கடையில் வேலைக்கு சேர்ந்து இருந்தனர். டோனட் செய்ய உதவியாய் சத்யா சேர்ந்து இருக்க, அனு அதை அழங்கரிக்கும் வேலையில் சேர்ந்து இருந்தாள். அந்த கல்வியாண்டு முடியவும், அந்த வேலையை விட்டு மீண்டும் இருவரும் விட்ட படிப்பை தொடங்கி இருந்தனர்.

அதன் பின் நாட்கள் வேகமாக நகர, இடையில் அவளின் அப்பா மட்டும் மட்டும் வந்து மகளை பார்த்து சென்றார். மனம் திடமாக மாறி இருக்கும் மகளை கண்டு சத்யாவிற்கு நன்றி கூறி இருந்தார். சத்யாவுக்கு படிப்பும், அதே துறையில் வேலையும் கிடைத்து உடன் வருமானமும் கிடைத்தது. கிளவுட் லைன்சில் சத்யாவின் டிசைன் பிடித்து போய் அவனுக்கு நிரந்தர வேலையும் கிடைத்து விட, அவனின் படிப்பு முதலில் முடிந்தது. அடுத்து அனுவும் இரண்டாம் வருட படிப்பை தொடங்க, அவளை ஒரு ஸ்டுடியோ இல்லத்தில் அவனின் ஒரு கல்லூரி தோழியுடன் தங்க வைத்து, அனு தனியே அனைத்தையும் எதிர்கொள்ள பழகிக்கொடுத்தான்.

அவளின் படிப்பு முடியவும், அவளின் தந்தை அவளை இந்தியா அழைத்து கொண்டார். கிளம்பும் முன் ஆயிரம் பத்திரம் சொல்லி தான் அனுப்பினான் நண்பன். இவளோ கண்ணீர் விட்டு பிரியா விடை கொடுத்து தான் சென்றாள். மெல்ல மீண்டும் மாதங்கள் கடக்க, அனுவுக்கு விவாகரத்து கிடைத்தது. கோர்ட் வந்த அவினாஷ் அவளிடம் மன்னிப்பை வேண்டிக்கொண்டு அமைதியாய் விவாகரத்து கொடுத்து இருந்தான். சத்யாவிடம் இதை சொன்ன பொழுது தோழிக்காக மகிழ்ந்து போனான்.

பின் சென்னையில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள் அனு. வேலை, வீடு, பெற்றோர், சத்யா என நிம்மதியாய் தான் நாட்கள் நகர, ஒரே மகளின் வாழ்க்கையை சீர் செய்ய நினைத்த தந்தையின் மனம் இந்த முறை தீர விசாரித்து இன்னொரு வரனை கொண்டு வந்து அவள் முன் நிறுத்த, அனு வேண்டாமென மறுக்க, ஜெயமோகன் நாடியது சத்யாவை,

சத்யா அவளின் மன அறிந்து, தைரியம் கூறி, சம்மதிக்க வைக்க, அனுவும் சம்மதத்தை கூறி இருந்தாள். நிச்சய தாம்பூலம் மாற்றி திருமணம் உறுதி செய்த பின் தான் மாப்பிள்ளை அவளிடம் மெல்ல கேட்டான். முன்னாள் கணவனுடன் அனுபவம் உண்டா? உறவு கொண்டீர்களா என, அடுத்து அவன் சத்யா பற்றிய கேள்விகளை ஆரம்பிக்க, அனு கோவத்தில் அவனை மிக அசிங்கமான வார்த்தையில் பேசி விட, அவனும் அசிங்கமாக அவளை திருப்பி பேசி விட, திருமணம் நின்று போனது.

தகப்பன் மீண்டும் மாப்பிள்ளை பார்க்க தொடங்க இப்போது தகப்பனையே எதிர்த்து நின்றாள். அவளின் மனம் என்ற ஒன்றையே நினைக்காத அவரை பார்த்து அவளுக்கு கோவம் வந்தது. சில நாள் தனிமை வேண்டும் என்று கொல்கத்தாவிற்கு வேலையை மாற்றி சென்று இருந்தாள். சத்யாவின் நட்பு மட்டுமே அவளின் ஒரே ஆறுதல்.

தகப்பன் இன்னொரு பையனை பார்க்க, அவளின் தாயோ திருமணம் செய்து கொள்ள சொல்லி அழுது அவளை தர்ம சங்கடத்தில் நிறுத்த, திருமணம் வேண்டாம் என பல முறை கெஞ்சியும் தந்தை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த, ஹரிஷ் அக்காவுக்கு உதவ வேண்டுமென சத்யாவிடம் கூற அவனும் கொஞ்சம் நாள் போகட்டும் அவளை விட்டு பிடிப்போம் என்று கூற அவரோ அவரின் நிலையில் நின்று பேச சத்யாவின் முயற்சியும் தோல்வி.

சத்யாவிடம் உதவி கேட்டு அவன் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு வேலை வாங்கி தர சொன்னாள் அனு. தோழியின் இப்போதைய மனநிலைக்கு இதுதான் சரியென தோன்ற, சத்யா இரு மாதத்தில் முயன்று வேலையை வாங்கிக்கொடுக்க, ஜெயமோகன் தடுக்க, அவரை எதிர்த்து செல்ல முடிவு எடுத்து அனு நிற்க,

லண்டன் சென்றால் இனி நீ என் மகள் இல்லை என்று அவர் கோவத்தில் வார்த்தையை விட, கோவத்தில் இவளும் என் மனம் புரியாத நீங்கள் என் தந்தை அல்ல என கூறி, அம்மாவின் கண்ணீரை துடைத்து விட்டு, ஹரிஷின் பொறுப்பில் குடும்பத்தை விட்டு லண்டன் வந்துவிட்டாள். ஆனால் அதன் பின் ஜெயமோகன் அவளை தலை முழுகி, இனி அவளோடு நமக்கு எந்த உறவும் கிடையாது என கூறி விட்டார்.

கையோடு சத்யாவையும் அழைத்து இனி அனு பற்றி அவரோடு எதுவும் பேச வேண்டாம் என கூறி, அவரின் முடிவையும் கூறிவிட்டு தொடர்பை முறித்துக் கொண்டார். அதன் பின் அனு லண்டனில் அவளுக்கென அனைத்தையும் தனியே நின்று சம்பாரித்து கொண்டாள். உடன் தோழனாக சத்யா இருக்க, இதோ இன்று வரை அவனின் நிழலில் பாதுகாப்பாய் இருக்கிறாள். தகப்பனாய், தாயாய், நண்பனாய் அவளை தாங்க சத்யா இருந்தான், இருக்கிறான், எப்போதும் இருப்பான் என அவள் அறிவாள்.

யாரேனும் அசிங்கமாக பேசினால், யாரேனும் முரட்டுத்தனமாக யாரையும் அடித்தால், பார்க்கும் இவளுக்கும் உடல் நடுங்கும். அதிர்ந்து பேசினால் கூட அஞ்சி போகும் பெண் இவளை அறிந்து வைத்தவனும், புரிந்து வைத்தவனும் அவளின் நண்பன் ஒருவன் தான்.

" குட்டிமா எழுந்து உக்காரு.. டீ குடிப்போம். " சத்யாவின் குரல் அவளை எழுப்பிவிட, கண் திறந்தவள் அப்போது தான் உணர்ந்தாள் இருக்கும் இடத்தை, மன எண்ணங்களில் மூழ்கி மீண்டும் அந்த நரக நாட்களை தொட்டு வந்திருக்கிறாள் என, அவளின் கண்கள் கலங்க,

" ஹேய், அனுமா அதையா யோசிச்சுட்டு இருக்க இன்னும்? ஏன்டா? " சத்யா பரிதவித்து போய் கேட்க,

" அவன் அந்த பொண்ணை பேசினது எனக்குள்ள பழைய ஞாபகத்தை தூண்டி விட்டுருச்சு. அதான்.. எனக்கு காஃபி வேணும் தங்கம்.. "

இருவரும் காபி குடித்து, இல்லம் வந்து சேர, அப்பு தகப்பனை கண்டதும் ஓடிவந்து முத்தம் கொடுக்க, சத்யா மகனை தூக்கி கொஞ்சியவன் அனு கையில் கொடுக்க தொலைந்த அவளின் புன்னகை மீண்டு வந்தது. அவளின் முகம் பார்த்து என்ன தோன்றியதோ அவனுக்கு கழுத்தோடு கட்டி முத்தம் மழை பொழிந்து அவளின் மனதுக்கு இதம் கொடுத்தான்.

சத்யா ஜிஷ்ணு, வியாஷ் இருவரையும் அழைத்து பொம்மையை கொடுக்க, ஜிஷ்ணு கொடுத்த முத்தத்தில் சத்யா விழி விரித்து புன்னகைக்க அதை பார்த்து விஜய் மகிழ, அனு பிள்ளைகளை கூடத்திற்கு அனுப்பி விட்டு வந்து அனைவரின் கையில் புடவையை கொடுக்க, பெண்கள் அனைவரும் அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டனர். விஜய் கையில் ஒரு பெட்டியை கொடுத்து,

" உங்களுக்கு தான் அண்ணா இது. காலையில பேசுனதுக்கு சாரி. எதோ ஒரு வேகத்துல பேசிட்டேன். " அனு உணர்ந்த கேட்ட மன்னிப்பு விஜயை குளிர்வித்திருக்க, மெல்ல இன்னொரு பெட்டியை எடுத்தவள்,

" அன்பு ரூம் எது அத்த? அவங்களுக்கும் கொடுக்கனும்." அனு கேட்கவும் சத்தியமாக யாரும் இதை எதிர்பார்க்கவே இல்லை.

வித்யா அறையை காட்ட, அனு அறைக்குள் செல்ல, சத்யா அவன் அறைக்கு சென்று இருந்தான். அனு கதவை தட்டிவிட்டு காத்திருக்க, அன்புச்செல்வி கதவை திறந்தாள்.

துணை - 9

" வாங்க.. " அன்பு அறைக்குள் அழைக்க, அனு இன்முகமாக அறைக்குள் வந்தாள்.

" வீட்டுல எல்லாருக்கும் புடவை எடுத்தேன். இது உங்களுக்கு.." அனு கொடுக்க, அன்பு வாங்க தயங்க,

" இல்ல.. அனு வேண்டாமே.. "

" இவ்வளவு தயக்கம் தேவையில்ல அன்பு, உங்க அக்காவா நினைச்சு வாங்கிக்க கூடாதா? "

" எனக்கு உங்க நல்ல குணம் புரியுது அனு. ஆனா எனக்கு வேண்டாம் பிளீஸ்.. " அன்பு கூற, அனு முகம் சுருங்கி வெளியே வர, அவளின் முக வாட்டமும், கையில் உள்ள பெட்டியும் அனைவருக்கும் விஷயத்தை சொல்ல,

விஜய் தங்கையை அழைக்க, சத்யா இருக்கிறானா என ஜன்னல் வழியே பார்த்தவள் அனைவரின் முன்னும் வந்து நின்றாள்.

" வாங்கிக்கோ அன்பு மா.. அனு அன்போட தர பரிசை வேண்டாம் சொல்லி ஏன் அனு மனசை கஷ்டப்படுத்தனும்? "

" இல்ல அம்மாக்கு தெரிஞ்சா வீண் பிரச்சனை. "

" அன்பு கேட்டா ஜோதி அத்தை எடுத்து கொடுத்ததா சொல்லு, ஆதி, தேன்மொழி நீங்களும் இதையே சொல்வீங்க தானே? " விஜய் கேட்க, இருவரும் சரியென கூற, அன்பு கை நீட்ட, அனு அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு கையில் புடவையை கொடுக்க, அனுவின் சிரிப்பையும் சேட்டையையும் மாடியில் நின்று ரசித்துக் கொண்டு இருந்தான் சத்யா. அன்பு அங்கே இருந்தும் அவன் கண்கள் தேடியது ஏனோ அனுவை தான். அனு அறைக்குள் வர சத்யா கண்மூடி அமர்ந்து இருந்தான்.

" புடவையை கொடுத்துட்டேன். என்னால முடியாதுன்னு சொன்ன நீ தான் இப்போ தோத்து போய்ட்ட, சோ எனக்கு நாளைக்கு பக்கெட் நிறைய ப்ரைட் சிக்கன் வாங்கி தரணும் பாப்புக்குட்டி "

" உன்னால சிக்கன் குடும்பமே அழிய போகுதுடி அராத்து.. " சத்யா அவளின் முதுகை செல்லமாக அடிக்க அதற்கும் அனு சிரிக்க, கோகிலா அறைக்கு வெளியே நின்று அனுவை அழைத்தார். அனு வரவும் அவள் கையில் காஃபி கொடுக்க,

" சாப்பிட்டு தான் வந்தோம் மா.."

" பேபி உனக்கு காஃபி வேணுமா? " அனு வெளியே இருந்து குரல் கொடுக்க,

" வேண்டாம் தங்கம்.. " சத்யா திருப்பி குரல் கொடுக்க,

" வேண்டாம் கோகிமா " சொல்லிவிட்டு அவள் அறைக்குள் செல்ல எத்தனிக்க,

" புருஷனை வாங்க போங்கன்னு மரியாதையா பேச தெரியாதா உனக்கு? " கோகிலா கேட்க,

" மரியாதை மனசில் இருந்தா போதும். எனக்கு இப்படி கூப்பிட்டு பழகிடுச்சு."

" என்ன சொன்னாலும் எதாவது திருப்பி பேசி வாயடைக்க வேண்டியது " கோகிலா முணுமுணுத்து கொண்டே செல்ல, அனு அறைக்குள் வந்தாள். உடைமாற்றி டிவியின் முன்னே அமர்ந்தவள் உடன் அப்புவும் வரவும் கார்டூன் வைத்து பார்க்க, சத்யா மடிக்கணினியை உயிர்ப்பித்து மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டு இருந்தான். அனுவின் அனுபவத்திற்கு பிறகு தினம் இரு முறை மின்னஞ்சல் பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தான்.

இருவரும் டிவி பார்த்தபடியே உறங்கி இருக்க, இருவருக்கும் போர்வையை போர்த்தி விட்டு டிவியை அணைத்து விட்டு வேலையை பார்க்க, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, சத்யா பால்கனி வழியே எட்டிப்பார்க்க, சத்யாவின் அத்தை அறிவு மதியும், தம்பி சூர்யாவும், ஹரியும், மற்றும் உடன் அன்புவின் கணவன் ஆகாஷ் என நால்வரும் இறங்கினார்கள்.

அறிவு வீட்டினுள் வரவும் சட்டென எதோ ஒரு இறுக்கம் தானாக அனைவரின் முகத்திலும் சேர்ந்து கொண்டது. இரவு உணவு வேலை வரை எந்த சலசலப்பும் இல்லை. ஜோதி மகனின் அறை கதவை தட்ட ஆதிரா கதவை திறக்க,

" சூர்யா என்ன பண்றான் மா? "

" லேப்டாப்பில் எதோ வேலையா இருக்காரு அத்தை. நீங்க உள்ள வாங்க." அறைக்குள் சென்றவர் சூர்யா முன்னே சென்று அமர,

" சொல்லுங்க மா என்ன விஷயம்?"

" சூர்யா.. நம்ம சத்யா வந்து இருக்கான். "

" சரி.. அதுக்கு? "

" அவன்கிட்ட எந்த பிரச்சனையும் பண்ணாத டா.. மீறி போனா ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தான் இருப்பான். "

" அப்பா சொன்னாரு மா.. என்னை அவன் சீண்டாத வரை எல்லாம் நல்லா இருக்கும். நானா அவன் வழிக்கு போக மாட்டேன். எனக்கு அவன் கூட பிரச்சனை பண்றது தான் வேலையா சொல்லுங்க?"

" சரி.. சரிப்பா.. எதுவா இருந்தாலும் அப்பா வர வரைக்கும் அமைதியா இரு அது போதும்."

" சரிம்மா.. "

" இப்ப ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. "

அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர, கோகிலா இவர்களையும் சாப்பிட அழைக்க, முதலில் தயங்கி யோசித்தவன், பின் அனுவையும் யாஷையும் எழுப்பி விட்டான். அப்புவின் முகத்தை கழுவி விட்டு, வருவதாக அனு கூறவும் சத்யா முதலில் கீழே சென்றான்.

மேஜையில் ஒரு பக்கம் விஜய், ஆகாஷ், அறிவுமதி, சூர்யா, ஹரி என அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரே அமர்ந்தான். அவன் வலது கை பக்கம் வித்யா, ஜோதி இருவரும் அமர, ஆதிரா, தேன்மொழி இருவரும் பரிமாற தொடங்க, அறிவின் கண்கள் சத்யாவை வெறிக்க, சட்டென புன்னகை முகமாக மகளை அழைத்தார். அன்பு தயங்கி தயங்கி வந்து சத்யாவின் பின் நிற்க,

" வா வந்து உக்காரு.. என்ன பண்ற ரூம் உள்ள? மாப்பிள்ளை பக்கத்தில வந்து உக்காரு.. " அறிவு கூறவும் அனைவரும் அன்பு முகத்தை பார்க்க, சத்யா எதையும் கண்டுகொள்ளவே இல்லை.

அன்புச்செல்வி ஆகாஷ் அருகில் வந்து அமர, சத்யா முகத்தில் உணர்வுகளே இல்லை. அறிவு அவன் எதுவும் பேசுவான், அல்லது இடத்தை விட்டு எழுந்து செல்வான் என்று பார்த்திருக்க, அனைவரும் மௌனமாக அடுத்து என்ன என்று அமர்ந்திருக்க, அங்கே சூழ்நிலை இறுக்கமாக மாற, அதை எல்லாம் ஒரு சொல்லில் தகர்த்து எறிந்து இருந்தான் சத்யாவின் அப்புக்குட்டி.

“பாபா” என்ற அவனின் அழைப்பு சத்யா முகத்தில் புன்னகை தர, விஜய் முகத்திலும் புன்னகையை பூக்க செய்ய, பக்கத்தில் இருக்கும் தாயை மனத்தில் வைத்து விஜய் புன்னகையை மறைத்து கொண்டான். அறிவு அப்புவை அதிர்ந்து பார்க்க, சூர்யாவும் ஹரியும் ஆச்சரியமாக பார்க்க, ஆகாஷ் நெஞ்சில் மட்டும் நிம்மதி பரவியிருந்தது.

சத்யா மகனை தூக்கி அவனின் இடப்பக்கம் இருக்கும் அவன் இருக்கையில் அமர வைக்க, அப்புவின் பின்னே வந்த அனு சத்யாவை முறைக்க, சட்டென மகனை மடியில் தூக்கி அமர்த்தி இருந்தான். அவன் பக்கத்தில் உரிமையாக அமர்ந்த அனுவை கண்டு அறிவின் முகம் மட்டும் சுருங்க, இளையவர்களின் கண்கள் இருவரின் புரிதலில் இன்பமாய் விரிந்தது. வியாஷ் தான் தொடங்கி வைத்தான் விளையாட்டை..

" பாபா இவங்க எல்லாம் யாரு? " மகன் விரல் நீட்டிக் கேட்கவும், சத்யா ஒரு நொடி தயங்க, அனு பதில் கூறினாள். இது ஆகாஷ் மாமா, இவங்க அறிவு பாட்டி.. "

" எனக்கு இன்னொரு பாட்டியா?" வியாஷ் கண் விரிந்து கேட்க,

" ஆமா, இவங்க உன் தாத்தாவோட தங்கச்சி. பாபாவுக்கு அத்தை. உனக்கு பாட்டி.. அப்புறம் அது சூர்யா உன் சித்தப்பா, அதுக்கு அடுத்து உக்கார்ந்து இருக்கிறது ஹரி சித்தப்பா. " அனு கூறவும் வியாஷ் மீண்டும் மீண்டும் அவர்களின் முகம் பார்க்க, ஹரிக்கு அப்புவை புகைப்படத்தில் பார்த்தே பிடித்திருக்க, இப்போதோ அவனை அள்ளிக்கொள்ள ஆசை வந்தது.

" அப்பு எல்லாரும் சாப்பிடனும் இல்ல? அப்புறம் பேசலாம். வாய் திற.. " சத்யா கூறவும் மகனின் கவனம் அப்பனிடம் போய் இருந்தது. மீண்டும் மௌனம், இறுக்கமான சூழ்நிலை. உணவை முடித்து விட்டு சத்யா அப்புவை இறக்கி விட, தூங்கி எழுந்து வந்த ஜிஷ்ணு அழ, அப்பு அவனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் வைக்க, அறிவுமதி மகனையும் மருமகளையும் பார்வையில் எரிக்க, வித்யா அவசரமாக உணவை பாதியில் முடித்து விட்டு மகனை கையில் தூக்கி இருந்தாள்.

அப்பு ஹாலுக்கு சென்றவன் டிவியை போட்டு அதில் கார்டூன் போட்டு அமர்ந்து கொண்டான். சூர்யா, ஹரி, ஆகாஷ் மூவரும் ஹால் வர, நடுநாயகமாக சோஃபாவில் அமர்ந்து டிவி பார்க்கும் சிறுவனை பார்த்து சிரித்து கொண்டனர். ஆகாஷ் அவனை சீண்ட வேண்டும் என்று சேனலை மாற்றி விட,

" மாமா.. கார்டூன்.. " அப்புக்குட்டி முகம் சுருக்கி கேட்க,

" மாமா நியூஸ் பார்க்கனும்.. ஆமா உன் பெயர் என்ன..? ஆகாஷ் கேட்க, ஹரி அவனை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டான்.

" வியாஷ் சத்யா "

" வியாஷ் கொஞ்ச நேரம் மாமா பார்க்கட்டுமா? "

" ம்ம் " சிறுவன் சரியென சொன்னாலும் முகம் சுருங்கி போய் இருந்தது.

அதை கண்டதும் சூர்யா ரிமொட் வாங்கி கார்டூன் வைத்து விட, புன்னகைத்தவன் சட்டென சூர்யாவின் கன்னத்தில் முத்தம் வைக்க, அவனின் முத்தத்தில் கரைந்து போய் சூர்யாவும் முத்தத்தை திருப்பி தர, அப்பு கன்னம் குத்திய அவனின் மீசையை வருடி பார்க்க, சூர்யா முகத்தில் புன்னகையில் பூத்தது. அதை கண்டு ஹரி தேன்மொழியிடம் சாக்லேட் எடுத்து வர சொன்னான்.

தேன்மொழி எடுத்து வந்து கொடுக்கவும் சூர்யா அதை வாங்கி அப்புவின் கையில் கொடுக்க, சட்டென அப்பு வேண்டாம் என்று தலை அசைக்க, அண்ணனிடம் இருந்து வாங்கி ஹரி மீண்டும் அவன் கையை பிடித்து சாக்லேட் கொடுக்க, அதை மேஜை மீது வைத்து இருந்தான்.

" வாங்கிக்கோ அப்பு.. ஹரி சித்தப்பா கொடுத்தார்னு சொல்லு உன் பாபாவும் மீமீயும் எதும் சொல்ல மாட்டாங்க.. " தேன்மொழி அவன் கன்னம் பிடித்து கூற,

சிறுவன் வாங்க மாட்டேன் என தலை அசைக்க, சரியாய் அதே நேரம் அங்கே சத்யாவும் வர, மேஜை மேலிருக்கும் சாக்லேட் அனைத்தையும் அவனுக்கு உணர்த்த,

" என் மகனுக்கு சாக்லேட் பிடிக்காது. அவனுக்கு சாக்லேட் யார் கொடுத்தாலும் வாங்க மாட்டான்." சத்யா அறிவிப்பு போல நால்வருக்கும் சொல்லி விட்டு மகனை தூக்கிக்கொண்டு அறைக்கு செல்ல, உணவு முடித்து சுத்தம் செய்ய உதவி கொண்டு இருந்த அனுவை அறிவுமதி அழைக்க, அவர் முன் வந்து நின்றாள். அனைவரும் உணவை முடித்து ஓய்வுக்காக டிவியின் முன்னே அமர்ந்து இருந்தனர். அத்தோடு அனு என்ன பேசுவாள் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் முகத்திலும் இருந்தது.

" உனக்கு என்னைப்பத்தி உன் புருஷன் என்ன சொன்னான், எப்படி சொன்னான்னு தெரியாது.."

" அவருக்கு ஒரு அத்தை இருக்கிறதே இங்க வந்த அப்புறம் தான் தெரியும். அவசியம் இருந்தா சொல்லி இருப்பாரோ என்னவோ.." அனு பொறுமையாய் திருப்பி கொடுக்க, கோகிலா மனதிற்குள் மருமகளுக்கு சபாஷ் போட்டு கொண்டார்.

" ஓ.. அவசியம் இல்லாதவளா நான்.. அப்ப உன் பையனுக்கு நீ என்னை பாட்டின்னு அறிமுகம் பண்ணி இருக்க வேண்டாமே.."

" உங்க வயசுக்கு எல்லார்க்குமே நீங்க பாட்டி தான். சத்யா அப்பாக்கு நீங்க தங்கச்சி.. அதனால தான் என் புருஷனுக்கு நீங்க அத்தை, என் மகனுக்கு பாட்டி... இதுல எதாவது ஒரு உறவை உங்களால மாத்த முடியுமா? முடிஞ்சா மாத்துங்க. நீங்க மறுத்தாலும் வெறுத்தாலும் என் புருஷன் தான் இந்த வீட்டுக்கு முதல் வாரிசு. என் மகன் தான் இந்த வீட்டோட முதல் பேரன். "

" உனக்கு புரியல.. சத்யாகிட்ட கேளு இதுக்கு பதில் சொல்வான்."

" எது இந்த சொத்துக்கு, பெயர் புகழுக்கும் நீங்க சொல்ற வாரிசு கதையையா? சரி நீங்க சொல்லுங்க சத்யா என்ன படிச்சு இருக்கார்? "

அந்த கேள்வியில் அனைவரும் ஒரு நொடி தடுமாற, சூர்யா குற்ற உணர்வுக்கு சென்று இருந்தான். ஆனால் அனு அடுத்து பேசிய அனைத்தும் அனைவரையும் விழி விரிக்க செய்து இருந்தது.


துணை - 10


அவளின் கேள்வியில் அனைவரும் ஒரு நொடி தடுமாற, சூர்யா குற்ற உணர்வு சென்று இருந்தான்.

" பதில் சொல்ல முடியாது உங்களால.. ஆர்கிடெக்ட் படிப்பு படிச்சவர் உங்க இந்தியா டவர்சில் நிர்வாகம் பண்ண முடியுமா? அந்த எண்ணம் இருந்தா அவர் ஏன் கட்டிடம் கட்ட படிக்க போறார் சொல்லுங்க? எனக்கு உங்களை தெரியும், உங்க எண்ணம், செயல், எல்லாமே தெரியும். உங்க தம்பியும், இந்த குடும்பமும் நீங்க பேசற, செய்யுற எல்லாத்தையும் அன்பு, மரியாதை, பாசம்னு சகிச்சிட்டு, பயந்துட்டு கடந்து போற மாதிரி நான் போவேன் கனவுல கூட நினைக்காதீங்க. "

" என் சத்யாவையும் என் மகனையும் உங்க நிழல் காயப்படுத்தினாலும் அதை நாலு மடங்கா உங்களுக்கு திருப்பி தராம நான் ஊர் திரும்பி போக மாட்டேன். இந்தியாவே வர கூடாதுன்னு இருந்த சத்யா வந்தது அவரோட அப்பாகாக மட்டும் தான். மாமா கூப்பிட்டார் அவருக்காக வந்தோம். முடிஞ்சா உங்க வீரத்தை, கோவத்தை எல்லாம் உங்க அண்ணங்கிட்ட காட்டுங்க. நீங்க காட்ட மாட்டீங்க, உங்களால முடியாது அதுவும் எனக்கு தெரியும்." அனு சூடாய் பேசிவிட்டு அவர்களை கடந்து சென்று இருக்க,

அனைவரும் அமைதியாய் கலைந்து அவரவர் அறைக்கு சென்று இருந்தனர். அறிவுமதி அனுவின் வார்த்தையில் வாயடைத்து போய் இருந்தார். உண்மை, அவனை தவிர வீட்டில் அனைவரும் தொழில் கல்வி பயின்றவர்கள். சத்யா மட்டுமே கட்டிட கலைஞன். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவனின் தேர்வு கட்டிட கலை தான். ஒரு நாளும் இந்தியா டவர்ஸ் நிர்வாகத்தில் அமரும் ஆசை அவனுக்கு இருந்ததில்லை. அனு மாடிக்கு வந்து தண்ணீரை குடித்து அவளை சமன் செய்து கொண்டாள். கீழே நடந்த ரணகளம் எதுவும் அறியாத சத்யா அவளிடம் வம்பிழுத்தான்.

" இடியப்பாத்தை ரவுண்டு கட்டிட்டு வந்து இப்போ எதுக்கு இவ்ளோ தண்ணி குடிக்கிற? இத்தனை நாளும் அப்பு தான் ஈரம் பண்றான் நினைச்சேன்.. கேடி நீ தான் பெட்டை ஈரம் பண்ணிட்டு இருக்கியா..? " சத்யா கேட்டு சிரிக்க,

" தூ.. நான் ஏன் நனைக்க போறேன். நீ தான் விவரமா அவனை என்கிட்ட விட்டு கீழ போய் படுத்திட்ட.. அவன் ஈரத்தில் தூங்கிற எனக்கு தான் தெரியும்.." அனுவும் சரிக்கு சரியாய் பதில் கூற,

" முன்ன விட இப்ப குறைவு தான். சீக்கிரம் விட்டுருவான் நினைக்கிறேன். " சத்யா அப்புவின் தலைவருடி கொடுக்க,

" ஏன் கட்லி, உனக்கு தான் உங்க அப்பா சொத்து வேண்டாம் தானே? அப்ப வேண்டாம்னு ஒரு பத்திரம் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துட வேண்டியது தானே? நாமளும் ஊரை பார்க்க போலாம் இல்ல? " அனு கேட்க,

" அப்படி இல்லடி செல்லம்.. நான் எதுவும் வேண்டாம் சொன்னா நடிக்கிறேன் சொல்வாங்க. கேட்டு வாங்கினா இதுக்கு தான் வந்தேன் சொல்வாங்க. அவங்களா தரட்டும் அப்புறமா முடிவு செய்வோம் எதையும்.. "

பின் மெல்ல அனு கீழே நடந்ததை கூற, சத்யா அவளை முறைக்க,

" என்னால முடியல சத்யா.. உன்னை காயப்படுத்தி அவங்களுக்கு என்னாக போகுது? அப்பு சின்ன பையன்.. அவனை கூடவா காயப்படுத்த முயற்சி செய்வாங்க? என்னை எவ்ளோ வேணாலும் திட்டிக்கோ.. என்னால தாங்க முடியல சத்யா.. " அனு புலம்ப,

" புரியுதுடா அம்மு.. ஆனா இதோட போதும் இனி எதுவும் அவங்ககிட்ட பேசாத.. நான் காயப்பட்டாலும் பரவாயில்ல. நீயும் அப்புவும் கண் கலங்கி நின்னா என்னால தாங்க முடியாது. எனக்கு கிடைச்ச எதுவும் உங்களுக்கு வேண்டாம். வா வந்து எதையும் யோசிக்காம தூங்கு.. "

அனு படுத்ததும் தூங்கி இருக்க, சத்யா அவளின் முகம் பார்த்து அமர்ந்து இருந்தான். மனைவியாக நடிக்க சொல்லி கேட்ட நொடி அவளின் கண்களில் சட்டென பூத்த மின்னல், நாணம், இன்பம் அனைத்தும் சத்யாவுக்கு எதையோ சொல்ல முயன்றது. ஆனால், அப்போது இருந்த சூழ்நிலை எதையும் யோசிக்க விடவில்லை. ஆனால் இந்த இரு நாட்களாக இவளிடம் தெரியும் தடுமாற்றம் சத்யாவை யோசிக்க வைத்தது. நட்பு நிலை மாறி அவளுக்கு தன் மேல் எதேனும்..? இல்லை.. இருக்காது.. மனதிற்கு சமாதனங்கள் சொல்லியும் உறக்கம் அவனை தழுவவில்லை.

ஹரியின் அறையில் தேன்மொழி அனுவை பற்றி வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருந்தாள். ஹரியோ ஆர்வமாக மனைவியின் மடியில் படுத்து கதைக்கேட்டு கொண்டு இருந்தான்.

" சும்மா சொல்ல கூடாது ஹரி, எங்க அக்கா போதும் உங்க அத்தையை சமாளிக்க, அச்சோ ரெண்டு மாசத்துல கிளம்பிடுவாங்களே மிஸ் பண்ண போறேன்... "

" எனக்கு சத்யா அண்ணாவை நெருங்கவே பயமா இருக்குடா.. பேச முயற்சி பண்ணனும். " ஹரி வருத்தத்துடன் கூற..

" ஏன் பா உங்களுக்குள்ள இவளோ வேற்றுமை? உங்க சொந்த அண்ணன்கிட்ட பேசவே ஏன் தயக்கம்? "

" அது பெரிய கதைடா தேனு, சொன்னா இன்னிக்கி முடியாது.. ஆனா சத்யா அண்ணாவை பார்க்க சந்தோசமா இருக்கு. அப்பு மாதிரியே எனக்கும் ஒரு பையன் வேணும். அவன் எவ்ளோ சமத்து இல்ல? " ஹரி இன்முகத்தோடு கூற,

" ஆமா.. வித்யா அண்ணி பையன் ஜிஷ்ணு அழகு தான். ஆனா, துறுதுறுன்னு இருக்க மாட்டான். அப்பு வந்ததும் வீட்டுல ஒரு கலகலப்பு, முயல் குட்டி மாதிரி ஓடிட்டே இருப்பான். அவனோட ஜிஷ்ணுவையும் ஓட வைப்பான். அதே நேரம் சொன்னதை கேட்கிற சமத்து பையன். நிறைய விட்டு கொடுக்கிறான். எனக்கும் அப்பு போலவே ஒரு பையன் வேணும்." தேன்மொழியும் அதே உற்சாகத்தோட கூற இருவரும் புன்னகைத்து கொண்டனர்.

வித்யா விஜய்யை அவர்கள் அறையில் வறுத்து கொண்டு இருந்தாள். விஜய் எதுவும் பேசாது அமைதியாய் அமர்ந்து இருந்தான்.

" நல்ல வேலை எங்க அண்ணியாவது என் அண்ணனுக்கு துணையா இருக்காங்க. உங்க அம்மா அன்னிக்கி என்ன எல்லாம் பேசினாங்க. கடவுள் இருக்கான்.. இன்னிக்கி அண்ணிகிட்ட உங்க அம்மா பேசி இருக்கனும். அப்புறம் தெரிஞ்சு இருக்கும். எதாவது பேசுங்க.. நம்ம உறவே வேண்டாம்னு எங்க அண்ணன் யோசிக்கிற அளவுக்கு செய்து விட்டீங்க எல்லாரும்.. எங்க அண்ணன் இப்ப போனா திரும்பி வருவாரோ மாட்டாரோ.. "

" வித்யா நானே சத்யா விஷயத்தில் குற்ற உணர்ச்சியில இருக்கேன். நீ வேற.. தூங்கு மா.. பிளீஸ்.. " விஜய் சோர்ந்து பேச, வித்யா மகனை அணைத்து கொண்டு உறங்கி இருந்தாள்.

இதற்கு எல்லாம் எதிர்மறையாக சூர்யாவின் அறையில் ஆதிரா தூங்கி இருக்க, சூர்யா மட்டும் உறங்காது விழித்து இருந்தான். மனம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவனிடம் மௌனத்தை தவிர வேற எதுவும் பதிலாக இல்லை. அப்புவின் நினைவு வரவும், தானாய் அவனின் இதழில் புன்னகை மலர்ந்தது.

அடுத்த நாள் காலை சத்யாவின் அறையில் இருந்து அப்புவின் சிரிப்பு சத்தம் பெரிதாய் கேட்க, அனைவரின் கவனமும் அவர்களிடம், அப்பனும் மகனும் பப்பிள் ஷூட்டர் கன் வைத்து ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இருந்தனர். அப்பு மறைந்து நின்று கொள்ள, சத்யா தேடி சுட என அறைக்குள் இருந்த விளையாட்டு அறையின் வெளியே இருக்கும் வராண்டாவிலும் தொடர, மாடியில் இருக்கும் ஹரி, சூர்யா அனைவரும் அறையை விட்டு வெளியே வந்து இருந்தனர்.

மகனோடு மறைந்து நின்று விளையாடும் அண்ணனை பார்த்து தம்பிகள் இருவருக்கும் சுவாரஸ்யமான சிரிப்பு, பூனை போல பதுங்கி நடந்து வந்த அப்பு ஹரியின் கால்களுக்கு பின்னே மறைய, சிறுவனுக்கு உதவ சூர்யாவும் வந்து ஹரி அருகில் நிற்க, இருவரும் அழகாய் அப்புவை மறைக்க, சத்யா மகனை சோபா பின்னே தேட, ஹரி அதை பார்த்து சிரிக்க, சத்யா அவனை ஆராய்ச்சியாக பார்க்க, அப்புவின் அலை அலையான சுருட்டை முடி அவன் இடத்தை காட்டி கொடுக்க, ஒரு நிமிடம் தயங்கி நின்றவன், பின் ஹரி சூர்யா இருவரின் இடையில் நுழைய, சட்டென இருவரும் இன்பமாய் அதிர்ந்து விலக, அப்பு சத்யாவின் கையில் சிக்க கூடாதென ஓட, சத்யா பின்னே துரத்தி கொண்டே சுட, அப்பு தோற்று போக, மகனை முத்தங்களில் குளிப்பாட்டி அள்ளிக்கொண்டு அறையை நோக்கி வந்தான்.

" அண்ணா.. " சூர்யா அழைக்க, சத்யாவின் உடல் இறுக, அவனை நோக்கி திரும்பினான்.

" என்னை வெறுத்துட்டியா? " சூர்யா கண் கலங்கி போய் கேட்க,

" உன்னை வெறுத்தா அது என் அம்மாவை நான் வெறுத்த மாதிரி.. எனக்கு உன் மேல எந்த கோபமும், வருத்தமும் இல்ல. தேவை இல்லாம நீயா எதையும் யோசிக்காத " சத்யா சொல்லிவிட்டு நகர,

" அப்புறம் ஏன் அண்ணா எங்களை விட்டு விலகி போற.. " ஹரி கேட்க,

" மறுபடியும் காயப்பட எனக்கு தெம்பு இல்ல. என் மகன் முன்னாடி அழ விருப்பம் இல்ல. என் சோகம் அவன் மனசிலும் பாதிப்பை கொடுக்கும் அதான் தள்ளி நிற்கறேன். நெருங்க நெருங்க எல்லாருக்கும் துன்பம் தான் மிஞ்சும்.. "

" அண்ணா.. " சூர்யா அழைக்க,

" போதும் டா.. என்னால முடியாது.. இதுவே மூச்சு முட்டுது. " சத்யா அறைக்குள் சென்று விட, இருவரும் அமைதியாய் அவரவர் வேலையை பார்க்க சென்று இருந்தனர்.

காலை உணவு முடித்து மீண்டும் அவன் அப்பனுக்கு விளையாட்டு காட்டி கொண்டு இருந்தான் அப்புக்குட்டி.

" அப்பு கொஞ்சமா குடிடா.. நீ தோத்து போய்ட்ட தானே? அப்போ என் பேச்சை கேட்டு தான் ஆகனும்." மகனிடம் சரளமாக ஆங்கிலத்தில் சமாதானம் பேசிக்கொண்டே பின்னே நடந்தவன் அப்பு விஜய் மடியில் போய் அமரவும், ஒரு பெருமூச்சை விட்டு கொண்டான்.

சத்யா எதுவும் பேசாது சோஃபாவில் அமர்ந்து கொள்ள, சட்டென விஜய் மடிவிட்டு இறங்கி அப்பனின் முன் போய் நின்று வாயை திறக்க, சத்யா மருந்தை கொடுக்க பிடிவாதம் இல்லாது குடித்து கொண்டான். கோகிலா இதை எல்லாம் பார்த்துவிட்டு,

" உன் பொண்டாட்டி எங்க சத்யா? அவளுக்கு பையனை பத்தி கவலையே இருக்காதா? நீயே கங்காருகுட்டியை மடியில தாங்குற மாதிரி தாங்கிட்டு இருக்க "

" அவளுக்கு நேத்து வெளிய போன சோர்வு தூங்குறா, மதியமாகும் திருப்பள்ளி எழுச்சி நடக்க, அதும் இல்லாம என் பையனை நான் பார்த்துக்க கூடாதா? "

" சரி.. சரி.. எந்த வருஷம் உங்களுக்கு கல்யணமாச்சு? உன் கல்யாண தேதியை சொல்லு "

" நாங்க இன்னும் கல்யாணமே பண்ணிக்கல கோகிமா "

" என்னடா சொல்ற சத்யா? கல்யாணம் பண்ணிக்காம? எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட இதை சொல்வ நீ? ஜோதி அக்கா.. இதை கேளுங்களேன்.. " கோகிலா கோவமாக கத்த,

" நான் இருக்கிறது லண்டனில், அங்க இதெல்லாம் சகஜம். ஒரு தாலியோ மோதிரமோ இருந்தா உங்களுக்கு எல்லாம் சரி இல்ல? அது இல்லாம இதோ அப்பு இருக்கிறது உங்களுக்கு பிரச்சனையா தெரியுதா? "

" சத்யா கோவப்படுத்தாத.. நீ இருக்கிற இடம் எதுவா வேணாலும் இருக்கட்டும். முறையான வாழ்க்கையை வாழனும்னு கொஞ்சம் கூட எண்ணம் இல்லையா? ஓ அதனால் தான் அவ உன்னோட உன் வீட்டில் இல்லையா? அதான் நீயே உன் பையனை பார்த்த்துக்குற சரியா? "

" எங்களுக்கு கல்யாணம் தேவையில்லை. அனு புராஜக்ட் பண்ணிட்டு இருக்கா, அப்பு பிறந்து ஒரு வருஷம் கனடா போய் இருந்தா, அவளுக்கு தனி வீடு, சொத்து எல்லாம் லண்டனில் இருக்கு, ஏன் அவ அவளோட சுயத்தில் நிக்க கூடாதா? நாலு வயசு பையன்கிட்ட விசாரணை பண்ற அளவுக்கு என் மேல உங்களுக்கு அக்கறையா? இல்ல சந்தேகமா? எட்டு வருஷமா நான் இருக்கேனா செத்தேனான்னு கூட தெரியாது. இப்ப மட்டும் எங்க இருந்து வந்தது இந்த அக்கறை? முறையா நடக்கனுமாம் என் வாழ்க்கையில் எது முறையா நடந்துச்சுன்னு சொல்லுங்க? " சத்யா கத்தவில்லை பொறுமையாய் தான் பேசினான். ஆனால் அதுவே ஆயிரம் சவுக்கடிகள் போல அனைவருக்கும் வலித்தது.

" அப்புறம் அப்புகிட்ட தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்காதீங்க. அவன் சின்ன பையன். என்கிட்ட கேளுங்க என்ன தெரியனும் உங்களுக்கு? என்னை காயப்படுத்த, கேள்வி கேட்க, திட்ட, அடிக்க, என்ன செய்யவும் உங்களுக்கு உரிமை இருக்கு, அனுவையும் அப்புவையும் விட்டுருங்க. அவங்க உலகம் வேற.. அதுல இந்த வலி எல்லாம் அவங்களுக்கு வேண்டாம்... " சத்யா வார்த்தைகளை வலியோடு கூற, மருந்து குடித்த கலக்கத்துக்கு வியாஷ் கண் சொருக மகனை தோளில் போட்டு கொண்டு அறைக்கு சென்று விட்டான்.

© GMKNOVELS