...

8 views

பாட்டு மன்றம்
இன்று மதிய சாப்பாடு சாப்பிட்டு முடிக்கும் போது மணி நான்கு. லேசாக கண் அசரலாம் என படுத்து வாட்சப்பை பார்த்துக் கொண்டே வந்தேன். ஒரு பெரிய பார்சல் நம்ம அண்ணாச்சி அனுப்பி இருந்தார். ஒரு வேளை விருதுநகர் எண்ணை புரோட்டாவா இருக்குமோ என நினைத்து பிரித்துப் பார்த்தேன். இல்லை. ஆனால் அதை விட சிறப்பான இரண்டே கால் மணி நேரம் ஓடும் பாட்டு மன்றத்தை பக்குவமாக பார்சல் செய்து அனுப்பி இருந்தார். பாட்டு மன்ற நடுவராக முனைவர். பர்வீன் சுல்தானா. எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர். சேலை கட்டிய பாரதி. ஒரு பக்கம் திரைப்பட பாடகர்கள் சீனிவாசன், சைந்தவி, மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுபஸ்ரீ தணிகாசலம் மறுபக்கம் பியானிஸ்ட் அனில் சீனிவாசன், சொக்கா போட்ட சரஸ்வதி வீணை ராஜேஷ் வைத்யா மற்றும் கர்நாடக இசை கலைஞர் சுசித்ரா. பாட்டு மன்றம் நடுவர் பர்வீன் சுல்தான் உரையோடு தொடங்கியது. கர்நாடக இசை ராகங்களை இளையராஜா சிந்து பைரவி திரைபடத்தில் மிக அற்புதமாக பயன்படுத்தி இருப்பார். சஹானா முதல் சுத்த தன்யாசி வரை காட்சிக்கு தகுந்தபடி மிக நுட்பமாக பயன்படுத்தி இருப்பார். இதை இந்த மன்றம் அழகாக விவரிக்கும் போது சிந்து பைரவியும் உன்னால் முடியும் தம்பி பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையும் உதயமூர்த்தியும் பாடிச் சென்றார்கள். ராஜேஷ் வைத்யா பேசும் போது எப்படி தன் பெரியப்பா ஜி.ராமநாதன் இசைத்த முகாரி ராகத்தில் இசைத்த பாடல் மங்கல நாண் பூட்டிய உடன் இசைக்கும் வழக்கமாக ஆனது என்ற செய்தி தெரிந்தது. கர்நாடக இசை மூலவராக கற்ப கிரகத்தில் இருக்க திரையிசை உற்சவராக வீதியில் வலம் வந்தது‌‌. இறுதியில் பேசிய பர்பீன் சுல்தானா தேவரத்தில் நாவுக்கரசர் பாடிய

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

என்ற பாடலுடன் நிறைவு செய்த போது மணி ஆறேகால். அண்ணாச்சி அனுப்பிய பாட்டு மன்ற பார்சல் என் மதிய நித்திரையை கெடுத்தாலும் இசை என்னை வேறு ஒரு உலகத்தில் வைத்து அழகு பார்த்தது. நன்றி செந்தி குமார் அண்ணாச்சி.

என்றும் அன்புடன்
செந்தில்
12.7.20