...

9 views

குரு தரிசனம்
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது 1977 நான் செவன்த் டே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறேன். ஆங்கில வழி கல்வி என்பதால் எனக்கு தமிழ் சுத்தமாக படிக்க வராது. எங்கள் உறவினர்கள் மற்றும் அப்பாவின் நண்பர்கள் என்ன செந்திலுக்கு தமிழ் எழுத படிக்க தெரியல, பேசாமல் தமிழ் மீடியத்தில் சேர்த்து விடுங்கள், என கூற பலவித குழப்பத்துடன் அப்பா என்னை நான்காம் வகுப்பு பாதியில், செவன்த் டே பள்ளியில் இருந்து மங்கையர்கரசி பள்ளிக்கு மாற்ற, என்னை தமிழ் வாசிக்க சொன்ன பெரிய சார் இவனுக்கு தமிழ் சரியா வாசிக்க வரலை, பேசாம மூன்றாம் வகுப்பில் போடுவோம் என என்னை மூன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். அந்த 1977ல் எனக்கு மூன்றாம் வகுப்பு, வகுப்பு ஆசிரியராக வந்தவர் தான் என் தமிழ் ஆசான் *திரு. லெட்சுமண பெருமாள்* அவர்கள். தமிழுக்கும் எனக்கும் இருந்த தகராறு இவரால் தான் சரி செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் பிழை இல்லாமல் தமிழ் எழுத படிக்க முடிந்தது. என் வகுப்பு ஆசிரியருக்கு நான் செல்ல பிள்ளை. புதிதாய் வகுப்பில் இடையில் சேர்ந்து இருந்த போதும் என்னை சுகாதார தலைவன் ஆக்கி அழகு பார்த்தார். 1978 வருடம் அவரே எனக்கு நான்காம் வகுப்பு ஆசிரியர். கனகவேல் காலனி வளாகத்தில் படித்தோம். அப்போது தொடர்ந்து மூன்று ரேங்கிற்குள் வருவேன். முதல் மூன்று மாணவர்கள் பெயர் போர்ட்டில் எழுதி வைப்பது வழக்கம். என் பெயர் போர்டில் இல்லாத நாட்களே இல்லை. இப்போது வகுப்புத் தலைவன் பதவி கொடுத்து என்னை தலைமை பண்புக்கு பயிற்றுவித்தார். கரும் பலகையின் வலது ஓரத்தில் வகுப்பு தலைவன் செந்தில் என்றும் இடது ஓரத்தில் முதல் ரேங்க் செந்தில் எனவும் வண்ண சாக்பீசில் எங்கள் வாத்தியாரின் அழகிய கையெழுத்தில் என் பெயரை பார்த்த இன்பம் எந்நாளும் மறக்க முடியாது. சார் எனக்கு ஆசான் மட்டுமல்ல நல்ல தந்தை, நல்ல சகோதரன், நல்ல நண்பனாய், என்னை வழி நடத்தியவர். எங்கள் தெருவில் தான் எங்கள் சார் வீடு. அவரிடம் டியூஷன் படித்த காலத்தில் பிரம்மாண்டமாக வரைந்த அவரது அப்பா போட்டோவை பார்த்து வியந்தது உண்டு. அவர் அம்மா எனக்கு பாட்டி. அவர் மனைவி எனக்கு அக்கா என உறவுகளுடன் அமைந்த பந்தம் எனக்கும் என் ஆசிரியருக்குமான சொந்தம். இன்று சமுதாயத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன். பல கோடி மதிப்புள்ள எங்கள் சங்கத்திற்கு பொருளாளராக நான் தொடர்ந்து இருக்க காரணம் அன்று எனக்கு அவர் அளித்த தலைமை பண்புகள் தான். இப்படி என்னை வளர்த்து விட்டு என்னை தமிழ் படுத்திய என் தமிழாசான் *திரு.லெட்சுமண பெருமாள் சார்* அவர்கள் இன்று என் கடைக்கு வருகை புரிந்தார்கள். மனிதரில் புனிதரான அவர்கள் பாதம் தொட்டு வணங்கி அவரின் வாயால் பல்லாண்டு பாடி வாழ்த்துப் பெற்றதை கடவுளின் ஆசிர்வாதமாக நினைக்கையில் என் கண்களில் ஆனந்த கண்ணீர்.